இந்தியாவில் பூரண மது விலக்கு சாத்தியமா? ஆந்திராவை முன்வைத்து ஒரு ஸ்கேன் ரிப்பேரர்ட்



ஒரு ஃப்ளாஷ்பேக்.

அது 2017ம் ஆண்டின் டிசம்பர் மாதம். ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் நிடமாரூ கிராமத்தில் காலை நேரம். பச்சைப் பசேல் என்று இருக்கும் அந்த ஊரில் விடிந்தது முதலே பரபரப்பு. அந்த ஊர் பெண்கள்தான் அதற்குக் காரணம்.
சுமார் 500 பெண்கள் வரலட்சுமி என்ற 57 வயதுப் பெண்ணின் தலைமையில் ஒன்றுகூடுகிறார்கள். தங்கள் கிராமத்தில் மதுக்கடை இருக்கக்கூடாது என்று கோஷமிடுகிறார்கள். பதினாறு நாட்களாகத் தொடரும் போராட்டத்தை அரசுத் தரப்பிலிருந்து யாரும் கண்டுகொள்ளாததால் தடலாடியாக அத்தனை பேரும் அங்கிருந்த குளத்தில் பாய்கிறார்கள்.

எங்கும் கூக்குரல்… அதற்கிடையே கோஷங்கள்… அலறல்கள்… ஒருவழியாக அத்தனை பெண்களும் காப்பாற்றப்படுகிறார்கள்.
அன்று முதல் அந்த கிராமத்தைவிட்டு மது என்ற கொடிய அரக்கன் வெளியேறுகிறான்.உண்மையில் இது ஒன்றும் முதல் சம்பவமும் அல்ல இறுதியும் அல்ல. இதற்கு முன்பும் பின்பும் பல சம்பவங்கள் ஆந்திராவில் நடந்திருக்கின்றன. சொல்லப் போனால் ஆந்திராவில் மட்டுமல்ல இந்தியா முழுதுக்குமே இது பொருந்தும்.

அதே கோதாவரி மாவட்டத்திலேயே சிவட்டம் என்ற கிராமத்திலும் இப்படி ஒரு போராட்டம் நடந்து வெற்றி பெற்றிருக்கிறது.
இப்படியான பின்னணியில்தான் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ஜெகன் மோகன் ரெட்டி பூரண மதுவிலக்கு என்ற கொள்கை முடிவை எடுத்தார்.
‘ஜனசை தன்ய வேதிகா’ என்ற அமைப்பின் தலைவரான வி.லட்சுமண ரெட்டியிடம் இதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. கடந்த அக்டோபர் 2ம் தேதி, காந்தி ஜெயந்தியன்று மதுவிலக்கை அமுலாக்குவதற்கான திட்டவரைவை வெளியிட்டார் ஆந்திர முதல்வர்.

இந்த புதிய வரைவின்படி தனியார்கள் மதுவை நேரடியாக மக்களிடம் விற்பது, சில்லறை வர்த்தகம் தடை செய்யப்படுகிறது. இனி ‘ஆந்திரபிரதேஷ் ட்ரிங் கார்ப்பரேஷன் லிமிடெட்’ என்ற அரசு நிறுவனம்தான் மதுக்கடைகளில் நேரடியாக விற்கும். இங்கு நம் ஊரில் டாஸ்மாக் நேரடியாக விற்பதைப் போன்ற ஏற்பாடு இது. தில்லி, கேரளா மற்றும் ராஜஸ்தானிலும் இந்த முறைதான் வழக்கத்தில் உள்ளது. இதையே ஆந்திராவும் பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்குப் பிறகு அதிரடியாக ஆந்திராவில் இருந்த 4,380 மதுக்கடைகளின் எண்ணிக்கை 3,500 ஆகக் குறைக்கப்பட்டது. மேலும், மதுக் கடைகள் திறந்திருக்கும் நேரமும் மாற்றப்பட்டது. காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும் என்றிருந்த நிலையில், அது மாற்றப்பட்டு, காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பார்களும் அகற்றப்பட்டுள்ளன. அனைத்து கிராமங்களிலும் மது குடிப்பதற்கான பார்கள் மூடப்பட்டிருப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

