கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்-23



வடிவுடை அம்மன் இருக்க வருத்தம் ஏன்?

‘‘மை காட்... திருவொற்றி
யூருக்கு இவ்வளவு பெருமைகளா..? கண்ணன் வாய் பிளந்தான்.அதை ஆமோதிக்கும் வகையில் அவன் மாமா சுந்தரமும் கண்களை விரித்தார்.
‘‘இன்னமும் இருக்கு கண்ணா... வாசுகிதான் நாகங்களுக்கு எல்லாம் ராஜா. அது இங்க வந்து தவம் செய்தது. அதுக்கு கருணை செய்து சுவாமி அதை தன் கழுத்துல ஆபரணமாக போட்டுகிட்டார். அந்த அடையாளத்தை இப்பவும் லிங்கத்துல பாக்கலாம்!

வாசுகி நல்ல கதி அடைஞ்சதை கேட்டு ஆதிசேஷனும் இங்க வந்து சுவாமியை பூஜை செய்தார். அன்னிக்கி நைட்டே சந்திரனும் தன் பங்குக்கு பூஜை செய்தார். அப்ப ஆதிசேஷன் சமர்ப்பிச்ச பூவை எல்லாம் எடுத்துட்டார்.இது மாதிரியே பல நாட்கள் நடந்தது. ஒருநாள் இதை மறைஞ்சிருந்து பார்த்த ஆதிசேஷன், கோபத்தோடு சந்திரன்கிட்ட சண்டை போட்டார். தன் பக்தர்கள் சண்டை போடறதை விரும்பாத சுவாமி இருவருக்கும் காட்சி கொடுத்து அவங்களை சமாதானப்படுத்தினார்!’’ கண்கள் கசிய நாகராஜன் சொன்னார்.

‘‘அதேமாதிரி ஈசனின் கல்யாண கோலத்தைக் காண அகஸ்தியர் இங்க தவம் செய்தார். தியாகராஜர் திருவீதி உலா வர்றப்ப அகஸ்தியருக்கு மட்டுமில்லாம அவர்கூட இருந்த எல்லாருக்கும் கல்யாண சுந்தரராக தரிசனம் தந்தார். அதைப் பார்த்து அகஸ்தியர் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தார்...’’ தன் பங்குக்கு ஆனந்தவல்லியும் கசிந்தாள்.

‘‘தியாகராஜர் மட்டுமில்ல கண்ணா... அந்த ஊர் அம்பாளும் சக்தி வாய்ந்தவதான்...’’ என்றபடி நாகராஜன் கதை சொல்லத் தொடங்கினார். அந்தி சாயும் பொழுது. திருவொற்றியூர் திருக்கோயிலில் தாயம் உருளும் ஒலி கேட்டது.

தாயம் விளையாடுவது வேறு யாரும் இல்லை... இந்த உலகையே ஆட்டி வைக்கும் அம்மையப்பன்தான். உலகம் என்னும் நாடக மேடையில் உயிர்கள் என்னும் நடிகர்களை ஏற்றி நித்தம் ஒரு நாடகமாடும் ஈசன், அன்று அம்பிகையோடு தாயம் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது தலைவிரி கோலத்துடன் கோபத்தின் மொத்த வடிவமாக, ஒரு பெண் கோயிலுக்குள் வந்தாள். வந்தவளின் முகத்தில் அசாத்திய சோகம். கணவனை இழந்த எந்த ஒரு பெண்ணுக்கும் அந்த சோகம் இருப்பது நியாயம்தானே?. அம்மையப்பன் முன்னிலையில் வந்து கைகுவித்து நின்றாள் அந்தக் காரிகை.

‘‘அம்மா உமாமகேஸ்வரி! என் கோவம் அடங்குவதாகத்தெரியவில்லை. என் தர்மாவேசத்தால் மதுரை எரிந்ததுதான் மிச்சம். இன்னும் வேறு நாசங்கள் ஏற்படும் முன் கண்ணகி என்னும் இந்த அபலையை அடக்கி ஆட்கொள்ளுங்கள் தாயே!இந்த லோக வாழ்க்கையை நான் வெறுத்துவிட்டேன். போதும் நான் பட்டபாடு. இனி தங்கள் திருவடியில் நிலையான இன்பத்தை நான் நுகரவேண்டும். தயை புரியுங்கள் தாயே!’’ அம்பிகையை முழுவதும் சரணடைந்தாள் கண்ணகி.  

அவளைக் கண்டதும் வாஞ்சையால் அம்பிகையின் உள்ளம் இளகியது. ‘‘தேவதேவா! தன் கணவனின் இறப்பிற்கு நீதி கேட்டு மதுரையையே எரித்து விட்டு வேறு புகலிடம் இல்லாமல் நம்மிடம் வந்திருக்கிறாள் இந்த கற்புக்கரசி. மேலும் தாமதிக்காமல் தாயத்தை உருட்டுங்கள். நீங்கள் உருட்டும் தாயம் இந்த அபலையின் தாபத்தைப் போக்கவேண்டும் வேதநாயகா!’’

