புல்வாமாவில் இந்தியப் படையினர் கொல்லப்பட்டபோது பிரதமர் ஷூட்டிங்கில் இருந்தாரா..?



‘இனி இந்த உலகத்துக்கு உண்மை தெரியவரும்; புல்வாமாவில் இந்தியப் படையினர் கொல்லப்பட்ட நேரத்தில் பிரதமர் மோடி பியர் கிரில்ஸுடன் ஷூட்டிங்கில் இருந்துள்ளார்...’ - ஜூலை 29ம் தேதி பிற்பகல் 12.50 மணிக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தாழ்த்தப்பட்டோர் பிரிவின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இப்படி ஒரு பதிவு வெளியானது.

அதேநாளில் முற்பகல் 11.08 மணிக்கு டிஸ்கவரி தொலைக்காட்சியின் பிரபலமான ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ ஷோவின் நாயகன் பியர் கிரில்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மோடியின் பெரிதும் அறியப்படாத இன்னொரு முகத்தை, காலநிலை மாற்றம் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்து, இந்தப் பயணத்தில் உலகம் காணப்போகிறது...’ என்று பதிவிட்டார்.

அதேநாளில் மற்றொரு புரொமோ வீடியோ பதிவில், ‘180 நாடுகளைச் சேர்ந்த மக்கள் இந்தியப் பிரதமர் மோடியின் தெரியாத பக்கங்களைத் தெரிந்துகொள்ள உள்ளனர். சுற்றுச்சூழல் மாற்றம் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே அவர் கலந்து கொள்கிறார்...’ என்று பியர் கிரில்ஸ் பதிவிட்டுள்ளார்.

அதில், 4 வீல் டிரைவ் காரில் காடுகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி வருகிறார். அங்கே, பியர் கிரில்ஸ் ஆவலோடு காத்திருக்கிறார்.பியரைப் பார்த்த மகிழ்ச்சியில், ‘வெல்கம் டூ இந்தியா...’ என்று மோடி வரவேற்கிறார். இப்படியாக விரிகிறது அந்த ஷோவின் டீசர்.
பின்பு, அடர்ந்த வனப்பகுதிகளில் மோடியை அவர் அழைத்துச் செல்வது, தற்காலிகமாக தயாரிக்கப்பட்ட படகில் பயணிப்பது என்று பல சிலிர்ப்பூட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பிரதமர் மோடியும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பியர் கிரில்ஸ் வெளியிட்ட டீசர் வீடியோவை பகிர்ந்து அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
முழு படக்காட்சிகளும் வருகிற 12ம் தேதி இரவு 9 மணியளவில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என நாட்டின் 12 மொழிகளுடன் 180 நாடுகளில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பாக உள்ளது.

மேற்கண்ட இந்தப் பதிவுகள் ஒரே நாளில் பதியப்பட்டு டிஸ்கவரி சேனலுக்கு நல்ல மைலேஜ் கொடுத்த சாகச வீரர் பியர் கிரில்ஸ், மோடியை எதற்காக வனப்பகுதிக்குள் அழைத்துச் செல்கிறார்? மோடியை எதற்காக பியர் கிரில்ஸ் தேர்வு செய்தார்... அதன் பின்னணி என்ன? அரசியல் ரீதியாக இந்த ஷூட்டிங் விவகாரத்தில் மோடிக்கு எதிர்க்கட்சிகள் எதற்காக ெநருக்கடி கொடுக்கின்றன என்பது போன்ற பல கேள்விகளுக்கும் பின்னால் பல தகவல்கள் உள்ளன.

ஜனவரி 26ம் தேதி பியர் கிரில்ஸ் ஒரு டுவிட்டை போடுகிறார். அதில், ‘அன்று இந்தியாவில் ஒரு சிறந்த நாள்; நான் விரைவில் வருகிறேன்; அந்த படப்பிடிப்பில் ஒரு முக்கியமான சிறப்பு...’ என்று பதிவிட்டுள்ளார். அடுத்து பிப்ரவரி 12ம் தேதி அவரது செல்பி புகைப்படத்தை விமானத்தில் இருப்பது போல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். என்ன நடந்ததோ... மேற்கண்ட இரு டுவிட்டுகளையுமே பியர் கிரில்ஸ் டெலிட் செய்துவிட்டார்.
இங்குதான் எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டின் உண்மை குறித்த கேள்வி எழுகிறது.

