மங்கம்மாக்களின் சரித்திரம்



தண்ணீர் குடத்தை கீழே இறக்கி வைத்த தனலட்சுமி, யோசனையுடன்  செல்வம் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து ‘‘துணி எடுக்க போவலே?’’ என்று கேட்டாள்.அவனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
‘ஒடம்பு கிடம்பு சரியில்லையா’ என்ற யோசனையுடன்அருகில் போனவளிடம், ‘‘அவுரு போயிட்டாராம்… எங்க நைனா...” என்றான்.‘ஓ’ லேசாய் முனகிய தனலட்சுமி, ‘‘எந்திரி... எந்திரி... இன்னாதான் நாம ஆவாம போனாலும் நீதானே கொள்ளி போடணும்?’’ என்றாள்.

‘‘அவுரு போயி இருவது நாளுக்கு மேலே ஆச்சாம். அத்த வுடு, இப்ப பிரிச்சன இன்னான்னா சங்கரன்னு ஒருத்தரு வக்கீல் ஆபீசுல இருந்து போன் செஞ்சாரு. வூடு, பணம், நகைன்னு எம் பேர்ல எளுதி வெச்சிருக்காராம். இப்பவே வரச் சொல்லுகிறாப்டி...” என்றான் செல்வம்.சொந்த வீடு, நகை, கையில காசு! அடித்துக்கொண்ட மனதை நிதானப்படுத்தினாள். ‘‘எப்படி எறந்தாராம்... இன்னா சங்கதி?”

“பழனிக்கு சாமி கும்பிடப் போனவரு மேலே லாரிக்காரன் இடிச்சிட்டானாம். போலீசு கேஸ் அது இதுன்னு ஒரே பிரச்னை ஆயி, பாடிய இங்க எடுத்தார முடியாம அங்கியே எல்லாம் முடிச்சிட்டாங்களாம்...”கேட்டுக் கொண்டிருந்த சூர்யா, ‘‘ஏன் டாடி... அந்த  தாத்தாவ ஒனக்கு பிடிக்காதா?’’ என்றான்.

உடனே காவ்யா, ‘‘அதானே... எனக்கும் இப்படி ஒரு  தாத்தா இருக்கிறதே இன்னிக்குதான் தெரியும்...” என்றாள்.“அப்படி இல்ல கண்ணுங்களா! எங்கம்மா நா கைக் கொளந்தையா இருக்கசொல்லையே எறந்துடுச்சு. ரொம்ப நாளு ஆயாவதாம் எங்கம்மான்னு நெனச்சிக்கினு இருந்தேன். அப்புறம் சின்னம்மா வந்துச்சு. நைனா என்னிய கண்டுக்கவே மாட்டாரு. நானு அவுர அப்பான்னே கூப்பிடதில்லே.  

எனக்கு மூணு வயசாகும்போது சின்னம்மாவுக்கு கொளந்த பொறந்தது. பாண்டின்னு பேரு. பெத்த தாயும் இல்லே, நைனாவும் கண்டுக்கல. ஆயாதான் பாவம்,  எனக்கு எல்லாம் செய்யும்...நா அஞ்சாவது படிக்க சொல்ல உங்க மாணிக்கம் தாத்தா, எனக்கு தாயிமாமாங்கற உரிமைல என்னிய பத்தி ஏதோ கேட்கப் போவ, ‘அவ்வளவு அக்கற இருந்தா நீயே இட்டுக்கினு போ’னுட்டாரு நைனா.

ஆயாவும் ‘இங்க இருந்தா இவன் செத்தே பூடுவான். ஒன் அக்கா பையன், கை வுட்டுடாதே’னு சொல்லி அனுப்பி வெச்சிடுச்சு.ஆயா எப்பனாச்சும் இஸ்கூலாண்ட வந்து பார்க்கும். நைனா சம்பாதிக்கிற காசை லேவாதேவில வுட்டு, நெலம் வாங்கி வீடு கட்டி செழிப்பாயிட்டாரு. எல்லாம் ஆயாவோட ஒழைப்பு, சிக்கனத்தாலதான். குலசாமி அது...’’ செல்வத்தின் குரல் தழுதழுத்தது.

