மணிரத்னம் இயக்கறதா இருந்த படம் இது... இப்ப அவர் தயாரிக்கறார்... நான் டைரக்ட் செய்திருக்கேன்! சொல்கிறார் இயக்குநர் தனா



அதிரும் தொலைபேசி, சிணுங்கும் அலைபேசிகள், மெல்லிய குரலில் பேசும் மனிதர்கள் என பரபரப்புக்குள்ளாகி இருக்கிறது மணிரத்னத்தின் அலுவலகம்.‘வானம் கொட்டட்டும்’ ரிலீஸ்க்கு ரெடி. மணிரத்னத்தின் அத்தியந்த சீடர் தனா டைரக்‌ஷனில் மக்களின் கவனத்திற்கு வந்திருக்கிறது.
‘‘தேடுதல் என்கிற பேரில் யதார்த்தத்தைத் தொலைக்கிற ஆள் நானில்லை. அதுதான் என் ஒரே சந்தோஷம். இங்கே கதைக்காகவோ களத்துக்காகவோ அலைய வேண்டிய அவசியமே இல்லை. இன்னும் நாம் திரும்பிப் பார்க்காத இடம், மனிதர்கள்னு நிறையவே இருக்காங்க.

தமிழ் சினிமாவில் மனிதர்களின் புற உலகமும், மகிழ்ச்சிக் கணங்களும்தான் மிக அதிகமாகச் சித்தரிக்கப்படுகின்றன. எளிய மனிதர்களின் வேதனைகள், இடர்கள், சந்தோஷங்கள், உறவுச் சிக்கல்கள் அதிகம் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. நிஜமான உணர்வுகளை, உறவுகளின் வேர்களைச் சென்றடைகிற பயணம் இங்கே குறைவு. இந்த இடத்தில் என்னை வைத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.

மணி சார் மாதிரி ஒரு கிரியேட்டரே தயாரிப்பாளராக இருக்கும் போது சுதந்திரம் இயல்பாகக் கிடைக்கிறது. இந்த அழகான பூமியில் நாம் வாழ்ந்திட்டுப் போறதே கொஞ்ச காலம்தான். நாம் நினைச்சா அதை, அற்புதமான அனுபவமாக மாற்றிட்டுப் போக முடியும். ‘வானம் கொட்டட்டும்’ இதில் மிகை இல்லை.

பொய் இல்லை...’’ தெளிவாகப் பேசுகிறார் இயக்குநர் தனா. ‘படைவீரனி’ல் கவனம் ஈர்த்தவர். விரும்பப்படுகிற இளம் இயக்குநர்.சரத்குமார், ராதிகா, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா, சாந்தனு என இணைப்பே அழகா இருக்கு…

‘வானம் கொட்டட்டும்’ பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே நடக்கிற நேசம்தான். தாய் - தந்தைக்குப் பிள்ளைகள் மேல் இருக்கிற பார்வை, உறவுமுறைகளுக்கு இடையில் படம் போகும். கொண்டாட்டமான படம். பாஸிட்டிவ்வா, அடுத்த கட்டத்திற்கு நடத்தி கூட்டிப்போகும்.
அப்பா, அம்மா, பிள்ளைகளைப் புரிந்து கொள்கிற, பதிலுக்கு அவர்களும் அதில் இணைந்து புரிந்து கொள்கிற ஒரு கதைதான். இதில் வருகிற சிக்கல்களும், புரிதல் பிழைகளும் கொண்ட படம். ஃபேமிலி டிராமா.

நீங்கள் எவ்வளவு பேசித் தீர்த்தாலும், ஒரு கணவன் மனைவிக்குள் உள்ள உறவை அறிந்து கொள்ளவோ, முற்றாகப் புரிந்து கொள்ளவோ முடியாது. இதில் இன்னும் நூறு கதைகளை எழுதிக்கொண்டே இருக்கலாம். மனசு பார்க்கிற பார்வையும் இருக்கு. கொண்டாட்டமான படம்னா, கல்யாண கொண்டாட்டம் கிடையாது. இப்ப உலவுகிற குடும்பப் படங்களின் சாயல்கள் இல்லை.

சரத், ராதிகா... நிஜ வாழ்க்கைத் துணைவர்கள் என்பதால் உங்கள் கவனத்திற்கு வந்தார்களா?

இந்தப் படத்தை சரத் சார், ராதிகா அம்மா பார்வையிலும் பார்க்க முடியும். பசங்க பார்வையிலும், வெளியிலிருந்து வருகிற உறவுகளின் கண்ணோட்டத்திலும் பார்க்கலாம். ஒவ்வொருத்தருக்கும் முக்கியத்துவம் இருந்து, எல்லாம் சேர்ந்து கோர்த்த ஒரு கண்ணிதான். ஒன்று விடுபட்டாலும் தொடர்பு அறுந்து போகும். இந்த எமோஷனை, உறவுகளை, வலிமையாக செய்யக்கூடிய ஆற்றல் உள்ள அப்பாவிற்கு 60 வயது ஆகியிருக்கும். அவரே உறுதியாக இருந்து, உறுதியாகவும் முடிவுகள் எடுக்கணும். அதற்கு சரத் சரியாக இருந்தார்.

