காஷ்மீர் போல் தமிழகமும் இரண்டாக பிரிக்கப்படுமா..?



சிறப்பு அந்தஸ்து ரத்து எழுப்பும் கேள்விகள்

தெரியாது. ஆனால், பிரிக்கப்படலாம் என்ற அச்சமே எழுந்திருக்கிறது. காரணம், காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டிருக்கிறது. மட்டுமல்ல; இதுநாள்வரை தரப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டிருக்கிறது.ஆனால், இந்த ரத்து எடுத்தோம் கவிழ்த்தோம் என ஒரே இரவில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல.இந்தியப் பிரதமர் நேரு எப்பொழுது காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க முடிவு எடுத்தாரோ அப்பொழுது முதலே இன்றைய பாரதீய ஜனதா கட்சியின் முன்னோடிகள் இதை எதிர்த்து வருகிறார்கள்.

சொல்லப் போனால் ஜனசங்கமாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உருவெடுத்து தேர்தலில் போட்டியிட முடிவு செய்த காலத்தில் இருந்தே அக்கட்சியின் அஜண்டா இதுதான். பின்னர் ஜனசங்கம், பாஜகவாக பெயர் மாற்றம் பெற்றபோதும் இந்த அஜண்டா தொடர்ந்தது.ஆனால், மைனாரிட்டியாகவும், மெஜாரிட்டியாகவும், கூட்டணியாகவும் பாஜக மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இதற்கான முன் எடுப்புகள் எதுவும் எடுக்கப்படவில்லை. சொல்லப்போனால் வாஜ்பாய் முதல் அன்றைய பாஜக தலைவர்கள் யாருமே ஆட்சியில் இருந்தபோது காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்குவதைக் குறித்து யோசிக்கக் கூட இல்லை.

இந்த நிலை குஜராத் முதல்வராக இருந்து பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டபின் மாறத் தொடங்கியது.2013ம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்த மோடி, 2014ல் நடக்கவிருந்த மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்னிருத்தப்பட்டார். இதனை அடுத்து 2013 டிசம்பர் 1ம் தேதி ஜம்முவில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர், ‘‘அரசியல் சாசனப்பிரிவு 370 தேவையா... இல்லையா... என்பது குறித்து விவாதிக்க வேண்டும். குறைந்தபட்சம் 370வது பிரிவால் இந்த மாநிலத்துக்கு என்ன பயன் ஏற்பட்டது என்பது குறித்தாவது விவாதிக்க வேண்டும்...’’ என்று பேசினார்.
2014 மக்களவை தேர்தலில் பெரும் சர்ச்சையை இந்த உரை ஏற்படுத்தியது.

மோடியின் இந்தப் பேச்சுக்கு அப்போது ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான முப்தி முகமது சையித் எதிர்வினை ஆற்றினார். ‘‘370ம் பிரிவு ஜம்மு - காஷ்மீர் மாநில சட்டப்பேரவையில் அங்கீகரிக்கப்பட்டதால், அரசியலமைப்புச் சட்டத்தின் நீக்கமுடியாத அங்கமாகியுள்ளது. எனவே, அரசியலமைப்புச் சட்டப்படி நாடாளுமன்றத்துக்குக் கூட அதனை விவாதிக்கவோ, நீக்கவோ அதிகாரம் இல்லை. பாஜகவின் பிரதமர் பதவி வேட்பாளராக இருக்கும் மோடிக்கு, இந்திய அரசியலமைப்புச் சட்டம் பற்றித் தெரியாமல் இருப்பது கவலை அளிக்கிறது...’’ என்றார்.

ஆனால் நடந்த நிகழ்வுகளோ வேறு. 2014ல் நாட்டின் பிரதமராக மோடி பொறுப்பேற்றார். அடுத்த 5 ஆண்டு காலகட்டத்தில் பெரும்பான்மை அரசாக இருந்தும் ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து ெதாடர்பாக எவ்வித விவாதமும் நடத்தாமல் அரசை நடத்தி முடித்தார்.

இப்போது 2வது முறையாக அசுரபலத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ள மோடி தலைமையிலான பாஜக ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பிரிவான 370 மற்றும் 35 ஏ ஆகியவற்றை ரத்து செய்ததுடன், அம்மாநிலத்தை ஜம்மு - காஷ்மீர் என ஒருபகுதியாகவும்; லடாக் பகுதியை மற்றொரு பகுதியாகவும் பிரித்துள்ளது.

இந்த அதிரடி கொஞ்சம் கொஞ்சமாக காய் நகர்த்தப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆம். மக்களவை தேர்தலுக்கு முன்பாகவே ஜம்மு - காஷ்மீரின் அரசியல் சதுரங்க வேலைகள் தொடங்கிவிட்டன. அம்மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் ஜனநாயகக் கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தியது. மெஹ்பூபா முதல்வராக பதவி வகித்தாலும், பாஜக சித்தாந்தத்துடன் இவரால் ஒத்துப்போக முடியாததால் அங்கு ஆட்சி கவிழ்க்கப்பட்டு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதை முதல் நகர்வு எனலாம். இது கடந்த ஆட்சியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வு.இதனை அடுத்து சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலுடன் இணைந்து அம்மாநிலத்துக்கான சட்டமன்ற தேர்தலையும் நடத்தலாம் என தேர்தல் ஆணையம் திட்டமிட்டபோது பாதுகாப்பு காரணங்களுக்காக அப்படி நடத்த முடியாது என மத்தியில் ஆட்சி செய்த பாஜக அறிவித்தது. வேறுவழியின்றி சட்டமன்ற தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி அம்மாநிலத்தில் இருந்த மாநில கட்சிகளின் செயல்பாடுகள் மறைமுகமாக முடக்கப்பட்டன.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அறுதிப்பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்ததும் ஜம்மு - காஷ்மீர் மாநில நிர்வாகத்தில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியது.