‘‘ஒங்க ஆயா...’’ தனலட்சுமி இழுத்தாள். ‘‘ப்ச்சு… நாலு வருஷத்துக்கு முன்னால, நம்ம பெயிண்டர் சாரதி பொண்ணு கல்யாணத்துல, எனக்கு தொத்தா மொற, தேன்மொளின்னு பேரு, ஆயா வகையறா சொந்தம். அதுதான் சொல்லிச்சு ஆயா இஸ்துக்குன்னு கெடக்குதுனு. நைனா சாமியாராட்டம் ஊர் ஊரா சுத்திக்கினு இருக்காரு. பாண்டி பய, சைதாப்பேட்ட மார்கெட்டாண்ட செல்போன் கட போட்டு இருக்கான்.

அவன் பொஞ்சாதி, ஆஸ்பத்திரில ஹவுஸ் கீப்பிங் வேலைக்குப்போவுது. ரெண்டு ஆம்பள பசங்க.   நம்ம ஜனங்க கூட அதிகம் பேச்சே வெச்சிக்கிறது இல்லேன்னு சொல்லிக்கினு இருந்துச்சு. ஆயாவ பார்க்க தேன்மொளி போயிருக்கு. கண்ணுலயே காட்டாம,  அப்பால வான்னு அனுப்பிச்சிட்டாங்கன்னு  வருத்தப்பட்டுச்சு...’’ ‘‘ஒரு வார்த்த இதெல்லாம் என்னாண்ட சொல்லலே பார்த்தியா...’’ தனலட்சுமி வருத்தப்பட்டாள்.

‘‘என்னத்த சொல்ல. அவுங்க பேச்ச எடுக்கவே வெறுப்பா இருந்துச்சு. அந்த மாதிரி செஞ்சிட்டாங்க. தனம்! ஒங்கப்பாவுக்கு மேலுக்கு ரொம்ப முடியாம போனதும் இஸ்கூல் பீஸ் கட்ட எதுனாச்சும் ஒதவுவாங்களான்னு கேக்க ஒரு நா வூட்டாண்ட போனப்ப எங்க சின்னம்மா நாயை எம் மேலே ஏவி வுட்டுச்சு.அப்பவே  வூடு, ஆளுங்க  பாக்க நல்லா அந்தஸ்த்தா இருந்தாங்க. ஆயாவ காணலே. பாண்டி பய சிரிச்சிக்கினு நின்னாப்ல. அப்பால அந்த வூடு, அந்த ஜனங்க நெனப்பே இல்லே.

தனம்! பணங்காசுன்னு இல்லாட்டியும் ஒங்க அப்பாவும் அம்மாவும் எனக்கு ஒரு கொறையும் வெக்கலே. நீயும் என்னை கட்டிக்கிறேன்னு சொல்லி கட்டிக்கினு நம்ம வாழ்க்கை, நம்ம குழந்தைங்கன்னு நிம்மதியா இருக்கோம். நம்ம கல்யாணத்துக்குக்கூட, அவுங்களுக்கு நோட்டீஸ் வெக்கக் கூடாதுன்னு மாமாட்ட சொல்லிட்டேன். அந்தளவு  மனசு வுட்டுப் போச்சு.

உங்கப்பா நெலம தெரிஞ்சும், அஞ்சு காசு கூட தரலே. இப்ப அவுரு சொத்து, பணம் இன்னாத்துக்குன்னு தோணுது...’’ வெறித்தபடி செல்வம் சொன்னான்.தனலட்சுமி முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள். ‘‘புள்ளையாரு கோயில் அய்யிர கேட்டு, எதுனாச்சும் சாங்கியம் இருந்தா செஞ்சிடணும். நாளைக்கு நம்ம புள்ளைங்க நல்லா இருக்கணும் இல்லே...”

