கரோனா வைரஸ்!ரெட் அலெர்ட்



உண்மையிலேயே இந்த மாத உலக வைரல் ஒரு வைரஸ்தான். சீனாவில் கண்டறியப்பட்ட அந்த கரோனா வைரஸ், மிக வேகமாக மற்ற நாடுகளுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது.

ஜனவரி 21ம் தேதி வரை மொத்தம் 217 பேருக்கு இந்த விநோத வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவைத் தொடர்ந்து ஜப்பான், தாய்லாந்து, தென் கொரியா ஆகிய நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரஸ் சீனாவில் கடற்கரை சந்தையிலிருந்து பரவத் தொடங்கியதாக நம்பப்படுகிறது. மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவி மரணத்தை விளைவிக்கும் இந்த வைரஸைத் தடுக்க உலக நாடுகள் இப்போதே பரிதவிக்கத் தொடங்கிவிட்டன.

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இன்றைய துரிதமான தகவல் தொடர்பு உலகில், நுண்ணுயிர்களின் பரவலாக்கம் என்பதும் துரிதமாகி வருகிறது. சர்வதேச வணிகம் உலக அளவிலான போக்குவரத்தை சாத்தியமாக்க... நோய்களும் சர்வதேசத்தன்மை பெற்றுவருகின்றன.

கடந்த இரு தசமங்களில் பன்றிக் காய்ச்சல், எபோலா, சார்ஸ், நிபா என்று வைரஸ் தாக்குதல்கள் ரவுண்டுகட்டி அடித்தன. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் உலகம் முழுதும் பலியாகினர்.

2009ம் ஆண்டு பன்றிக் காய்ச்சல் மெக்சிகோவில் தொடங்கி விரைவில் உலகம் முழுதும் பரவியது. உலகின் மொத்த மக்கள் தொகையில் 11 - 12% பேர் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இரண்டு ஆண்டுகள் மேற்கு ஆப்பிரிக்காவின் கினியாவில் ருத்ரதாண்டவமாடிய எபோலா வைரஸ், லைபீரியா, சியாரா லியோன் ஆகிய பகுதிகளில் சுமார் பத்தாயிரம் பேர் வரை பலி வாங்கியது. இந்த நாடுகள் மொத்தமாக இருபத்தெட்டு லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு இணையான ஜிடிபி என்னும் மொத்த உள் நாட்டு உற்பத்தியை இழந்தன.

கடந்த 2019ம் ஆண்டு உலக ஆரோக்கியப் பாதுகாப்பு பட்டியலின் அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் 195 நாடுகள் இப்படியான தொற்றுநோய்களைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியதாக உள்ளதென கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் தேசிய சுகாதார அமைப்புகள் மோசமாக உள்ளது தெரியவந்துள்ளது.

இந்தப் பட்டியலில் உள்ளவற்றிலுமே நாற்பது சதவீதம் மட்டுமே சுகாதாரமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மத்திய வருமானமுள்ள 116 நாடுகள் ஐம்பதுக்கும் குறைவான மதிப்பெண்ணைப் பெற்றுள்ளன. இந்தியா 46.5 மதிப்பெண் பெற்று தரவரிசையில் 57வது இடத்தில் உள்ளது. தெற்கு ஆசியாவில் தாய்லாந்தும் இந்தோனேஷியாவும் நம்மைவிடவும் மேலான நிலையில் இருக்கின்றன,இந்தியா, உலக அளவிலான சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தில் இருக்கிறது. சர்வதேச ஆரோக்கிய சட்டங்களில் (2005 IHR) கையொப்பமிட்டிருக்கிறது.

இதில் சர்வதேச ஆரோக்கிய சட்டம் என்பது 196 நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் போன்றது. அதே சமயம் இந்தியா உலக சுகாதார நிறுவனத்தில் உறுப்பினராக உள்ள பதினொரு தெற்காசிய நாடுகளிலும் ஒன்று. ஆனால், நாம் இன்னமும் கூட்டு வெளிப்புற நடவடிக்கை தொடர்பான எந்தவித திட்டமும் இல்லாதவர்களாக இருக்கிறோம்.

