பொருளாதார மந்தம்... வேலையிழப்பு... பணி நீக்கம்..! எப்படி சமாளிக்கலாம்..?



உலகெங்கும் இன்று ஒரே குரலில் ஒலிக்கும் அபாய முழக்கங்கள் என்ன தெரியுமா?
‘பொருளாதார மந்தம்... வேலையிழப்பு... பணி நீக்கம்...’ இந்த சர்வதேச குழப்பங்களுக்கு இந்தியா மட்டும் விலக்கல்ல; இங்கேயும் அதே முழக்கம்தான்.

ஏதோ திடீரென இந்தக் குரல்கள் எழும்பிவிடவில்லை. அதுவும் இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாகவே, பொருளாதார மந்தத்தின் தாக்கம் பல துறைகளிலும் எதிரொலித்து வருகிறது.கடந்த 2016ல் பணமதிப்பிழப்பு, 2017ல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி), தவறான பொருளாதாரக் கொள்கை, அதிகபட்ச தனியார்மயம் எனப் பொருளாதார வளர்ச்சியைச் சீர்குலைத்த நடவடிக்கைகள் ஏராளம்.

இவற்றின் பாதிப்புகள் குறைந்து படிப்படியாக இயல்புநிலை திரும்பி வந்தாலும்கூட, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அதை உறுதிப்படுத்தும் வகையில், சமீபத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை உலக வங்கி குறைத்து மதிப்பிட்டுள்ளது.

அதாவது, முந்தைய 2018 - 19ம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.9% ஆக இருந்தது. அக்டோபர் 13ம் தேதி உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், ‘2019 - 2020ம் ஆண்டிற்கான வளர்ச்சி விகிதம் 6% ஆக சரியும்’ என்று தெரிவித்துள்ளது. அதே 2017 - 18ல் இந்தியாவில் வளர்ச்சி 7.2% ஆக இருந்தது. ஆனால், இப்போது மேலும் 0.9 சதவீதம் குறைந்து, 6 சதவீதமாக மாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக, ‘தொழில் நிறுவன வளர்ச்சி 6.9%; விவசாய வளர்ச்சி 2.9%; சேவைத் துறை வளர்ச்சி 7.5% ஆக இருக்கும்’ என்று கணிக்கப்பட்டது.
ஆனால், இந்தத் துறைகளில் ஏற்பட்ட தொடர் வீழ்ச்சியால் நாட்டின் வளர்ச்சி சதவீதம் வேகமாக சரிந்து வருகிறது. இருந்தும், தீவிரமான பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து அதிரடி மாற்றங்களைச் செய்தால் நாட்டின் வளர்ச்சி விகிதம் 2020 - 21ல் 6.9% ஆகவும், 2021 - 22ல் 7.2% ஆகவும் இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

‘வணிகம் நடத்துவதை எளிதாக்கும் நாடுகளில் மிகவும் முன்னேற்றம் கண்ட 20 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. வணிகம் நடத்தும் முறையில் மத்திய அரசு செய்துள்ள சில சீர்திருத்தங்கள், அரசுத் துறைகள் இணையதளங்களின் மூலம் இணைக்கப்படுதல் ஆகியவற்றால் ஏற்றுமதி - இறக்குமதி தொழில்முறை சுலபமாகி உள்ளது’ என உலக வங்கியின் மற்றொரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இவை வரவேற்கப்படவேண்டிய முன்னேற்றங்கள் என்று கூறினாலும் கூட, இவற்றைப் பார்த்து அதிகம் மெச்சிக்கொள்ள முடியாது என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் புள்ளி விவரங்கள் இப்படி கூறினாலும், அதற்கான அடிப்படை கட்டமைப்பை நிலைகுலையச் செய்து வருவது பணியாளர்களின் வேலையிழப்புதான்.

வேலைவாய்ப்பை பெற பெரும் போராட்டங்களை வாழ்க்கையில் சந்தித்து வரும் இளைஞர்கள் மத்தியில், வேலையில் சேர்ந்து அந்த பணியையும் இழக்கும் நிலைக்கு பலர் தள்ளப்பட்டு வருவது சர்வதேச அளவிலும் சர்வ சாதாரணமாகிவிட்டது. சர்வதேச வங்கிகளான ஹெச்.எஸ்.பி.சி மற்றும் ‘டாய்ச்’ வங்கி ஆகியவை தங்களின் ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன.

