மத்திய அரசின் விருதை பெற்றிருக்கும் தமிழகம் மறந்த குழந்தை நட்சத்திரம்!



உலகிலேயே கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கிய முதல் காது கேளாத பெண் குழந்தை வனிதாதான்!

இருபது வருடங்களுக்கு முன்பு உலகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பலரின் பாராட்டுகளைக் குவித்த தமிழ்ப்படம் ‘மல்லி’. ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்தான் இதன் இயக்குநர்.

தேசிய விருதைத் தட்டிய இப்படத்தின் கதை மல்லி என்னும் பத்து வயதுச் சிறுமியையும், அவளது காது கேளாத தோழியையும் சுற்றி நிகழ்கிறது. காது கேளாத சிறுமியின் கதாபாத்திரத்தில் நடித்த வனிதாவுக்கே இந்தப் படம் அர்ப்பணிக்கப்பட்டது சிறப்பு. நிஜ வாழ்க்கையிலும் கேட்கும் திறனற்ற குழந்தை வனிதா. தமிழ்நாடு மறந்துபோன ஒரு குழந்தை நட்சத்திரம் இவர். ஆனால், இன்று பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர்!

கடந்த வாரம் வடநாட்டு மீடியாக்களில் மீண்டும் அவர் பெயர் ஒலித்திருக்கிறது. மறுபடியும் ஒரு சாதனையை தன்வசப்படுத்தியிருக்கிறார்.
ஆம்; மத்திய அரசின் சமூக நீதிக்கான அமைச்சகம் 2019ம் வருடத்துக்கான ‘சிறந்த பெண் உழைப்பாளி’ விருதை வனிதாவுக்கு வழங்கி கெளரப்படுத்தியுள்ளது. ‘‘நான் திருச்சூரில் பிறந்தேன். மனைவி மும்பை. இருந்தாலும் எங்களுடையது தமிழ்க் குடும்பம்தான். வனிதா வளர சென்னைதான் சரியான இடம்னு நினைத்து அங்கே 14 வருடங்கள் வசித்தோம்.

ஆரம்பத்தில் வனிதா பால வித்யா என்னும் காதுகேளாதோர் பள்ளியில் படித்தாள். பிறகு இந்தக்குறை தெரியாமல் இருப்பதற்காக சாதாரண பள்ளியில் சேர்த்தோம். 9ம் வகுப்பு வரை அங்கேதான் படித்தாள். மற்றவர்களின் உதட்டு அசைவை வைத்தே அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று யூகிக்கக் கூடிய திறனை சீக்கிரமே கற்றுக்கொண்டாள். அப்பதான் ‘மல்லி’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது...’’ என்கிற தந்தை பாலசுப்ரமணியன் வனிதாவின் சாதனைகளைப் பட்டியலிட்டார்.

‘‘உலகிலேயே கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கிய முதல் காது கேளாத பெண் குழந்தை வனிதாதான்! இதுபோக பரநாட்டியம், யோகா, ஓவியம், நீச்சல், ரெய்க்கி என்கிற ஜப்பானிய மருத்துவம், சைக்கிளிங் என பல துறைகளிலும் தனது திறமையை நிரூபித்து இருக்கிறாள். 9ம் வகுப்புக்குப் பிறகு மும்பையில் குடியேறிவிட்டோம். இங்கே 2012ல் எஞ்சினியரிங் முடித்துவிட்டு ‘பேங்க் ஆஃப் பரோடா’வில் வேலைக்குச் சேர்ந்தாள்.

இந்தக் காலங்களில் நிறுவனங்கள், கிளப்புகள் மற்றும் மும்பை அரசின் பல விருதுகளையும் வாங்கியிருக்கிறாள். இதுபோக 2013ல் சமூக நீதிக்கான அமைச்சகத்தால் பெண்களுக்கான பெஸ்ட் ரோல் மாடல் விருது கிடைத்தது. பிறகு 2014ல் நியூ இண்டியா அஷ்யூரன்சில் பணி. இந்த வருடம் அதே அமைச்சகம் பெண்களுக்கான ‘பெஸ்ட் எம்ப்ளாயி’ விருதை வனிதாவுக்குக் கொடுத்திருக்கிறது.

இடையில்  திருமணமும் செய்து வைத்தோம். குறைகளைக் கடந்து நிறைகளாக்கிய எனது மகள் முன்னேறத் துடிக்கும் பலருக்கு முன்னுதாரணமாக இருக்கிறாள்...’’ என்று சொல்லும்போதே தந்தையின் முகத்தில் அவ்வளவு பெருமை.    

டி.ரஞ்சித்