நான்...மனோ



அஞ்சு ரூபாய் கிடைச்சா போதும்னு மைக்ல நின்னு பாடுவேன். ஆனா, ரூ.30 கிடைக்கும் பாருங்க... அவ்வளவு பெரிய சந்தோஷம் அது!

நாகூர் பாபு. இதுதான் என் பெயர். ஆந்திர மாநிலம் குண்டூர் பக்கத்துல சத்தனபள்ளில 1965ல பிறந்தேன்.
அப்பா ரசூலும், அம்மா ஷகிதாவும் பௌராணிக நாடக (Mythological drama) நடிகர்கள். தமிழகத்துல தெருக் கூத்து எப்படியோ அப்படி ஆந்திரா, மகாராஷ்டிராவுல கிருஷ்ணர், ராமர், சீதானு தெய்வங்களை வைச்சு இசை நாடகங்கள் போடுவாங்க. இதை நடன நாடகங்கள்னு கூட சொல்லலாம்.

அப்பா மேடை இசைல ஆர்மோனியக் கலைஞர். இந்திய வானொலி நிலையத்துல நிலைய இசைக் கலைஞரா ஏ கிரேடுல இருந்தார். அப்பறம் மேடை இசைக் கலைஞரா அம்மா கூடவே பயணப்பட்டார். எங்க பெரியம்மா, அதாவது அம்மாவுடைய அக்கா பாஷாபி, ஆண் வேடமிட்டு கிருஷ்ணர், ராமரா நடிப்பாங்க.

தலையணைல என்னை படுக்க வைச்சுட்டு அசைவு தெரியாம அப்பா ஆர்மோனியம் வாசிப்பாராம்! நாடகத்துக்கு இடைல அம்மா எனக்கு பால் தருவாங்களாம். இப்படி இசை சூழ்ந்துதான் வளர்ந்தேன். கஷ்டப்பட்டுதான் எங்களை வளர்த்தாங்கனு என் அண்ணன்கள் ஷாகித்தும், ஷுகுர் பாபுவும் சொல்வாங்க.

ஆறு வயசுல நானும் பாட ஆரம்பிச்சேன். இரவு நாடகம் நடக்கறப்ப இடைல ஸ்டூல் மேல என்னை மைக் முன்னாடி நிக்க வைச்சு அப்பா பாட வைப்பார். அப்ப அஞ்சு ரூபா பெரிய தொகை. சின்னப் பையன் பாடறான்னு எனக்கு 30 ரூபா தருவாங்க. மாசம் முழுக்க பாடினா நூறு, நூத்தி இருபது ரூபா வரை கிடைக்கும். அதை உண்டியல்ல சேமிப்பேன்.

மழைக் காலங்கள்ல நாடகம் போட முடியாது. அப்ப வீட்டு செலவுக்கு அந்தப் பணத்தை எங்கிட்ட கடனா அப்பா வாங்கிப்பார்! படிப்பெல்லாம் சும்மா ஒப்புக்குதான். என் ஈடுபாடு முழுக்க மேடை, இசை, பாட்டுதான்.இந்த சூழல்ல விஜயவாடாவுக்கு குடிபெயர்ந்தோம். அங்க பெரிய கர்நாடக சங்கீத பாடகரும் வயலின் வித்துவானுமான நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி ஐயாகிட்ட முறைப்படி சங்கீதம் கத்துகிட்டேன். கூடவே குழந்தை நட்சத்திரமா சினிமாலயும் நடிக்க ஆரம்பிச்சேன்.

1972 - 73ல சென்னைலதான் ஷூட்டிங், ரிக்கார்டிங், டப்பிங் எல்லாம் நடக்கும். அப்பா கூட சென்னை வந்து நடிச்சுட்டு போவேன். 12 வயசுல தாசரி நாராயணராவ் இயக்கத்துல ஹீரோயினுக்கு தம்பியா ஒரு படத்துல நடிச்சேன். எனக்கு ஒரு பாட்டும் இருந்தது. இந்தப் பாட்டை எஸ்.பி.பி. அண்ணன் பாடறதா இருந்தது. தன் குரலை கொஞ்சம் மெல்லிசாக்கி அவர் பாடணும். படத்துக்கு இசை எம்.எஸ்.விஸ்வநாதன் ஐயாதான்.

அப்ப எங்கப்பா மெல்ல என் மகன் பாடவும் செய்வான்னு சொன்னார். உடனே எம்.எஸ்.வி. ஐயா ‘எங்கே பாடு’ன்னு சொன்னார். கஸல்ல ஒரு பாடல் பாடினேன். ‘இந்தப் பாட்டைப் பாடுவியா’ன்னு கேட்டார். ‘சொல்லிக் கொடுங்க ஐயா... பாடறேன்’னு சொன்னேன். அதே மாதிரி தைரியத்தை வரவைச்சு பாடவும் செய்துட்டேன்.

