சீஸன் சாரல்



நாரத கான சபையின் ஆதரவில் அருணா சாய்ராம் கச்சேரி. ராஜீவ் வயலின். ஜே.வைத்தியநாதன் மிருதங்கம். எஸ்.வி.ரமணி கடம். அருணா கச்சேரிக்குச் செல்வதென்றால் ரசிகர்களுக்கு அவ்வளவு பிரியம். வார்த்தைகளுக்கு பிரதானம் கொடுத்து தெள்ளத் தெளிவாக வழங்குவதில் அருணா வல்லமை பெற்றவர். சுப்பராய சாஸ்திரி இளம் வயதிலேயே இயற்றிய ஒரு அபூர்வ தோடி ராக வர்ணத்துடன் கச்சேரி ஆரம்பம்.

மார்கழி ஐந்தாம் நாளான அன்று, ஆண்டாள் இயற்றிய ‘மாயனை மன்னு’ திருப்பாவையை அருணா பாடியது அருமை. இந்தப் பாசுரம், பாவங்கள் அனைத்தையும் ஒழிக்கும் வழியைக் கூறுகிறது. உள்ளும் புறமும் தூய்மையோடு இருந்து, நறுமணம் கமழும் மலர்களும் துளசியும் கொண்டு அர்ச்சித்து, கண்ணன் திருநாமங்களை ‘வாயினால் பாடி’, ‘மனதினால் தியானித்து’, அவன் திருவடிகளை சரணடைந்தால் நாம் முந்தி செய்ததும், இப்போது செய்து கொண்டிருப்பதும், பின்பு செய்யக் கூடியதுமான பாவங்கள் அனைத்தும் தீயிற்பட்ட பஞ்சு போல் கருகும். நம் நோன்பும் இடையூறின்றி பூர்த்தியைப் பெறும்.

அருணாவின் மோஹன ராகம், ‘கோபிகா மனோஹரம்’ கீர்த்தனை எல்லாம் அருமை. ராஜீவ் கை, வயலினில் தேனாக இனித்தது. அன்று வைகுண்ட ஏகாதசி வேறு. அருணாவின் ‘ரங்கபுர விஹாரா’ கீர்த்தனை, ரசிகர்களுக்கு ரங்கநாதனையே தரிசித்தது போன்ற பாக்கியத்தை அளித்தது. வைத்தியநாதன் மிருதங்க நாதம், எஸ்.வி.ரமணியின் கடம் சேர்ந்து சொக்கியது. ‘டக்கா’ ராக கீர்த்தனையான ‘ராகா சசிவதனா’ கீர்த்தனைக்குப் பிறகு, பைரவி ராகம் அருமையோ அருமை. ‘உபசாரமு’ கீர்த்தனைக்கு தனி பிரமாதம்.

மியூசிக் அகாடமியில் அபிஷேக் ரகுராம் கச்சேரி. சொக்க வைக்கும் சங்கீதம். அலாதி கற்பனை, அனாயாசமாக மூர்ச்சனைகள். நினைத்துப் பார்க்க முடியாத சங்கதிகள். மனோதர்மமான கச்சேரி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். மைசூர் நாகராஜ் வயலின் சுநாதம். பத்ரி சதீஷ்குமார் மிருதங்கம், சுரேஷ் கடம் எல்லாம் சேர்ந்து கச்சேரியை எங்கோ கொண்டு சென்றது. ‘கானடா’ ராக அடதாள வர்ணத்துடன் கச்சேரி ஆரம்பம்.

‘களல நேர்சின’ தீபகம் ராக கீர்த்தனையைக் கேட்டவுடன் ஜி.என்.பி ஞாபகம்தான் வந்தது. தேவமனோஹரி ராக ஆலாபனை, ‘எவரிகை’ கீர்த்தனையில் எல்லாம் அபிஷேக்கின் கற்பனை எல்லையைத் தொட்டது. கல்யாணி ராகத்தின் ஸ்வரூபம் எல்லாவற்றையும் பிருகாக்கள், ஜாருக்கள் என்று பாடிய அபிஷேக்கைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. ‘நீது சரண’ கீர்த்தனை எல்லாம் கேட்க இனித்தது. பல இடங்களில் கே.வி.என். ஞாபகம் வந்தது.

அடா அடா! அடாணா ராகத்தில் என்ன ஒரு ஆர்.டி.பி! ‘ரா ரா ராஜிவ லோசனா அதி வேகமே’ என்ற திச்ர நடை பல்லவி அதி வேலைப்பாடு. ராக
மாலிகை ஸ்வரங்கள், அடாணா, பூர்விகல்யாணி, கந்நட, மாண்டு ராகத்தில் அபிஷேக்கும், நாகராஜும் மாறி மாறிப் பாடவும் வாசிக்கவும் செய்ய... பொறி பறந்தது அங்கு. இது அல்லவா கச்சேரி?

மியூசிக் அகாடமியில் ஸாகேதராமன் கச்சேரி. வயலின் நாகை முரளிதரன், மிருதங்கம் உமையாள்புரம் சிவராமன், சுந்தர்குமார் கஞ்சிரா. தோடி வர்ணம்,
பராகேலரா கீர்த்தனைகள் கச்சேரியை களைகட்டச் செய்தன. ரஞ்சனி ராகம், ‘மாருபல்க’ கீர்த்தனை, அதற்கு சிவராமன் அவர்களது வாசிப்பு சொல்லி மாளாது. ஸாகேதராமனின் ஸாவேரி ராகம் அருமை. நாகை முரளிதரன் கை விளையாடியது. ‘கரிகளப முகம்’ கீர்த்தனையைக் கேட்டு ரொம்ப நாளாச்சு. முத்துஸ்வாமி தீட்சிதரின் அருமையான கீர்த்தனை. சிவராமன் அவர்களின் வாசிப்பு இன்னும் காதிலேயே இனிக்கிறது. அருமையான கச்சேரி.

தமிழ் இசைச் சங்கம் துவக்க நாளன்று, அரித்வாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் அவர்களுக்கு ‘இசைப் பேரறிஞர்’ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. தவில் இவர் சொல்வதெல்லாம் கேட்கும். ‘‘எனக்கு மிகவும் பிடித்த கலைஞர்’’ என்று கவிஞர் வைரமுத்து அவரைப் பாராட்டிப் பேசியது அனைவரையும் கவர்ந்தது.
படங்கள்: புதூர் சரவணன்

பாபனாசம் அசோக்ரமணி