தலபுராணம்-தி. நகரும் மாம்பலமும்
இன்று ஏரிகளும் குளங்களும் வீடுகளாகவும், பேருந்து நிலையங்களாகவும் மாறி வருவதைப் பார்த்து வருத்தப்படுகிறோம்.
 ஆனால், 1920களிலேயே மெட்ராஸின் புறநகரில் இருந்த ஒரு பெரிய ஏரி நகராக மாற்றப்பட்டிருக்கிறது! 1923ம் வருடம் ‘டவுன் பிளானிங்’ திட்டத்தில் உருவான அந்த நகரின் பெயர் தியாகராய நகர் எனப்படும் தி.நகர். லாங் டேங்க் என்றழைக்கப்பட்ட அந்த ஏரி, ஒருகாலத்தில் வடக்கே கூவம் நதியையும், தெற்கே அடையாறு நதியையும் இணைத்திருந்தது.
இதை இன்றும் வள்ளுவர் கோட்டத்திலுள்ள ஏரிக்கரை சாலையும், மாம்பலம் ஏரிக்கரை சாலையும் பறைசாற்றி நிற்கின்றன. அப்போது ஏரியைச் சுற்றிலும் விவசாய நிலங்கள்தான்.இந்தப் பகுதி முழுவதும் அன்று மாம்பலம் என்றழைக்கப்பட்டது. இன்று நகரின் மையப் பகுதியாக இருந்தாலும் கூட அன்று மெட்ராஸின் புறநகர்தான் மாம்பலம். இதைத்தான் நகர திட்டத்தில் மனைகளாக மாற்றினர்.
இதனால், ரயில் நிலையத்திற்கு மேற்குப் பக்கமாக இருந்த பகுதி மேற்கு மாம்பலமாகவும், கிழக்குப் பக்கமாக இருந்த பகுதி கிழக்கு மாம்பலமாகவும் மாறிப் போனது. இந்தக் கிழக்கு மாம்பலமே பின்னர் தியாகராய நகராக பெயர் மாற்றப்பட்டது. ஆனால், இன்றும் ரயில்வேயின் பெயர்ப் பலகை மட்டுமே அந்தப் பழைய மாம்பலத்தை நமக்கு நினைவூட்டுகிறது.
1920ம் வருடம் முதல் முதலாக நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ெமட்ராஸ் மாகாணத்தில் ஆட்சியைப் பிடித்தது நீதிக்கட்சி. அதன் தலைவர் சர்.பிட்டி.தியாகராய செட்டியாரின் பெயர் இந்நகருக்கு இடப்பட்டது. இந்நகரின் நடுவில் ஒரு பூங்கா வடிவமைக்கப்பட்டது. இந்தப் பூங்காவிற்கு, நீதிக்கட்சியின் தலைவராகவும், மாகாணத்தின் இரண்டாவது முதல்வராகவும் இருந்த பனகல் அரசர் ராமராய நிங்காரை கௌரவப்படுத்தும் வகையில் ‘பனகல் பார்க்’ எனப் பெயர் சூட்டப்பட்டது.
இந்தப் பூங்காவிலிருந்து தியாகராயா சாலை (பாண்டி பஜார் ரோடு), கோபதி நாராயணசெட்டி சாலை (ஜி.என்.செட்டி ரோடு), வெங்கட்நாராயணா சாலை என மூன்று சாலைகள் அண்ணா சாலையை நோக்கிச் செல்லும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டன.
இதில், பாண்டி பஜார் எனப் பெயர் வந்ததற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று, நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரும் முதல் சட்டமன்றத்தில் உறுப்பினராகவும் இருந்த டபிள்யு.பி.ஏ.சவுந்தரபாண்டியன் நாடார் நினைவாக வைக்கப்பட்டது என்பது. மற்றொன்று, சொக்கலிங்க ெசட்டியார் என்ற பாண்டிச்சேரி பிரமுகர். இதுபற்றி, ‘தியாகராய நகர் அன்றும் இன்றும்’ நூலில் நல்லி குப்புசாமி செட்டியார் இவ்வாறு குறிப்பிடுகிறார்.‘‘முதலில் பத்து சிறிய கடைகள் கொண்ட வணிகக் கட்டடத்தை தியாகராயா சாலையில் கீதா கஃபே ஹோட்டலுக்கு அருகே எழுப்பியவர் பாண்டிச்சேரியைச் சேர்ந்த சொக்கலிங்க முதலியார். அதுதான் தி.நகரின் முதல் பஜார். அவர் பாண்டிச்சேரிக்காரர் என்பதனால், பிறந்த மண்ணின் மீதான அபிமானம் காரணமாக கட்டடத்திற்கு ‘பாண்டி பஜார்’ என்று பெயரிட்டார்.