இருக்கும் வீட்டை சுத்திப் பார்த்தாள். பத்துக்கு பத்து அறை. நாலு குடுத்தனங்களுக்கும் சேர்த்து பொதுக் கழிப்பிடம். அறைக்கு முன்னால் ஒரு வெராந்தா. அதில் ஒரு ஓரத்தில் சமையல். இதுக்கு மாசம் மூவாயிரம் வாடகை. கரண்டு பில்லு, மொறவாசல் தனி!‘‘நாம யாரு காசுக்கும் அலையலை. அவுருக்கு பெத்த புள்ளைக்கு எதுவும் செய்யலேன்னு கடைசிக் காலத்துல தோணியிருக்கு. அந்த காசுல நம்ம புள்ளைங்களை நல்லா படிக்க வெக்கலாமில்லியா?  இந்த இஸ்திரி போடுற வேலையிலே இன்னாத்த சேக்க முடியும்? வலிய வர சீதேவி. வேணாம்ன்னா நமக்குதான் நஷ்டம்.

அப்பால ஒன் இஷ்டம்...” “அந்த அய்யிரும் இத்தையேதான் சொல்றாப்ல...” செல்வம் முனகினான். ‘‘சரி கிளம்புங்க... போய் பார்த்துட்டு வந்துடலாம்...’’
அடையாறில் இருந்த அந்த தனியார் மருத்துவமனைக்கு அடுத்த தெருவில் ஹை கோர்ட் வக்கீல் என்பதற்கு ஏற்றபடி அட்டகாசமாக இருந்தது அவர் அலுவலகம்.வாசல் பக்கம் நின்றிருந்த பெரியவரை செல்வம் விசாரித்தான்.

‘‘வாப்பா செல்வம்! நாந்தான் சங்கரன். ஒனக்கு போன் பண்ணினேனே! ஆறு மாசத்துக்கு முன்னால உயில் எழுதும்பொழுதும் ஒன் நம்பரை உங்க அப்பாதான் தந்தார். ஒன் இஸ்திரி வண்டில செல் நம்பர் போட்டிருக்கியே... காரணீஸ்வரர் கோயிலுக்கு எதிர்ல பழக் கடை வாசல்ல நீ வண்டில துணி தேச்சிக்கிட்டு இருக்கும்போது ஒனக்கு தெரியாம பார்ப்பாராம். உன்கிட்ட பேச பயம். ப்ச்… ஒன் விஷயத்த சொல்லி ரொம்ப வருத்தப்பட்டார். ஒனக்குன்னு எளுதி வெச்சத சந்தோஷமா வாங்கிக்கோ. அப்பதான் அவர் ஆன்மா சாந்தியடையும்... சார் கூப்பிடுவார். உள்ள போய் ஒக்காருங்க...’’ சொல்லிவிட்டு உள்ளே ஓடினார் சங்கரன்.

முதல் முறையாய் தந்தை என்ற நினைப்பில் கண்கலங்கியது செல்வத்திற்கு.அரை மணி நேர காத்திருப்புக்குப் பிறகு, “செல்வராஜ், பாண்டிராஜ்...” என்று அழைப்பு வந்தவுடன், செல்வம் எழுந்தான். அறையின் மூலையில் நின்றிருந்த  இன்னொருவனும் கொஞ்சம் வியப்பும் குழப்பமுமாய் எழுந்தான்.
“சார்... அயன்காரரு மணி பசங்க. இன்னைக்கு உயில் படிக்க கூப்பிட்டு இருந்தீங்களே...” வக்கீலிடம் இருவரையும் அறிமுகப்படுத்தினார் சங்கரன்.
“வாங்க... உயில் காப்பியை சங்கரன் தருவார். லீகல் ஃபார்மாலிட்டீஸ் சொல்லுவார். எனக்கு அர்ஜெண்ட் கேஸ் இருக்கு. ஹை கோர்ட்டு போகணும்...’’ என்றபடி வக்கீல் வெளியேறினார்.