பதிலேதும் சொல்லாமல் புன்னகைத்தபடியே தாயத்தை உருட்டினார் மகாதேவன். அவர் உருட்டிய வேகத்தில் தாயம் அருகில் இருந்த கிணற்றில் விழுந்துவிட்டது. ‘‘ஆஹா... தாயம் கிணற்றில் விழுந்து விட்டதே!’’ வருத்தப்படுவது போல் நடித்தார் ஈசன். அதைக் கண்ட கண்ணகி ஒரு கணம் கூட தாமதிக்கவில்லை. அந்த தாயத்தை மீட்டெடுக்க கிணற்றுக்குள் பாய்ந்தாள். உடன் ஈசன் வட்டவடிவ பாறை ஒன்றை எடுத்து அந்த கிணற்றை மூடினார்! ‘‘உமா... நம் குழந்தையான இவள் இந்த வையகத்தில் பட்ட பாடு போதும். இனி இவளது உயிர் உன்னோடு கலந்து அமைதி பெறட்டும்! கண்ணகியின் ஆவேச வடிவத்தில் இங்கு காளியாக நீ காலம்தோறும் பக்தர்களுக்கு நல்லருள் புரிய வேண்டும்!’’ என்றார் ஈசன்.   

தென்றலில் அசைந்தாடும் தாமரைப் பூவைப் போல அம்பிகை தன் சிரசை அசைத்து ஈசன் சொன்னதை ஆமோதித்தாள். பின்பு கண்ணகியின் உயிரைத் தன்னோடு கலக்கச் செய்து, கண்ணகியின் ஆவேச வடிவாக வட்டப்பாறை அம்மனாக மாறினாள்! இரவுவேளை. இருள் கண்ணைக் கரித்தது. காற்றிடமும் அசாத்திய வேகம். மேகமே பிளந்தது போல இடி ஓசை. வானத்தை வீரன் ஒருவன் வாளால் வெட்டியது போல மின்னல்.

இவை எதுவும் ஒற்றியூர் கோயில் மண்டபத்தில் ஓலையில் ஏதோ எழுதிக் கொண்டிருந்த அந்த நபரின் கவனத்தைக் கலைக்கவில்லை.
அவர் திட சித்தராக ஓயாமல் எழுதிக் கொண்டிருந்தார். அவருக்குத் துணையாக ஒளிவிட்டுக் கொண்டிருந்தது ஒரு தீப்பந்தம். அதுவும் அடித்த காற்றில் அணைந்து விட்டது.

ஆனால், ஒளியும் மங்கவில்லை, அவர் எழுதுவதையும் நிறுத்தவில்லை. நொடிகள் நிமிடங்களாகி உருண்டோடின. ஒருவழியாக அந்த நபர் எழுதி முடித்து ஓலையை மூடிவிட்டு எழுந்து நிமிர்ந்து பார்த்தார். அங்கு, செம்பட்டுடுத்தி, அங்கங்கள் எங்கும் ஆபரணம் மின்ன, காற்றில் கருங்கூந்தல் அலைபாய ஒரு வஞ்சி நின்று கொண்டிருந்தாள். அவளது நெற்றியில் திருநீறு மின்னியது. அதன் மத்தியில் குங்குமம் ஜொலித்தது.

அண்டசராசரங்களும் அவளது புன்சிரிப்பில் மயங்கியது. தனது இரு கைகளால் தீப்பந்தம் ஏந்தி நின்றிருந்தாள் வட்டப்பாறை நாயகி.  
‘‘அம்மா தாயே! இந்த நாயேனுக்கு அகிலாண்ட நாயகி நீ தீப்பந்தம் ஏந்துவதா? இது என்னம்மா அபத்தம்...’’ உருகினார் அந்த அடியவர்.
‘‘கம்பனே! நீ எழுதுவது இராமாயணம். ராம சேவையை விட உலகில் சிறந்தது எதுவுமே இல்லை. எனக்கோ அந்த ராமன் அண்ணன் முறை வேண்டும். இது அண்ணனுக்காக தங்கை செய்த சேவை. தமிழுக்காக நான் செய்த சேவை!’’  

‘‘தேவி! இந்த இராமாயணத்தின் அருமையை இந்த வையகம் உள்ளபடி அறியவில்லையே... இதை எழுதும் எனக்கும் எத்தனை தடைகள்... நீ அறியாததா?’’இதைக்கேட்டு அம்பிகை முல்லைப்பூ பல்வரிசை தெரிய நகைத்தாள். ‘‘கம்பா! இராமாயணம் அறிந்த நீ பகவத் கீதை அறியவில்லையா? அதில் என் அண்ணன் ‘அவ ஜானந்தி மாம் மூடா:’ என்கிறான். அதாவது அவனை மூடர்களால் உள்ளபடி அறிய முடியாது!
கவலையை விடு. இந்த வையகத்தில் எதுவரை நிலவும் சூரியனும் உள்ளதோ அது வரை உன் ராமாயணமும் உன் புகழும் நிலைத்திருக்கும். ஆசிகள்!’’  சொல்லிவிட்டு அன்னை மறைந்தாள்.

