கழுகு 2எளிய மனிதர்களின் காதலை அடர் வனத்தின் ஊடாக சொல்வதே ‘கழுகு 2’.காட்டில் செந்நாய்களின் தொந்தரவு. அதனால் தொழிலாளர்கள் அங்கே சென்று ேவலை செய்யவே அஞ்சுகிறார்கள். அவர்களுக்குத் துணையாக துப்பாக்கி சுடும் கிருஷ்ணா, காளி வெங்கட். அங்கே பிந்து மாதவியோடு கிருஷ்ணா காதல் வயப்படுகிறார். காதல் என்னவானது என்பதே க்ளைமேக்ஸ்.

அப்பாவியான காதலனாக, சிறு திருடனாக, வேட்டைக்காரனாக... அப்படியே பொருந்துகிறது கிருஷ்ணாவின் முகம். காளி வெங்கட்டும் அவருக்கு ஈடு கொடுக்கிறார். பிந்து மாதவி நல்ல பக்குவமான நடிப்பில் முன்னேறியிருக்கிறார். பழைய பாவாடை தாவணியிலேயே அழகு.

‘கழுகு’ முதல் பாகத்தை அவ்வப்போது நினைவூட்டுகிறார்கள். முதல் பாதியின் கட்டமைப்பில் விரையும் படம், அடுத்தடுத்து உயிரோட்டம் இல்லாத காட்சிகளில் தாக்கமின்றிக் கடக்கிறது. கிராபிக்ஸ் ஏமாற்றுகிறது டைரக்டர் சார்!

ஒளிப்பதிவாளர் ராஜாவின் கைவண்ணம் காடுகளில் நிறைந்து நிற்கிறது. யுவனின் இசையில் ‘காந்தக் கண்ணழகி’ மனதை நிறைக்கிறது.திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் உயரத்திற்குப் பறந்திருக்கும்.

குங்குமம் விமர்சனக் குழு