லேடீஸ் டாய்லெட்டில் என்ன நடக்கிறது..?சென்னை pubs-4

பப்களில் இருக்கும் டாய்லெட்டுகளில் ஜோடிகள் முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பார்கள், கட்டிக்கொண்டும், போதை மயக்கத்தில் ஆடை களைந்து இன்னும் ஆழமாக அன்பை பரிமாறிக்கொண்டு இருப்பார்கள்... என்று பரவலாக பேசி கேட்டிருக்கலாம்.

இதெல்லாம் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை. இப்போது பெரும்பாலும் இல்லை. பப்கள் பிரபலமாகத் தொடங்கி இருந்த 2000க்குப் பிறகான ஆண்டுகளில் பப் டாய்லெட்டுகளில் வம்ச விருத்தியையே பலவித கோணங்களில் முயற்சித்துப் பார்த்தவர்கள் உண்டு! வாத்ஸாயனார் வெட்கித் தலைகுனியும் அளவுக்கு சாகசங்களில் ஈடுபட்டு வந்தார்கள்தான்.

நாம் திடீரென்று உள்நுழைகையில், ஜம்போ சர்க்கஸ் பிராக்டீஸ் நடக்கிறதா என்று குழம்பிப் போகும் தருணங்களும் இருந்தன. அவர்கள் கூலாக, சாரி சொல்லி விட்டு சர்க்கஸைத் தொடர்வார்கள்.

இப்போது அதெல்லாம் நடப்பதில்லை. டாய்லெட்டுக்கும் டைட் செக்யூரிட்டி போட்டு விட்டார்கள். டாய்லெட் செக்யூரிட்டியைத் தாண்டி டாய்லெட்டுக்குள் நுழைந்தால் உள்ளே இரண்டு ஊழியர்கள் பவ்யமாக இருப்பார்கள். நாம் ஜிப்பை திறக்கும் போது கரெக்டாக ஒரு சல்யூட்டைப் போடுவார்கள். யாருக்கு போடுகிறார்கள் என்று குழப்பமாக இருக்கும்.

சல்யூட்டை ஏற்று காரியம் முடித்து ஜிப்பை போட்டால், வளைகாப்புக்கு போன பெண்களுக்கு ரவிக்கைத் துணியும் மஞ்சள் குங்குமமும் வைத்து கொடுப்பது போல பவ்யமாக டிஷ்யூ பேப்பரைக் கொடுப்பார்கள். பார்க்க பாவமாக இருக்கும். இவர்களுக்கு பெரும்பாலும் யாரும் டிப்ஸ் கொடுப்பதில்லை.

வாந்தி, பேதி என எதிர்பாரா வெளியேற்ற நடவடிக்கைகளினால் அசுத்தமாகும் டாய்லெட்டை சரி செய்து, சுத்தமாக வைத்திருக்க வேண்டியது இவர்கள் பொறுப்பு. பப் என்றால் ஜாலி, கிளுகிளுப்பு, கொண்டாட்டம் என்ற மனநிலையில் படித்துக்கொண்டிருக்கும் வாசகர்களிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டு ஒரு ரசமற்ற மேட்டரை சொல்லி விடுகிறேன்.

வழக்கமான டாய்லெட்டுகளை விட பப் டாய்லெட்டுகள் பயங்கரமாக நாறும். தண்ணி அடித்துவிட்டு மலஜலம் கழித்தால் வழக்கத்தைவிட கெட்ட வாசனை அடிக்கும். போதையில் இருப்பதால், பயனாளர்களுக்குத் தெரியாது. சுத்தம் செய்பவர்களுக்குத்தான் சோதனை. டாய்லெட்டுக்குள்ளேயே 6 முதல் 8 மணி நேரம் வரை நின்று கொண்டிருக்கும் அவர்களின் நிலைமை பரிதாபமானது.

இரவு மணி பன்னிரண்டுக்கு மேல் லேடீஸ் டாய்லெட்டுக்குள் நுழைந்து பார்த்தால் படு வேடிக்கையாக இருக்கும். சில பெண்கள் படுத்து தூங்கிக் கொண்டெல்லாம் இருப்பார்கள். சிலர் தலையில் கை வைத்துக்கொண்டு ஒரே பொஸிஷனில் நின்று கொண்டிருப்பார்கள். இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா? அதெல்லாம் தொழில் ரகசியம் என்றெல்லாம் சொல்லி டபாய்க்கப் போவதில்லை.

ஒரு முறை சென்னையில் ஒரு பப்புக்கு சென்றபோது லேடீஸ் டாய்லெட் வாசலில் ஒரு அக்கா நின்று கொண்டிருந்தார். அங்கே வேலை செய்பவர் அவர். அவருடன் பேச்சுக் கொடுத்தேன். அந்த பப் இருக்கும் கட்டடத்தின் பேஸ்மெண்டில்தான் அவர் குடும்பம் இருக்கிறது என்றார். நான் எழுதுபவன் என்று தெரிந்ததும் நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

‘இப்டில்லாமா செய்றாங்க?’ என்று அப்பாவியாக கேட்டதும், ‘பாருங்களேன்...’ என்று சொல்லி ஒரு செகண்ட் திறந்து காட்டினார். பயப்படாதீர்கள்! லேடீஸ் டாய்லெட் என்ற அமைப்பு வேறு மாதிரியானது. மேக்கப், டச்சப் செய்து கொள்ள என்று ஒரு ஏரியா இருக்கும், அதற்குப் பின்தான் கதவுகளைக் கொண்ட டாய்லெட் இருக்கும்.

