குமரி to காஷ்மீர் புல்லட் ஓட்டினேன்!



‘‘‘முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்…’ என்கிற வள்ளுவரின் வாக்கு எனக்கு அப்படியே பொருந்தும்...’’ ஆழ்ந்து பேசியபடியே புன்னகைக்கும் லலித் குமார், டிரான்ஸ்வெர்ஸ் மைலிட்டிஸ் (transverse myelitis) என்னும் வைரஸால் பாதிக்கப்பட்டவர். ‘‘போலியோ போல இதுவும் ஒருவித வைரஸ். முதுகுத் தண்டுவடம் எந்த இடத்துல பாதிப்பு அடையுதோ அதுக்குக் கீழ உடல் இயக்கமோ உணர்ச்சிகளோ இருக்காது. எனக்கு மார்புக்குக் கீழ சுத்தமாக இயக்கமில்லை...’’

சாதாரணமாக சொல்லும் லலித் குமார், தன்னைப்போல் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக ‘லவ் அண்ட் அக்சப்டன்ஸ்’ (love and acceptance) என்கிற தன்னார்வ அமைப்பை நடத்தி வருகிறார். அத்துடன் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை சுமார் 5600 கிலோமீட்டர் தூரத்தை தன் ராயல் என்பீல்ட் புல்லட்டில் கடந்து, கடல் மட்டத்தில் இருந்து 18380 அடி உயரத்தில் உள்ள ‘ஒன் ஆஃப் த ஹையஸ்ட் மோட்டரபிள் ரோட்’ எனப்படும் ‘கர்துங்ளா பாஸ் (Khardongla Pass)’ மலைச் சாலையில் ஏறி உலக சாதனை படைத்திருக்கிறார்! முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட யாரும் என் சாதனையை முறியடிக்கவில்லை என தம்ஸ்அப் காட்டும் லலித் குமார் ஒரு வீல்சேர் யூஸர்.

‘‘பிறந்தப்ப நான் நார்மல். 12 வயசுல எனக்கு காய்ச்சல் வந்தது. அரை மணிநேரம்தான்... கால் பெருவிரல்ல இருந்து கொஞ்சம் கொஞ்சமா மேல் நோக்கி உடல் உறுப்புகள் மரத்துக் கொண்டே வர... சென்சேஷன் லாஸ் ஆகிடுச்சு. தொடர்ந்து எனக்கு பிளாடர் அண்ட் பவல் (bladder and bowel) பிரச்னையும் ஏற்பட்டது.

இயற்கை உபாதைகளுக்கான கண்ட்ரோல் சென்ஸ் சுத்தமா இல்லாததால கதீட்டர் (catheter) பயன்படுத்தத் தொடங்கினேன். இதுல இரண்டு நிலை உண்டு. ஒண்ணு, அந்த உணர்வே இல்லாத நிலை. இரண்டாவது, சில நேரங்களில் மட்டும் உணர்வு ஏற்படும் நிலை. அதாவது முழுசா வெளியேறாம பாதி வெளியேறும். எனக்கு இரண்டாவது நிலை. ஆறு மணி நேரத்துக்கு ஒரு கதீட்டர் பயன்படுத்தி பிளாடரை காலியா வைச்சுக்க பழகினேன். இதுவரை இதுக்கு மெடிக்கல் ரெக்கவரி இல்ல. எனக்கு நிகழ்ந்தப்ப சரியான மருத்துவப் புரிதலுமில்ல.

நாங்க சாதாரண குடும்பம். அப்பா பிஎஸ்என்எல் ஊழியர். வீட்ல அதிர்ந்துட்டாங்க. என் பிரச்னையை புரிஞ்சுக்கறதுக்குள்ள காலம் ஓடிடுச்சு. எனக்கு வந்த நோய்க்கு தீர்வில்லைனு புரியறதுக்குள்ள குடும்ப சேமிப்பு கரைஞ்சிருந்தது. என்னை மாதிரி பாதிக்கப்பட்டவங்களோட விபரமும் கிடைக்கலை. என் நோய்க்கான மறுவாழ்வு பயிற்சி மையம் (rehabilitation centre) வேலூர் சிஎம்ஸில இருக்குனு தெரிஞ்சுக்கவே இருபது வருஷங்களானது...’’ என்று சொல்லும் லலித் குமார், வீல் சேரிலேயே இருந்தால் உடலுக்கு இயக்கம் இல்லாமல் போகும் என யோசித்து காலிபர் அணிந்து, வாக்கர் துணையோடு சுவற்றைப் பிடித்து நடக்கத் தொடங்கியிருக்கிறார்.

‘‘ஆறாவது படிக்கிறப்ப என் படிப்பு தடைப்பட்டுச்சு. இ.எஸ்.எல்.சி தேர்வை பிரைவேட்டா எழுதினேன். எனக்குத் தேர்வெழுத ஒதுக்கப்பட்ட இடம் முதல் தளம். ‘முடிஞ்சா ஏறு... இல்லைனா வீட்டுக்குப் போ’னு அங்கிருந்த கண்காணிப்பாளர் சொன்னார். ‘எதுக்கு இவ்வளவு கஷ்டப்படறீங்க... பையனை படிக்க வச்சு என்ன பண்ணப் போறீங்க? பேசாமல் வீட்டுல போடுங்க’னு அப்பா அம்மாகிட்ட சொன்னாங்க.

