8 வயதில் காலை இழந்தேன்...இன்று ஒலிம்பிக்கில் விளையாடப் போகிறேன்!



நம்மால் முடியும்

‘‘சின்ன வயதில் எனக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்தது. ஆனால், ஒரு காலால் விளையாட முடியுமா என்ற தயக்கத்தில் இருப்பேன்...’’ எனப் பேசத் தொடங்கிய ரமேஷ், 8 வயதில் நடந்த சாலை விபத்தில் இடது காலை இழந்தவர்.

ஆனால் இன்று, தமிழ்நாட்டின் நம்பர் 1 பெஸ்ட் பிளேயர்! கூடவே தமிழ்நாடு வீல்சேர் பேஸ்கட்பால் டீமின் கேப்டன். இதுவரை 6 நேஷனல் மற்றும் 3 இன்டர்நேஷனல் போட்டிகளில் பங்கேற்று வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை குவித்திருக்கிறார். 2020ல் டோக்கியோவில் நடைபெறவுள்ள பாராஒலிம்பிக்ஸ் போட்டியில் நுழைவதற்கான தகுதிச்சுற்றிலும் இருக்கிறார்.

‘‘இது நடந்தது 2002ல். திருச்சி நாமக்கல் ரோட்டில் இருக்கும் மின்னத்தம்பட்டி என்கிற குக்கிராமம் எனது ஊர். அப்பா அம்மா இருவருமே விவசாயக் கூலிகள். நான் வீட்டில் மூன்றாவது பிள்ளை. எனக்கு நேர் இரண்டு அண்ணன்கள். எனக்கு அப்போது 8 வயது. 3வது படிக்கிறேன். நானும் என் மாமாவும் சைக்கிளில் செல்லும்போது, முன்னால் நான் உட்கார, மாமா சைக்கிளை ஓட்டிக்கொண்டு வர, சாலையின் எதிரில் வந்த மணல் லாரி எங்கள் மேல் ஏறியது.

அதில் நான் டயரில் சிக்கியதில், எனது இடது காலை லாரி தரதரவென இழுத்துச் செல்ல, மேலிருக்கும் சதைகள் அப்படியே வந்துவிட்டது. தோட்ட வேலையில் இருந்த என் பெற்றோருக்கு செய்தி கிடைத்து வர நேரமும் கடந்திருந்தது. மாலை 5 மணிக்கு விபத்து நடக்க, ஆம்புலன்ஸ்
கிடைக்காமல் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது மணி இரவு 8.

இடுப்புக்குக் கீழே ஒரு ஜாண் மட்டுமே இருக்க இடது கால் முழுமையாக நீக்கப்பட்டது...’’ எனத் தனது குழந்தைப் பருவ நிகழ்வை நினைத்து ஒரு நிமிடம் மவுனித்தவர், பெருமூச்சை விடுத்து மேலே தொடர்ந்தார்:‘‘ஒரு மாதம் மருத்துவமனையில் இருந்தேன்.

மருத்துவர்கள் இரண்டு பக்க சப்போர்ட்டுக்கு இரண்டு ஸ்டிக் கொடுத்தார்கள். என் வீட்டில் இருந்து நான் படித்த பள்ளி 200 மீட்டர் தொலைவு. 5ம் வகுப்பு வரை அம்மாவும் அப்பாவும் தூக்கிக் கொண்டு வந்து பள்ளியில் விடுவார்கள்.

சின்ன வயது என்பதால் நண்பர்களோடு இணைந்து ஸ்டிக்கோடு நடக்கவும் ஓடவும் விளையாடவும் தொடங்கினேன். நடக்க பழகிய பிறகு இடது பக்க ஸ்டிக்கை மட்டும் பயன்படுத்தினேன். ஸ்டிக்கோடு நண்பர்களுடன்  இணைந்து கிரிக்கெட் விளையாடுவேன்.6ம் வகுப்பு படிக்க பக்கத்து ஊருக்குச் செல்ல வேண்டிய சூழலில், பஸ் வசதியின்றி அண்ணனோடு சைக்கிளில் பயணித்து +2 முடித்தேன். நான் நடக்கத் தொடங்கியதும் எனது பெற்றோர் கால் இல்லை என என்னை ஒதுக்காமல், அண்ணன்களை வேலை வாங்குவது போல் என்னையும் வேலை வாங்கினர். அதில் நானே என் வேலைகளைச் செய்யப் பழகிக்கொண்டேன்.

பத்தாம் வகுப்பு வரை கிராமத்தைத் தாண்டாதவன்.+2வுக்குப் பிறகு நாமக்கல்லில் விடுதியில் தங்கி 2 வருடம் டிப்ளமோ இன் டீச்சர் டிரெயினிங் (DIET) முடித்தேன். தொடர்ந்து 2014ல் திருச்சி எம்.ஐ.டி.யில் பி.எஸ்ஸி. பயோகெமிஸ்ட்ரி எடுத்துப் படித்தேன்.