அதன்படி புல்வாமா தாக்குதல் நடந்த பிப்ரவரி 14ம் தேதியில், பியர் கிரில்சுடன் ேமாடி வனாந்திரம் சென்றாரா..?  
்அதாவது, ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். அந்த நேரத்தில், உத்தரகாண்டில் இருக்கும் கார்பெட் தேசிய பூங்காவில் பியர் கிரில்சுடன், மோடி சுற்றும் இந்த எபிசோடு படமாக்கப்பட்டுள்ளது. அழிந்துவரும் வங்கப் புலிகள் அதிகம் வாழும் இடம் என்பதால், வனப்பகுதிக்குள் படகில் சென்று சாகசப் பயணத்தை மேற்ெகாண்டுள்ளனர்.

தாக்குதல் நடந்த அதே தினத்தில் மாலை 6.30 மணிக்கு ஷூட்டிங் நடந்துள்ளது. அவர்கள் டீ மற்றும் ஸ்நாக்ஸ் ஆகியவற்றை மாலை 6.45 மணிக்கு சாப்பிட்டுள்ளனர். கொடூரமான தாக்குதல் நடந்து முடிந்து 4 மணி நேரம் கழித்துதான் அவருக்கு தகவல் தெரிந்துள்ளது.

‘தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள கார்ெபட் புலிகள் சரணாலயத்தில் ஷூட்டிங் ஒன்றில் பிரதமர் பங்குபெற்று வருகிறார்’ என்று காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜீவாலா அப்போது கூறினார். இதுதொடர்பான சில புகைப்படங்களையும், அன்றைய தினம் காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.

சில செய்தி நிறுவனங்கள், ‘தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், புல்வாமா தாக்குதல் ெதாடர்பான தகவலை பிரதமரிடம் கொண்டு சேர்க்கவில்லை. காரணம், பிரதமர் வனத்துக்குள் இருந்ததால்...’ என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தன. ஆனால், ‘எதிர்க்கட்சிகள் ஷூட்டிங் விஷயத்தை அரசியலாக்கி வருகின்றன’ என்று வழக்கம்போல் பாஜக தலைமை அறிவித்தது.

எது எப்படியோ, பிப்ரவரியில் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மேற்கொள்ளப்பட்டு இந்த மாதம் 12ம் தேதி ஒளிபரப்பப் போகிறார்கள்!  இன்னொரு விஷயமும் இருக்கிறது.வெயில் புகாத அமேசான் காடுகள், வெயில் தாங்க முடியாத சஹாரா பாலைவனம், ஆர்க்டிக் பனிப்பிரதேசம், ஆபத்து நிறைந்த பசுபிக் தீவுகள், எரிமலைப் பள்ளத்தாக்குகள் என்று உலகின் அந்தரங்கப் பகுதிக்குள்ளும் ெசன்றுவிட்டு உயிர் பிழைத்து வந்தவர்தான் இந்த பியர் கிரில்ஸ்.

ஏதோ டிவி ஷோவில் டிஆர்பி-க்காக மக்களை ஏமாற்ற பியர் கிரில்ஸ் சாகச வேலையில் ஈடுபடவில்லை. அவரின் ஒவ்வொரு சாகசகத்தின் பின்னாலும் அழகான கதை ஒன்று உள்ளது.பிரிட்டனைச் சேர்ந்த பியர் கிரில்ஸ், ஒரு முன்னாள் ராணுவ வீரர். பிரிட்டன் ராணுவ சிறப்பு அதிரடிப் படையில் விமானப் பிரிவில் பணியாற்றிவர்.

இவருக்குள் எழுத்தாளர், தொலைக்காட்சி நெறியாளர் என்று பல முகங்கள் உள்ளன. ‘சர்வைவல் அகாடமி’ என்ற அமைப்பை ஸ்காட்லாந்த் மலைப்பகுதியில் நடத்தி வரும் பியர் கிரில்ஸ், இயற்கை பேரிடரை எப்படி மக்கள் எதிர்கொள்வது, அவசர காலத்தில் எப்படிப்பட்ட உணவை உண்ண வேண்டும், ஆபத்தான நேரங்களில் உயிர்வாழ்வது எப்படி என்று பல யோசனைகளையும் வாரிவழங்குகிறார்.