தொலைவிலிருந்து பார்த்தாலும் அந்தப் பெயர்ப்பலகை அப்போது தெளிவாகத் தெரியும். இது சுமார் 1933 வாக்கில் என்று சொல்லலாம். அந்தக் கட்டடத்தின் கடைகள் பிரபலமாகிவிட்ட காரணத்தினாலும், அந்த இடம் ஒரு அடையாளமாகச் சொல்லப்பட்டதாலும் இன்று தியாகராயா சாலை என்ற பெயர் புழக்கத்தில் இல்லை. பாண்டி பஜார் என்றே எல்லோரும் சொல்கிறார்கள்.
அப்போது பாண்டி பஜார் பகுதி முழுமையான குடித்தனப்பகுதி. முதலில் தோன்றியவை சில கடைகளே என்பதனால் சொக்கலிங்க முதலியார் உருவாக்கியதே பாண்டி பஜார் என்று வழங்கப்பட்டது. அந்த பஜாரில் பாகீரதி ஆயில் மில்ஸ் என்ற கடையை அவரே நடத்தி வந்தார்.
அதுதவிர, சுப்பிரமணிய ஐயர் நடத்தி வந்த சைக்கிள் கடையும் அங்கு இருந்தது. சுப்பிரமணிய ஐயரின் ைமத்துனர்தான் சென்னையில் அடுக்குமாடி கட்டடங்கள் கட்டி வீட்டு வசதியை உருவாக்கிய ‘ராம்ஸ்’ ரியல் எஸ்டேட் நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து அன்ஸர் வாட்ச் கம்பெனி என்ற கடிகாரக்கடையும் அங்கு இருந்தது. அதன் உரிமையாளர்கள் ஆற்காட் நவாப் குடும்பத்தின் உறவினர்கள்...’’ என்கிறார் அவர். மெட்ராஸ் மாநகராட்சியின் தலைவராக இருந்த திவான் பகதூர் சர் கோபதி நாராயணஸ்வாமி ெசட்டியின் பெயரில் ஜி.என்.செட்டி ரோடும், மெட்ராஸ் மாநகராட்சியின் கமிஷனராக இருந்த திவான் பகதூர் வெங்கட்நாராயண நாயுடுவின் பெயரில் வெங்கடநாராயணா ரோடும் அமைந்துள்ளன.மட்டுமல்ல; 1920களில் தி.நகர் உருவான நேரம் நீதிக்கட்சி ஆட்சியில் இருந்ததாலோ என்னவோ இங்குள்ள தெருக்களின் பெயர்கள் நீதிக்கட்சியின் தலைவர்களை ஞாபகப்படுத்தும் வண்ணம் வைக்கப்பட்டன.
வாணிமஹாலையும் பாண்டி பஜாரையும் இணைக்கும் சாலை நீதிக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், டாக்டருமான டி.எம்.நாயரின் பெயரால் அழைக்கப்படுகிறது. போலவே, நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரான டாக்டர் சி.நடேச முதலியார் பெயரில் நடேசன் பார்க் உள்ளது.
நீதிக்கட்சியைச் சேர்ந்தவரும், சில மாதங்கள் மெட்ராஸ் மாகாண கவர்னராகவும் இருந்த முகமது உஸ்மான் பெயரில் உஸ்மான் சாலையும், மெட்ராஸ் மாகாண கவர்னரின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவானாகவும் இருந்த சர் முகமது ஹபிபுல்லாவின் பெயரில் ஹபிபுல்லா சாலையும் அமைந்தன. தவிர, 1919ல் மெட்ராஸ் மாநகராட்சியின் தலைவராக இருந்த கான் பகதூர் முகமது பசுல்லா பெயரில் பசுல்லா சாலை இருக்கிறது. போலவே, 1917ல் மாநகராட்சியின் தலைவராக இருந்தவர் ஹரோல்ட் ஹேமில்டன் பர்கிட். இவர் பெயரிலேயே தி.நகர் பஸ் ஸ்டாண்டை வெங்கட்நாராயணா சாலையுடன் இணைக்கும் பர்கிட் ரோடு உள்ளது.
