கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்-33



பக்தனுக்காக தன்னையே தரும் தயாபரன்

திருச்சேறை சார நாதன் கோயிலில் கவலையோடு இறைவனை சேவித்துக்கொண்டிருந்தார் அமைச்சர் நரச பூபதி. அவரது கவலைக்கெல்லாம் காரணம் அந்த அழகிய மணவாள மன்னர்தான்.
நிச்சயம் திருப்பணி கண்டாக வேண்டிய நிலையில் உள்ள சாரநாதனை விட்டுவிட்டு எங்கோ இருக்கும் ராஜகோபாலனுக்கு மன்னர் கோயில் கட்டுவது என்று தீர்மானித்ததுடன் அந்தத் திருப்பணியை, தானே செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டது நரசபூபதியை கவலைப்பட வைத்தது.

துக்கம் தொண்டையை அடைக்க கண்களில் பொங்கிய கண்ணீரோடு சாரநாதனை பார்த்துக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் அவரால் சோகத்தை அடக்க முடியாமல் போகவே தன்னையும் அறியாமல் புலம்ப ஆரம்பித்தார்.

‘‘அப்பனே சாரநாதா! தேவி, பூதேவி, நீலாதேவி, மஹாலட்சுமி, சாரநாயகி என்ற பஞ்சலட்சுமிகள் இருந்துமா உனக்கு இந்த நிலை! உனது கோயிலின் இன்றைய நிலையைக் காணும்போது பழுக்கக் காய்ச்சிய ஈட்டி மார்பில் பாய்ந்தது போன்ற வேதனையை உணர்கிறேன்.பிரபோ! தேவ தேவா! உன் கோயிலைச் செவ்வனே புனரமைக்க பெரும் செல்வந்தனாக பிறக்காத பாபியாகி விட்டேனே...’’நரச பூபதி அழுதார். தொழுதார். விம்மினார்.

அவர் வணங்கும் சாரநாதர் மர்மப் புன்னகை பூத்தபடியே சிலையாக நின்றுகொண்டிருந்தார். இது நரசபூபதியை புண்படுத்தி இருக்க வேண்டும். ‘‘நான் புலம்புவது உன் காதில் விழவில்லையா! நான் எனக்காகவா பொருள் கேட்கிறேன்... உனக்காகத்தானே கேட்கிறேன்! அப்படி இருந்தும் இந்த பாராமுகம் ஏன்?’’அவரது கவலை கோபமாக மாறவே, மாலவனை நோக்கி கொக்கரித்தார்.

அப்போது ஒரு சேவகன் ‘‘அமைச்சர் பெருமானே!’’ என்று குரல் கொடுத்தான். கண்ணில் வழியும் கண்ணீரோடு குரல் வந்த திக்கை நோக்கி திரும்பினார் நரச பூபதி. அவரை அந்நிலையில் இதற்கு முன் கண்டிராத சேவகன் அதிர்ந்தான். அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் ‘‘ராஜகோபாலனுக்கு ஆலயம் எழுப்புவதற்காக உயர்ந்த சாதி கற்கள் மன்னார்குடியை நோக்கிப் பயணப்பட ஆயத்தமாக உள்ளன. தாங்கள் வந்து ஒப்புதல் தெரிவித்தால் போதும். வேலைகளை ஆரம்பித்து விடலாம்....’’ என்று சொல்லிவிட்டு கை கட்டி வாய் பொத்தி பவ்யமாக நின்றான்.

அமைச்சர் பெருமான் அரைமனதாக எழுந்து வண்டியை நோக்கி விரைந்தார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வண்டிகளை யானைகளுடன் பூட்டி அவற்றில் பலவிதமான கருங்கற்களை ஏற்றி இருந்தார்கள். அத்தனையும் புறப்படத் தயராக இருந்தன.

சரிபார்க்க வந்த அமைச்சரது மனதில் திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. வண்டிகளில் உள்ள கற்களை மொத்தமாக எடுத்து சாரநாதனுக்கு கோயில் கட்டினால், தான் மாட்டிக்கொள்வோம். வண்டிக்கு ஒரு கல் வீதம் எல்லா வண்டியில் இருந்தும் எடுத்து, சாரநாதனுக்கு திருப்பணி செய்தால் யாருக்கும் எந்த சந்தேகமும் வராது. மன்னர் கவனத்துக்கும் இது செல்லாது.

இரண்டு கோயில்களின் திருப்பணியையும் செவ்வனே செய்யலாம்...நிம்மதியுடன், ‘சார நாதா! நீ எனக்கு பொருள் தராவிட்டால், நான் திருப்பணி செய்ய மாட்டேன் என்று நினைத்தாயோ! நீயே வியக்கும் அளவுக்கு செய்கிறேன் பார்!’ என்று முணுமுணுத்தார். தன் மனதில் உதித்த யோசனையைச் செயல்படுத்தத் தொடங்கினார்.