‘‘எனக்கும் கொஞ்சம் வெளியே போற வேலை இருக்கு. நாளைக்கு ஆதார் கார்டு, ஓட்டர் ஐடின்னு ஏதாவது கொண்டு வாங்க. உயில் காப்பியும் நகைங்களும் தந்துடறேன்...’’ என்றபடி மேஜை டிராயரில் இருந்து சங்கரன் ஒரு துண்டுச் சீட்டை எடுத்தார்.

“ரங்கராஜபுரம் அஞ்சாவது தெருவுல இருக்கிற அரை கிரவுண்டு வீடு, ரெண்டு லட்சம் கேஷ், மூத்த மகன் செல்வத்துக்கு! ரங்கராஜபுரம் முதல் தெருவுல இருக்கிற அரை கிரவுண்டு வீடு, ரெண்டு லட்சம் கேஷ், சின்ன மகன் பாண்டியனுக்கு. மூணு பவுனு செயினு, ஒரு பவுனு மோதிரம் மூத்த மருமகளுக்கு. நாலு பவுனு வளையல் சின்ன மருமகளுக்கு...” என்றார் சங்கரன்.   

‘‘இன்னா சொல்றீங்க? இந்த மாதிரி உயிலு, நகைங்க, வூட்டு பத்திரங்க, பேங்கு டெபாசிட்டு எல்லாம் வக்கீலாண்ட குடுத்து வெச்சிருக்கேன்னு சொல்லி
யிருந்தாரு. ஆனா...’’ பயத்துடனும் குழப்பத்துடனும் சொன்னான் பாண்டியன். ‘‘நல்லா இருக்குங்க நியாயம். பாதி சொத்துதிடீருன்னு புள்ளைனு வந்தவனுக்கா..?’’ “சொந்த சம்பாத்தியத்தில் சேர்த்த சொத்து.

யாருக்கு என்ன தரணும்கிறது அவரோட விருப்பம். ஒரு வேளை செல்வத்துக்கு வேணாம்ன்னு சொன்னா, அந்த பங்கு எல்லாம் ஸ்ரீநகர் காலனி புள்ளையார் கோயிலுக்கு போய்ச் சேரணும்ன்னு தெளிவா எழுதி ரிஜிஸ்டர் செஞ்சிருக்கார்!”‘‘நா ஒத்துக்க மாட்டேன்.... கேஸ் போடுவேன்...’’ ‘‘பாண்டி... திரும்ப சொல்றேன். இது அவரோட சொந்த சம்பாத்தியம். எந்த வக்கீலும் ஒன் கேசை எடுக்க மாட்டார். நம்ம ஐயா பத்தி தெரியுமில்ல. வீட்டை  காலி செஞ்சி தரலைன்னா, போலீஸ் கேஸ் ஆயிடும்... அவரு விருப்பம் போல செய்யுங்க. எப்ப வீட்டை காலி செஞ்சி தருவே?’’ சங்கரன் கேட்டார்.

“இவுரு இப்படி செய்வாருன்னு நெனக்கவே இல்ல. நாலு நாளுக்கு முன்னால அந்த வீட்டை காலி செய்து, மொத தெரு வூட்டுக்கு குடித்தனம் வந்துட்டோம்.  அங்க கொடக்கூலிக்கு இருந்தவங்களை காலி பண்ண சொல்லி, அந்த இடத்த விக்கலாம்னு சொல்லி வெச்சிருக்கேன்...” பரிதாபமாய் பார்த்தான் பாண்டி.‘‘ரொம்ப நல்லதா போச்சு. உன் வீட்டுக்கு நீ போயாச்சு.

காலி வீடு. சாவி தந்தா செல்வத்திடம் ஹேண்ட் ஓவர் செஞ்சிடலாம்... கொஞ்சம் லீகல் பார்மாலிட்டீஸ் இருக்கு. அப்புறம்தான் காசு உங்க அக்கவுண்டுக்கு வரும். சொத்து மதிப்பு பார்த்தா, பாண்டி, ஒன் வீட்டு மதிப்புல, செல்வத்துக்கு பாதிதான் வரும். பிரச்னை செய்யாம  ஒதுங்கிக்கோ...’’ என்றார் சங்கரன்.

சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு பின்பக்கம், நகர் காலனி. அதைக் கடந்து ரங்கராஜபுரம் ஏரியாவில் இரண்டு, மூன்று தெருக்களைக் கடந்து போகப் போக குறுகி வந்த ஐந்தாவது தெருவில் குடிசைகளும், பழைய வீடுகளும் இருந்தன. தெருவைத்தாண்டி கீழே இறங்கிய பாதை, அப்படியே அடையாறு ஆற்றில் போய்ச் சேர்ந்தது. சாக்கடைகளும் பன்றிகளுமாய் கொஞ்சம் வாடையும் அடித்தது.

பூட்டை திறந்து உள்ளே நுழையும்பொழுது, “இன்னா தனம்... இந்த எடம் கொஞ்சம் சுமாராத்தான் இருக்கு இல்லே?’’ கேட்டான் செல்வம்
“இல்லீங்க, நம்ம ரோடு நல்லாத்தான் இருக்கு. வூடும் பெருசா இருக்கு. வாடகைக்கு வுடன்னு தனியா ரெண்டு போர்ஷன். மாசமானா கொடக்கூலி வந்துடும். லாட்ரி சீட்டு அட்ச்சா மாதிரி இல்லே இருக்கு...’’ என்றாள்.

“துட்டு கைக்கு வந்ததும் நகை எதுனாச்சும் வாங்கிக்க தனம்...’’தனலட்சுமியின் முகம் பூவாய் மலர்ந்தது.“அதுதான் செயினு, மோதிரம்னு நாளைக்கு வரப் போவுதே? எத்தினி நாளு சைக்கிள மெதிச்சிக்கினு இருப்பே. புதுசா பைக்கு வாங்கிக்க. வூட்டுக்கு தேவையான பொருளுங்க வாங்குவோம்...’’
வீடு குப்பையும் கூளமுமாய்க் கிடந்தது. செல்வமும் தனமும் வீட்டுக்கு புது பெயிண்டு, கொஞ்சம் மராமத்து வேலைகளுக்கு ஆகும் செலவைப் பற்றி  பேசிக்கொண்டே சுத்தப்படுத்த ஆரம்பித்தனர்.

காவ்யா பசிக்குது என்றதும், சூர்யாவுடன் ஆட்டோவில் கிளம்பினான் செல்வம்.காம்பவுண்டு சுவரை ஒட்டி வரிசையாக இரண்டு போர்ஷன்கள். அதற்கு என தனியாய் பாத்ரூம் கக்கூஸ்கள். ‘மாடி வேற இருக்கு. அங்கயும் ரெண்டு ரூமு போட்டு வாடகைக்கு விடலாம்...’ என்று கணக்குப் போட்ட தனலட்சுமி, பின்பக்கம் மாடிக்கு போக படியிருப்பதைப் பார்த்து காவ்யாவுடன் மேலே ஏறினாள்.படி முழுக்க வேண்டாத பொருள்கள் குப்பையும் கூளமுமாகக் கிடந்தன.

முன்னால் ஓடிய காவ்யா, “அம்மா அங்க மேல ஒரு ரூமு இருக்கு. அங்க என்னமோ சத்தம் வருது...” என்றாள் .மூலையில் ஐந்தடிக்கு ஐந்தடியாய் நாலுபக்கமும் ஷீட்டு போட்ட அறை. ஜன்னல் எதுவும் இல்லை. தாழ்ப்பாளைத் திறக்க முற்படும்போது அறைக்குள்
உறுமல் சத்தம். பயந்துபோய் மகளை இழுத்துக்கொண்டு கீழே ஓடினாள்.

