80’s Reunion க்கு வயசு 10



லிசி,சுஹாசினி இவர்கள் இருவருக்கும் சின்னதாகத் தோன்றிய ஒரு விஷயம் இன்று தோப்பாக வளர்ந்து நிற்கிறது! யெஸ். தென்னிந்திய அளவில் ஆரம்பிக்கப்பட்ட 80களின் நட்சத்திரக் கொண்டாட்டம் இன்று பாலிவுட் வரை தடதடக்கிறது.

ஆண்டுதோறும் 1980களின் நடிகர் நடிகைகள் சந்தித்து ஆட்டம் பாட்டம் என தங்களுக்குள் மலரும் நினைவுகளில் மூழ்குவது வழக்கம். அந்த வகையில் 10வது ஆண்டான இந்த ஆண்டும் பியூட்டிஃபுல்லாக கொண்டாடித் தீர்த்திருக்கிறார்கள், அதுவும் ஹைதராபாத்தில்.இந்த ரீயூனியன் கொண்டாட்டத்தின் சுவாரஸ்யங்களை இங்கே அன்பும் ஆச்சரியமுமாக பகிர்ந்து கொள்கிறார் சுஹாசினி.

* இந்த வருஷம் 37 பேர்கிட்ட கலந்துக்கிட்டோம். ஹீரோயின்ஸ்ல நான், லிசி, குஷ்பு, பூர்ணிமா, ஜெய, ராதிகா, சுமலதா, ராதா, ஜெயப்பிரதா, அம்பிகா, மேனகா, பூனம் தில்லான், சரிதா, ஷோபனா, ரேவதி; ஹீரோக்கள்ல சிரஞ்சீவி, மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், பாக்யராஜ், சரத்குமார், ராஜ்குமார், ரமேஷ் அரவிந்த், பிரபு, சுரேஷ், பானுசந்தர், சுமன், ஜெயராம், ஜெகபதிபாபு, ரகுமான், வெங்கடேஷ்.

இந்த வருஷம் புதுசா ரெண்டு பேர் எங்களோடு இணைஞ்சாங்க. அவங்க, நாகார்ஜுனா, அமலா! அதேபோல அனில்கபூர், சத்யராஜ், அர்ஜுன், மோகன்னு சிலர் வர நினைத்து, கடைசி நேரத்துல வரமுடியாமல் போயிடுச்சு.

* d10வது வருஷமில்லையா... நைட் 12 மணிக்கு வானத்துல வாணவேடிக்கை வெடிச்சு, பலூனை பறக்க விட்டோம். முதல் நாளே சிரஞ்சீவி சாரும் அவர் மனைவியும் சேர்ந்து எங்களுக்கான பரிசுகளை செலக்ட் பண்ணி வச்சிட்டாங்க. எல்லாமே காஸ்ட்லியான கிரிஸ்டல் கிளாஸ்ல செஞ்சது. நாங்களும் எங்க பங்குக்கு கிரிஸ்டல்லதான் கிஃப்ட்ஸ் வாங்கியிருந்தோம். அதோடு ஸ்பெஷல் ஐஸ்க்யூப்ஸ். சீனால இருந்து நாங்க இம்போர்ட் செஞ்சோம். கிரிஸ்டல்ல ஒவ்வொருத்தரோட ரியல் நேமையும் அதுல பொறிச்சிருந்தோம்.

உதாரணமா, ரேவதியோட நிஜப் பெயர் ஆஷா. இப்படி ஒவ்வொருத்தரோட ரியல் நேமையும் தேடித் தேடி கண்டுபிடிச்சோம். இப்ப நான் பர்ஃபியூம் மேக்கிங் கத்துக்கிட்டு இருக்கேன். அதுக்காகவே ஸ்பெஷல் கிளாஸ் போய் படிச்சேன். விதவிதமான பர்ஃபியூம்ஸை நானே ரெடி பண்ணிடுவேன்.
அப்படி ஸ்பெஷலா பர்ஃபியூம்ஸ் ரெடி பண்ணி இந்த வருஷ பரிசோட கொடுத்தோம். நான், குஷ்பு, லிசி, பூர்ணிமா, ராஜ்குமார் சேர்ந்து இந்த வருஷத்துக்கான கலர் கோட், கோல்ட் அண்ட் பிளாக்னு முடிவு பண்ணினோம்.

ஆண்களுக்கு கோல்டுல துப்பட்டா டிசைன் பண்ணினோம். குஷ்புவின் பெரிய பொண்ணு லண்டன்ல படிக்கிறாங்க. தன் மகளைப் பார்த்துட்டு வர்றப்ப கோல்ட் டிரெஸ்ஸுக்கான அக்சஸரீஸை லண்டன்ல இருந்தே வாங்கிட்டு வந்து அசத்திட்டாங்க!