அம்மா குடும்பத்தை வழி நடத்தணும். எங்கே பாசம், அன்பு வைக்கணுமோ அப்படி இருக்கணும். எங்கே விட்டுக் கொடுக்கணுமோ, தூக்கிச் சுமக்கணுமோ எல்லாம் தெரியணும். அப்படிப்பட்ட அம்மாவும் ராதிகா அம்மாதான். அப்படித்தான் வந்தாங்களே தவிர, நிகழ்கால கணவன் -மனைவி என்ற காரணத்தால் அமையவே இல்லை.

விக்ரம் பிரபுவும், ஐஸ்வர்யா ராஜேஷும் நாம் பார்க்க முடிகிற அண்ணன் தங்கச்சிதான். இதில் கூடக்குறைச்சலோ, ஓவர் டிராமாவோ இல்லை. எல்லா கதாபாத்திரங்களும், நல்உணர்வு கொண்டதுதான் இந்தக் குடும்பம்.
சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக ஆகியிருக்கார்… பெரும் எதிர் பார்ப்பை உண்டாக்கியிருக்கே…

நான் ‘படைவீரனை’ இயக்கியிருந்தாலும், இதையும் முதல் படமாகவே நினைச்சுதான் வேலை செய்றேன். சித் ராமிற்கு இது நிஜமாகவே முதல் படம்.
கடந்த இரண்டு வருஷமாக அவர் மிக முக்கியமான பாடகராக இருக்கார். அவர் பாடல்கள் கம்போஸ் பண்றார்னு தெரிய வந்தது. இன்னும் நாலைந்து வருஷத்தில் சினிமாவிற்குள் வந்துடணும்னு அவருக்கு ஆசை இருந்திருக்கு.

நாங்க சீக்கிரமே கொண்டு வந்திட்டோம். அவருக்கு இப்ப முழு நேரமும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தைத் தவிர வேற எந்த நினைவும் இல்லை. மிகச்
சிறந்த மனிதர். நாம் என்ன நினைக்கிறோம் என்பதைப் புரிய வைப்பதும், அதை அவர் இசையில் வெளிப்படுத்துவதும் அத்தனை அழகா இருக்கும்.

இத்தனைக்கும் இப்பத்தான் இவரைப் பார்த்திருக்கேன். அவரது பாடல்களைக் கேட்டது தவிர வேறொன்றும் தெரியாது. இருந்தாலும் பழகியதும், ரிலேஷன்ஷிப்பை அவர் அழகுபடுத்துகிற விதமெல்லாம் அருமையானது. படத்துல ஆறு பாடல்கள்.

ஒளிப்பதிவு ப்ரிதா ஜெயராமன். ‘அபியும் நானும்’ மாதிரி நல்ல படங்கள் செய்திட்டு வந்திருக்கார். பி.சி.ஸ்ரீராமின் மாணவி. அவருக்கும் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ என்னை மாதிரியே நெருக்கமானதுதான். என் அளவுக்கு இந்தப்படத்தைப்பற்றி அக்கறை கொண்டவர். மணி சார் நம்மை நம்பிக் கொடுத்ததற்கு வெற்றியைத் திருப்பியளிக்க வேண்டிய கடமை இருக்குனு உணர்ந்தவர்.

இந்தப் படத்தை மணிரத்னமே இயக்க வேண்டியதாக இருந்ததே!
2013-14ல் இந்தக் கதையை எழுதி முடிச்சாச்சு. மணி சார் இயக்குவதற்காக நானும், அவரும் சேர்ந்து எழுதின ஸ்கிரிப்ட். ஒன் லைன் என்னோடது. அவர் அதை ஸ்கிரீன்ப்ளேக்கு மாற்றினார்.

வசனங்களை நானும், அவரும் எழுதினோம். அவர் அடுத்தடுத்து முன்னரே கமிட் ஆன வேறு படங்களுக்கு சென்றதால் இது கைவசம் இருந்துக்கிட்டே இருந்தது. ‘செக்கச்சிவந்த வானம்’ முடிந்தபிறகு என்ன செய்யலாம்னு யோசிக்கும் போது அவர் ‘பொன்னியின் செல்வனை’த் தேர்ந்தெடுத்தார்.

பின்னர், ‘வானம் கொட்டட்டும்’ மாதிரி நல்ல ஸ்கிரிப்ட் முடங்கிடக்கூடாது என்பதால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. நான் படத்தை சரியாகச் செய்திருக்கேன் என்று அவருக்குச் சந்தோஷம். அதுதான் என் முதல் வெற்றி.

நா.கதிர்வேலன்