தினமும் வெகு தொலைவு காலால் நடந்து சென்று ஒற்றியூர் உத்தமனையும், வடிவுடை நாயகியையும் தரிசித்துவிட்டு வருவது அந்தச் சிறுவனுக்கு வழக்கம். அன்றும் அதேபோல் நடந்து சென்று அம்மையப்பனை சேவித்துவிட்டு வீட்டிற்கு வந்தான். அவன் வரத் தாமதமாகிவிட்டதால், கோயிலிலேயே தங்கிவிட்டான் போல என்று நினைத்து அவன் வீட்டில் இருந்தவர்கள் கதவைத் தாளிட்டுவிட்டு உறங்கத் தொடங்கினர்.
அர்த்த ராத்திரியில் வந்த அந்தச் சிறுவனுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. தனது வீட்டின் கதவைத் தட்டினான். பதிலில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் திண்ணையில் படுத்தான். பசி மயக்கம். தன்னை மீறி கண்ணயர்ந்தான்.

அப்போது மெல்ல அவன் அண்ணி அவனை எழுப்பினாள். வயிறு நிறைய தயிரன்னத்தை ஊட்டிவிட்டு அவனை உறங்க வைத்தாள். அவனும் நன்கு உறங்கினான். மறுநாள் விடிந்ததும் வாசல் தெளிக்க நீருடன் வந்த அவன் அண்ணி, திண்ணையைக் கண்டதும், ‘‘ராமலிங்கம்! இரவு எப்ப வந்த... ஒரு குரல் கொடுக்கக் கூடாதா?’’ என்றாள். ராமலிங்கம் என்ற அந்தச் சிறுவன் திடுக்கிட்டான். ‘‘என்ன அண்ணி சொல்றீங்க? நீங்கதானே நேத்து ராத்திரி எனக்கு தயிர் சாதம் ஊட்டிவிட்டீங்க?’’

‘‘யாரு நானா..? இல்லையே...’’ குழம்பினாள்.  ‘‘அப்ப யாரு தாத்தா வந்தது?’’ கண்ணன் இடையில் வெட்டினான்.
‘‘வேற யார்... சாட்சாத் வடிவுடையம்மன்தான்! அந்த சின்ன பையனும் சாதாரண ஆள் இல்லை. அவர்தான் பின்னாளில் திருவருட் பிரகாச வள்ளலார்னு அழைக்கப்பட்ட மகான்!’’ நாகராஜன் பெருமிதத்தோடு சொன்னார்.

‘‘அப்பாடி... கண்ணகி... கம்பர்... வள்ளலார்னு வடிவுடை அம்மன் அருள் பெற்றவங்க லிஸ்ட் பெருசா இருக்கே...’’ சுந்தரம் தன்னை மீறி சொன்னார்.
‘‘ஒற்றீசனும் வடிவுடை அம்மனும் நமக்கு கிடைச்ச பெரிய பொக்கிஷங்கள்! வாசுகியும் ஆதிசேஷனும் வணங்கின சுவாமி. அதனால அவரை வேண்டிக்கிட்டா ராகு கேது தோஷத்துல இருந்து நாக தோஷம் வரை எந்த தோஷமும் நம்மை நெருங்காது.

வாழ்க்கைல வெற்றி பெற ஒற்றீசனை சேவிச்சா போதும். ஏன்னா வேதத்தை ஒண்ணு சேர்க்க பெருமாளுக்கு வெற்றிய கொடுத்தது அவர்தான்! அதேமாதிரி வாழ்க்கைல எந்த கஷ்டம் வந்தாலும் வடிவுடையம்மன் கிட்ட போய் முறையிட்டா போதும். பரம காருண்யத்தோட அவ எல்லாத்தையும் தீர்த்து வைப்பா...’’ என்றார் நாகராஜன்.

‘‘மனம் முழுக்க பிரார்த்தனை செய்துகிட்டே அங்க போங்க. உங்க பிள்ளை நல்லா படிச்சு நல்ல நிலைக்கு வருவான். அதுக்கு வடிவுடையம்மன் பொறுப்பு!’’ என்றபடி ஆனந்தவல்லி குங்குமச்சிமிழை எடுத்து நீட்டினாள்.கண்ணனின் மாமி அதை தன் உச்சந்தலையில் இட்டுக் கொண்டாள்!

(கஷ்டங்கள் தீரும்)

கோயில் பெயர்: ஒற்றியூர் தியாகராஜர் கோயில்
செல்லும் வழி: திருவொற்றி
யூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ.
நேரம்: காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை.
மாலை 4 மணி முதல் இரவு 8:30 மணி வரை.

ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்