ரெண்டு முறை ஆடிஷன்ல சொதப்பி ரிஜக்ட் ஆனேன்!



‘ஆடை‘ அமலாபால் எந்த அளவுக்கு பேசப்படுகிறாரோ அதே அளவுக்கு நங்கேலி பாத்திரத்தில் நடித்த அனன்யா ராம்பிரசாத்தும் கவனத்தை ஈர்த்திருக்கிறார். ஆனால், ‘ஆடை‘ சம்பந்தப்பட்ட எந்த விழாவிலும் இவரைப் பார்க்க முடியவில்லை!
‘யாரும்மா நீ?’ என்னும் கேள்வியுடன் பிடித்தோம் அனன்யாவை.

‘‘திட்டமிட்டுதான் என் கேரக்டரை மட்டுமில்ல என்னையும் மறைச்சாங்க..!’’ உற்சாகத்துடன் பேச ஆரம்பிக்கிறார் அனன்யா. ‘‘சென்னைதான் சொந்த ஊர். அப்பா ராம்பிரசாத் ஒரு கம்பெனில வேலை செய்யறார். அம்மா நல்லா படம் வரைவாங்க. என் தாத்தா ஓர் எழுத்தாளர்!ஸ்கூல்ல படிக்கிறப்ப படிப்பை விட டான்ஸ், பாட்டுலதான் ஆர்வம் அதிகமா இருந்தது.

எம்ஓபி வைஷ்ணவா கல்லூரில போன வருஷம்தான் விஸ்காம் முடிச்சேன். அங்க ஒரு ஷார்ட் ஃபிலிம் வாய்ப்பு கிடைச்சது. அதை எடுத்தவர் என் சீனியர். அவர் புட் சட்னி யூ டியூப் சேனல்ல வேலை செய்தாரு. அவங்க மூலமா எனக்கு புட் சட்னி வாய்ப்பும் கிடைச்சது. போதாதா..? அப்படியே தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் ஆகிட்டேன்.

ஆக்சுவலா சினிமாவுக்கு வருவேன்... நடிப்பேன்னு எல்லாம் நான் மட்டுமில்ல... என் நண்பர்களும் குடும்பமும் கூட எதிர்பார்க்கலை!

ஆனா, ஃபேமிலி ஃபுல் சப்போர்ட் பண்றாங்க. ‘ஆடை’ல நான் நடிச்சதுல அப்பாவும் அம்மாவும் செம ஹேப்பி...’’ மலரும் அனன்யா, முன்பே சினிமாவில் நடித்திருக்க வேண்டுமாம்.

‘‘ரீல் சுத்தலை! கல்லூரில படிச்சப்பவே ‘மேயாத மான்’ படத்துல வைபவ் தங்கச்சி இந்துஜா கேரக்டர்ல நடிக்க கூப்பிட்டாங்க. ஆனா, ஆடிஷன்ல சொதப்பிட்டேன்! வருஷா வருஷம் ஷாட் & ஸ்வீட் என்கிற தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் ஆடிஷன் நடக்கும். அதுல நானும் கலந்துக்கிட்டேன். ராமாயணம் பத்தி மோனோலாக் செய்தேன். சிவகுமார் பாலசுப்பிரமணியம் சார்தான் அதை இயக்கியிருந்தார். அவர் என் நண்பர் மட்டுமில்ல... குருநாதரும் கூட. நடிப்புன்னா என்னனு அங்கதான் கத்துக்கிட்டேன்.

அந்த ஷோவை பார்க்க வந்த ஏடி, ‘ஆடை’ ஆடிஷனுக்கு கூப்பிட்டார். ரம்யா கேரக்டருக்கான ஆடிஷன்ல திரும்பவும் சொதப்பினேன்!
அடுத்து செல்வி கேரக்டருக்கு ஆடிஷன். உள்ளுக்குள்ள ஒரு ஸ்பார்க். வித்தியாசமான கேரக்டர்னு புரிஞ்சுது. தைரியமா என் திறமையை காட்டினேன். செல்வி கேரக்டருக்கு செலக்ட் ஆனேன்.

அப்பவே, ‘இந்த கேரக்டர் பத்தி வெளில சொல்லக் கூடாது... பேட்டி தரக் கூடாது... பிரஸ் மீட், ஆடியோ விழானு எதுலயும் தலைகாட்டக் கூடாது... ஏன்னா, செல்வி கேரக்டரை நாங்க சீக்ரெட்டா வைச்சிருக்கோம்’னு இயக்குநர் சொன்னார்.டபுள் ஓகே சொல்லிட்டேன்! அந்த கேரக்டர் நல்லா தமிழ் பேசணும். எனக்கு தேனியைச் சேர்ந்த எழுத்தாளர் மீரான், பயிற்சி கொடுத்தார்...’’ என்ற அனன்யா, படக்குழு குறித்தும் தன் அடுத்தடுத்த எதிர்பார்ப்புகள் பற்றியும் விளக்கினார்.  

‘‘இயக்குநர் ரத்னகுமார் ரொம்ப ஃப்ரெண்ட்லியா பொறுமையா சொல்லிக் கொடுத்தார். அமலாபால் மேம் நட்பா பழகினாங்க. சுருக்கமா சொல்லணும்னா யூனிட்டே எனக்கு சப்போர்ட்டா இருந்தது. நல்ல நடிகைனு வாழ்க்கைல பெயர் வாங்கணும். மத்தபடி வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்ல...’’ என்ற அனன்யா, #MeToo பிரச்னை குறித்து குரல் கொடுத்தவர்.

‘‘ஆண் - பெண் என்கிற கட்டுக்குள்ள இந்த #MeToo விஷயத்தை நான் பார்க்கலை. வலிமையான மக்கள் வலிமையற்ற மக்கள் மேல காட்டற பாலியல் பிரச்னையாதான் பார்க்கறேன். அந்த வகைல எனக்கு நடந்ததை சொன்னேன்.

நமக்கு நம்பிக்கையா யார் இருக்காங்களோ அவங்ககிட்ட நமக்கு நடக்கும் பிரச்னையை சொன்னாலே போதும் மனசும் லேசாகிடும்... அதை எதிர்கொள்ளும் தைரியமும் வந்துடும். இதைத்தான் பெண்களுக்கும் ஆண்களுக்கும் நான் சொல்ல விரும்பறேன்!’’ அழுத்தம்திருத்தமாக சொல்கிறார் அனன்யா!

ஷாலினி நியூட்டன்