எல்லோரையும் அனுப்பிவிட்டு, தான் மட்டுமே கற்களை பரிசோதிப்பது போல் வண்டிக்கு ஒரு கல் வீதம் சார நாதருக்காக எடுத்துக் கொண்டார். ஒருமுறை அல்ல இருமுறை அல்ல... ஒவ்வொரு நாளும் இப்படியே செய்தார்.இதனால் ராஜகோபாலனுக்கும் திருப்பணி நடந்தது; சார நாதருக்கும் நடந்தது. இந்த விஷயம் தன்னைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்று நம்பியிருந்தார் அமைச்சர் நரசபூபதி.

ஒருநாள் வழக்கம்போல் வண்டிக்கு ஒரு கல்லை அவர் எடுத்துக் கொண்டிருந்தபோது -ராஜ முத்திரை மோதிரத்துடன் கூடிய ஒரு கை அவரது கையைப் பற்றியது. திடுக்கிட்ட அமைச்சர், மெல்ல முகத்தைத் திருப்பினார். அவ்வளவுதான், பூமியே பிளந்ததுபோல் உலகமே அவருக்கு சுற்றியது. கை கால்கள் எல்லாம் நடுங்கத் தொடங்கின.

ஆம். அவரைத் தடுத்தது சாட்சாத் நாயக்க மன்னரேதான். ‘‘நீங்கள் ராஜகோபாலனுக்கு திருப்பணி செய்வது வெகு நேர்த்தியாக இருக்கிறது அமைச்சரே!’’ கோபமாகவும் குத்தலாகவும் சொன்னார் மன்னர். என்ன சொல்வதென்று திகைத்த நரச பூபதி, சட்டென சமாளித்தார். ‘‘ஆம்! ராஜகோபாலன் திருப்பணிதான். இங்கிருக்கும் நீங்கள் அங்கிருக்கும் ராஜகோபாலனை தரிசிக்க முடியாது அல்லவா. ஆகவே நீங்கள் நித்தம் அவனை சேவித்து மகிழ இங்கேயே அவனுக்கு ஒரு கோயில் எழுப்புகிறேன்! தக்க சமயத்தில் உங்களிடம் இதை தெரிவிக்கலாம் என்றிருந்தேன். அதற்கு முன் நீங்கள் முந்திக் கொண்டீர்கள்...’’

தைரியமான பொய்தான். காவிரிக்காக சார நாதனும் கண்ணாக மாறியவன்தானே? அதனால் இப்படிச் சொல்வதில் ஒரு குற்றமும் இல்லை என்று நரச பூபதி எண்ணினார் போலும்.ஆனால், அவர் சற்றும் எதிர்பாராத ஒரு பதிலைச் சொன்னார் மன்னர்.‘‘அமைச்சர் பெருமானே! தாங்கள் என் மீது கொண்டுள்ள அன்பு என்னை வியக்க வைக்கிறது. எனக்காக நீங்கள் கட்டும் ராஜகோபாலன் கோயிலை நான் இப்போதே காண வேண்டும்...’’
‘‘ஆஹா... என் பாக்கியம். வாருங்கள் மன்னா...’’ என சட்டென்று சொல்லிவிட்டார் அமைச்சர்.

கோயிலை நோக்கி மன்னருடன் நடக்கும்போதுதான் அமைச்சர் நரச பூபதிக்கு உறைத்தது. ‘இங்கிருக்கும் கோயிலில் இருப்பது ராஜகோபாலன் திரு உருவம் இல்லை... சாரநாதர் திருஉருவம்... என்பது நினைவுக்கு வந்தது. என்ன செய்வதென்று புரியாமல் கைகளைப் பிசைந்து
கொண்டே மன்னரை அழைத்துச்சென்றார். ‘இனி அந்த மாலவனே ஒரே கதி...’ என மனதார சாரநாதரின் பாதங்களில் விழுந்தார்.

‘பெருமானே! அன்று ‘ஆதி மூலமே’ என்று ஒரு யானை கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்தவனே! இன்று இந்தப் பாவி உன்னை ‘சாரநாதா’ என்று அழைக்கிறேன். சற்றே எனக்காக அருள் செய்ய மாட்டாயா?’ இருவரும் கோயிலுக்குள் நுழைந்து சன்னிதானத்தின் முன் வந்து நின்றார்கள்.
அங்கு அவர்கள் கண்ட காட்சி இருவரையும் மலைத்துப் போகச் செய்தது.

இடையிலே சிற்றாடை உடுத்தி, பலவகை முத்து மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட மார்போடு, அடர்ந்து கருத்து வளர்ந்திருந்த குழலை வாரிச் சுருட்டி கொண்டையாகக் கட்டிக்கொண்டு, உடலெங்கும் சந்தனம் மணக்க கடலின் நீல வண்ணத்தோடு பிரகாசித்துக் கொண்டிருந்தார் கருணைக் கடலான சாரநாத பெருமாள்.

ராமாவதாரத்தில் செய்ய முடியாத சேவையை கிருஷ்ணாவதாரத்தில் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்ட பிரம்மனும் ஈசனும் முறையே கோலாகவும் புல்லாங்குழலாகவும் மாறி அவரது கரங்களை அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள்.

