தொல்(லைக்) காப்பியம்



ஆம்னி பஸ்ல போறது அக்கம்பக்கம் யாரு இருக்காங்கன்னே தெரியாம வாழுற அபார்ட்மெண்ட் வாழ்க்கை. டவுன் பஸ்ல போறது வாடகை வீட்டில அனுசரிப்போடவும் அட்ஜஸ்ட்மென்ட்டோடவும் வாழுறது மாதிரியான ஒண்டுக்குடித்தன வாழ்க்கை. ரூட் பஸ் பயணம் என்பது புறநகர்ல புது வீடு கட்டி தனிக்குடித்தனமாக வாழ்வதைப் போல.

ஆனா, மினி பஸ் பயணம் எப்படின்னா, தலை கோதுற காத்தும், அதுக்கு தலையாட்டுற நாத்தும், சுற்றிலும் வயல்கள் பச்சை பூசிய மேனியோடவும், அதுக்கு நடுவுல குதிக்க பெரிய கேணியோடவும், பாசக்கார பந்தங்களோடவும் சண்டை போடுற சொந்தங்களோடவும் வாழுற கலர்ஃபுல்லான கிராமத்து வாழ்க்கை!

மினி பஸ்ல பயணம் செய்யறவங்க பெரும்பாலும் அதே ரூட்ல அதே சீட்ல பயணம் பண்ற நிரந்தரப் பயணிகள்தான். யாரு யாருன்னு தெரியாதவங்க மத்தியில, எல்லோரும் தெரிஞ்ச முகமா பயணம் போற பஸ் நம்ம மினி பஸ்தான். எல்லோரும் உள்ளூர் முகமாவும் பழகுன முகமாவும் இருப்பதால, கொஞ்சூண்டு தூரம் மினி பஸ்ல போனாலும் அது கோவாவுக்கு டூர் போன மாதிரியான ஃபீலிங்ஸ் தருது. மினி பஸ் என்பதை விட மின்மினி பஸ்னு சொல்லலாம். அந்தளவுக்கு ஆயிரம் கதைகளை, கனவுகளை, காதல்களை வழியெங்கும் தினமும் ஏற்றி இறக்கி பவனி வரும் பவுனாலான பச்சை நிற தேர் அது.

நேரமாச்சுன்னா நொடி கூட காத்திருக்காம அரசாங்க அதிகாரிகளாட்டம் கிளம்பறவங்களுக்கு மத்தியில, கிராமத்து விவசாயி தன்னோட மாட்டைக் கட்டி, வீட்டைப் பூட்டி வரவரைக்கும் காத்திருந்து ஏத்திக்கிட்டு போறதுதான் மினி பஸ். ஏர் உழுது வாழுற மக்களுக்கு ஏர் இந்தியா ஏரோப்ளேன் மினி பஸ்தான்.

 உள்ளூர்ல பத்தாப்பு முடிச்ச பல மாணவர்களோட மேல்படிப்புக்கு மந்திரிகளை விட அதிகம் உதவியது மினி பஸ்தான். பள்ளிக் கல்வியோடு பட்டுப்புழுவாய் முடங்கிய பல பெண்களை பட்டயப்படிப்பு படிக்க வைத்ததும் பட்டாம்பூச்சியாக பறக்கவைத்ததும் மினி பஸ்தான். பல கிராமத்து குடும்பங்களின் முதல் பட்டதாரிகளை அம்பாரியில் ஏற்றி அழகு பார்த்த பச்சை நிற பட்டத்து யானை மினி பஸ்.

பல கிராமத்து பெருசுங்களுக்கு மினி பஸ்தான் மணி பார்க்கும் கடிகாரம். ‘எட்டு மணி பஸ் வந்துட்டு போயிடுச்சு இன்னமும் சோறாக்கலை’ன்னு புலம்பறதாகட்டும், ‘நாலு மணி பஸ் போயிடுச்சு, நாளைக்கு வாரேன்’னு கிளம்பறதாகட்டும்... மினி பஸ்தான் அவர்களின் பர்சனல் அசிஸ்டென்ஸ்.
செய்திகளை செவிவழியாகப் பரிமாறிக்கொள்ள செல்போன்கள் வந்துவிட்டன. புகைப்படங்களைப் பரிமாறிக்கொள்ள அதில் வாட்ஸ் அப்களும் பிறந்துவிட்டன. ஆனாலும் இன்னமும் கிராமத்து மக்களுக்கு பொருட்களைப் பரிமாறிக்கொள்ள பயன்படும் போஸ்டல் டிபார்ட்மெண்ட் மினி பஸ்தான்.

