நெஞ்சுக்கு நீதி! தமிழினப் போராளியின் தொடக்க நாட்கள்உலகளவிலேயே ஒரு தலைவரின் பெயர் ஊடகங்களில் அதிகம் பிரசுரம் ஆனதும், உச்சரிக்கப்பட்டது என்பதும் கலைஞர் அவர்களின் பெயராகத்தான் இருக்கும். 1924ல் பிறந்த அவர் 18 வயதிலேயே ‘முரசொலி’ ஆசிரியராக தமிழ்ச்சூழலில் பெரும் பிரவாகம் எடுத்தார். 33 வயதில் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
43 வயதில் அமைச்சர், 45 வயதில் மாநிலத்தின் முதல்வர், ஐந்து முறை தமிழகத்தின் முதல்வர்,60 ஆண்டுகள் சட்டமன்றப் பணி, 80 ஆண்டுகால அரசியல் வாழ்வு என்று எவருமே இனி கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத வாழ்க்கை அவருடையது.

கலைஞர் பிறந்து, வளர்ந்த சமூகக் காலகட்டத்தை ஒப்பிட்டு நோக்கினால்தான் மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து வந்து இந்தியாவுக்கே வழிகாட்டிய அவருடைய மகத்தான சாதனைகளின் முழுப்பரிமாணமும் புரியும்.அவரைப்பற்றி மற்றவர்கள் லட்சம் பக்கங்கள் வாழ்த்தியும், விமர்சித்தும் எழுதியதுண்டு. கலைஞரைப் பற்றி எழுதப்பட்டவற்றில் அவரே எழுதிய ‘நெஞ்சுக்கு நீதி’தான் மிகச் சிறப்பானது.

தன்னைப் பற்றி தானே ஏன் ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதியிருக்கிறார் என்கிற சந்தேகம் இப்போது எழலாம்.கலைஞரே ‘நெஞ்சுக்கு நீதி’யின் தொடக்க அத்தியாயத்தில் இதற்கான நியாயத்தைச் சொல்கிறார்.“வாழ்க்கை வரலாறு எழுதுகிற அளவுக்கு நீ என்ன அவ்வளவு பெரிய மனிதனாகி விட்டாய்?” என்று கலைஞரே தன்னை கேள்வி கேட்டுக் கொள்கிறார்.

அவரே அதற்கு விடையும் அளிக்கிறார்.“பெரிய மனிதர்களுக்குத்தான் வாழ்க்கையும் வரலாறும் சொந்தமா? சின்னவர்களுக்குக் கிடையாதா?”
கலைஞர் தன்னைத்தானே ‘சின்னவர்’ என்று சொல்லிக் கொண்டாலும், ‘நெஞ்சுக்கு நீதி’யை எழுத ஆரம்பித்தபோது அவர் பெரியவர்தான். தமிழகத்தின் முதல்வர் பதவியை அலங்கரித்துக் கொண்டிருந்தவர்தான். திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்று இயக்கத்தை பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் போராடி நடத்திக் கொண்டிருந்தவர்தான்.

சுயவரலாறு என்பதே சுயபெருமை பேசுவது என்பதுதான் பொதுவான இலக்கணம். கலைஞரோ தன்னுடைய சுயவரலாற்றிலும்கூட தமிழ்ச் சமூக வரலாற்றின் சுவடுகளைத்தான் அடையாளம் காட்டுகிறார். கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’ தமிழ்ச் சமூகத்தின் தேனருவி. அதில் ஒரு துளி தேனை, கலைஞரின் குரலிலேயே பருகுவோமா?

ஜூன் 3, 1924நான் பிறந்த 1924ல்தான் மைசூருக்கும், நம்முடைய மாநிலத்திற்கும் காவிரி நீர் ஒப்பந்தம் ஏற்பட்டது. 1974ஆம் ஆண்டு அந்த ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்யும் நிலையில், அந்த ஒப்பந்தத்திற்கு ஊறு விளைவிக்கப்படும் வகையில் நடைபெறும் செயல்களை எதிர்த்து நிற்கும் தமிழ்நாடு முதலமைச்சராக நான் இருப்பேன் என்பதை யார்தான் நினைத்திருப்பார்கள்? என் பெற்றோரே கூட என்னை  ‘ராஜா’ என்றுதான் அழைத்திருப்பார்களே தவிர, ‘மந்திரி’ என்றா அழைத்திருப்பார்கள்?

