பி.டெக் முடித்துவிட்டு சர்பத் கொடுக்கும் இயக்குநர்!



‘‘ஆயிரம் கூல்ட்ரிங்ஸ் வந்தாலும் போனாலும் சர்பத்துக்கு இருக்கற மவுசு தனிதான். கலர்ஃபுல்லா... உதட்டுக்கும் இதயத்துக்கும் இதமா ஜில்லுனு இருக்கற ஒரு சாஃப்ட் டிரிங் அது. பெருசு, சிறுசுனு வித்தியாசம் பார்க்காமல் எல்லாரும் எப்பவும் குடிக்க விரும்புறதும் அதைத்தான்.
நான் கிராமத்துல இருந்து வந்தவன். அதனாலேயே சர்பத்தின் மகிமை எனக்கு நல்லா தெரியும். அந்த லாஜிக்கோடு என் முதல் படத்துக்கு இப்படி ஒரு டைட்டிலை வச்சுட்டேன்...’’ மகிழ்ச்சியில் புன்னகைக்கிறார் பிரபாகரன். ‘பரியேறும் பெருமாள்’ கதிர், சூரி நடிக்கும் ‘சர்பத்’ படத்தின் அறிமுக இயக்குநர் + இயக்குநர் பாலாஜி சக்திவேலின் சீடர்.

‘‘பாலாஜி சக்திவேல் சார் படத்துல இயல்பும், யதார்த்தமும் சமூக அக்கறையும் மின்னும். அதனாலயே அவரது படங்கள் ரொம்ப பிடிச்சு, அவர்கிட்டயே அசிஸ்டென்ட்டா சேர்ந்தேன். மூணு ஸ்கிரிப்ட்ல ஒர்க் பண்ணியிருக்கேன். அப்புறம் படமா, ‘ரா.ரா.ராஜசேகர்’ல ஃபீல்ட் ஒர்க் பண்ணியிருக்கேன்.

ஒர்க் பண்ணினது ஒரே ஒரு படம்னாலும், என்னை நேரடியாகவே அசோசியேட் ஆக்கி அழகு பார்த்தார் என் குருநாதர். சினிமாவை முழுசா கத்துக்கிட்டது அவர்கிட்டதான். ஸ்பாட்டுலயும் அவ்ளோ கத்துக் கொடுப்பார். நான் தனியா படம் பண்ணலாம்னு நினைச்சப்ப, அவரும் ஹேப்பியானார். ‘சூப்பர்ப்பா... சினிமா ரொம்பவே சிம்பிள். நினைக்கறதை எடு. அது போதும்’னு என் எனர்ஜியை டபுள் ஆக்கினவர் அவர்...’’ உற்சாகமாகிறார் பிரபாகரன்.

உங்க குரு எப்பவும் புதுமுகங்களை வச்சே எடுப்பார். நீங்க தெரிஞ்ச முகங்களா போயிருக்கீங்க..?
ஆமா. பாலாஜி சார் புதுமுகங்களைத்தான் ரொம்ப கம்ஃபர்டபிளா ஃபீல் பண்ணுவார். ஆனா, ‘சர்பத்’ ஸ்கிரிப்ட் சூரி அண்ணனுக்கும் கதிருக்கும் பொருத்தமா அமைஞ்சிருந்தது. இது வில்லேஜ் சப்ஜெக்ட். ஆனா, பாரதிராஜா சார் படம் மாதிரி பழைய வில்லேஜ் இல்லை. இப்ப உள்ள கிராமங்கள்ல என்ன சூழல்கள் நிலவுதோ அதை அப்படியே பிரதிபலிச்சிருக்கோம். திண்டுக்கல் பக்கம் சின்னாளப்பட்டில ஷூட் போயிட்டு வந்தோம்.

கிராமத்துல படிச்சு வளர்ந்த கதிர், சென்னைல ஐடி வேலைல இருக்கார். திருவிழாவுக்காக ஊருக்கு வர்றார். அப்ப அவருக்கு ஒரு பிரச்னை. அதுல இருந்து எப்படி அவர் சமாளிச்சு வர்றார் என்பதுதான் படம்.ஃபேமிலி ஆடியன்ஸுக்கு பிடிக்கற மாதிரி கலகலனு செய்திருக்கோம். ஹீரோயினா புதுமுகம் ரகசியா கொரக். அப்புறம் மாரிமுத்து, விவேக் பிரசன்னா, ‘கடைக்குட்டி சிங்கம்’ இந்துமதினு பலரும் நடிச்சிருக்காங்க. ஆர்ட்டிஸ்ட்கள் போலவே தொழில்நுட்பக் கலைஞர்களும் பலமா கிடைச்சது எங்க அதிர்ஷ்டம்.