அதிகம் வளர்ப்பானேன்... சாரநாத பெருமான் தனது அடியவனைக் காக்க ராஜகோபாலனாக வேஷம் போட்டுக் கொண்டு சேவை சாதித்தார்!
உள்ளம் பூரித்து நின்ற இருவரையும் மேலும் பூரிப்படையச் செய்ய தன் பவள வாயைத் திறந்து பேச ஆரம்பித்தார் மாலவன்.

‘‘மன்னா! பூபதி கோயில் கட்டியது சார நாதனான எனக்கே! அதேபோல் நீ கோயில் கட்டி வழிபட நினைத்ததும் மன்னார்குடியில் ராஜகோபாலனான எனக்கே! எப்படி ஆறு என்றாலும் நதி என்றாலும் அது நீரோட்டத்தையே குறிக்குமோ அப்படி நான் நிற்கும் ஊர் மாறினாலும், என் பேர் மாறினாலும் நான் என்றும் அடியவர்களை நேசிக்கும் மாலவன்தான்!

அடியவர்களான நீங்கள் விரும்பும் உருவத்தையும், பெயரையும் நான் விரும்பி ஏற்கிறேன். ஆகவே, பேதம் பாராட்டுவது முறையாகாது...’’ (தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் - திவ்ய பிரபந்தம்) சொல்லிவிட்டு முல்லைப்பூ பல் வரிசை தெரிய நகைத்தார் மாயவன். அதைக் கண்ட மன்னரும் அமைச்சரும் மெழுகாக உருகினார்கள்.

‘‘புரியுதா கண்ணா... நாம எந்த உருவை, நாமத்தை வழிபடறோமோ அந்த உருவத்தை நமக்கு சுவாமி காட்டுவார்... அப்படித்தான் மன்னன் விரும்பின உருவத்தை அவருக்கும் அமைச்சர் விரும்பிய உருவை அவருக்கும் காண்பித்தார்...’’ நீண்ட கதையைச் சொல்லி முடித்தார் நாகராஜன்.
மெய்மறந்திருந்த கண்ணன் புரிந்ததற்கு அறிகுறியாக தலையசைத்தான்.

‘‘‘என் தலை மேலோரே... பாட்டுக்கு விளக்கம் சொல்லுங்க... குழந்தை அதைத்தானே கேட்டான்..?’’ ஆனந்தவல்லி தன் கணவர் நாகராஜனுக்கு நினைவூட்டினாள்.‘‘ஆமாம் தாத்தா... அதைச் சொல்லுங்க...’’ கண்ணன் துள்ளினான். ‘‘கண்ணா! பிள்ளை மணவாள அரையர்னு ஒரு பெரிய மகான். அவர் ஒரு முறை அவசர வேலையா திருச்சேறை வழியாகப் போனார். பரம வைஷ்ணவரான அவர், சாரநாத பெருமாளை சேவிக்கப் போனதைப் பார்த்து அங்கிருந்த விவசாயி ஆச்சர்யப்பட்டான்.

‘பெரியவரே... பெருமாளை சேவிக்கலையா’னு கேட்டான். அதுக்கு அரையர் இந்த பாசுரத்தை பாடி ‘இதுல திருமங்கை ஆழ்வார் சார நாத பெருமாளை பூஜிப்பவர்கள் எல்லாருடைய பாதமும் என் தலை மேல வைக்கத்தகும்னு சொல்லியிருக்கார். ஒருவேளை நான் பெருமாளை சேவிக்கப் போய் ஆழ்வார் தலை மேல என் கால் வைக்க வேண்டி வந்தா என்ன செய்ய... அதான் கோயில் பக்கமே போகலை’னு சொல்லியிருக்கார்!

பகவான் பாதம் நல்லது மட்டுமில்ல... கெடுதலும் செய்யும். கிருஷ்ணாவதாரத்துல காளிங்கன் மேல பகவான் நடனமாடினாரே... அப்ப அவர் பாதம் அந்த காளிங்கனுக்கு இன்பமா அளிச்சிருக்கும்?! இதுல இருந்து என்ன தெரியுது..? அடியவர்களுக்கு பகவான் ஒருபோதும் கெடுதல் செய்ய மாட்டார். அதே மாதிரி பெருமாள் பாதத்தை விட அடியவர்கள் பாதம் ஒசத்தி! இதுதான் அந்தப் பாட்டுக்கு விளக்கம்’’ குறுநகை பூத்தார் நாகராஜன்.

‘‘பக்தனுக்காக தன்னையே மாத்திகிட்டவர் சாரநாத பெருமாள். அதனால இவர் பக்தர்களின் எல்லா குறையையும் தீர்த்து வைப்பார். பிரம்மாவுக்கு சிருஷ்டில உதவினவர். அதனால கலைல புதுமை படைக்கணும்னு நினைக்கறவங்க இவரை வழிபட்டா பெரும் கலைஞரா வருவாங்க...’’ என்றார் ஆனந்தவல்லி!

(கஷ்டங்கள் தீரும்)

ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்