‘அட நல்லா பாடறியேப்பா... என்கிட்ட வந்துடறியா’ன்னு கேட்டார். ஏற்கனவே ரெண்டுங்கெட்டான் வயசு என்பதால் மேடை நாடகங்கள்ல குழந்தை நட்சத்திரமா நடிக்க வாய்ப்பு குறைஞ்சிருந்தது. படங்கள்லயும் வயசை காரணம் காட்டி தட்டிக் கழிச்சாங்க. இந்த சூழல்ல ஐயாவே கூப்பிடறாரேன்னு சந்தோஷமா அவருக்கு உதவியாளரா சேர்ந்துட்டேன்.

ரங்கராஜபுரம் ஏரியாவுல 30 ரூபா வாடகைக்கு தங்கினேன். வீட்ல இருந்து மாசம் ரூ.200 கொடுப்பாங்க. அதை வைச்சு என் செலவை பார்த்துகிட்டேன்.ஒரு மாசத்துக்கு அப்புறம், ‘ஸ்வரம் எழுதுவியா’னு ஐயா கேட்டார். அடுத்த நிமிஷமே அவர் பாட... எழுதிக் கொடுத்தேன். பாராட்டினார். ஆனா, இது சீனியர் அசிஸ்டெண்ட்ஸுக்கு பிடிக்கலை. ‘அடுத்து நீ ஸ்வரம் எழுதினா ஊருக்குத்தான் போகணும்’னு சொன்னாங்க. அவங்க பயம் அவங்களுக்கு!

அடுத்த முறை ஐயா ஸ்வரம் கேட்டப்ப தாமதப்படுத்தினேன். அவர் மகான் இல்லையா... என்ன நடந்ததுனு கண்டுபிடிச்சுட்டார். ‘வேலையை மட்டும் கத்துக்க... பாலிடிக்ஸை பொருட்படுத்தாத...’னு சொன்னார். தினசரி ஒரு நோட்டுல கையெழுத்து போடுவோம். அது அட்டண்டென்ஸ்னு நினைச்சேன். ஆனா, ரெண்டு வருஷம் கழிச்சுதான் இப்படி கையெழுத்து போட்டா தினசரி பேட்டா ரூ.15 கிடைக்கும்னு தெரிஞ்சுது. ரெண்டு வருஷமும் என் பேட்டா காசை எங்கிட்ட தராம என் சீனியர், தானே எடுத்திருக்கார்! புன்னகையோட இதை கடந்தேன்.

கல்யாண சீசன்ல பனகல் பார்க்கை சுத்தி இருக்கற மண்டபங்கள்ல நைசா போய் சாப்பிட்டு வருவேன். அங்க கொடுக்கற தேங்காயை வீட்டுப் பக்கத்துல இருக்கற மளிகைக் கடைல கொடுப்பேன். பதிலுக்கு கடைக்காரர் காய்கறிகளை கொடுப்பார். அதை ஹவுஸ் ஓனர் அம்மாகிட்ட தருவேன். அவங்க குழம்பு வைச்சு எனக்கும் தருவாங்க! சோறு மட்டும் நான் வைச்சுப்பேன்!

எங்க ஆபீஸ்ல இருந்த மூணு இசைக் கலைஞர்கள் வாரத்துல ரெண்டு நாள் சவேரா ஹோட்டல் பார்ல இந்திப் பாடல்கள் வாசிப்பாங்க. அவங்க கூட கூட்டு சேர்ந்துகிட்டேன். அஞ்சாறு இந்திப் பாடல்கள் தெரியுமே! இதுக்கு ரூ.30 கிடைச்சது.எல்லாரும் ரெக்கார்டிங் கிளம்புவாங்க, ஐயா என்னை ‘டேய் வந்துருடா அவங்க கூட’ன்னு சொல்லிட்டுப் போயிடுவார். ஆனா, ‘கார்ல இடமில்ல... நாளைக்கு வா’னு என்னை விட்டுட்டுப் போயிடுவாங்க. பலமுறை இதே மாதிரி நடக்கவே ஊர்ல இருந்து சைக்கிள் கொண்டு வந்தேன். கார் கிளம்பினதும் அது பின்னாடியே சைக்கிளை மிதிச்சு போவேன். வடபழனில இருந்து சத்யா ஸ்டூடியோ வரைக்கும் கூட போயிருக்கேன்!

