ஒரே நைட்ல நடக்கற கதை!‘‘சினிமான்னா கழுத்து வரைக்கும் ஆசை. அதுவும் கமல் படமென்றால் அவ்வளவு ரசிச்சு ரசிச்சுப் பார்ப்பேன். அவர் படங்களைப் பார்த்து ரசிக்கிறது மட்டுமே பொழுதுபோக்கு. அவர்கிட்டே உதவியாளராக சேரணும்னு முடிவு பண்ணி முடியாமல் போய் ‘மாநகரம்’ படத்திற்குப் பிறகுதான் அவரைச் சந்திக்க முடிந்தது.

‘மாநகரம்’ பெயர் வாங்கிக் கொடுத்தும், அவசரப்படலை. ‘போலீஸ் ரோந்து போகாத ஒரு ராத்திரி’னு டிரைலர் போனதுமே ‘கைதி’க்கு பெரிய கவனம் வந்தது. பாடல் இல்லை, ஹீரோயின் இல்லைன்னு முடிவானது எல்லாம் ஏதோ அதிர்ச்சி மதிப்புக்காக செய்ததில்லை. உண்மையிலேயே கதைக்கு தேவைப்படலை.

கார்த்தி சார் இதில் உள்ளே நுழைஞ்சதும் இந்தப் படத்திற்கு உண்டான கவனமும், எல்லையும் கூடிப்போச்சு. எல்லாம் முடிஞ்சு இப்போது பார்க்கையில் அவ்வளவு சந்தோஷமா இருக்கு. நம்பகமாக உங்களோட உட்கார்ந்து பேச மனசு வருது...’’ அருமையாகப் பேசுகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். ‘மாநகர’த்திற்குப் பிறகான அவரது அடுத்த களம் ‘கைதி’. ஆக்‌ஷனும் த்ரில்லரும் கலந்த லோகேஷின் இந்தக் ‘கைதி’, காஸ்ட்லி தீபாவளி வெடி!டிரைலரே பரபரப்பாக இருக்கு...

நன்றி. எல்லாத்தும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சாரை கைகாட்டணும். அதுதான் நியாயம். கதையைக் கேட்டதும் இதில் கார்த்தி மாதிரியானவர்கள் வந்தால் எப்படியிருக்கும்னு சொல்லிப் பார்த்தார். இத்தனைக்கும் இதில் ஹீரோயின், பாடல்கள்னு அவசியமில்லாமல் இருக்கிறது பற்றி அவருக்குப் பிரச்னையாகவே இல்லை. ‘ஒரு தடவை கார்த்தியை பார்த்து சொல்லிடுறீங்களா’ என்று சொல்லி முடித்த கொஞ்ச நாட்களில் அவரிடம் கதையைச் சொல்ல வைத்தார்.

அவருக்கும் கதை பிடித்துப்போனதும் பார்வை, பட்ஜெட், அவருக்கான கதையில் அவரது பாகத்தின் விஸ்தரிப்பு எல்லாமே அடுத்தடுத்து பெரிய இடத்திற்குப் போச்சு. முதல் படத்திலேயே அதுவும் ஒரே படத்தில் கார்த்தி சார் போன உயரம் இப்போ நினைச்சாலும் அதிசயமா, ஆச்சர்யமா, சந்தோஷமா இருக்கு.

இது ஒரு ராத்திரியில் நடக்கிற கதை. அதற்குரிய எமொஷனில் ஒண்ணும் குறை இருக்காது. படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு. கார்த்தி சாருக்கு கதை பிடிச்சதும் இதில் அவர் இறங்கி வந்திட்டார். ஷூட்டிங் ஸ்பாட்டில் அப்படியொரு குளிர். நாங்கள் குளிருக்குத் தேவையான அத்தனை பாதுகாப்புகளோடும் இருப்போம். அவர் தலையில் ஒரு மப்ளர்கூட கட்டாமல் அப்படியே இருப்பார்.

ஷூட்டிங் வந்து எங்களோடு ஐக்கியமாகிட்டால் அவர் அப்படியே எங்களோடுதான் திரிவார். அவருக்கும், தான் ஒரு ஹீரோன்னு மறந்துபோயிருக்கும். நாங்களும் அப்படியே நண்பர்களாக ஆகிப்போயிருப்போம். மிகவும் உழைப்பைக் கேட்கிற, அதுவும் இரவு நடக்கிற சண்டைக் காட்சிகளில் முழு ஈடுபாட்டுடன் நடிச்சார். எங்க உதவி டைரக்டர்கள் குழுவே கலகலத்துப் போச்சு.

