நீங்கள் நடித்த படங்கள் ஏன் ரிலீஸ் ஆகாமல் இருக்கின்றன? ஜி.வி.பிரகாஷ் பளீர்



முதன்முதலாக ‘வெயில்’தான் ஜி.வி.பிரகாஷின் நல்வருகையைச் சொன்னது. 15 வருடங்கள் ஆகிவிட்டது. எத்தனையோ ஆளுமைகள் இருந்தும் தனக்கென்று ஒரு பாணியை வைத்திருக்கிறார். அத்தனை பேரின் விருப்பப் பட்டியலிலும் முன் வரிசையில் இருக்கிறார்.

அப்படிப்பட்டவர் நடிக்கவும் இறங்கிய போது எல்லோருக்கும் ஆச்சர்யம். அவரது இசைக்கு ஆதரவைப்போல, நடிப்பிற்கும் விமர்சனங்களும் இருப்பதை மறுப்பதற்கில்லை. எல்லா கேள்விகளுக்கும் யோசிக்காமல், ஆனால் நம்மை யோசிக்க வைப்பது போல் பேசுகிறார். உருவத்தில் ‘சின்னத் தம்பி’ போல கலைந்த தலையுடன் ‘ஆயிரம் ஜென்மங்க’ளை நிறைவு செய்தவரிடம் தெளிவும், அக்கறையும் கூடியிருக்கிறது.

‘அசுரன்’ல உங்க இசையை இவ்வளவு தூரம் எதிர்பார்த்தீர்களா ?
நிச்சயமாக எதிர்பார்க்கலை. ‘அசுர’னை நான் வேறுமாதிரி எடுத்துக்கிட்டேன். மண் சார்ந்து, உணர்வு கலந்து, கொஞ்சகாலத்திற்கு முன்பே போய் களம் எடுத்தேன். அத்தனை விஷயங்களும் எட்டு நாட்களில் முடிஞ்சு போச்சு. காட்சிகளைப் பார்த்ததும், முதன் முதலாக உருவெடுத்ததுஇசைதான்.

எனக்கும் வெற்றி மாறனுக்கும் இருக்கிற புரிதல் விசேஷமானது. மியூசிக் போட பெரிதாக டைம் எதுவும் எடுத்துக்கலை. நான் போட்ட இசையை வெற்றியால் புரிந்துகொள்ள முடிந்தது. சிவசாமியாக தனுஷ் ஆத்திரமாக இறங்கும் போது அதற்கு பின்னணி இசையை தேர்வு செய்வது பெரிய சவாலாக இருந்தது. சிந்தும் ரத்தத்தைப் பார்க்க முடியாமல் ‘அசுரா... வா...’ என்று பாட்டுப் போட்டு குறைக்க வேண்டியிருந்தது.

அதே மாதிரி ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘விசாரணை’யில் எட்டிப் பார்த்த வேறு வகைப்பட்ட வன்முறைகளுக்கு தனித்தனியாக பின்னணி கொடுத்திருப்பேன். நான் சினிமாவுக்கு வந்து 15 வருஷங்களாச்சு. 73 படங்கள் மியூசிக் செய்தாச்சு. இதையும் கடவுளோட ஆசீர்வாதம்னு சொல்லணும்.

நான் மியூசிக் பண்ணினது எல்லாமே உயர்ந்த தளத்தில் இருந்ததுன்னு சொல்ல மாட்டேன். என்னோட உழைப்பு உண்மை. அக்கறை நிச்சயமானது. ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’, ‘ஆடுகளம்’, ‘பொல்லாதவன்’, ‘அசுரன்’னு ஏழெட்டு படங்களுக்கு மேல் காலத்தை மீறி நின்னுருக்கு என்னோட இசை.

எனக்கு தமிழில் இளையராஜாவும், ஏ.ஆர்.ரஹ்மானும் இன்ஸ்பிரேஷன். இந்தியில் ப்ரீதமும், அமித் திரிவேதியும் இஷ்டம். நடிப்பு + இசைங்கிறது எனக்கே பெரிய பொறுப்பையும், செய்ய வேண்டிய கடமையையும் உணர்த்துகிறது. என்னுடைய முக்கியமான டைரக்டர்கள் என்னை விட்டுப் போகமாட்டாங்க. அவங்களையும் என்னால் கைவிட முடியாது. எந்த வேலைக்கும் இடைஞ்சல் இல்லாம இருக்கிறதுதான் என் நடிப்பு!அவ்வளவு ஈஸியாக நடிப்பை வைச்சுக்கலாமா…

இசையில் 75 படங்கள் கடந்திருக்கேன். பக்குவம் வந்திருக்கு. சரி, தப்பு, துல்லியம், மேன்மை எல்லாம் தெரியும். இசை கை வந்த கலையாகக் கூடவந்திருச்சு. ஆனால், நடிகனாக..? பதினோரு படங்கள்தான் செய்திருக்கிறேன். இதில் எனது அனுபவம் ஒப்பிடும்போது குறைவானது. அப்படியும் பாலா, வசந்தபாலன், சசி, ராஜீவ் மேனன்னு நல்ல டைரக்டர்கள் என்னை நடிக்க கூப்பிட்டு நடிச்சிருக்கேன்.

