கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்-40



செய்யும் தொழிலில் ஞானம் பெற ஆசீர்வதிக்கும் ஈசன்!

ஐராவதம் அடைந்த நற்கதியை அறிந்த அகத்தியருக்கு மெய் சிலிர்த்தது.காட்டில் யாரும் அறியாமல் நடந்த இந்த சம்பவம், சைவ உலகத்தின் கஜேந்திர மோட்சம் அல்லவா? மார்க்கம் ஏதுவாக இருந்தால் என்ன? உண்மையான பக்தியும், அர்ப்பணிப்பும் இருந்தால் இறைவன் ஓடோடி வந்து விடுகிறான் என்பதற்கு இந்தச் சம்பவமும் அற்புத எடுத்துக்காட்டுதானே?பிரமித்தபடியே வனத்தில் இருக்கும் அந்த அதிசய லிங்கத்தை நோக்கினார்.

அப்போது சூரிய ஒளி அதன் மீது படர்ந்தது. ‘பொன்னார் மேனியனே...’ என பிற்காலத்தில் சுந்தரர் பாடப் போவதற்கு அத்தாட்சியாக ஆதவனின் பொன் மயமான ஒளி பட்டு அந்த லிங்கம் தங்க லிங்கம் போல ஜொலித்தது. அதைக் கண்ட அகத்தியருக்கு லிங்கத்தின் பின் இருக்கும் மர்மத்தை, தான் இன்னும் முழுதாக உணரவில்லை என்று தோன்றியது. உடனே தன் ஞானக் கண்ணின் துணையை நாடி, புறக் கண்களை மூடிக் கொண்டார். உதட்டில் சிவ நாமம் குடி புகுந்தது.

அதே செண்பக வனம். அதே அமானுஷ்ய லிங்கம். ஆனால், இப்போது பூஜிக்கும் நபர் மட்டும் வேறு. மஞ்சள் பட்டு சரசரக்க, அங்கமெங்கும் தங்க நகை மின்ன சுவர்ணமயமான காந்தியோடு காட்சியளித்தார் அவர். அவரை யாரும் மறந்தும் மனிதர் என்று சொல்லிவிட மாட்டார்கள். அப்படி ஒரு தெய்வீக லட்சணம் முகத்தில். ஈசனை அர்ச்சிக்கும் விதத்தில்தான் எத்தனை பக்திக் கசிவு? அந்த நபரின் மனமும் மொழியும் மெய்யும் அந்த ஈசனிடம் லயித்து விட்டது என்பதை வெளிச்சமிட்டுக் காட்டியது அவரது  வதனம்.

இது போதாதா ஈசனுக்கு அருளை வாரி வழங்க?

பூதகணங்களின் ஜெய கோஷம் விண்ணைப் பிளக்க... ரிஷிகளின் வேத கானம் மனதை மயக்க... தேவரும், கந்தர்வரும் துதி பாடி ஆட... கோலாகலமாக வந்தார் மகாதேவன்.அவரை விட்டு என்றும் பிரியாத அம்பிகை, இன்றும் அவரது இடது புறம் அழகுற வீற்றிருந்தாள்.

இது எதுவும் அறியாமல் தியானத்தில் ஆழ்ந்திருந்த அந்த நபரை நோக்கி ஈசன் பேச ஆரம்பித்தார். ‘‘இனனே! கண்களைத் திறந்து உனது தவப் பலனை தரிசிப்பாயாக...’’தனது கண்களைத் திறந்து பரம்பொருளை தரிசித்தார் இனன் என்ற அந்த நபர். இருகைகளையும் கூப்பி கண்களில் நீர்கசிய வாய் குழற நெக்குறுகி ஈசனை சேவித்தார்.

‘‘வேதங்களின் பரம்பொருள் யார் என்ற கேள்விக்கு விடையான தேவ தேவா! இன்று இந்த ஏழையைக் காக்க விடை ஏறி வந்தாயோ?’’ அவரது மனதின் உருக்கம் குரலில் பிரதிபலித்தது. அதைக் கண்ட ஈசன் புன்னகை பூத்தார். தங்கப் பேழையில் இருந்து முத்து உதிர்ந்தது போன்ற காட்சியை அது ஏற்படுத்தியது.

‘‘சூரியனே! உலகை இயங்க வைக்க உன்னால் முடியுமா என்ற கவலையை விடு! அதற்குத் தேவையான ஒளியை நான் உனக்குத் தந்தேன். இனன் என்று அழைக்கப் படும் நீ, இந்த ஊரில் நம்பி தவம் இருந்து பயன் பெற்றதால் இனி இந்த ஊர் ‘இனன் நம்பு ஊர்’ என்று அறியப்படும். காலப்போக்கில் அந்தப் பெயர் இன்னம்பூர் என்று மருவும். ஆசிகள்!’’ தேனாக தித்தித்தின ஈசனின் சொற்கள்.