நான் தைரியமா மாடி ஏறி தேர்வு எழுதினேன். அப்புறம் கரஸ்பாண்டன்ஸ்ல பிபிஏ படிச்சேன். 15 நாட்களுக்கு ஒருமுறை இதுக்கான செமினார் மூன்றாவது தளத்துல நடக்கும்! ‘படிக்கணும்னா ஏறிப் போ... இல்லைன்னா படிப்ப விடு’னு அலட்சியமா சொன்னாங்க. நண்பர்கள் உதவியோடு மேல ஏறி, இறங்கி தேர்வு எழுதினேன்.

யாரையும் குற்றம் சொல்ல விரும்பலை. மாற்றுத் திறனாளிகள் பத்தின பார்வை இப்ப வரை அப்படித்தான் இருக்கு...’’ என்று சொல்லும் லலித் குமார், திருப்பூர் கல்லூரியில் மாலை நேர வகுப்பில் எம்பிஏ முடித்திருக்கிறார். ‘‘முதல் வகுப்பை ஒரு வருஷம் ஊட்டில படிச்சதுனால எனக்கு கம்யூனிகேஷன் ஸ்கில் வந்திருந்தது. 2004ல இந்தியாவுக்கு ஸ்டார், பிபிசி சேனல்கள் வந்தன. என் ஸ்கில் டெவலப்மெண்ட்டுக்கு இது ரொம்ப உதவியா இருந்தது. ஸ்டைலா பேசக் கத்துக்கிட்டேன்.

படிச்சுக்கிட்டே திருப்பூர் பார்க் கல்வி நிறுவனத்துல அடிப்படை ஆங்கிலத்தை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்தேன். இதைப் பார்த்துட்டு நிர்வாகம் என்னை லாங்குவேஜ் கம்யூனிகேஷன் டிரெய்னரா நியமிச்சாங்க. ரெண்டு வருஷங்கள் அந்தப் பணில இருந்தேன்.

எம்பிஏ முடிச்சதும் யு.பி.எஸ்.சி. எழுத முயற்சித்தேன். ஆனா, போன இடத்துல எல்லாம் ‘எழுதி என்ன செய்யப் போற’னு கேட்டாங்க. நேரத்தை வீணாக்காம வேலைக்குப் போக முடிவெடுத்தேன். அங்கிருந்த பிளேஸ்மென்ட் அலுவலர், சென்னைல இருந்த ‘ஏபிஎன் ஆம்ரோ (ABN Amro)’ - இப்ப அது ‘ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்த்’ - வங்கில பணி வாய்ப்பு பெற்றுத் தந்தாரு. சென்னை ரஹேஜா டவர்ல அலுவலகம். ‘இங்க எல்லாம் வேலை பார்த்தா எப்படி இருக்கும்’னு பலமுறை யோசிச்சிருக்கேன். அந்த கனவு நனவாச்சு. ஆனா, இதுக்காக நான் போட்ட எஃபர்ட் ரொம்பவே அதிகம்...’’ பலமாகச் சிரிக்கும் லலித் குமார், வேலைக்காக வீல் சேருக்கு மாறியிருக்கிறார்.

‘‘முக்கியமான மீட்டிங், ஃபாஸ்ட்டா வேலை செய்ய காலிபர் சரிப்படல. அதனால வீல் சேருக்கு மாறினேன். இரண்டு வருஷங்கள் இப்படியே போச்சு. அப்புறம் என் நிறுவனம் போரூருக்கு மாறிச்சு. போக்குவரத்து சிரமமா இருந்ததால வேலையை விட்டுட்டு திருப்பூருக்கே வந்துவிட்டேன்.

அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சப்ப என்னைப்பத்தி யோசிச்சேன். கதீட்டர் கைல இல்லைனா பிளாடர் ஆக்ஸிடெண்ட் ஏற்பட்டு எங்களுக்கு பர்ஸ்ட்அவுட் ஆகும். இந்தப் பிரச்னையை மத்தவங்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது. இதனாலயே அலுவலகத்துல இருந்து பலமுறை கிளம்பியிருக்கேன்.

இதை மனசுல வைச்சு என்னை மாதிரி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியா கதீட்டர் கொடுக்கும் சிறு முயற்சில இறங்கினேன். இதுல ஆரம்பமானதுதான் ‘லவ் அண்ட் அக்சப்டன்ஸ்’ அமைப்பு. முதல்ல 15 பேருக்கு கொடுக்கத் தொடங்கினோம். இப்ப ஆயிரம் பேருக்கு உதவும் நிலைக்கு உயர்ந்திருக்கு. கூடவே யூரினரி பேக், வீல் சேர், கம்ஃபோர்ட் வீல் சேர்களும் வழங்கறோம்...’’ என்ற லலித் குமார், தினமும் ஜிம் செல்பவர்.