மூணு மாதம் ஷூட்டிங் முடிந்தபிறகு பார்த்தால் ஆளுக்கு ஆள் ஆறு கிலோவுக்கு மேல் குறைஞ்சிருக்கோம். ஆனால், அதையெல்லாம் சேர்த்து திரையில் பார்க்கும்போது அந்த உழைப்பிற்கு கிடைச்ச பிரதிபலிப்பு ரொம்ப அழகாகவே இருக்கு.பெரிய ஹீரோவை வைச்சுக்கிட்டு ஹீரோயின்கூட இல்லாமல்...

அப்படி திட்டம் போட்டு ‘கைதி’யைப் பண்ணலை. கதை பயணம் ஆன விதத்தில் பாடல்களும், ஹீரோயினும் உங்களுக்கே அவசியமாகத் தெரிய மாட்டாங்க. ஹீரோயின் இருக்க மாட்டார்களே தவிர அதற்கான நினைவூட்டல்கள், ஃபீலிங்ன்னு படம் போகும். இதுலயும் மௌனமாக ஒரு காதல் இருக்கும். நம்ப முடியாத விஷயங்களையும் நம்ப வைக்கிறதுதான் சினிமாவோட பெரிய ஆச்சர்யம்.

ஒவ்வொரு நாளும் எங்க நண்பர்களின் விவாதம் ஒவ்வொரு திசைக்கா பயணிக்கும். அதுல ஒரு நாளில் நான் இதைச்சொல்ல, உடனடியாக மத்த எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைச்சிட்டு இதில் கவனம் வைச்சோம். இப்படித்தான் ஒரு விஷயம் சட்னு நம்மை இழுத்துக் கொண்டுபோய் வைக்கும்.

நாங்கள் எல்லோரும் கொஞ்சம் களைச்சு நிற்கும்போது கார்த்தி சார் அப்படியே அசராமல் நிற்கிறது, எங்களையும் அவர் மாதிரி இருக்கத் தூண்டும். எனக்குக் கார்த்தியை ஒரு கம்ப்ளீட் ஆக்டர்னு சொல்லத்தோணும். அவர் ஒரு லாரி ஓட்டிட்டு வருவார் பாருங்க... அசல் லாரி டிரைவர் மாதிரி லாவகமும், சகஜமும் பின்னும்.

நானெல்லாம் குறும்படம் தப்பு தப்பாக எடுத்துப் பார்த்திட்டு, அப்படியே கத்துக்கிட்டு, கொஞ்சம் மேலேறி வந்தவன். ஆனால், அவர் இயல்பாகவே நடிப்பும், அதற்கு ஏதுவான மனசும் கொண்டவர். இந்தப்படத்தின் மிகப்பெரிய சக்தி அவர்தான்.

மியூசிக் எப்படியிருக்கு..?

எனக்கு சாம்.சி.எஸ் ரொம்பப் பிடிக்கும். ஒரு காட்சியை மியூசிக் இல்லாமல் மௌனமாக கடந்துபோய் விடலாம்னு நினைச்சு வைச்சிட்டு வந்தால், அப்படியே அவர் செய்து வைத்திருப்பார். ‘நான் இப்படியே நினைச்சிருந்தேன் பாஸ்’னு சொன்னால் அவரிடமிருந்து புன்னகை பரிசா வரும். அப்படி எங்களுக்குள்ள ஒட்டி ஒட்டிப்போகிற இயல்பு.

கேமிரா சத்யன் சூரியன். முழுக்க ராத்திரிதான் படப்பிடிப்பு. உங்ககிட்டே பொறுப்பு ஒப்படைக்கிறேன்னு ஒரு வார்த்தை சொன்னதுதான். அதில் அவர் ஒரு குறையும் வைக்கலை. நரேன், இதில் முக்கியமான கேரக்டரில் வருகிறார். காடுகளில் அலைந்து திரிந்த நாட்கள் எல்லாம் அப்படியே ஞாபகத்தில் இருக்கு. பெரும் ஆக் ஷன் படமாக உருவானதில் அன்பறிவ் மாஸ்டர்களுக்கு பெரிய பங்கிருக்கு.

விளையாட்டுப் பிள்ளைகள் மாதிரி சிரிச்சுக்கிட்டே, ஆனால், வேலையில் இறுக்கமே இல்லாமல் நடத்தினதெல்லாம் படத்திற்கு அவ்வளவு ப்ளஸ்.ஒரு நல்ல ஆக்‌ஷன் படத்திற்கும், வித்தியாசமான கதை சொல்லலுக்கும், கொண்டு சேர்க்கிற எமோஷனுக்கும் மக்கள் தவறவிட முடியாத படம் ‘கைதி’!

நா.கதிர்வேலன்