படத்தின் ஒளிப்பதிவாளர் பெயரும் பிரபாகரன்தான். ‘ரா.ரா.ராஜசேகர்’ படத்துல அவர் கேமரா அசோசியேட். இந்தப் படத்தின் மூலம் அவர் ஒளிப்பதிவாளரா அறிமுகமாகறார். ‘பாம்புசட்டை’ அஜீஸ் இசையமைக்கிறார். வெரைட்டியா அஞ்சு பாடல்கள் கொடுத்திருக்கார். பின்னணி இசையும் பக்காவா வந்திருக்கு. எடிட்டிங்கை ஜி.கே.பிரசன்னாவும், ஆர்ட் டைரக்‌ஷனை ‘தரமணி’ குமாரும் பண்ணியிருக்காங்க.
என்ன சொல்றாங்க புதுமுகம் ரகசியா?

ஹீரோயின் ரகசியா கொரக், ஹைதராபாத் பொண்ணு. தெலுங்கிலும் ஒரு படம் பண்ணியிருக்காங்க. ஹோம்லியா துறுதுறுனு நம்ம ஊர் பொண்ணு சாயல்ல இருந்தாங்க. போதாதா? இங்க கூட்டிட்டு வந்துட்டோம். இதுல கிராமத்து பொண்ணா கலக்கியிருக்காங்க.

இந்தப் படத்துல எனக்கு ரெண்டு அண்ணன்கள் கிடைச்சிருக்காங்க. ஒண்ணு சூரியண்ணன். இன்னொருத்தர் ஆர்ட் டைரக்டர் குமார் அண்ணன். படப்பிடிப்பு தொடங்கின அன்னிக்குத்தான் சூரி ஒரு ஆர்ட்டிஸ்ட்டா தெரிஞ்சார். அப்புறம் எங்களோட அவர் ரொம்பவே பழகிட்டார். அடுத்தடுத்த நாட்கள்ல இன்னும் நெருக்கமாகி நல்ல அண்ணனாகவே ஆகிட்டார்.

படத்துல அவர் ஹீரோ கதிர் கூடவே டிராவல் ஆகி காமெடில கலக்கியிருக்கார். இதுல அவர் கமிட் ஆகும்போது ஸ்கிரிப்ட் பேப்பரை வாங்கிப் படிச்சு பார்த்தார். ஸ்பாட்ல மறுநாளுக்கான சீன் நம்பரைத்தான் சொல்லுவோம்.

அதுல காமெடி கோட்டிங் கலந்து மறுநாள் கலக்கிடுவார்.
ஹீரோ கதிர் பக்கத்து வீட்டு பையனாட்டம் இருக்கார். அதனாலயே கதைக்குள்ள அவரை பிடிச்சுப் போட்டோம். அவர் டைரக்டர்ஸ் ஃப்ரெண்ட்லி. யூனிட்ல உள்ள அத்தனை பேர்கிட்டயும் நல்லா பழகுவார். துளியும் ஈகோ இல்லாதவர்.  

உங்க இன்ட்ரோ..?
சொந்த ஊர் திண்டுக்கல். பி.டெக். படிச்சிட்டு ஐடில ஒர்க் பண்ணினேன். உள்ளுக்குள்ள சினிமா கனவு. வேலையை விட்டுட்டு சென்னை வந்து நிறைய ஷார்ட் ஃபிலிம்ஸ்ல டெக்னிக்கலா ஒர்க் பண்ணினேன். இந்த அனுபவத்தோடு பாலாஜி சக்திவேல் சார்கிட்ட சேர்ந்தேன்.

‘சர்பத்’ கதை ரெடியானதும் என் நண்பரும் இந்தப் படத்தின் கிரியேட்டிவ் புரொட்யூசருமான அருண்கிட்ட சொன்னேன். அவரால தயாரிப்பாளர் லலித்குமார் சார் கிடைச்சார். பரபரனு ஷூட் கிளம்பி, இதோ.. இப்ப ரிலீஸ் வரை வந்துட்டோம்!

மை.பாரதிராஜா