‘‘அரசே நடத்தும் கடைகளில், அரசு நியமிக்கும் அலுவலர்கள் பணியாற்றுவார்கள். எனவே, அதிகபட்ச விற்பனை விலைக்கும் அதிகமாக விற்பதற்கும் கேள்வியே எழாது. லாபத்தை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. எனவே, சட்டவிரோத விற்பனை என்ற கேள்விக்கும், கடைகளின் அருகில் மது குடிப்பதற்கான அறைகள் ஏற்பாடு செய்வது என்பதற்கும் இடம் இருக்காது...’’ என்று ஜன சைதன்ய வேதிகா அமைப்பின் லட்சுமண ரெட்டி சொல்கிறார். இந்த ஏற்பாட்டின் மூலம் 16,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்திருக்கிறார்.

அரசின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பும் ஆட்சேபமும் கலவையாக எழுந்துள்ளன. பெண்கள் அமைப்புகளும் பெண்களும் இதை வரவேற்கிறார்கள். குடித்துவிட்டு வீட்டுக்குப் போய் ஆண்கள் நிகழ்த்தும் குடும்ப வன்முறை முதல் குடியால் அக்குடும்பம் எதிர்கொள்ளும் பொருளாதார சீரழிவு வரை பல காரணங்கள் இதற்குப் பின்னால் உள்ளன.

கிடைக்கும் சொற்ப வருமானத்தையும் குடித்தே அழித்துவிடும் ஆண் ஒருகட்டத்தில் தன்னையும் அழித்துக்கொள்ள அக்குடும்பம் அநாதையாகிறது. கையில் குழந்தைகளோடு கைம்பெண்ணாக நிற்கும் முப்பது வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டும் நாடு முழுதும் பல லட்சம்.

மறுபுறம், பொருளாதார நிபுணர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மதுவிலக்கின் நடைமுறை சாத்தியத்தைப் பற்றி கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
உண்மையில் மது விலக்கு என்பது நம் நாட்டில் புதிதல்ல. காந்தி போன்ற பெருந்தலைவர்களால் உருவாக்கப்பட்ட நாட்டில் மதுவுக்கு எதிரான பிரசாரம் என்பது சுதந்திரத்துக்கும் முற்பட்டது. நாடு விடுதலை அடைந்த காலந்தொட்டே மதுவுக்குத் தடை விதிக்கச் சொல்லி ஆங்காங்கே போராட்டங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சில மாநில அரசுகளும் மதுவைத் தடைசெய்ய முயன்று அதில் தோல்வியையும் அடைந்திருக்கின்றன.

குஜராத், பீகார், கேரளா, தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இந்தப் பரிசோதனை முயற்சிகள் வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெற்றிருக்கின்றன.
குஜராத் மாநிலம் உருவான 1960ம் ஆண்டு முதலே மதுவிலக்கு அமலில் இருக்கிறது. காந்தி பிறந்த மண் என்பதால் சின்சியராக அங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

எல்லாம் சரி, குஜராத்தில் மது கிடைக்காதா என்று கேட்டால் தாராளமாகக் கிடைக்கும். எல்லா மாநிலங்களிலும் சாராயம் ஆறாக ஓடுவதைப் போலவே குஜராத்திலும் ஓடுகிறது. கள்ளச்சாராயம், அண்டை மாநில கள்ளச் சரக்கு என அது கள்ளச் சந்தையில் ஓடுகிறது. அரசுக்கு இதன்மூலம் கிடைக்க வேண்டிய வருவாய் ஒரு பைசாகூட கிடைப்பதில்லை. அத்தனையும் தனி மனிதர்களின் பைக்குப் போய்விடுகிறது. இதன்மூலம் ஆண்டுதோறும் குஜராத் அரசு இழக்கும் வரி வருவாய் மட்டும் பத்தாயிரம் கோடி என்கிறது ஓர் ஆய்வு.

மதுவைத் தடை செய்யும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கும், வழக்குகளின் சுமையும் பல மடங்கு அதிகரிக்கிறது என்பதும் ஒரு நடைமுறை உண்மை.
குஜராத்தில் 1999ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை சுமார் 80 ஆயிரம் வழக்குகள் கள்ளச்சாராயம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், வெறும் எட்டு சதவீதத்துக்கு மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளன.