* d1960 - 80 காலகட்டத்தைச் சேர்ந்த 12 டூயட்ஸை செலக்ட் பண்ணி அதுக்கு டான்ஸ் ஆடினோம்.

* ‘சிரஞ்சீவி சுயம்வரம்’னு ஒரு நிகழ்ச்சி பண்ணினோம். அவரோட டூயட் சாங்ஸின் பின்னணியை மட்டும் ஒலிக்கவிட்டு அந்தப் பாட்டுல அவரோட ஆடினது யார்... என்ன பாட்டு அதுனு கண்டுபிடிக்கற போட்டி.

அவரோடு அதிக படங்கள்ல நடிச்ச ராதிகாவை அவரால கண்டுபிடிக்க முடியல! ஆனா, ஒரே ஒரு படத்துல நடிச்ச சுமலதா, ஷோபனா, அம்பிகா பாடல்களை எல்லாம் கண்டுபிடிச்சுட்டார்! அவரோடு நானும் அதிகப் படங்கள்ல நடிச்சிருக்கேன். என் பாடலையும் கண்டுபிடிச்சிட்டார்.

* ஆண்டுதோறும் புதுசு புதுசா மேஜிக் பண்ணி மோகன்லால் சார் அசத்துவார். போன வருஷம் அவரால பண்ண முடியாமப் போச்சு. அதுக்கும் சேர்த்து இந்த ஆண்டு கலக்கிட்டார்.

மைம் கேம் பண்ணினார். ஒரு பாடலை மனசுக்குள்ள நினைக்கச் சொல்லி, அது என்ன பாடல்னு கண்டுபிடிச்சு சொன்னார்! அதேபோல சிரஞ்சீவி சார்கிட்ட அவர் முதன்முதலில் காதல் வயப்பட்ட பெண்ணை மனசுக்குள் நினைக்கச் சொல்லி, அதையும் மோகன்லால் சார் கரெக்டா சொல்லி அசத்தினார்!

* ‘பத்தாவது வருஷத்தை மும்பைலதான் கொண்டாடணும்’னுபூனம் தில்லான் போன வருஷமே விரும்பினாங்க. ஏன்னா, அங்கதான் நதியா, ராதா, சொப்னா, ஜாக்கி ஷெராஃப்னு பலரும் இருக்காங்க. நாங்களும் அடுத்த ஸ்பாட் மும்பைதான்கிற ஐடியால இருந்தோம்.

இதை சிரஞ்சீவி சார்கிட்ட சொன்னதும், அவர் ‘இந்த வருஷம் நாங்க புது வீடு கட்டறோம். கண்டிப்பா எங்க புது வீட்டுலதான் நாம செலிபிரேட் பண்ணப்போறோம். என் மகன், மகள் கல்யாணத்தைப் போல இந்த வருஷ ஃபங்ஷனையும் கிராண்டா பண்ணிடலாம்’னு அன்புக் கட்டளையிட்டு இன்வைட் பண்ணினார்.

அவர் அமெரிக்கா போக வேண்டியிருந்தது. தன் ட்ரிப்பை தள்ளி வச்சுட்டு, நட்புக் கொண்டாட்டத்துக்கு ரெடியானார். நாங்க ஹைதராபாத்துக்கு வந்ததுல இருந்து ஃபங்ஷன் நிறைவடைஞ்சு ரிட்டர்ன் ஆகற வரை சிரஞ்சீவி சாரோட அன்பும், உபசரிப்பும் எல்லாரையும் பிரமிக்க வச்சது.

ஒவ்வொரு விஷயத்தையும் அவரே பார்த்துப் பார்த்து கவனிச்சார். கூடவே அவர் மகன் ராம் சரணும், மகள் சுஷ்மிதாவும் அவங்க அப்பவோட சேர்ந்து ஓடியாடி வேலைகளைப் பகிர்ந்துக்கிட்டாங்க.

கடந்த 23ம் தேதி நடந்த எங்க ஃபங்ஷனை திட்டமிடும்போதே அடுத்த நாளான 24ம் தேதி அம்ரீஷின் முதலாமாண்டு நினைவு தினம் வர்ற விஷயம் தெரிஞ்சது. இந்த டைம்ல அம்ரீஷ் மனைவி சுமலதாவை இன்வைட் பண்றதா... வேணாமானு குழப்பம். அப்புறம், இது நட்புக் கூட்டணி; சந்தோஷத்தை மட்டுமில்ல, துக்கத்தை பகிர்ந்துக்கறதும்தான்னு சுமலதாவுக்கு ஆறுதல் சொல்லி அவங்களையும் பங்கேற்க வைச்சோம்!

மை.பாரதிராஜா