நியூஸ் சாண்ட்விச்
பழைய சிடியில் சிலை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கலைஞர் ஒருவர், மக்கள் குப்பை என்று ஒதுக்கி வீசியெறி யும் பழைய சிடிக்களை சேகரித்து, அழகிய விலங்குச் சிற்பங்களை உருவாக்கி அசத்தியிருக்கிறார். கண்கவர் சிற்பங்களை வெறும் கத்திரிக்கோல், சிடி, கம்பிகள் கொண்டு பசை மூலம் ஒட்டி, ஒரு வாரத்திற்குள் செய்து முடித்துவிடுகிறார்.
இந்தியாவிற்குள் சுற்றுலா செல்ல ஊக்கப் பணம்
இந்தியச் சுற்றுலா தலங்களுக்கு மக்கள் வரவை அதிகரிக்க, சுற்றுலா அமைச்சகம் ‘தேக்கோ அப்னா தேஷ்’ என்ற பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது. 2022ம் ஆண்டுக்குள் இந்தியாவில் குறைந்தது 15 வெவ்வேறு சுற்றுலா இடங்களுக்குச் செல்ல, இந்தியர்கள் உறுதிமொழி எடுக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர். அப்படி சுற்றுலா சென்று எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஆதாரங்களாக சமர்ப்பித்தால் அதற்கான ஊக்கத்தொகை, பரிசுகள் என சில திட்டங்களையும் அறிமுகப்படுத்தவுள்ளனர்.
டெலிவரி நேரத்தை அதிகரியுங்கள்
பல மெட்ரோ நகரங்களில் அரை மணி நேரத்திற்குள் உணவு டெலிவரி செய்யப்படும், இல்லையெனில் உணவை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதனால் பாதிக்கப்படுவது கடைநிலை ஊழியர்கள்தான். அவர்கள் சம்பளத்தில் இருந்து இலவச உணவிற்கான பணம் பிடிக்கப்படுகிறது.
இதனால் உணவு டெலிவரி செய்யும் ஆட்கள் வாகன விதிகளை மீறி, வேகமாக வண்டி ஓட்டி உயிரை பணயம் வைப்பதாக பெங்களூரு கமிஷனர் பாஸ்கர் ராவ் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் பல டெலிவரி ஊழியர்கள் மதிய உணவை 5 மணிக்கும், இரவு உணவை நடுராத்திரி யிலும்தான் சாப்பிடு கின்றனர்
6 நாட்களில் 1000 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை
கரோனா வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவில் தோன்றி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தினமும் இதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
சீனாவில் கடந்த சில நாட்களாக மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், 1000 படுக்கைகளுடன் புதிய மருத்துவமனையை ஆறு நாட்களில் கட்டி முடிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. 2003ல் இதே போன்ற ஒரு மருத்துவமனை ஏழே நாட்களில் கட்டிமுடிக்கப்பட்டது. இதற்காக, நாட்டின் முக்கிய கட்டுமான நிபுணர்கள் இங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் புதிய திரையரங்கம்
பொதுவாக விமான நிலையங்களில், வானிலை காரணங்களாலும், தொழில்நுட்பக் கோளாறுகளாலும் விமானங்கள் தாமதமாகி பயணிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உருவாகும்.
இதுபோன்ற சமயங்களில், சென்னை விமானப் பயணிகள் இனி திரையரங்கில் படங்கள் பார்த்து நேரத்தைச் செலவிடலாம். இது வாகனங்கள் நிறுத்தப்படும் வளாகத்தில் கட்டப்பட்டு, மொத்தம் 1000 இருக்கைகளுடன் இருக்கும் என்கின்றனர்.
ஆரஞ்சு பழ வியாபாரிக்கு பத்மஸ்ரீ விருது
‘ஒரு வெளிநாட்டுக்காரர் என்னிடம் ஆரஞ்சு பழத்தின் விலையைக் கேட்டார். ஆங்கிலம் புரியாததால் என்னால் பதில் அளிக்க முடியவில்லை. என்னுடைய நிலைமை என் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு வரக்கூடாது என்பதை அன்றே முடிவு செய்தேன்’ என்கிறார் ஹரேகலா ஹஜப்பா.
கர்நாடக மாநிலம், மங்களூருவின் புறநகரி லுள்ள ஹரேகலா என்னும் கிராமத்தைச் சேர்ந்த இவர், தினமும் சந்தையில்ஆரஞ்சு பழங்கள் விற்று அதில் கிடைக்கும் வருமானத் தைச் சேர்த்து 1999ல் தன் கிராமத்திலுள்ள மசூதியில் ஆரம்பப் பள்ளி ஒன்றைத் தொடங்கினார்.
பின் நன்கொடை மூலமும் அரசாங்கத்தின் உதவியுடனும், இப்பள்ளியை அரசுப்பள்ளியாக மாற்றி அமைத்திருக்கிறார். இப்போது உயர்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வரும் இதனுடன், கல்லூரியை ஆரம்பிக்க ஹஜப்பா முயன்று வருகிறார். இவரைப் பெருமைப்படுத்தும் வகையில் நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை அளித்து, அரசாங்கம் கௌரவித்துள்ளது.l
தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்
|