சிவாய நம! ஓம் நமசிவாய!!
திருக்குவளைக் கோயிலிலே அடிக்கடி உற்சவம் நடக்கும். அந்தத் திருவிழா முடிந்த மறுநாளே, அதேபோல மாதிரித் திருவிழா எங்கள் வீட்டுத் தாழ்வாரத்தில் ஆரம்பமாகும். மண்ணால் ‘சாமி’ செய்வேன். ஒரு வெண்கல ரிஷப வாகன பொம்மை எங்கள் வீட்டில் இருந்தது. களிமண் சாமியை அதன்மேல் தூக்கிவைத்து; வாயினால் மேளதாளங்கள் முழங்க, சாமி ஊர்வலம் நடத்துவோம்.

அதோ நான் தவழ்ந்து விளையாடிய வீடு. அது எத்தனை இன்பக் கதைகளையும், துன்பக் கதைகளையும் எனக்குச் சொல்கிறது.
அரசியல் அரிச்சுவடி!“யார்? யாரப்பா.. என்ன வேணும் நோக்கு?”“சார், என்னை எப்படியாவது இந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்! உயர்நிலைப் பள்ளியில் சேராமல் ஊருக்குத் திரும்பினால் எல்லாரும் என்னை கேலி செய்வார்கள். எப்படியாவது ஐந்தாம் வகுப்பில் என்னைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.”

“இடமில்லை என்றால் எப்படியப்பா முடியும்?”
“முடியாதா? இதோ உங்கள் கண் முன்னாலேயே எதிரே உள்ள தெப்பக்குளத்தில் விழுந்து சாகப்போகிறேன்!”
தலைமை ஆசிரியர் பையனை தட்டிக் கொடுத்தார். ‘வெற்றி’ என்றபடியே வெளியே ஓடிவந்து, ஆசையோடு நின்றுகொண்டிருந்த அவனது அருமைத் தந்தையைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கூத்தாடினான்.

அந்தப் பையன் யாரென்று புரிந்து கொண்டிருப்பீர்கள்.ஐந்தாம் வகுப்பில் ‘பனகல் அரசர்’ என்ற தலைப்புள்ள புத்தகம் துணைப்பாடக் கட்டுரையாக எங்களுக்கு வைக்கப்பட்டிருந்தது. ஏறத்தாழ ஐம்பது பக்கங்கள். வகுப்பிலே நான் ஒருவன்தான் அந்த சிறுநூல் முழுவதையும் அப்படியே மனப்பாடம் செய்து சொல்வேன். பனகல் அரசரின் ஆட்சிக் காலத்தில் திராவிடர்களுக்காக உருவாக்கப்பட்ட சாதனைகளை எடுத்துச் சொன்ன அந்தப் புத்தகம்தான் எனக்கு அரசியல் அரிச்சுவடியாகக் கூட அமைந்தது.

தமிழ் காக்கும் போர்முனை!
மாணவர்களை எவ்வாறு இந்தி எதிர்ப்பு ஈர்த்தது என்பதற்கு நானே ஓர் எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தேன். பள்ளிப் பருவத்தில் மாணவர்கள் பலரை இணைத்துச் சங்கங்கள் அமைப்பதில் எனக்குத் தனி ஆர்வம் உண்டு.

சிறுவர் சீர்த்திருத்தச் சங்கம், இளைஞர் சங்கம் இப்படிப் பல.
1938-ல் நாள்தோறும் மாலை நேரத்தில் மாணவர்கள் பலரை அணிவகுத்துத் திருவாரூர் வீதிகளில் ஊர்வலம் வருவேன். கையில் தமிழ்க்கொடி!
நான் எழுதிய ஒரு பாடல்; மாணவர்கள் அனைவரும் சேர்ந்து ஒலிப்பர்.

“வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம்!
வந்திருக்கும் இந்திப்பேயை விரட்டித் திருப்பிடுவோம்!!”
முதல் குழந்தை முரசொலி!