ரிக்கார்டிங், ஃபிரேம் டு மார்க், மியூசிக் ஆர்டிஸ்ட்டுகளுக்கு எப்படி நோட்ஸ் கொடுக்கணும், டிராக்... இதெல்லாம் கத்துக்கிட்டேன்.
இந்தநேரத்துல அம்மாவுக்கு இதயத்துல பிரச்னை வந்தது. இனி அவங்க பாடி டான்ஸ் ஆடக் கூடாதுனு டாக்டர் சொல்லிட்டார். வீட்ல எல்லாருக்கும் அதிர்ச்சி. அம்மாவை ரெஸ்ட் எடுக்கச் சொல்லிட்டு தெலுங்கு இசை ஜாம்பவானான சக்கரவர்த்தி ஐயாகிட்ட தபேலா வாசிக்க எங்கண்ணனை அழைச்சுட்டு போனேன்.

அண்ணனுக்கு வேலை தர்றதா சொன்ன சக்கரவர்த்தி ஐயா, என்னைப் பத்தி விசாரிச்சார். எனக்கு ஸ்வரம் எழுதத் தெரியும்னு அறிஞ்சதும் சந்தோஷமாகி ‘எங்கிட்ட வந்துடு’னு கூப்பிட்டார். ‘இல்ல... எம்.எஸ்.வி., ஐயாகிட்ட இருக்கேன்’னு சொன்னேன். ‘அவரு சொன்னா வருவியா’னு கேட்டு உடனே எம்.எஸ்.வி., ஐயாவுக்கு போன் செய்தார்.

‘திறமையான பையன்... எங்கிட்ட இருந்தா அவன் மேல வர்றது கஷ்டம்... உனக்குதான் தெரியுமே! நீ வைச்சுக்க... அவனை மேல கொண்டு வா’னு எம்.எஸ்.வி. ஐயா சொன்னார்! நெகிழ்ந்துட்டேன்.சக்கரவர்த்தி ஐயாகிட்ட சேர்ந்தேன். பிசியானேன். நான்கைந்து ஷிப்ட் போட்டு வேலை பார்க்கற அளவுக்கு சக்கரவர்த்தி ஐயாகிட்ட படங்கள் இருந்தது.

என் வேலை ஸ்வரங்கள் கொடுக்கறது... டிராக் பாடுறது. சுமாரா 2 ஆயிரம் பாடல்கள் வரை டிராக் பாடியிருக்கேன். நான் பாடினதை எப்படி பிரபல பாடகர்கள் மேம்படுத்தி பாடறாங்கனு கவனிச்சு என்னை நானே மேம்படுத்திக்கிட்டேன்.

இந்த சூழல்ல இசைஞானி ராஜா சார்கிட்ட இருந்து அழைப்பு வந்தது. கையும் ஓடலை காலும் ஓடலை. அவரைப் பார்த்து வணக்கம் வைச்சா போதும்னு நினைச்சவனுக்கு இப்படியொரு யோகம்! ‘லேடீஸ் டெய்லர்’ படத்துக்கு தொடர்ந்து மூணு நாள் என்னை பாட வைச்சார்...
எதுக்காக என்னை பாட வைக்கறார்னு எனக்கு குழப்பம். ஜி.கே.வெங்கடேஷ் சார்கிட்ட தயங்கித் தயங்கி கேட்டேன். அவர் ராஜா சார்கிட்டயே சொல்லிட்டார்! சிரிச்சுகிட்டே ராஜா சார் என்னைக் கூப்பிட்டு, ‘தமிழ்ல பாடறியா’னு கேட்டார். கரும்பு தின்னக் கூலியா! ஓகே சொன்னேன். பாட வைச்சார். ஆனா, ‘ழ’கரம் வரவே இல்ல... கோபப்படாம பொறுமையா நாக்கை எப்படி மடிக்கணும்னு சொல்லிக் கொடுத்தார்!

‘நாகூர் ஹனீபாவுக்கும் உனக்கும் இடைல குழப்பம் வரக் கூடாது... நீயே ஒரு நல்ல பெயரா சொல்லு’னு ராஜா சார் கேட்டார். ‘நீங்களே சொல்லுங்க’ன்னு சொன்னேன். ‘மனோகர், மனோரஞ்சித்… ம்ம்ம்... மனோ’னு சொன்னார்!

அவர் எனக்கு பெயர் வைச்ச ராசி... இன்னிக்கி இந்தளவு வளர்ந்திருக்கேன். கிட்டத்தட்ட 2 ஆயிரம் பாடல்கள் வரை ராஜா சார் மியூசிக்குல பாடியிருக்கேன்! நடிகர் திலகத்துக்கு பாடினப்ப, ‘அவர்கிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு வா’னு ராஜா சாரே என்னை அனுப்பி வைச்சார்!
இதுக்கு இடைல வீட்ல எனக்கு குண்டூர்ல பொண்ணு பார்த்தாங்க. அப்ப எனக்கு வயசு 19. அவங்க பேரு ஜமீலா. எங்க திருமணம் உறவினர்கள் சூழ நடந்தது.