அந்த அக்கா திறந்து காட்டியது, மேக்கப், டச்சப் செய்து கொள்ளும் முன்னால் இருக்கும் இடத்தைத்தான்! அந்த அக்கா மொத்தமாக பேசியது ஒரு சிறுகதைக்கான மேட்டர். சுருக்கமாக, ‘நல்லா சம்பாதிக்கிறாங்க இப்போ. ஆனா, ஏன் இப்டி கெட்டு குட்டிச் சுவரா போறாங்கன்னு தெரியலை’ என்றார்.

‘குடிக்கிறதையா சொல்றீங்க..?’ என்றேன்.‘இல்ல, யார் கூடயோ வர்றாங்க, போதையில எவன்னு தெரியாத எவனோ தள்ளிட்டுப் போறான்... எனக்கு நல்லாத் தெரியும். ஆனா, கேக்க முடியாது. திட்டுவானுங்க...’ என்றார். அந்த அக்கா அவர் மொழியில் சொன்ன ஒரு விஷயத்தின் சுருக்கம் என்னவென்றால் …‘கேட்பாரற்று மட்டையாகிக் கிடக்கும் பெண்களை என்ன செய்வது என்ற தெளிவான மேனேஜ்மெண்ட் கான்செப்ட் ஏதுமில்லை. பப் ரூல்ஸோ, வழிகாட்டி முறைகளோ ஏதுமில்லை. எவன் வேண்டுமானாலும் வந்து தோளில் சாய்த்துக்கொண்டு அழைத்துச் செல்லலாம். பப் ஆட்கள் எதிர்க்க முடியாது!’

இரவு பன்னிரண்டைத் தாண்டியதும் சில பெண்கள் டாய்லெட், பொது டாய்லெட் ஆகிவிடும்! மெயின் டோர் திறந்து கிடக்கும். சர்வ சாதாரணமாக ஆண்கள் மேக்கப் , டச்சப் ஏரியா வரை செல்வார்கள். அப்படியான ஒரு தருணத்தில் நான் கண்ட காட்சி இது.

“ஒரு பெண் மேலாடை சரிந்து கிடக்கிறார். உடை முழுவதும் வாந்தி. தன் கையாலேயே தன் கழுத்தை நெரித்துக்கொண்டிருக்கிறார். கேவலமா இருக்கு, அசிங்கம் பண்ணிட்டேன். நான் சாகப்போறேன். நான் சாகப்போறேன்...’ என்று பினாத்திக்கொண்டிருந்தார். அவருடைய பாய் ஃபிரண்ட், எரிச்சலுடன் ‘‘எதா இருந்தாலும் அப்புறம் பாத்துக்கலாம்(!)’’ என்று சொல்லியபடியே அவரைத்தூக்கி நிறுத்த முயன்றபடி இருந்தார்.

அந்த இடத்திலும் அந்த பாய் ஃபிரண்ட் ஒரு கையில் மது நிறைந்த கோப்பையும், கனன்று கொண்டிருந்த சிகரட்டையும் பிடித்திருந்தார்!அந்தப் பெண் இப்போதைக்கு எழுந்து நிற்க மாட்டாள் என்று தெரிந்ததும் அவர் மீண்டும் பப்புக்குள் வந்து விட்டார்!

அந்தப்பெண் மீண்டும் தன் கழுத்தை நெரித்துக்கொள்ள ஆரம்பித்தார். அவர் போதையில் இருந்ததால் அவர் கையில் வலு இல்லை; மற்றும் அவருக்கு தன் கழுத்து எங்கே இருக்கிறது என்று தெரியாததால் வேறு எதையோ இறுக்கிக்கொண்டு கிடந்தார்!’’

பெண்கள் தனியாக வருவதில்லை என்று சொன்னேன் அல்லவா? ஜோடியாகவோ, தோழிகளோடோதான் வருவார்கள் என்றும் சொன்னேன். அப்படி இருக்கையில் எப்படி ஒரு பெண் தனியாக கேட்பாரற்று மட்டையாகிக் கிடக்க முடியும் ?அதுதான் மேஜிக்.மணி இரவு ஒன்றைக் கடந்ததும், வேகமாக ஒலித்துக்கொண்டிருந்த இசை சற்று சோர்வடையும். மது போதை ஏற்றிக் கொள்ள வேண்டியவர்கள்... வயிறு காலியாக இருக்கிறது என்று தோன்றி நிரப்பிக் கொள்ள வேண்டியவர்களுக்கு ஒரு சிறிய இடைவெளி.

இந்த இடைவெளி முடிந்து இன்னொரு ரவுண்ட் ஆரம்பித்ததும் இசை ரவுத்திரமாக ஒலிக்க ஆரம்பிக்கும். பேய் போல ஆட ஆரம்பிப்பார்கள். இப்போது ஜோடியாக வந்தவர்கள் பிரிய ஆரம்பிப்பார்கள். தோழிகள் தொலைந்து போவார்கள். அங்கிள்களும், ஆள் பிடிக்க வந்தவர்களும் ஆர்வமாக எழுந்திருப்பார்கள். ஆட்டமும் உச்சகட்டத்தில் இருக்கும்!

(ரவுண்ட் அப் தொடரும்)

அராத்து