இந்த இரண்டு அனுபவமும் சேர்ந்து வரும்போது உங்க கேள்வி வரட்டும். இப்ப அதற்கு நான் ரியாக்ட் பண்றது இல்லை. இது எல்லாத்துக்கும் ரியாக்ட் பண்ணினால், அதற்கு முடிவே இல்லை. ‘நல்லா பாடுறேனா, நல்லா மியூசிக் பண்றேனா’னு மட்டும் பாருங்க.

அதுல எதுவும் மிஸ்டேக் இருந்தால் சொல்லுங்க… ‘அப்படிங்களா…. சரிபண்ணிக்கிறேன்’னு கேட்டுப்பேன். நடிப்பை இன்னும் பெட்டர் ஆக்க முயற்சிகள் எடுத்திட்டு இருக்கேன்.நீங்கள் நடித்து ரிலீஸுக்கு படங்கள் காத்திருக்கின்றன…

அதற்கு நான் காரணம் கிடையாது. இந்த நடப்பு காலத்தில் அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. ஒரு படத்தின் உருவாக்கத்தில் முக்கியமாக 10 நபர்களுக்கு மேல் இருக்கிறார்கள். நான் பல படங்களில் பல தடவை லட்சங்களை விட்டுக் கொடுத்திருக்கேன்.

யாரிடமும் வாய்ப்புக்காகவும், நடிக்கக் கேட்டும் போய் நின்னது கிடையாது. எந்த ஒரு படமும் என்னால் நின்னதுனு யாரும் என்னை சுட்டிக் காட்டவும் முடியாது. சாமர்த்தியமும், திறமையும், பிஸினஸும் தெரிந்தவர்கள் படத்தை வெளியிட்டு விடுகிறார்கள். புது அனுபவம் கொண்டவர்களுக்கு எல்லாமே கடினம்தான்.

 சிலருக்கு இதற்கு முன்னர் இருக்கும் கடன்களும், செய்யும் புதுப்படத்தோடு சேர்ந்து விடுகின்றது. வரவேண்டிய படங்களில் எனது நல்ல படங்களும் இருக்கின்றன. என்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்து, அதற்குப் பிறகும் அவை வெளிவராமல் போவதற்கு நான் எப்படிப் பொறுப்பேற்க!
இசையமைப்பாளராக கொடி கட்டிப் பறக்கும்போது, ஹீரோவாக நுழைந்தது சரியா எனப் பேசுகிறார்கள்…

அது என் பிரியம். எனக்கான எல்லைகளை விரிவுபடுத்த வேண்டியது என் யுக்தி. நடிக்கிறதை நான் கஷ்டம்னு நினைக்கலை. அதே நேரத்தில் அது சுலபமானதும் அல்ல. என் இயல்புக்கு  முடிகிற படங்களைத் தவிர வேற எதையும் ஏத்துக்கிறதில்லை.

எனக்குத் தெரிஞ்சதை செய்திட்டு இருக்கேன்.நான் மகா நடிகன்னு சொல்லிக்கிட்டது கிடையாது. எல்லாமே அனுபவம். முதல் படத்திற்கும், இப்போ வசந்தபாலனின் ‘ஜெயில்’ வரைக்கும் அருமையான வித்தியாசத்தை உணர்கிறேன். ‘ஜெயில்’ பாருங்க. வசந்தபாலனின் பெஸ்ட் அது. அதில் என் நடிப்பைப் பாருங்க.

அடுத்தவங்க என்ன சொல்லறாங்கனு நான் பார்க்கிறது கிடையாது. அப்படிப் பார்த்திட்டு இருந்தா அதுவே என் வேலையாகிடும். நடிப்பு, இசை, குடும்பம்னு நம்ம கேரியர் படு பிஸியில் போய்க்கிட்டு இருக்கு. இதுல அடுத்தவங்க சொல்றதில் நமக்கு ஏன் கவனம்?

இப்போ ஒரு கணக்கு சொல்றேன். ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தால் புரடியூசருக்கு ரூ.4 கோடி லாபம். தியேட்டர் பங்காக கிடைச்சது ரூ.13 கோடி. பாருங்க. சும்மா ஒரு கணக்குப் போடுங்க! எல்லாம் சரியாக இருக்கும்!  

நா.கதிர்வேலன்