பல்லாயிரம் வழக்குகள் சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி தோற்கடிக்கப்பட்டுள்ளன. இன்னும் சொல்லப் போனால் பல்லாயிரம் குற்றங்கள் வழக்காகப் பதிவாகாமலே மறைக்கப்படுகின்றன. போலீஸுக்கும் நீதிமன்றத்துக்கும் இந்த வழக்குகளால் ஏற்படும் வேலைச்சுமையும் மிக அதிகம்.

மதுவிலக்குக்கு சொல்லப்படும் காரணங்களில் பிரதானமானதான குடும்ப வன்முறை குறைந்திருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை.
தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பின் ஆய்வின்படி பீகாரில் 51 சதவீத ஆண்கள் குடித்துவிட்டுப் போய் மனைவி, குழந்தைகளை அடித்துத் துன்புறுத்துகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

இது மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் 72 சதவீதமாக உள்ளது. இந்தியாவிலேயே அதிக சராசரியும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரண்டும் மதுவிலக்கு மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத், மிசோரம், நாகாலாந்து மற்றும் பீகார் மாநிலங்களில் முழுமையான மதுவிலக்கு அமலில் உள்ளது. பீகாரில் 2016ல் முழு மதுவிலக்கு அமல் செய்யப்பட்டது. இருந்தபோதிலும் இந்த ஆண்டு ஜூலை 8ம் தேதி வரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், பீகார் மதுவிலக்கு மற்றும் கலால் சட்டம் 2016ன் கீழ் பாட்னா உயர்நீதிமன்றத்தில் 2.08 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிய வருகிறது. அத்தனையும் கள்ளச் சாராய வழக்குகள்!

இதில், 2,629 வழக்குகளில் மட்டுமே வழக்கறிஞர் விவாதங்கள் முடிவடைந்துள்ளன. செப்டம்பர் 2019ல் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், பீகார் மதுவிலக்கு மற்றும் கலால் சட்டத்தின் கீழ் 1.67 லட்சம் பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியானா மாநிலத்தில் 1996ல் முழு மதுவிலக்கு அமல் செய்து பரிசோதிக்கப்பட்டது. ஆனால், 1998ல் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. மதுவிலக்கு அமலில் இருந்த காலத்தில் அரசு ரூ.1200 கோடி அளவுக்கு வருவாயை இழந்துள்ளது என்று அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

ஆந்திரப் பிரதேச மாநிலமும் முழு மதுவிலக்கு பரிசோதனையில் ஈடுபட்டது. 1994ல் தேர்தலில் வெற்றி பெற்றபிறகு என்.டி.ராமாராவ் கையெழுத்திட்ட முதல் கோப்பே மதுவிலக்கு அமல் கோப்புதான்.இருந்தபோதிலும் 1997ல் அதை சந்திரபாபு நாயுடு ரத்து செய்தார். 16 மாதங்கள் மதுவிலக்குஅமலில் இருந்த காலத்தில் அரசுக்கு ரூ.1200 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆந்திர அரசு 2018 - 19ல் மது விற்பனையால் கிடைக்கும் வரி மூலம் ரூ.6,222 கோடி வருவாய் ஈட்டியது. அரசின் மொத்த வருமானம் ரூ 1,05,062 கோடி. மாநில பிரிவினைக்குப் பிறகு ரூ.16,000 கோடி கடன் வேறு உள்ளது. ஆனால், இந்த மதுவிலக்கால் உடனடி தாக்கம் ஏற்படாது என கலால் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். கலால் துறையின் மூலம் 2019 - 20ல் ரூ.8,158 கோடி அளவுக்கு வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுவிலக்கு என்பது பெரும் தலைவர்கள் எல்லாம் சறுக்கிய பெரும் பள்ளம். இதை எளிதாகத் தாண்டலாம் என்று ஜெகன் மோகன் கனவு காண்கிறார்.
ஆனால், இதனால் ஏற்படப் போகும் பொருளாதார பாதிப்புகள் புதிதாய் மலர்ந்துள்ள ஒரு மாநிலத்துக்கு நல்லதல்ல என்று எச்சரிக்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். ஒருபுறம் பொருளாதார அச்சுறுத்தல்... இன்னொருபுறம் மக்களின் நலம்... மறுபுறம் வாக்கு வங்கி… என்ன செய்யப்போகிறார் ஜெகன் மோகன்? பொறுத்திருந்து பார்ப்போம்.

இளங்கோ கிருஷ்ணன்