‘‘ஃபிட்னஸ்ல எனக்கு எப்பவும் ஆர்வம் உண்டு. மார்புக்கு மேல பலப்படுத்தி, இயங்காத உறுப்புகளையும் உறுதியாக்கினேன். முக்கியமா  மைண்ட் அண்ட் ஹார்ட்! தோள்களையும் கைகளையும் பலமாக்கினதால இயங்காத என் கால்களை இழுத்துக் கொண்டு இயங்கினேன்!வெள்ளை உடைல நேவல் பைலட் ஆகணும்னு சின்ன வயசுல கனவு கண்டிருக்கேன். கூடவே அட்வென்ச்சரும். இதுல புல்லட் பயணம் பெரும் கனவு!
இதை வீட்ல சொன்னப்ப பயந்தாங்க. நண்பர்களும் அச்சப்பட்டாங்க.

ஆனா, என்னால முடியும்னு உறுதியா நம்பினேன். 2015ல அதுக்கான முயற்சில இறங்கினேன். ராயல் என்பீல்ட் நிறுவனத்துக்கு தொடர்ச்சியா மெயில் அனுப்பினேன். அவங்க என்னை கூப்பிட்டுப் பேசினாங்க. என் தேவைகளைச் சொன்னேன். அதை ஏத்துக்கிட்டு புல்லட்டின் சில பாகங்களை எனக்கு தகுந்தா மாதிரி மாத்திக் கொடுத்தாங்க.

கியர் கண்ட்ரோலை கைக்கு மாத்தினேன். ஒரே பிரேக்குல ஃப்ரண்ட் அண்ட் பேக் வீல் நின்றது. மாற்றுத் திறனாளி வாகனத்துக்கான எந்த அடையாளமும் இல்லாம மோட்டிவேஷனல் வெஹிக்கலா மாத்த முடிவு செஞ்சு சப்போர்ட் வீலுக்குபதிலா ‘சைடு கார்’ (side car) இணைக்கச் சொன்னேன்.

எல்லாம் ரெடி. ‘என்ன செய்யப் போறே’னு கேட்டாங்க. ‘கன்னியாகுமரில இருந்து கர்துங்ளா பாஸ் போகப் போகிறேன்’னு சொன்னதும் ‘உனக்கென்ன பைத்தியமா’னு பார்த்தாங்க!’’ வாய்விட்டுச் சிரிக்கிறார் லலித் குமார்.‘‘பயணத்துக்கான பட்ஜெட் மூணு லட்சம். ஸ்பான்சர்களைத்தேடினேன். நண்பர்களும் சில நிறுவனங்களும் உதவினாங்க.

கோவைல அப்ப பணியாற்றின மேஜர் வேணுகோபால் என் ஃபிட்னஸை சரிபார்த்து ஓகே செஞ்சாரு.2017 ஜூன் 15 அன்று என் பயணத்தை கன்னியாகுமரில இருந்து தொடங்கினேன். நண்பர்கள் சிலர் சுமோல பின்தொடர தினமும் காலை 8 மணில இருந்து மாலை 7 வரை பயணம் செஞ்சு ஜூலை 4 அன்று கர்துங்ளா பாஸ் அடைந்தேன்!வழில ஏகே 47னோடு சில ஜவான்கள் என்னைச் சுத்தி வளைச்சாங்க. ஜிப்ஸில இருந்து இறங்கி வந்த கமாண்டோ ஒருத்தர், என் புல்லட்டின் சைட் கார்ல உட்கார்ந்து வர விருப்பம் தெரிவிச்சார். இன்னொரு ஜவான் என் பின்னால் அமர்ந்தார்.

இந்தி பாட்டை ஹம் செஞ்சபடி ‘ஷோலே’ பட கார் பைக்கில், தான் வருவதா நண்பர்களிடம் சொல்லி, எங்க ரைடை ஃபேஸ்புக்குல அந்த கமாண்டோ லைவ் செய்தார்...’’ சொல்லும்போதே லலித் குமாரின் முகமெல்லாம் மலர்கிறது.

‘‘அவரவர் வாழ்க்கையை அவரவர்தான் டிசைன் செய்யணும். மன உறுதிதான் என் ப்ளஸ். நினைச்சுப் பார்த்தா பிரமிப்பா இருக்கு. இந்தப் பயணத்தை எனக்காக நான் செய்யலை. ஸ்பைனல் இன்சூரி உலகளாவிய பிரச்னை. என்னைப் பார்த்து பாதிக்கப்பட்டவங்க கொஞ்சமாவது எழுந்து நிற்கணும்! அதுதான் என் விருப்பம்!’’ அழுத்தமாகச் சொல்லும் லலித் குமார், அசாம் மாநில பெண்ணான ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் சியாமோளி போராவை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இந்தியாவின் நான்கு முனைகளையும் இணைக்கும் பயணத்தை அடுத்ததாக லலித் குமார் மேற்கொள்ளப் போகிறார்!

மகேஸ்வரி