1939ல்தான் புரட்சி ஜனநாயகக்  கட்சி என்று எம்.என்.ராய் ஒரு கட்சியைத் துவக்கி வைத்தார். கம்யூனிஸ்ட் கட்சி நாட்டின் பல பகுதிகளிலும் ஊடுருவுவதற்குப் பலத்த ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தது. அப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபட்டிருந்த ஒருவர், பள்ளிக் கூடத்திலிருந்த என்னைச் சந்திக்க வேண்டுமென்று விரும்பினார். 15 வயது இளைஞனாக, மெலிந்த உருவினனாக நான் போய் எதிரே நின்றேன்.

அவர் சந்தேகத்துடன், “நீங்கள்தானா ‘மாணவ நேசன்’ நடத்துகிற கருணாநிதி?” என்று கேட்டார்.‘மாணவ நேசன்’ என்பது நான் நடத்திய கையெழுத்து ஏடு. ஐம்பது பிரதிகள் கையாலேயே எழுதி வழங்குவது சிரமமாயிருக்கிறதே, வேறு என்ன செய்யலாம் என்று சிந்தித்தபோதுதான் ‘முரசொலி’ தோன்றியது. வாரப்பத்திரிகை, மாதப்பத்திரிகை என்ற அளவிலே அல்ல. துண்டு வெளியீடுகளாக.

பரணி பலபாடி பாங்குடன் வாழ்ந்தபைந்தமிழ் நாட்டில்சொரணை சிறிதுமில்லா சுயநலத்துச்சோதரர்கள் சிலர்  கூடிவருணத்தை நிலைநாட்ட வகையின்றிக்கரணங்கள் போட்டாலும்மரணத்தின் உச்சியிலே மானங்காக்கமறத்தமிழா! போராடு!வருணாசிரமம் வீழ்க!இப்படித்  துவங்கிய ‘முரசொலி’தான் இன்று விடுதலைப்படை வீரர் ஏந்துகின்ற கருவிகளில் ஒன்றாக இருக்கிறது.

அண்ணனைக் கண்டேன்!

“இந்த ஊரில் கருணாநிதி என்பவர் யார்? அழைத்து வாருங்கள், பார்க்க வேண்டும்” என்று அண்ணா கூறவே என்னை அழைத்துப் போனார்கள்.
“படிக்கிறாயா?”“படிக்கிறேன்”

“இனிமேல் கட்டுரை எதுவும் எழுதி எனக்கு அனுப்பாதே!” என்று சற்று கடுமையாகக் கூறினார் அண்ணா.அன்று அறிவுரைகூறி என்னை அணைத்து மகிழ்ந்த அந்த அன்புக் கோயில் அண்ணாவின் அறிவுரைகளையும் மீறி எழுந்த இயக்கவெறி, என் பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

கம்புகள்! குண்டாந்தடிகள்!!

ஈட்டிகள் என் நெஞ்சைக் குறி பார்த்திருக்கின்றன. கற்கள் என் தலையைப் பதம் பார்த்திருக்கின்றன. கம்புகளும், கழிகளும், குண்டாந்தடிகளும் என் மேனியைச் சுவைத்திருக்கின்றன.

சாவு என்னை நெருங்கி, நெருங்கி எத்தனையோ முறை விலகியிருக்கிறது! சிலரிடத்தில் நெருங்கியதற்காக அல்ல! விலகியதற்காக!என் தலைக்கு வந்த ஆபத்துகளிலேயே மிகப்பெரிய வரிசையில் ஒன்றுதான் புதுச்சேரி ஆபத்து!

“திராவிடத் தலைவர்களே! திரும்பிப் போங்கள்!” என்பதே அவர்களது கூச்சலாக இருந்தது.“வா என்று அழைப்பதுதான் தமிழர் பண்பு! ‘போ’ என்று கூறக் காரணம் யாதோ?” என்று தொடங்கி, அறிஞர் அண்ணா அரியதோர் உரையாற்றினார்கள்.அவ்வளவுதான். அமளி தொடங்கி விட்டது. பெரியாரையும், அண்ணாவையும், ஏனைய தலைவர்களையும் வண்டிகளிலும், ரிக்‌ஷாக்களிலும் ஏற்றிப் பாதுகாப்பாக அனுப்பிவிட்டு பாரதிதாசனும், நானும், காஞ்சி கல்யாணசுந்தரமும் வீதியில் நடந்து வந்துகொண்டிருந்தோம்.