ஓரளவு சம்பாதிக்கத் தொடங்கியதும் வீடு கட்ட ஆரம்பிச்சேன். ஆனா, அம்மாவுக்கு இதயப் பிரச்னை அதிகமானதும் பாதி கட்டியிருந்த வீட்டை அப்படியே விட்டுட்டு அம்மாவின் மருத்துவத்தை கவனிச்சேன். இந்த நேரத்துல எஸ்.பி.பி., அண்ணனுக்கு தொண்டைல அலர்ஜி ஏற்பட்டு மூணு மாசம் வரை அவர் ரெஸ்ட் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுச்சு.

அவருடைய சின்ன பிரச்னை, எனது பெரிய பிரச்னைக்கு கை கொடுத்துச்சு. இரவு பகல்னு பார்க்காம ஆறு மாசம் பாடினேன்... பாடினேன்... பாடினேன். வந்த பணத்தை அம்மாவின் சிகிச்சைக்கு செலவு செய்தேன். டாக்டர் செரியன்தான் சிகிச்சை செய்தார். ஒரு கட்டத்துல ‘இன்னும் 2 வாரங்கள்தான் உங்கம்மா இருப்பாங்க... இதுக்கு மேல உன்னை செலவு செய்ய வைக்க எனக்கு விருப்பமில்லை’னு டாக்டர் சொன்னார். அதே மாதிரி 2 வாரங்கள்தான் அம்மா இருந்தாங்க. ஒரு மகனா எங்கம்மாவை குறைவில்லாம பார்த்துக்கிட்டேன்னுதான் நினைக்கறேன்!

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தினு இதுவரை 25 ஆயிரம் பாடல்கள் வரை பாடியிருக்கேன். நிஜமாவே இது என் பாக்கியம். ஒரு கட்டத்துக்குப் பிறகு என் குரல் பத்தி வந்த விமர்சனங்களை கணக்குல எடுத்துகிட்டு கொஞ்சம் மாற்றம் செஞ்சேன். ஏ.ஆர்.ரஹ்மான் நல்ல வாய்ப்பு கொடுத்தார். ‘முக்காலா...’ மிகப்பெரிய ஹிட்.

இடைல நடிக்கப் போனேன். இசைல பாதிப்பு ஏற்படவே அதை விட்டுட்டேன். ரெண்டு, மூணு படங்களுக்கு இசையமைச்சேன். பாராட்டுகள் வந்தாலும் அதுவும் பாடலுக்கு இடையூறாகவே அதையும் விட்டுட்டேன். தெலுங்கு சூப்பர் ஸ்டார்களுக்கு டப்பிங் பேசிட்டிருந்த சாய்குமார் முழுநேர நடிகரானதும் அந்த டப்பிங் வேலைகள் எனக்கு வந்தது.

ரஜினி சார் படங்கள் தெலுங்குல ரிலீஸ் ஆகறப்ப நான்தான் அவருக்கு டப்பிங் கொடுக்கறேன். முன்னாடி மும்பை அல்லது சென்னைலதான் ரிக்கார்டிங் இருந்தது. அதனால இந்திய அளவுல பாடகர்களுக்கு சான்ஸ் கிடைச்சது. இப்ப அப்படியில்ல. டெக்னாலஜியின் வளர்ச்சி சூழலை மாத்திடுச்சு. இந்த வகைல நாங்க எல்லாம் புண்ணியம் செய்தவங்க. அதனாலதான் இவ்வளவு எண்ணிக்கைல எங்களால பாட முடிஞ்சுது.

3 ஆயிரம் கச்சேரிகளுக்கு மேல பார்த்தும், பல டிவி நிகழ்ச்சிகள்ல பங்கேற்றும் இப்பவும் மேடை ஏறும்போது நடுக்கம் வருது. இந்த பயமும் தொழில் மீது இருக்கற மரியாதையும் எல்லா கலைஞர்களுக்கும் தேவைனு நினைக்கறேன்.

இசைக்குப் பின் என் உலகம் என் குடும்பம்தான். என் முதல் பையன் ஷாகிர், வீடியோ கேம் மேக்கிங்ல இருக்கார். சில படங்கள் கூட நடிச்சிருக்கார், அடுத்த பையன் முகம்மது ரஃபீக், ரெஸ்டாரன்ட் பிஸினஸ் பண்றார். மகள் சோபியா திருமணமாகி அமெரிக்காவுல இருக்காங்க. மாப்பிள்ளை பெயர் நதீம். சந்தோஷமா இருக்கேன்! வேறென்ன சொல்ல..?

ஷாலினி நியூட்டன்

ஆ.வின்சென்ட் பால்