‘‘இனி உலகிற்கு தங்கு தடையின்றி ஒளி வழங்கு. ஈசன் பாதம் என்றும் துணை இருக்கும்!’’ தேன் போன்ற ஈசனின் ஆசியோடு அம்பிகையின் சர்க்கரை ஆசியும் சேர்ந்து விட்டது. தித்திப்புக்கு என்ன பஞ்சம்?ஆனால், சூரியனின் முகத்தில்தான் மகிழ்ச்சிக்கு பதில் வருத்தம் படர்ந்தது. அதை அம்பிகையின் தாயுள்ளம் கண்டுவிட்டது. ‘‘என்ன சூரியா! என்ன கவலை?’’

‘‘‘த்வமேவ பாந்த மனுபாதி சர்வ தஸ்ய பாசா சர்வமிதம் விபாதி’ என்கிறது வேதம். அதாவது, பரம்பொருளான உங்களை வணங்கும் அனைத்தும் ஒளிர்கிறது என்று வேதம் திட்டவட்டமாகக் கூறுகிறது. அந்த வாக்கியத்திற்கு சான்றாக நான் இப்போது தங்கள் எதிரே நிற்கிறேன்.

ஆனால், இந்த உயர்ந்த நிலையைத் தந்தது தங்கள் பாதம்தானே! அதை விட்டுச் செல்ல என் மனம் மறுக்கிறது பிரபோ! தேவர் பெருமானே! தங்களை என்றும் பூஜிக்கும் பாக்கியம் எனக்கு வேண்டும். அதை தயை கூர்ந்து தந்தருளுங்கள் சுவாமி...’’ தழுதழுப்புடன் சொன்னபடி அப்படியே தரையில் விழுந்து சேவித்தார் கதிரவன்.

அவரது பக்தியை வெளிச்சமிட்டுக் காட்டும் இந்தச் செயல் அம்மையப்பனை வெகுவாகக் குளிரவைத்தது. ‘‘கவலையை விடு ஆதவா! எழுந்திரு...’’ அம்பிகையின் வீணைக் குரல் கட்டளையிட்டது. நொடியில் எழுந்து நின்றார் சூரியன். அப்பப்பா எவ்வளவு தேஜஸ். ஈசனின் வரம் அதற்குள் பலித்து விட்டதே! ‘‘ஆவணி 31ம் நாள், புரட்டாசி முதல் மற்றும் இரண்டாம் நாள், பங்குனியில் பதிமூன்று முதல் பதினைந்தாம் நாள்... இந்த நாட்களை நன்கு குறித்து வைத்துக் கொள்!’’ ஈசன் கட்டளையிட்டார்.

அவர் சொல்வதற்கு முன்பே சூரியனின் உள்ளத்தில் இந்த தேதிகள் பசுமரத்து ஆணிபோல் ஆழப் பதிந்து விட்டன. அதற்கு ஆதாரமாக தனது சிரத்தை வேகமாக அசைத்தார் ஆதவன். ‘‘இந்த தேதிகளில் உன் ஒளியால் எங்களை பூஜிக்கலாம்!’’ மகாதேவர் சொல்ல நினைத்ததை சொல்லி முடித்து விட்டு கனிவாக ஈசனை நோக்கினாள் லோக மாதா!

ஈசன் முகத்தில் ஆச்சரியம் இல்லை. அவருக்குத் தெரியாதா, அவரது உள்ளத்தின் போக்கை உமை அறிவாள் என்று. உமையையும், ஆதவனையும் நோக்கி கருணைப் புன்னகை செய்தார் பெருமான். அதில் அண்ட சராசரமும் மயங்கியது. கதையில் தன்னை மறந்திருந்த நாகராஜன், சட்டென கரம் குவித்து ‘‘பரமேஸ்வரா...’’ என்றார்.தன் கணவரை நடப்புக்குக் கொண்டு வர ஆனந்தவல்லி பேச ஆரம்பித்தார்.

‘‘இன்னிக்கும் ஈசன் சொன்ன அந்த தேதிகள்ல இன்னம்பூர்ல இருக்கிற லிங்கத்தை சூரியன் மறக்காம வழிபடறார்! சூரியனே வழிபட்ட... வழிபடற சிவன். அதனால இன்னம்பூர் சிவனை வணங்கினா ஞானம் செழிச்சு வளரும். ஜாதகத்துல சூரியன் சரியா இல்லாதவங்களுக்கு இந்த சிவன்தான் ஒரே கதி. எந்தத் துறைல இருக்கறவங்களும் அந்தந்த துறைல பெயரும் புகழும் வாங்கணும்னா இந்த சிவனின் துணையை நாடலாம்! கண்டிப்பா பிரகாசிக்கச்
செய்வார்!’’