அதனால்தானோ என்னமோ, அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா போன்ற தலைவர்கள் கூட பியர் கிரல்ஸுடன் வனப்பகுதிக்குள் சென்று, திகிலூட்டும் நிகழ்வுகளைப் பகிர்ந்துள்ளனர். அந்த வகையில்தான் இப்போது பிரதமர் மோடியை பியர் கிரில்ஸ் தனது இந்தியப் பயணத்தில் தேர்வு செய்துள்ளார். இப்படி பிரபலங்களை வைத்து ஷோ நடத்துவதால் அந்த சேனலுக்கு உலகளவில் மாஸ் கிரடிட் கிடைத்துள்ளது. என்றாலும் நிகழ்ச்சியின் வெற்றிக்கு தன்னுடன் பயணிக்கும் நபர்களைத் தேர்வு செய்யும் பியர் கிரில்ஸின் சாமர்த்தியமே காரணம்.

மோடியைத் தேர்வு செய்ய 6 காரணங்களை பியர் கிரில்ஸ் தரப்பு முன்வைக்கிறது.அதாவது, மோடிக்கு இயற்கையின் மீது அதிக பற்றுள்ளது. அவர் மாணவர்களுடன் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில், ‘காலநிலைகள் மாறவில்லை; நாம்தான் மாறிவிட்டோம்’ என்று பேசியுள்ளார். சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் காடுகளைப் பாதுகாப்பதில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை இந்திய அரசு அறிவித்து ெசயல்படுத்தி வருகிறது. நாய் முதல் முதலை, பசு, சிங்கம் என்று எல்லா விலங்குகளின் பிரியராக உள்ளார்.

அதனால், அவைகளின் தேவை மற்றும் வலிகள் அவருக்குத் தெரியும். மற்ற தலைவர்கள் வனத்திற்குள் வருவதற்கு அஞ்சுவார்கள்; ஆனால் மோடி தைரியமாக வருவதற்கு சம்மதித்தார். அவர் ஒரு வெஜிடேரியன்; அதனால் சிறு பூச்சிகளுக்குக் கூட தீங்கிழைக்கமாட்டார்.

சமீபத்தில் அமர்நாத் யாத்திரையின்போது குகையில் இருந்தது, தேர்தல் காலங்களில் தீவிர பிரசாரம், வௌிநாட்டுப் பயணம்... என்று தன்னை எப்போதும் ஆக்டிவ்வாக வைத்திருக்கிறார்... போன்ற காரணங்களுக்காகவே மோடி இந்த நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டார் என்கிறது பியர் கிரில்ஸ் தரப்பு. டிஸ்கவரி சேனலில் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்கு அந்த ஷோவின் வடிவமைப்பு தெரியும்.

ஆள் அரவமற்ற காடுகளில், மலைகளில், பாலைவனத்தில், பனிப் பிரதேசத்தில், எரிமலை அருகில் தொலைக்காட்சிக் குழுவினருடன் பியர் கிரில்ஸ் இறக்கிவிடப்படுவார். பல கிலோ மீட்டர் அந்தக் கடுமையான சூழ்நிலைகளில் பயணித்து, அங்கு கிடைக்கும் இயற்கையான, தாவர, மாமிச உணவுகளை உப்பு சப்பில்லாமல் சாப்பிட்டு உயிர் பிழைத்து, மனிதர்கள் வாழும் பகுதிக்கு எப்படி தப்பிக்கிறார் என்பதே ஷோவின் ஈர்ப்பு.
பிரிட்டனில் வெற்றிகரமாக ஓடிய இந்த ஷோ, இப்போது மொழிபெயர்க்கப்பட்டு இந்தியாவிலும் ஒளிபரப்பப்படுகிறது.

தன்னுடன் ஒரே ஒரு பையை மட்டுமே கொண்டு செல்லும் பியர் கிரில்ஸ், தண்ணீர், உணவு என்று எதையுமே கொண்டு செல்ல மாட்டார். வனாந்திர பயணத்தில் தென்படும் உயிரினங்களைச் சாப்பிட்டும், ஓடை நீரைக் குடித்தும் இரவைக் கழிப்பார். இப்படியான ஒருவரோடு இந்தியப் பிரதமர் மோடி பயணம் செய்திருக்கிறார். இதன் வழியாக தன்னையும் ஒரு சாகச வீரராக உலகுக்குத் தெரியப்படுத்துகிறார் பிரதமர் மோடி.இந்த விளம்பரம் எந்தளவுக்கு அவருக்கும் இந்தியாவுக்கும் பயனளிக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்!

செ.அமிர்தலிங்கம்