சர் ஜார்ஜ் டவுன்செண்ட் போக் என்பவர் மாநகராட்சி கமிஷனராகவும் பிறகு மாகாண தலைமைச் செயலராகவும் இருந்தவர். அவர் வீடு இருந்த இடமே போக் சாலை. ஜி.என்.செட்டி சாலையில் நாதமுனி, கோவிந்து என்ற இரு தெருக்களைப் பார்க்கலாம். இதற்குப்பின் ஒரு கதை இருக்கிறது.
இந்த இருவரும் கூலித்தொழிலாளிகள். சுமார் எண்பது வருடங்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தில் பணி செய்த போது மண் சரிந்து இறந்து போயினர். அவர்கள் இருவரையும் கௌரவப்படுத்தும் வகையில் நாதமுனி, கோவிந்து பெயர்கள் சூட்டப்பட்டன.
இன்றுள்ள தி.நகர் பஸ் ஸ்டாண்ட் கூட அன்று ஒரு குட்டையாக இருந்ததுதான். ‘‘இந்தக் குட்டையில் தண்ணீர் வற்றியிருக்கும் காலத்தில் எப்போதாவது பொதுக்கூட்டம் நடக்கும்.
ராஜாஜி, அண்ணா, செங்கல்வராயன், ம.பொ.சி., முத்துராமலிங்கத் தேவர், சின்னஅண்ணாமலை ஆகியோரின் உரைகளை நான் அங்குதான் கேட்டிருக்கிறேன். 1960களில் சுவாமி சின்மயாநந்தா அங்கு கீதை வேள்வி என்று இருபத்தொரு நாட்கள் உரை நிகழ்த்தினார்...’’ என ‘ஒரு பார்வையில் சென்னை நகரம்’ நூலில் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் அசோகமித்திரன். இவர் 1948ல் ரங்கநாதன் தெருவில் 9ம் எண் வீட்டில் வசித்தவர். ‘‘அப்போது ரங்கநாதன் தெருவில் மூன்றே கடைகள். கும்பகோணம் பாத்திரக்கடை, கல்யாண் ஸ்டோர்ஸ், 9ம் எண் வீட்டையொட்டி ஒரு வெற்றிலைபாக்குக் கடை. ரங்கநாதன் தெருவில் நுழையும்போது இரயில் ஒலி கேட்டால் ஓடிப்போய் பிடித்துவிடலாம். தெருவில் எந்த இடைஞ்சலும் இருக்காது...’’ என நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்.
இந்த ரங்கநாதன் பெயர் எப்படி வந்தது?
பிரிட்டிஷ் காலத்தில், ‘துபில்’ ரங்கசாமி ஐயங்கார் என்பவர் முதல் முதலாக இந்தத் தெருவில் குடியேறி இருக்கிறார். இவர், அப்போதைய மெட்ராஸ் சப் - கலெக்டர். பூர்வீகம் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள தூப்புல் என்ற கிராமம். அதனால், ஊர் பெயரை அடைெமாழியாக சேர்க்க, அது பிரிட்டிஷார் உச்சரிப்பில் ‘துபில்’ என்றானது.
இவரிடம் அன்றைய நகராட்சி அதிகாரிகள், ‘இந்தத் தெருவிற்கு உங்கள் பெயரைச்சூட்டிவிடலாம்’ எனக் கேட்டிருக்கிறார்கள். கடவுள் மீது அதீத பக்தி கொண்ட ரங்கசாமி ஐயங்கார், ‘தனது பெயருக்குப் பதிலாக ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் பெயரைச் சூட்டுங்கள்’ என்றாராம். அன்றிலிருந்து ரங்கநாதன் தெருவாகி விட்டது.
