நெருப்புத் திருவிழா



உலகின் புகழ்பெற்ற திருவிழாக்களைப் பட்டியலிட்டால் நிச்சயம் ‘Fellas’க்கு முக்கிய இடமிருக்கும்.

18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஸ்பெயின் மக்கள் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக வீட்டிலுள்ள பழைய பொருட்கள், மரச்சாமான்கள் மற்றும் துணிமணிகளைத் தீயிலிட்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.இது நாளடைவில் கலை, கலாசாரம், பண்பாட்டைப் பிரதிபலிக்கும் ஒரு விழாவாக இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருமாறியது. பிறகு ஸ்பெயினில் உள்நாட்டுப் போர் நிகழ்ந்த காலத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இவ்விழா 1950களுக்குப் பிறகு விஸ்வரூபம் எடுத்து இப்போது ஆண்டுதோறும் தவறாமல் கொண்டாடப்பட்டுவருகிறது.

இந்த வருடத்தில் மார்ச் 15ல் ஆரம்பித்து 19 வரைக்கும் ஸ்பெயினின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள வாலென்சியா நகரில் கோலாகலமாக  கொண்டாடப்படவிருக்கிறது ‘Fellas’. இவ்விழாவைக் காண்பதற்காக 20 லட்சம் சுற்றுலாப் பயணிகள் ஸ்பெயினை நோக்கி படையெடுக்கப்போகிறார்கள். ‘‘மானுடத்தின் அசைக்க முடியாத கலாச்சார- பாரம்பரியத் திருவிழா...’’ என்று ‘யுனெஸ்கோ’ இதை புகழ்கிறது.

மார்ச் மாதத்தின் மத்தியில்தான் திருவிழா ஆரம்பிக்கிறது என்றாலும் பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்தே மக்கள் தயாராகிவிடுவார்கள். உலகம் முழுவதிலிருந்தும் பிரசித்திபெற்ற 150 கலைஞர்கள் விழாவில் கலந்து கொண்டு தங்களின் படைப்புகளைக் கண்காட்சிக்கு வைக்கப்போகிறார்கள். ஸ்பெயினின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஆடைகளைத் தான் மக்கள் விழா முடியும் வரை அணிந்திருப்பார்கள்.

24 மணி நேரமும் வீதிகளில் பார்ட்டிகள் நடந்துகொண்டே இருப்பதால் வீட்டில் யாரும் சமைக்க மாட்டார்கள். பட்டாசு வெடிச்சத்தம் ஒரு நிமிடம் கூட தவறாமல் கேட்டுக்கொண்டே இருக்கும். கதை சொல்லுதல், இசைக் கச்சேரி என நாலாப்பக்கமும் களைகட்டும். பட்டியலிடமுடியாத அளவிற்கு 300 விதமான கேளிக்கை நிகழ்ச்சிகள் அரங்கேறும். இறுதி நாளின் இரவில் ராட்சத பொம்மைகள் மற்றும் மரப்பொருட்களை எரித்து விழாவை முடிப்பார்கள். அதனால் இதை எரியும் திருவிழா என்றும் அழைக்கிறார்கள்.