தொடர்ந்து விளையாட்டில் ஆர்வம் மேலிட, யாரை, எங்கே, எப்படி அணுகுவது என்று தெரியவில்லை. அப்போது திருச்சியில் உடல் ஊனமுற்றோர் சங்கம் ஒன்று இருக்க, அதில் ஸ்டிக் வாக் விளையாட்டுப் போட்டி சென்னையில் நடக்க இருப்பதாகச் சொன்னார்கள். அதில் கலந்து கொண்டு
சில்வர் மெடல் வாங்கினேன்.  

அந்த விளையாட்டிற்காக சென்னை சென்றபோது, அருகே பேஸ் கட்பால் கோர்ட்டில் சிலர் பயிற்சி எடுப்பதைக் கவனிக்க நேர்ந்து. ஆர்வம் மேலிட, பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த வீல்சேர் விளையாட்டு வீரர்களிடமும் பேசினேன். பயிற்சியாளர் சாய் என்பவரையும் அணுகியபோது. ‘வார இறுதி நாட்களில் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் வந்து பயிற்சி எடுக்க வேண்டும். தொடர்ந்து வர முடியுமா’ எனக் கேட்டார். ‘கண்டிப்பாக வருகிறேன்’ எனச் சொல்லிவிட்டு வந்தேன்.

கல்லூரி முடிந்து வெள்ளி இரவு கிளம்பி சனி, ஞாயிறு சென்னையில் பயிற்சி எடுத்துவிட்டு திரும்பவும் திங்கள் காலை கல்லூரிக்கு வருவேன். ஒரு ஸ்டிக்கோடு நம்பிக்கையுடன் ரயில், பஸ் என மாறி மாறி ஏறி இறங்கினேன். ஒரு வருடம் இப்படியே கடந்தது.

2014 இறுதியில், நேரு உள் விளையாட்டு அரங்கில் முதல் நேஷனல் வீல்சேர் டோர்னமென்ட் நடந்தது. ஒவ்வோர் ஆண்டும் மாநில அளவில் விளையாடி, தேர்வானவர்களை நேஷனலில் விளையாட அழைத்துச் செல்வார்கள். அதில் எனக்கும் வாய்ப்பு கிடைக்க, எங்களுக்கு வெண்கலம் கிடைத்தது.

அந்த மெடலை திருச்சி கலெக்டரிடம் காண்பித்து திருச்சியிலே பயிற்சி எடுக்க எனக்கு வீல்சேர் வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தேன். அந்தச் செய்தி அப்போதைய நாளிதழ் ஒன்றில் வெளியாக, அதைப் பார்த்த தனியார் கல்லூரியின் உரிமையாளர் ஒருவர் மோட்டிவேஷனல் வீல்சேர் வாங்க எனக்கு உதவி செய்தார். அதன்பிறகு திருச்சியிலே பயிற்சி எடுக்கத் தொடங்கினேன்.

2015ல் தில்லியில் நிகழ்ந்த நேஷனல் விளையாட்டிலும் பங்கேற்றேன். அதில் அதிகம் இடம்பெற்றவர்கள் ஆர்மி இன்ஜூரியர்ஸ். அவர்கள் குழுவாக ஒரே இடத்தில் பயிற்சி எடுப்பவர்கள். அவர்களுடன் மோதியதில் மீண்டும் வெண்கலம் கிடைத்தது. தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்ற நிலையில், 3வது தேசியபோட்டியிலும் எங்களுக்கு வெண்கலமே கிடைத்தது.

2017ல் ஹைதராபாத்தில் நடந்த 4 வது நேஷனல் டோர்னமென்ட்டில் என் தனிப்பட்ட திறமையைப் பார்த்த தமிழ்நாடு வீல்சேர் பேஸ்
கட்பால் அசோசியேஷன் கேப்டன்ஷிப் பதவியை எனக்கு வழங்கினார்கள்.  என் தலைமையில் நடந்த நேஷனல் போட்டியில் தமிழ்நாடு டீம் முதல் முறையாக வெள்ளி வென்றது...’’ என வெற்றிப் புன்னகையை உதட்டில் காட்டி சிரிக்கிறார் ரமேஷ்.

‘‘அடுத்து 5வது நேஷனல் போட்டி ஈரோட்டில் நடந்தது. அந்தப் போட்டியிலும் என் தலைமையில் சில்வர் மெடலை வென்றோம். 2017ல் இந்தோனேஷியா பாலித் தீவில் நிகழ்ந்த இன்டர்நேஷனல் போட்டியில், தமிழ்நாட்டில் இருந்து 4 பேருக்கு மட்டும் விளையாட வாய்ப்பு கிடைக்க, அதில் நானும் ஒருவனாக இடம் பெற்றேன்.

இந்தோனேஷியா, ஆப்கானிஸ்தான், பிரான்ஸ், இந்தியா, தாய்லாந்து என 5 நாடுகள் இடம்பெற, எங்கள் டீமுக்கு  வெண்கலம் கிடைத்தது. வீல்சேர் பாரா ஸ்போர்ட்ஸில் ‘இன்டர்நேஷனல் அளவில்’ இந்தியாவிற்கு கிடைத்த முதல் மெடல் இதுவே...’’ என மீண்டும் விரல் உயர்த்தினார்.