கடந்த 2009ம் ஆண்டு பன்றிக் காய்ச்சல் பரவியபோது இந்தியாவின் லேப் வசதிகள், அவசரகால தகவல் தொடர்பு முறைமைகள், கண்காணிப்பு அமைப்புகள் போன்றவை குறிப்பிடும்படியாகவே இருந்தன. ஆனால், மறுபுறம், தேசிய அளவிலான மாதிரிகள் பராமரிப்பில் சுமாராகவே உள்ளோம். அதேபோல், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு இடையிலான தொற்றுநோய் பரவல் தொடர்பான ஆவணங்களும் நம்மிடையே முறையாக இல்லை.

நிபா வைரஸ் தொற்று கேரளாவில் 2018ம் ஆண்டு பரவியபோது நம்முடைய உடனடி எதிர்வினை என்பது குறிப்பிடும்படியாக இருந்தது. ஆனால், நம்முடைய மருத்துவர்கள், செவிலியர்கள் எண்ணிக்கை, மருத்துவமனை படுக்கைகள் எண்ணிக்கை ஆகியவை மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவு என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், தடுப்பூசிகள் உள்ளிட்ட பிற மருத்துப் பொருட்கள் வழங்குதல் மற்றும் தேவைக்கு இடையிலான போதாமைகள் நம்முடைய இன்னொரு பெரிய சவால். நம்முடைய மக்கள் தொகைக்கு ஏற்ப நாம் இந்தக் கட்டமைப்புகளை எல்லாம் மேம்படுத்தவும் இல்லை. அதைப் பற்றி சிந்திப்பதுமில்லை என்பதுதான் சிக்கல்.

அதேபோல் சட்ட வழிகாட்டுதல்படியும் நாம் மேம்பட வேண்டியுள்ளது. நம்முடைய நோய்க் கால பேரிடர்கள் தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மைக்கான வழிகாட்டுதல் ஆவணங்களில் காலத்திற்கேற்ற மாற்றங்கள் தேவை.

தேசிய சுகாதார வரைவு 2017 (தொற்றுநோய், உயிரியல் - தீவிரவாதம், பேரிடர் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பான மசோதா) நூற்றாண்டு பழைய அதாவது 1897ம் ஆண்டைச் சேர்ந்த தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தை நீக்கினாலும், இந்த புதிய மசோதாவில் மேலும் பல மாற்றங்களைச் செய்ய வேண்டியதாக இருக்கிறது.

உதாரணமாக, இப்படியான தொற்றுநோய் கண்டறியப்பட்டால் உடனடியாக பாதிக்கப்பட்டவரை தனிமைப்படுத்தி வைத்திருக்கச் சொல்லும் சட்டம், இவர்கள் தவறான நோக்கம் கொண்ட அந்நிய சக்தியால் பயன்படுத்தப்படாமல் இருக்கவும், உரிய பாதுகாப்புடன் இருப்பதைப் பற்றியும் போதிய கவனம் செலுத்தவில்லை. இப்படியான மாற்றங்கள் இன்றைய நவீன உலகத்தில் அவசியம் மற்றும் அவசரம்.   

இனிவரும் காலங்களில் இப்படியான தொற்று நோய் பரவல் என்பது அடிக்கடி நிகழச் சாத்தியமானது. எனவே இவை நடக்குமா என்று கேட்காமல், எப்போது நடக்கும் என்பதாக நம் அணுகுமுறையை மாற்றிக்கொண்டு வருமுன் காப்பதற்குத் தயாராவது புத்திசாலித்தனம். மத்திய அரசு இதனைப் பரிசீலிக்குமா?  

இளங்கோ கிருஷ்ணன்