தி.நகரிலுள்ள மற்றொரு பழமையான கட்டடம் தி.நகர் சோஷியல் கிளப். ‘‘மாலை வேளைகளில் பொழுதுபோக்க ஒரு இடம் வேண்டுமென்று நினைத்த அந்தக்காலப் பெரியவர்கள் அதற்கென ஒதுக்கிய மனை 14 கிரவுண்ட். 1930 வாக்கில் அரசாங்கத்தினால் தி.நகர் கிளப் பெயருக்குக் கிரயம் செய்து தரப்பட்டது.
எவ்வளவு ரூபாய்க்குத் தெரியுமா? ரூ.2,900. அதாவது ஒரு கிரவுண்ட் ரூ.200 என்றபடி. இந்தக் கட்டடத்திற்கு 1935ம் வருடம் அடிக்கல் நாட்டியவர் அப்போதைய மேயர் குமாரராஜா முத்தையா செட்டியார். அதை 1939ல் திறந்து வைத்தவர் ராஜாஜி...’’ என ‘தியாகராய நகர் அன்றும் இன்றும்’ நூலில் குறிப்பிடுகிறார் நல்லி குப்புசாமி செட்டியார்.
இந்த கிளப்பில் இருந்த கேன்டீன் அன்று புகழ்பெற்றிருந்தது. அங்கு கிடைத்த தஞ்சாவூர் டிகிரி காபிக்கென்று தனி வாடிக்கையாளர்களே இருந்துள்ளனர். இங்கிருந்து சற்று தொலைவில் திருப்பதி திருமலை தேவஸ்தான அலுவலகம் மற்றும் கோயில் உள்ளது. இந்த இடம் கர்னல் சாஸ்திரி என்பவருக்குச் சொந்தமாகஇருந்ததாக நல்லி குப்புசாமி செட்டியார் குறிப்பிடுகிறார்.
‘‘மகப்பேறு இல்லாத அந்தத் தம்பதி தம் வயோதிக காலத்தில் அந்த மனையை விற்க விரும்பியபோது ‘‘வாங்கிக்கொள்கிறாயா?’’ என்று கேட்டார்கள். மனை விலை குறைவாக இருந்த காலத்திலும் சொத்துக்கள் வாங்குவதில் எனக்கு ஆசை இல்லை. ஒரு வற்புறுத்தலின் பேரில் வாங்கியிருந்தாலும் தேவஸ்தானத்தினர் கேட்டிருந்தால் தானமாகக் கொடுத்திருப்பேன்...’’ என்கிறார் அவர். 1947ம் வருடம் நகரை விரிவுபடுத்த மெட்ராஸ் சிட்டி இம்ப்ரூவ்மென்ட் டிரஸ்ட் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதற்கு மாநகராட்சியும், அரசும் ஒத்துழைப்பு நல்கின.
அப்ேபாது இந்த டிரஸ்ட் சில காலனிகளையும், தொகுப்பு வீடுகளையும் உருவாக்கியது. தி.நகரில் உருவாகிய நகரே சிஐடி நகர் (City Improvement Trust). போலவே, மயிலாப்பூர் சிஐடி காலனி.இந்த சிஐடி நகரின் அருகே ஒரு காலனி உருவாக்கப்பட்டது. 1953ல் இந்த நகருக்கு அப்போது முதல்வராக இருந்த ராஜாஜி தமிழ் வருடமான ‘நந்தன’ ஆண்டைக் கணக்கில் கொண்டு நந்தனம் எனப் பெயர் சூட்டினார்.
பின்னர் சிட்டி இம்ப்ரூவ்மென்ட் டிரஸ்ட் என்பது 1961ல் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியமாக மாறியது. மாம்பலத்தை தி.நகருடன் இரண்டு வழிகள் இணைக்கின்றன. ஒன்று துரைசாமி பாலம், மற்றொன்று மேட்லி பாலம். இவை, பிரபல கண் மருத்துவர் துரைசாமி ஐயர் பெயராலும், குடிநீர் திட்ட எஞ்சினியரான மேட்லி பெயராலும் அழைக்கப்படுகின்றன. மாம்பலத்திலுள்ள சில இடங்களின் பெயர்களை அடுத்த இதழில் பார்ப்போம். பேராச்சி கண்ணன்
ஆ.வின்சென்ட் பால்
ராஜா
|