சூரி சுடப்பட்டார்... இரு குடும்பங்களின் பகையும் முடிவுக்கு வந்தது!போஸ்ட் மார்ட்டம்-16

சிட்டிங் எம்எல்ஏ ஆக இல்லாமல் இருந்தாலும் சுனிதாவுக்கு ஏ.கே.47 துப்பாக்கி ஏந்திய காவலர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுத்தான் இருக்கிறது. தனது 2 பையன்கள் மற்றும் 1 பெண் குழந்தையின் பாதுகாப்பே தனக்குத் தேவை என்பதை சுனிதா உணர்ந்திருப்பதால் அதிகமாக சச்சரவுகளில் ஈடுபடாமல் கட்சி வேலைகளை மட்டுமே செய்து வருகிறார்.

பரிதலா ரவியின் புகழை இணையதளம் மூலமும் பரப்பி வருகிறார்கள் அவரது ஆதரவாளர்கள். பரிதலா ரவி பற்றிய இணையதளம் இது (http://www.paritalaravi.com/). சென்று படித்துப் பாருங்கள்..!ரவியுடன் கொலைகள் சம்பந்தமாகத் தொடர்புடையவர்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வராமல் மறைமுகமாகத்தான் இருந்து வருகிறார்கள். அரசும், சூரியின் தரப்பும் இப்போதும் அவர்களைக் குறி வைத்து வருவதை அவர்களும் உணர்ந்துதான் இருக்கிறார்கள்.

இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம்... மூன்றாண்டுகள் கழித்து 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி அனந்தப்பூர் மத்திய சிறையில் ஒரு கொலைச் சம்பவம் நடந்துள்ளது!‘பரிதலா ரவியை நான்தான் சுட்டுக் கொன்றேன்...’ என்று டிவிக்களில் பேட்டியளித்த ஜூலகண்டா சீனிவாச ரெட்டி என்ற மொட்டு சீனு தனது சக கைதி ஒருவரால் கொல்லப்பட்டார்!

இந்தச் செய்தியறிந்து இந்தக் கொலை வழக்கை ஊத்தி முடிக்க அரசு முடிவெடுத்துவிட்டதாகப் புகார் கூறினார் சந்திரபாபு நாயுடு.
‘மொட்டு சீனு, தான் அப்ரூவர் ஆகப் போகிறேன் என்று மிரட்டிய காரணத்தால் சூரிதான் ஆள் வைத்து இந்தக் கொலையைச் செய்திருப்பதாக’ சீனுவின் குடும்பத்தினரே சொல்லத் தொடங்கினர்.

ஆனால், அரசுத் தரப்போ, ‘இதை பழிக்குப் பழி வாங்கும் படலத்தின் முதல் பலியாக ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது..?’ என்று பிளேட்டை அப்படியே திருப்பிப் போட்டுவிட்டது!  இந்த நேரத்தில் ரவியின் ஆதரவாளர்களையும், தெலுங்கு தேசம் கட்சியினரையும் ஒருசேர அதிர்ச்சிக்குள்ளாக்கிய விஷயம் ஒன்றை காங்கிரஸ் அரசு செய்தது.

அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஆயுள் தண்டனை பெற்று பத்தாண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனையை அனுபவித்த 940 சிறைக் கைதிகளை விடுதலை செய்யும்படி ஆந்திர மாநில அரசு கவர்னருக்கு பரிந்துரை செய்தது. அந்த லிஸ்ட்டில் சூரி மட்டு
மன்றி ஜூப்லிஹில்ஸ் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் தண்டனை பெற்ற அத்தனை பேருமே இருந்தார்கள்!

தெலுங்கு தேசக் கட்சி மட்டுமே இதனை கடுமையாக எதிர்த்தது. ஆனாலும் பலனில்லை. முதல்வர் ரோசையா இதில் உறுதியுடன் இருந்தார்.
ஆனால், சூரியால் அக்டோபர் 2-ம் தேதியன்று வெளியில் வர முடியவில்லை. காரணம்,பரிதலா ரவியின் படுகொலை தொடர்பாக அவர் மீதிருந்த வழக்குதான்.

கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி அந்த வழக்கிலும் முறைப்படி ஜாமீன் பெற்று வெளியே வந்தார். சூரி வெளியில் வந்திருப்பது குறித்து, “எனது குடும்பத்தினருக்கு எதிராக ரோசையா தலைமையிலான காங்கிரஸ் அரசு செய்யும் சதி வேலைதான் இது. இனி என் குடும்பத்திற்கு எது நடந்தாலும் அதற்கு காங்கிரஸ் அரசே முழுப் பொறுப்பு...” என ஆவேசப்பட்டார் சுனிதா.