செல்வம் வந்ததும் விஷயத்தைச் சொன்னாள். புதியதாய் வாங்கிய ஒட்டடைக் கொம்பு, துடைப்பத்தை ஆளுக்கு ஒன்று எடுத்துக்கொண்டு மேலே ஓடினார்கள்.பிள்ளைகளைப் பிடித்துக் கொண்டு தனம் ஒதுங்கி நிற்க ஜாக்கிரதையாய் கதவைத் திறந்தான் செல்வம்.துர்நாற்றம் வீசியடித்தது. இப்பொழுது விசித்திரமாய் ஒரு சத்தம் நன்கு கேட்டது.

இருண்ட அறை. வெளிச்சம், காற்று உள் வராமலும் சத்தம் வெளியே போகாமலும் நாலு பக்கமும் நன்கு அடைத்து இருந்தது. அதற்குள் மாடிப் படியருகில் வரிசையாய் இருந்த சுவிட்சுகளை தனம் வரிசையாய் தட்டியதும் மங்கலாய் ஒரு குண்டு பல்பு எரிந்தது.அறை மூலையில் சாக்குத் துணிகள். அவற்றின் மீது கழிவுகள். சிறுநீர் வழிந்து ஓடிய தடங்கள். தட்டில் பிய்த்துப் போட்ட ரொட்டித் துண்டுகள்.

அருகில் தண்ணீர்ப் பானை.  மூலையில் எலும்பும் தோலுமாய் திரி திரியாய் சடை முடியுடன் ஒரு உருவம். காலிலும் கையிலும் வளைந்த நீள நகங்கள்.  
அப்படியே வேகமாய் பின்பக்கம் நகர்ந்த செல்வம், ஷீட் அடித்த கதவில் டமால் என்று இடித்துக்கொண்டு, “எங்க ஆயா...” என்றான்.               

விஜய் 1

ஷூட்டிங் ஸ்பாட்டில் கேலி, கிண்டல், அரட்டை எதுவும் கிடையாது. ஆனால், எல்லோரையும் கவனித்துக்கொண்டே இருப்பார். தனக்கு கிடைக்கிற சவுகரியங்கள் சக நடிகர்களுக்கும் வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பார்.

விஜய் 2

விருதுகளில் கவனம் செலுத்த மாட்டார். ஆனால், ‘மாஸ் ஹீரோ’ என்பதற்கு எந்தபங்கமும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் அனுதினமும் கவனமாக இருப்பார்.

விஜய் 3
படங்களில் அவரின் குழந்தைகள் அவ்வப்போது தலைகாட்டினாலும், சினிமாவின் சாயல் இல்லாமல்தான் வளர்க்கிறார். படிப்பு தவிர்த்த பிற ஆர்வங்களில் குழந்தைகள் பிரியம் காட்டினால் அப்பாவாக ரொம்ப சந்தோஷப்படுகிறார்.

விஜய் 4
மாலை ஏழு மணிக்கெல்லாம் இரவு உணவை முடித்துக்கொண்டு விடுவார். 10 மணிக்கெல்லாம் படுக்கையிலிருப்பார். இன்னும் உடம்பு கட்டுவிடாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

விஜய் 5
வீட்டிலிருந்தால் பாடிக்கொண்டேதான் உலாவுவார். எல்லா ஹீரோக்களின் பாடல்களும் அதிலிருக்கும்.

விஜய் 6
முன்பு தன் படங்களில் நடிக்க வைத்து ஒரு ஆரம்பம் கொடுத்தவர் என்ற வகையில் விஜயகாந்தின் மீது மரியாதை உண்டு. கேப்டனின் கல்லூரி விழா முதற்கொண்டு எந்த அழைப்பு என்றாலும் உடனே ஆஜர் ஆவார்

விஜய் 7
நகைகளின் மீது ஈர்ப்பே கிடையாது. முன்பு ஒரு நெளி மோதிரம் விரலில் மிளிரும். இப்போது அதுகூட இல்லை. கையில் மட்டும் இயேசு
வின் புகழ்பாடும் சிலுவை கொண்ட ப்ரேஸ்லெட் அணிந்திருக்கிறார்.

ராமச்சந்திரன் உஷா