உலகம் முழுக்க 67 நாடுகளில் தனது கிளைகளை வைத்திருக்கும் ஹெச்.எஸ்.பி.சி வங்கி 10 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த ஃப்ராங்க் ஃபர்ட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச வங்கியான ‘டாய்ச்’ தங்களது நிறுவனத்தைச் சேர்ந்த 18 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. அதுவும், அதிகளவில் ஊதியம் பெறும் ஊழியர்களைக் குறிவைத்து அவர்களை ‘காலி’ செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதற்கெல்லாம் நிறுவனங்கள் சொல்லும் ஒரே காரணம் உலகளாவிய பொருளாதார மந்தநிலைதான்.அனைத்து நாடுகளிலும், மத்திய வங்கிகள் வட்டி குறைப்பு செய்வதால், வங்கிகளுக்குக் கிடைக்க வேண்டிய லாபம் குறைகிறது. தங்களின் வங்கிகளுக்கு வாடிக்கையாளர்களை அதிகளவில் ஈர்க்க, வைப்பு நிதிகளுக்கு வட்டி விகிதங்களை அதிகமாகத் தருவதாகக் கூறுதல் மற்றும் வரவு குறைவு என்பதால் அதிகப்படியான செலவு ஏற்படுகிறது.

இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தவே ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் முடிவினை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டதாக வங்கி நிர்வாகம் தெரிவிக்கிறது.உலகளவில், இப்போதுள்ள பதவிகளில் 21% பேர் பணிநீக்கம் செய்யப்படுவர் என்றும், மேலும் 27% பேர் 2022ம் ஆண்டுக்குள் புதியவர்களாக நியமிக்கப்படுவர் என்றும் உலக பொருளாதார மன்றம் சொல்கிறது.

டிஜிட்டல் கல்வியறிவு பெற்றவர்களுக்கான தேவை 2030ம் ஆண்டுக்குள் 55% ஆக அதிகரிக்கும்; இது 2016ல் 11% ஆக இருந்ததாகவும், போக்கு
வரத்து மற்றும் தளவாடங்கள், சில்லறை விற்பனை, உணவு பதப்படுத்துதல், கட்டுமானம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் ஆகிய 5 துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஏற்கனவே ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல் துறைகளில் ஊழியர்களுக்கான ‘பணியில்லா நாட்கள்’ நடைமுறைக்கு வந்துவிட்டன. பணி உத்தரவாதம் இல்லாத ஊழியர்கள் அடுத்ததாக எந்த வேலைக்கு செல்வதென்று தெரியாமல், ‘பித்து’ப் பிடித்தவர்கள் போல் நகர்ப்பகுதியில் வேலை தேடி அலைவதைப்பார்க்க முடிகிறது.

இவை எல்லாம் ஒருபுறம் இருக்க, ஏற்கனவே செய்த வேலையை மாற்றலாமா என்று யோசிப்பதற்குள் அந்த வேலையே மாறிவிடுகிறது. அதற்கேற்றாற் போல், எதிர்கால வேலைக்கு தயாராக வேண்டிய கட்டாயமும் தொற்றிக் கொள்கிறது.தொழில்நுட்பங்களுடன் வேலைகளின் தன்மை மாறுவதால், அதற்கு ஏற்றபடி மாறவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

இன்றைய நிலையில், புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் துறைகளும், அதற்கேற்றாற்போல் வேலை வாய்ப்பில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள துறைகள் குறித்த பட்டியலையும், சர்வதேச வேலை வாய்ப்பு ஆலோசனை நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவித்துள்ளது.

எப்படியாயினும், ‘பொருளாதார மந்தத்தை நிமிர்த்த பணம் வைத்திருப்பவர்கள் அவசியமான செலவுகளைச் செய்ய தயக்கம் காட்டக் கூடாது; பணப்புழக்கம் இல்லாமலிருப்பது இப்போதைய மந்தநிலையை மேலும் மந்தமாக்கும்; இவ்விஷயத்தில் அரசு மட்டுமே முயன்றால் அதற்கு நீண்டகாலம் பிடிக்கும்.

எனவே, வருகிற தீபாவளி போன்ற விழாக் காலங்களில் அதிக செலவுகளைச் செய்து பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும்’ என்று பொருளாதார வல்லுனர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.‘கையில் பணமிருந்தால் உடனே திருப்பிச் செலுத்த வேண்டிய கடனைச்செலுத்துங்கள்; வீட்டு பராமரிப்பு, வாகனம் வாங்குதல், சொத்து வாங்குதல் போன்ற நடவடிக்கையால் பணம் பலரின் கைகளுக்குப் போய்ச் சேர்ந்து மந்தநிலையில் இருந்து காப்பாற்றும்...’ என்றும் சொல்கிறார்கள்.இத்தனை ஆலோசனைக்கும் மத்தியில் அன்றாடக் கூலிகளும், நடுத்தர வர்க்கத்தினரும் படும்பாட்டுக்கு இப்போதைக்கு மருந்தில்லை என்பதே உண்மை!

செ.அமிர்தலிங்கம்