பல அப்பத்தாக்கள் வீட்டு மாட்டு பால்கள், பாசத்தோடு பாட்டிலில் அடைக்கப்பட்டு பட்டணம் வருவது மினி பஸ்கள் மூலம்தான். மகன்களும் பேரன்களும் கொடுத்து அனுப்பும் மாத்திரை மருந்துகளை பல அப்புச்சிகளுக்கு ஏற்றி வரும் சைரனில்லா ஆம்புலன்ஸ் அது.

மினி பஸ்களின் நுரையீரலை நிரப்பிய பின்புதான், கிராமத்து காய்கறிகள் வாசம், உழவர் சந்தைகளின் தரைகளை நிரப்புகின்றன. கூடு திரும்பும் பறவைகளாக வீடு திரும்பும் மனிதர்கள் கொண்டு செல்லும் அதிரசங்களும் முறுக்குகளும், பீட்சா பர்கரின் வாசனைகளைத்
துரத்தி பேருந்து முழுக்க தனி தர்பார் நடத்தும்.

உள்ளூர் திருவிழாவுக்கு மினி பஸ் டிரைவர், கண்டக்டர கூப்பிடாம இருக்கமாட்டாங்க. கெடாவெட்டுல கண்டக்டர், டிரைவர் சாப்பிடாம பந்தியை முடிக்க மாட்டாங்க. பஸ்ல ஏறும் ஸ்கூல் படிக்கிற பொண்ணோட அப்பா யாரு... இறங்குற காலேஜ் படிக்கும் பையனுக்கு என்ன பேருன்னு அத்தனையும் தெரிஞ்சு வச்சிருப்பாங்க கண்டக்டரும் டிரைவரும். பஸ்ஸில் ஏறியதில் இருந்து இறங்கும் வரைக்கும் அந்த இளவட்ட பிஞ்சுகளுக்கு அவர்களே பாடிகார்டுகள்.

ஆட்டோல இருந்து ஆம்னி வேன் வரைக்கும் கடத்தல், கொள்ளைன்னு தினசரிகள் முதல் திரைப்படங்கள் வரைக்கும் காட்டியிருக்காங்க. எப்பவாவது மினி பஸ்ல பெண் கடத்தல், பணம் கொள்ளைன்னு செய்தி வந்திருக்கா? மினி பஸ் என்பது ஏழைகளின் எட்டடுக்கு பாதுகாப்பு வளையம். கண்டக்டர், டிரைவர் கண்கள்தான் நம்மை கண்காணிக்கும் சிசிடிவி கேமரா.

 ‘நேத்து உங்கப்பாவை ஆஸ்பத்திரிக்கு கூட்டிப்போனியே, இப்பஎப்படி இருக்காரு?’, ‘ஏம்மா, போன வாரம் உன் பொண்ண பொண்ணு பார்க்க வந்தாங்களே, என்ன சொன்னாங்க?’ போன்ற உரிமையான விசாரிப்புகளை மினி பஸ்களில்தான் அனுபவிக்க முடியும். நேசிக்கும் உள்ளூரின் செய்திகளை வாசிக்காமல் தெரிந்துகொள்ளும் தினசரி செய்தித்தாள் அது.

நகரங்களில் காதலை வளர்க்கிறது மணி பர்ஸ்; கிராமங்களில் காதலை வளர்க்கிறது மினி பஸ். நோட்டை வாங்கிக்கொண்டு சீட்டைக் கிழித்துக்கொடுக்கும் கண்டக்டருக்கு அந்த ரூட்டில் ஓடும் அத்தனை காதல்களும் தெரியும். கொத்தனாருக்கும் சித்தாளுக்குமான காதலில் இருந்து கல்லூரி மாணவர்கள் காதல் வரைக்கும் அத்தனையையும் கண்டும் காணாமல் கடப்பவர்கள்தான் கண்டக்டர்கள்.