அதாவது 370 சட்டப் பிரிவை ரத்து செய்வது ெதாடர்பான வியூகங்கள் வகுக்கப்பட்டன என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.
இதன் ஒருபகுதியாகவே கார்கிலில் சுற்றுலாவை மேம்படுத்தும் நிகழ்ச்சியில் பேசிய அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக், ‘‘யாராக இருந்தாலும், துப்பாக்கியின் முன் அரசை தலைவணங்கச் செய்துவிடமுடியாது.

ஜம்மு - காஷ்மீரில் ஆயுதங்களைக் கையில் எடுக்கும் இளைஞர்கள், அப்பாவி மக்களையும், காவல்துறையினரையும் கொலை செய்வது ஏன்? நாட்டையும், ஜம்மு - காஷ்மீரையும் கொள்ளை அடித்தவர்களைத்தானே கொலை செய்ய வேண்டும்? அப்படி யாரையாவது கொலை செய்துள்ளார்களா..?’’ என்று பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை சுட்டிக் காட்டுகிறார்கள். இதன் அடுத்த கட்டமாகவே கடந்த சில நாட்களுக்கு முன் தேசியப் புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) அதிக அதிகாரம் அளிக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டதாம்.

இதன்படி தீவிரவாதக் குற்றங்கள் தொடர்பாக என்ஐஏ மட்டுமே விசாரிக்கும். நீதிமன்ற நடவடிக்கைகள் ஏதுமின்றி எத்தனை நாள்களுக்கு வேண்டுமென்றாலும் சம்பந்தப்பட்டவர்களை சிறையில் வைத்திருக்க முடியும். இந்த காய் நகர்த்தலுக்குப் பின் அடுத்ததாக ‘உபா’ சட்டத்திருத்த மசோதா. இதன் வழியாக தனிநபர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்க முடியும். தீவிரவாத அமைப்புகளைத் தடை செய்தாலும், அதில் இருப்போர் வேறு அமைப்புகளைத் தொடங்குவதால், அவர்கள் மீதும் இச்சட்டத்தை பாய்ச்ச முடியும்!

இப்படியாக ஆளுநரை வைத்து அரசை இயக்கியது, என்ஐஏவுக்கு அதிக அதிகாரம், உபா சட்டத்தில் திருத்தம், ஜம்மு - காஷ்மீரில் ராணுவ வீரர்கள் குவிப்பு என்று பல்வேறு நகர்வுகளை நகர்த்தியபிறகே இந்த சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்திய தலித்துகளின் ஐகான் ஆக விளங்கும் மாயாவதி முதல் பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வரும் தில்லி முதல்வர் கெஜ்ரிவால் வரை பலரும் பாஜகவின் இந்த நடவடிக்கைகளை ஆதரிக்கிறார்கள்.

இந்த இடத்தில்தான் தலைப்பில் இருக்கும் விஷயம் முன்னிலைக்கு வருகிறது.தமிழகத்தில் பாஜகவால் இப்போது வரை கால் ஊன்ற முடியவில்லை. அதாவது தேர்தலில் தனித்து வெற்றி பெறும் அளவுக்கு கணிசமான வாக்கு வங்கியை திரட்ட முடியவில்லை.

எனவே ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இப்பொழுது இரண்டாக பிரித்தது போல் தமிழகத்தையும் இரண்டு, அல்லது மூன்றாகப் பிரித்து பாஜகவுக்கு எதிரான சக்திகளின் ஒன்றிணைப்பை சிதறடிக்க மத்திய அரசு முயற்சிக்கக் கூடும் என கவலையை தெரிவிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

ஏனெனில் காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டதால் அங்கு செல்வாக்கு பெற்றிருந்த மாநில கட்சிகளுக்கும் அம்மாநிலத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று போராடி வரும் பிரிவினைவாதிகளுக்கும் இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒரே மாநிலம் இரண்டாக உடைந்தால், எந்தப் பகுதிக்காகப் போராட முடியும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இதே நிலையை தமிழகத்திலும் ஏற்படுத்த பாஜக முயற்சிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை! சரி... சிறப்பு அந்தஸ்தை இப்போது இழந்துள்ளதால் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இனி என்ன நடக்கும்? சர்வதேச நாடுகள் நாட்டாமை செய்யத் தொடங்குமா..? அம்மாநில கனிம வளங்கள் பன்னாட்டு நிறுவனங்களால் சூறையாடப்படுமா..?பதிலை அறிய காத்திருப்பதைத் தவிர வேறுவழியில்லை!

செ.அமிர்தலிங்கம்