கண்களைத் திறந்து தன் மனைவி சொன்னதைக் கேட்ட நாகராஜன் திருப்தியுடன் தலையசைத்தார். ‘‘தாத்தா...’’ கண்ணன் யோசனையுடன் கேட்டான்.
‘‘என்ன கண்ணா..?’’‘‘சுதன்மானு ஒருத்தரைப் பத்தி ஆரம்பத்துல சொன்னீங்களே... அவர் என்ன ஆனார்..?’’‘‘தாத்தா... அப்படியே எனக்கு கணக்கு போட அந்த சாமி எப்பிடி உதவுவார்னும் சொல்லுங்க...’’ கருமமே கண்ணாக தன் பிரச்னையை நினைவுபடுத்தினான் ஷ்யாம்.
‘‘சொல்றேன்...’’ நாகராஜன் புன்னகைத்தார்.

சூரிய ஒளி லிங்கத்தின் மேல் விழும் மர்மத்தை அறிந்த அகத்தியர் நெக்குருகினார்.இந்த பூமியே இயங்குவதற்குக் காரணமான சூரிய ஒளியை சூரியனுக்குத் தந்துவிட்டு, ஒன்றும் அறியாதவன் போல லிங்கமாக மாறிவிட்ட ஈசனின் மாயை அவரை மலைக்கச் செய்தது.
நிச்சயம் இன்னம்பூர் ஈசனின் அதிசயங்கள் சூரியனோடு நின்றிருக்காது என்று அவரது உள்ளுணர்வு சொல்லிற்று. தான், அறியாமல் விட்டதை அறிய மீண்டும் தன் புறக் கண்களை மூடி ஞானக் கண்களைத் திறந்தார்.

அவர் மனக் கண் முன் அந்த அற்புதக் காட்சி விரிந்தது. இம்முறை அவரை அவரது மனக் கண் எதிர்காலத்துக்கு அழைத்துச் சென்றது!
சோழப் பேரரசின் அரசவை. அதன் நடுவே ரத்தினங்கள் இழைத்த அற்புத சிம்மாசனம்.

அதில் கம்பீரமாக அமர்ந்திருந்தார் சோழ மன்னர். முறுக்கு மீசை அவரது வீரத்தை சொல்லாமல் சொல்லியது. மலை போன்ற புஜங்களும் அதில் இருந்த போர் வடுக்களும் அவருக்கு அழகையே சேர்த்தன. இடையில் கட்டியிருந்த மஞ்சள் பட்டு, கச்சையோடு கூடி பிரகாசித்தது. மலை போன்ற மார்பில் மாணிக்கம் பதித்தது போல பதக்கம் ஒன்று மின்னியது.

இப்படி ராஜ கம்பீரமாக இருந்த அவரை நோக்கி ஒரு சேவகன் வந்தான். கை கட்டி வாய் பொத்தி, ‘‘தங்களைக் காண கணக்கர் சுதன்மர் வந்திருக்கிறார்....’’ என்று அறிவித்தான்.

மன்னரின் மனம் நடந்தவற்றை அசைபோட ஆரம்பித்தது. இன்னம்பூர் கோயிலைப் பராமரிக்கும்படி அவரிடம் பல பொற்காசுகளைக் கொடுத்திருந்தார். சுதன்மர் செய்த பணிகளில் எந்தக் குறையையும் சொல்லிவிட முடியாது. பார்த்துப் பார்த்து அத்தனையும் செய்தார். அவர் கோயிலைப் பராமரிக்கும் விதம் மன்னருக்கும் மகிழ்ச்சியையே தந்தது.

ஆனால், அவர் செய்யும் தர்ம காரியங்களும் அதனால் சுதன்மர் மீது மன்னருக்கு ஏற்பட்ட நன்மதிப்பும் பலருக்கு வயற்றெரிச்சலைத் தந்தது.
அதன் காரணமாக கோயிலுக்காக மன்னர் தந்த பொன்னை தன் சொந்த தேவைகளுக்காக சுதன்மர் தவறாகப் பயன்படுத்துவதாக புகார் செய்தார்கள்.
மன்னருக்கு இந்த புகார் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும் விசாரிக்காமல் விட்டால் அது நீதிக்கு புறம்பானதாக இருக்கும் என்பதால் சுதன்மரை அழைத்து ஆலயத்து கணக்கு வழக்கை காட்டச் சொன்னார்.

சுதன்மரின் மனம் துணுக்குற்று வாடியது. ஆறுதல் சொல்லத்தான் மன்னர் நினைத்தார்... ஆனால், கடமை இருக்கிறதே... ‘‘நாளைக்காலை கணக்கு வழக்குகளுடன் என்னை வந்து பாருங்கள்...’’ என கட்டளையிட்டார்.அதன்படியே இப்போது சுதன்மர் வந்திருக்கிறார். ஈசனின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, ‘‘வரச் சொல்...’’ என சேவகனிடம் கட்டளையிட்டார்.கணங்கள் கடந்ததும் சுதன்மர் அரசவைக்குள் நுழைந்தார். அவரைக் கண்ட மன்னர் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தார்!

(கஷ்டங்கள் தீரும்)  

 - ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்