பார்வையற்ற ஐஏஎஸ் !
பிராஞ்சல் பாட்டீல்… இந்தியாவின் முதல் பார்வையற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி என்ற பெருமைக்குரியவர். கடந்தாண்டு எர்ணாகுளத்தில் உதவி கலெக்டராக பயிற்சி எடுத்தவர், இப்போது திருவனந்தபுரத்தின் சப் கலெக்டராக பொறுப்பேற்று இருக்கிறார்.மகாராஷ்டிரா மாநிலம் உல்லாஸ் நகரைச் சேர்ந்த பிராஞ்சலுக்கு ஆறு வயது இருக்கையில் பார்வை பறிபோனது. ஆனால், அவரின் சிறுவயது கனவு ஐஏஎஸ் ஆகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே! இதனால், கனவைத் துரத்த நம்பிக்ைகயோடு படித்திருக்கிறார்.
 அந்த நம்பிக்கை இப்போது வெற்றியை ஈட்டித் தந்திருக்கிறது. பள்ளிப் படிப்பு முடித்ததும் பொலிடிக்கல் சயின்ஸில் டிகிரியும் பிறகு ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இன்டர்நேஷனல் ரிலேஷன்ஸ் கோர்ஸில் மாஸ்டர் டிகிரியும் பெற்றார். தொடர்ந்து எம்.ஃபில், பிஎச்.டிபட்டங்களையும் முடித்தார். பிறகு, 2016ல் யுபிஎஸ்சி தேர்வை எதிர்கொண்டவர் முதல் முயற்சியிலேயே 773வதுரேங்க் எடுத்தார். உடனே அவருக்கு இந்திய ரயில்வே அக்கவுண்ட் சர்வீஸில் வேலை கிடைத்தது.
 ஆனால், நூறு சதவீத பார்வைக் குறைபாடு கொண்டவர் என்பதால் ரயில்வே அந்த வேலையை நிராகரித்துவிட்டது. இருந்தும் துளியும் மனம் தளரவில்லை பிராஞ்சல்.‘‘உடல் குறைபாடு பற்றி வருத்தப்பட்டுக் கொண்டே இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது. நான் என் குறைபாட்டைப் பற்றி ஒருபோதும் வருத்தப்பட்டதேயில்லை.
அந்த வேலையை ரயில்வே மறுத்ததும் எதிர்த்துப் போராட வேண்டும் எனத் தோன்றவில்லை. மாறாக, என்னுடைய கனவை விடாமல் துரத்தி குறிக்கோளை அடைந்தேன்...’’ எனத் தன்னம்பிக்கை மிளிரப் பேசுகிறார் பிராஞ்சல். அவருக்கு இந்தளவுக்கு நம்பிக்கை தந்தவர்கள் அப்பா எல்.பி.பாட்டீல், அம்மா ஜோதி பாட்டீல் மற்றும் கணவர் கோமல்சிங் பாட்டீல் ஆகிய மூவரும்தான்.
தொடர்ந்து இரண்டாவது முறையாக 2017ல் யுபிஎஸ்சி தேர்வை எதிர்நோக்கியவர் 124வது ரேங்க் எடுத்து ஐ.ஏ.எஸ்., கனவைத் தன்வசப்படுத்தினார். ‘‘இந்தப் பொறுப்பு ரொம்பப் பெருமையாக இருக்கிறது. என் பணியை ஆரம்பிக்கும்போதே இந்த மாவட்டத்தின் சப் டிவிஷன்களுக்கு என்னென்ன செய்யலாம் என்கிற ஐடியா வந்திடும்.
அதைத் திறமையாகச் செய்வேன்...’’ என்கிற பிராஞ்சலுக்கு அதிகாரிகளும், பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டுமென திருவனந்தபுரம் கலெக்டர் கே.கோபாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.‘‘உங்கள் முயற்சியை ஒருபோதும் கைவிட்டுவிடாதீர்கள். அதுதான் நீங்கள் நினைத்த குறிக்கோளை ஒருநாள் அடைய வைக்கும்!’’ என உறுதியுடன் சொல்லும் பிராஞ்சல், நம்பிக்கைக்கு ஓர் உதாரணம்.
பேராச்சி கண்ணன்
|