வெளியில் வந்த சூரிக்கு பலத்த இரண்டடுக்கு கொண்ட போலீஸ் பாதுகாப்பை அரசு வழங்கியது! இதற்கிடையில் வருடந்தோறும் ரவியின் சமாதிக்கு வரும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்வதை காங்கிரஸ் அரசு கவலையுடன் பார்க்கத் தொடங்கியது.எப்பாடுபட்டாவது ரவியின் மரணத்திற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற வெறியில் இருக்கும் ரவியின் பக்தர்களுக்கு சுனிதா அனுமதி வழங்கவில்லை என மீடியாக்கள் செய்தி வெளியிட்டன.

சூரி மட்டுமல்ல... சூரியின் தரப்பும் இதை அறிந்தே இருந்தது. என்றாலும் ஒருவித கட்டுப்பாட்டுடனேயே நடமாடினார்கள்.என்றாலும் நீறு பூத்த நெருப்பாக இருதரப்பினருக்குள்ளும் பழிவாங்கும் வெறி கனன்று கொண்டே இருந்தது.  இந்நிலையில்தான் நம்மூர் சூர்யா நடிப்பில் இயக்குநர் ராம்கோபால் வர்மா, ‘ரத்த சரித்ரா’ என்ற இரு பாகங்கள் கொண்ட தெலுங்குப் படத்தை இயக்கினார்.இந்தப் படம் முழுக்க முழுக்க பரிதலா ரவி மற்றும் சூரியின் குடும்பப் பகையை மையமாகக் கொண்டதுதான்!தமிழில் ‘ரத்த சரித்திரம்’ என ஒரே பாகமாக இப்படம் டப் ஆகி வெளியானது.

வாய்ப்பு இருப்பவர்கள் ஆங்கில சப் டைட்டிலுடன் ‘ரத்த சரித்ரா’ இரு பாகங்களையும் தெலுங்கில் பாருங்கள். நிறைய விஷயங்கள் புரியும்.
இதில் ஹைலைட் என்ன தெரியுமா?இந்த ‘ரத்த சரித்ரா’ இரு பாக தெலுங்குப் படத்தை சுனிதா தனது ஆதரவாளர்களுடன் ஹைதராபாத்தில் கண்டு
களித்தார்.சூரி, தன் மனைவி பானுமதியுடன் பெங்களூரில் இப்படத்தை பார்த்து ரசித்தார்!

இரு குடும்பங்களுக்குமே ‘ரத்த சரித்ரா’ 2 பாகங்களும் பிடித்திருந்தன என்பதுதான் ஹைலைட். குறிப்பாக சூரிக்கு! பெரும் ஹீரோயிசத்துடன் தன்னை ராம்கோபால் வர்மா காட்டியிருந்ததில் அவருக்கு பரம திருப்தி.ஏனெனில் சூரி காதலித்து மணம் முடித்தவர். பானுமதி அவர் வீட்டுக்குப் பக்கத்தில் வசித்தவர். பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

எனவே, பெங்களூர் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது சூரியின் முகம் அப்படி மலர்ந்திருந்தது என்கிறார்கள்!ரைட். இத்துடன் பரிதலா ரவி Vs சூரி போர்ஷனை முடிப்பதுதான் நல்லது.அதற்காக பரிதலா ரவியைக் கொன்ற சூரி உயிருடனேயே இருக்கிறார்... என ஃபுல்ஸ்டாப் வைக்க முடியாதே! ரவியின் ஆதரவாளர்கள் அப்படி விட்டுவிடுவார்களா என்ன?!

ஜனவரி 4, 2011.

பட்டப் பகல். ஹைதராபாத் மாநகரில் சூரி தன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்.அப்போது பைக்கில் வந்த இருவர் சரமாரியாக சூரியைச் சுட்டார்கள். ஆன் த ஸ்பாட்டில் சூரி காலி!கார் டிரைவர் சொன்ன அடையாளங்களை வைத்து பானு கிரண் என்பவனை 2012ம் ஆண்டு போலீஸ் கைது செய்தது. இந்த பானு கிரண் யார் என்றெல்லாம் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?!

இப்படியாக அனந்தப்பூர் மாவட்டத்தை ரத்தக் களரி ஆக்கிய இரு குடும்பங்களின் பகை ஒரு முடிவுக்கு வந்தது.இதையே கம்மா (பரிதலா ரவி) - ரெட்டி (சூரி) சாதிகளுக்கு இடையிலான மோதல் என்றும் சொல்லலாம்.இன்று இரு குடும்பங்களைச்சேர்ந்தவர்களும் அவரவர் ஆதரவாளர்களுடன் அவரவர் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அப்படியே அவர்கள் வாழ வேண்டும் என அனந்தப்பூர் மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்!

(தொடரும்)

கே.என். சிவராமன்