திடீரென ஒரு பெருங்கூட்டம் எங்கள் மூவரையும் சூழ்ந்து கொண்டது. நாங்கள் மூவரும் திசைக்கு ஒருவராக ஆகிவிட்டோம். பாரதிதாசனை யாரோ அழைத்துக்கொண்டு ஓடி ஒரு வீட்டில் ஒளித்துவிட்டார்கள். அவரது காலணியொன்று தெருவிலே கிடந்தது. அதனைக் கருவியாகக் கொண்டு என்னைத் தாக்கினார்கள். பெரிய லாடம் அடிக்கப்பட்ட பூட்ஸ்!

அது எப்படியிருக்கும் என்று கூற வேண்டியதில்லை. அப்பொழுது வலித்தது. ஆனால் இப்போது நினைத்தாலும் அந்தச் சம்பவம் இனிக்கிறது.இடையே சந்து பொந்து இல்லாத நீண்ட பெருஞ்சாலையொன்றில் நான் ஓடிக்கொண்டே இருக்கிறேன். எதிரிகள் துரத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த நீண்ட தெருவில் ஒரேயொரு வீட்டில் மாத்திரம் கதவு திறந்திருந்தது.

அந்த வீட்டிற்குள் சென்ற நான், தொடர்ந்து வந்த கூட்டத்தினர் என்னைப் பிடித்து விடாமலிருக்க கதவைச் சாத்தினேன். அதற்குள் கூட்டத்தினர் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தனர். நான் கதவிடுக்கின் மறைவில் நின்றுகொண்டு அந்த வீட்டை ஒருமுறை பார்த்தேன்.

தாழ்வாரத்திலும் கூடத்திலும் மதுப்புட்டிகள் இறைந்து கிடந்தன. அந்த வீடுதான் கலகக்காரர்கள் எங்களைத் தாக்க சதித்திட்டம் தீட்டிய வீடு என்பதைப் புரிந்து கொண்டேன். உள்ளே நுழைந்தவர்கள் கதவின் மறைவில் இருந்த என் தலைமயிரைப் பிடித்திழுத்துத் தெருப்புறத்தில் தள்ளினார்கள். ‘க்யூ’ வரிசையில் நிற்பது போல நின்று கொண்டிருந்த கலகக்காரர்கள் ஆளுக்கொரு அடி என்னை அடித்தார்கள்.

நான் மயக்கமுற்றேன். சுருண்டு விழுந்தேன். நான் இறந்துவிட்டதாகக் கருதி, சாக்கடை ஓரத்தில் தூக்கியெறிந்துவிட்டுப் போய்விட்டார்கள்.என்னுடைய நிலைமை என்னவாயிற்று என்று தெரியாமல் தலைவர்கள் ஊரெல்லாம் ஆள் அனுப்பித் தேடியிருக்கிறார்கள். பெரியாரும், அண்ணாவும் என்னைக் காணாமல் துடித்துப் போயினர்.விடியற்காலை நாலு மணிக்கு தலைவர்கள் தங்கியிருக்கும் இடம் தெரிந்து அவர்களிடம் சேரப் புறப்பட்டேன். கைலி, நீண்ட ஜிப்பா, தலையில் குல்லாய் இவைகளுடன் முஸ்லீம் வேடத்தில் ரிக்‌ஷா ஏறி தலைவர்கள் இருக்குமிடம் சென்றேன்.

பெரியார் கண்ணுறங்காமல் என்னைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தார். என்னைக் கண்டதும் ஆரத் தழுவிக்கொண்டு, “சுகமாக இருக்கிறாயா?” என தழுதழுத்த குரலில் கேட்டார்.அதற்குப் பிறகு அவரே என் காயங்களுக்கெல்லாம் மருந்திட்டார்.“என்னுடன் வா, போகலாம்” என்று ஆணையிட்டார்.பெரியாருடன் ஈரோட்டுக்குக் கிளம்பினேன்.             

தொகுப்பு : யுவகிருஷ்ணா