பல ஊர்களில் மினி பஸ்ஸில் பயணித்த பயணியே, அந்த மினி பஸ்ஸின் டிரைவர் மனைவியாகவும் மாறிய காதல் கதைகளும் உண்டு. ‘பொண்ணு உன் பஸ்லதான் தினம் வருமாம், கேரக்டர் எப்படி’ன்னு கேட்கிறவர்களுக்கு அவர்கள் தரகர்களாகவும் மாறுவார்கள். உண்மைக் காதலை சேர்த்துச் வைத்து, ரெஜிஸ்டர் ஆபீசில் கையெழுத்தும் போடுவார்கள்.

தீபாவளி சிறப்பு பஸ், பொங்கல் சிறப்பு பஸ், பழநிக்கு சிறப்பு பஸ், பக்ரீத்துக்கு சிறப்பு பஸ்னு விடுற மாதிரி, நைன்டி போட்டுட்டு நைட்டு டைட்டாகி கிடக்கிற பல குடிமகன்களை பத்திரமா வீட்டுக்கு கொண்டு போயி விடும் ரெகுலர் சிறப்பு பஸ், மினி பஸ்தான்.

இடத்தை சொல்லாமல் ஏறி உட்கார்ந்து தூங்கினால் கூட, இறங்குமிடம் வருவதற்கு இரண்டு நிமிஷத்துக்கு முன்னால எழுப்பி விடும் வசதி கொண்ட சொகுசு பஸ்தான் மினி பஸ். சில்லறையில்லையென கடன் சொல்லி, மறுநாள் கணக்கு முடிக்கும் கேஷ்லெஸ் டிரான்சாக்சனை முதலில் கொண்டுவந்ததே மினி பஸ்கள்தான்.

உலகத்துல மிகச் சிறந்த ரேடியோ ஜாக்கிகள்னா அது நம்ம மினி பஸ் கண்டக்டருங்கதான். ஒரு வருஷம் ஓடுன படத்துல இருந்தும் சரி, ஒரே ஒரு நாள் ஓடுன படத்துல இருந்தும் சரி, நல்ல பாட்டுன்னா கண்டக்டரோட கலக்ஷன்ல இருக்கும்.

இசையமைச்ச இசையமைப்பாளரே மறந்துபோன பாட்டைக் கூட இன்ஜின் சத்தத்துக்கு நடுவுல அலற விடுவாங்க. கேசட்டு, சிடி, டிவிடின்னு எது வந்தாலும் அதுல அவங்க கலக்ஷனை சிதற விடுவாங்க. தேசிய பாடல், மாநில பாடல், ஏன்-எம்ஜிஆர் படத்துல வர மாதிரி குடும்பப் பாடல்களுக்கு மத்தியில மினி பஸ்ஸுக்குனே சில பாடல்கள் இருக்கு.

‘தூதுவளை இலை அரைச்சு, தொண்டையிலதான் நனைச்சு, மாமங்கிட்ட பேசப்போறேன் மணிக்கணக்கா’ன்னு பாட்டு ஆரம்பிச்ச ஒரு நிமிஷத்துல, உள்ள இருக்கிற மொத்த கும்பலும், ‘அந்த இந்திரனும் சந்திரனும்’னு கூட சேர்ந்து பாட ஆரம்பிச்சுடுங்க.

‘துளித் துளியாய் கொட்டும் மழைத்துளியாய், என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய்’ பாட்டெல்லாம் போதுமய்யா என்னை விட்டுடுங்கன்னு கையெடுத்து கும்புட்டே இருக்கும். மியூஸியத்தில் வைக்க வேண்டிய மெட்டுக்களை எல்லாம் இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருப்பதே மினி பஸ்கள்தான்.

மினி பஸ்களில் அடிக்கடி பயணம் செய்தாலே மனதில் இருக்கும் இனிமையைக் காத்து வரலாம், நாம் தொலைத்த அந்த இளமையைக் கொஞ்சம் மீட்டு வரலாம்!

 தோட்டா ஜெகன்