‘‘2018ல் ஆசிய அளவிலான போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைபெற்றது. முதல் 4 இடம் வருபவர்கள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும் என்ற நிலையில், அதற்கான தகுதிச் சுற்று தாய்லாந்தில் நடைபெற்றது. 8 நாடுகள் பங்கேற்ற அந்தப் போட்டியில் நான் 5வது இடத்தில் தேர்வாகி நூலிைழயில்
வாய்ப்பினைத் தவறவிட்டேன்.

ஐசிஆர்சி லெபனானில் நடத்திய டோர்னமென்ட்டில் 5 நாடுகளை ஒருங்கிணைத்தார்கள். அதில் ஆப்கானிஸ்தான், லெபனான், சிரியா, இந்தியா பங்கேற்க, மூன்றாவது இன்டர்நேஷனலில் பங்கேற்ற இருவர் அதில்இடம் பெற்றோம். அந்த இருவரில் நானும் ஒருவன். அதிலும் எங்களுக்கு வெண்கலமே கிடைத்தது...’’ புன்னகைக்கும் ரமேஷ், இந்தியாவுக்கும் வெண்கலத்துக்கும் தொடர்புகள் அதிகம் என பலமாகச் சிரிக்கிறார்.

‘‘2019ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் மொகாலியில் 6வது தேசிய போட்டி நடைபெற்றது. அதிலும் என் தலைமையில் பஞ்சாப் அணி
யுடன் மோதியதில் வெண்கலம் கிடைத்தது. 4 மற்றும் 5வது நேஷனல் தவிர அனைத்திலும் வெண்கலமே எங்களுக்கு தொடர்ந்து கிடைக்கிறது.
காரணம், ஒவ்வொரு விளையாட்டு வீரரும் ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கிறோம்.

எங்களால் டீமாக இணைந்து பயிற்சி எடுக்க முடியவில்லை. போட்டி நடைபெறும் இறுதி நேரத்தில் மட்டுமே டீமாக பயிற்சி எடுக்க முடிகிறது...’’ என்று சொல்லும் ரமேஷ், அனைத்து மாவட்டம் மற்றும் மாநிலங்களில் தங்கும் விடுதியோடு கூடிய பயிற்சி மைதானங்களை ஏற்படுத்தித் தந்தால் இன்னும் சிறப்பாக பயிற்சி எடுத்து விளையாட முடியும் என்கிறார்.

‘‘பயிற்சிக்கென இன்டோர் ஸ்டேடியங்களும் எங்களுக்கு கிடைப்பதில்லை. பெரும்பாலும் நாங்கள் பயிற்சி எடுப்பது மோட்டிவேஷனல் வீல்சேர்
களில். வெளிநாட்டு வீரர்களிடம் இருப்பதுபோன்ற கஸ்டமைஸ்ட் வீல்சேர்களில் பயிற்சி எடுத்தால் இன்னும் சிறப்பாக விளையாடி முதலிடத்தைப் பெற முடியும்.

நவம்பர் 7 முதல் டிசம்பர் 8 வரை டோக்கியோவில் நடக்க உள்ள 2020 பாரா ஒலிம்பிக்கில் நுழைவதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் ஆசிய அளவிலான அனைத்து டீம்களும் பங்கேற்பார்கள். எந்த டீம் முதல் மூன்று இடம் பிடிக்கிறதோ அந்த டீம் ஒலிம்பிக்கில் இடம்பெறலாம்.  

தகுதிச் சுற்றில் பங்கேற்று பயிற்சி எடுக்க பஞ்சாப் செல்கிறேன். தமிழகத்தில் இருந்து நான் உட்பட இன்னும் இருவர் தேர்வாகி உள்ளோம்.
மீண்டும் நவம்பரிலும் பயிற்சி உள்ளது. அதற்காக தாய்லாந்து செல்கிறோம். இதில் தேர்வானால் டோக்கியோ ஒலிம்பிக்கில் நானும் இருப்பேன்!’’ என்று சொல்லும் ரமேஷின் காலர் டியூன் அஜித்தின் வாய்ஸ்தான்.

அது, ‘இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட தோத்துட்டனு உன் முன்னாடி நின்னு அலறினாலும், நீயா ஒத்துக்கற வரைக்கும் எவனாலும் எங்கயும் எப்பவும் உன்னை வெல்ல முடியாது... நெவர்... எவர்... கிவ் அப்!’என்பதே.

“ஊனம் என்பது ஃபிஸிக்கலா இருக்கலாம். அதை மனதில் ஏற்றவே கூடாது. மனத் தடைகளில் இருந்து மென்டலா வெளியில் வாங்க...” அழுத்தம்திருத்தமாகச் சொல்லும் ரமேஷ், மாற்றுத்திறனாளிகள் விளையாட்டில் ஈடுபட்டால் உடலால் ஸ்ட்ராங்கா இருக்கலாம் என்கிறார்.      
       
மகேஸ்வரி