ஆமாம்... இது பலாஸோ சேலை!



ஆண்கள் அலுத்துக்கொள்வதும் சரிதான். பெண்களின் ஃபேஷன் உலகம் மட்டும் எப்படி தினம் தினம் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கிறது? பெண்களை அழகு படுத்தும் டிசைனர்களின் ஆர்வமா... இல்லை, பெண்களின் இன்னும் வேண்டும் என்னும் ஆசையா? தெரியவில்லை. புரியவில்லை.அடடே, இதோ அடுத்த டிரெண்ட் வந்தாச்சு!பலாஸோவுடன் அல்லது பேன்ட் உடன் இணைந்த புடவை! இதை பேன்ட் சேலை அல்லது பலாஸோ சேலை என்கிறார்கள்.

சமீபத்தில் டிவி நிகழ்ச்சியில் ‘பார் பார் தேகோ’ படத்தின் புரமோஷன் விழாவில் காத்ரீனா கைஃப் அணிந்து வந்த சிவப்பு நிற பலாஸோ சேலை பலரையும் ஈர்த்தது. இந்த உடை காத்ரீனா போன்ற பெண்களுக்கு மட்டும்தான் அழகாகத் தெரியுமா? எனில் மற்றவர்கள் எப்படி அணிந்தால் அழகாகத் தெரியலாம்..?

கேள்வி எழ பிடித்தோம் டிசைனர் பிரியா ரேகனை. ‘‘நிறைய நடிகைகளும், சின்னத்திரை பிரபலங்களும் இந்த பேன்ட் சேலைகளை கேட்டு வர்றாங்க. காத்ரீனா மட்டுமில்ல... யார் வேண்டுமானாலும் பலாஸோ சேலைகளை அணியலாம்!’’ என எடுத்ததுமே வயிற்றில் பால் வார்க்கிறார் பிரியா ரேகன்!‘‘பேன்ட் புடவை அல்லது பலாஸோ புடவைல ரெண்டு விதமான டிசைன்ஸ் செய்யறோம். ஒண்ணு தனியா டாப், பலாஸோ அல்லது பேன்ட் மேல புடவை.

இன்னொண்ணு பேன்ட் கூடவே இணைஞ்சு வருகிற துப்பட்டா ஸ்டைல் புடவை அல்லது லெஹெங்கா ஸ்டைல் புடவை. பேன்ட் புடவைக்கு ஒல்லியான, ஸ்டிரைட் பேன்ட் அதனுடன் இணைந்த புடவை. இதுக்கு மட்டும் கொஞ்சம் ஒல்லியா இருந்தா கூடுதல் அழகா தெரிவோம். இல்லைனாலும் இதுல இடுப்பு பகுதியை மறைச்சுக்கலாம்.

சில பப்ளி பெண்களுக்கு தொடைப்பகுதி கொஞ்சம் பெருசா இருக்கும். அவங்களுக்கு இடுப்பு, தொடைகளை மறைச்சு இந்த புடவை டிசைன் செய்யலாம். சரியா கணுக்கால் கிட்ட இந்த ஸ்டிரைட் பேன்ட் முடியும். அதனால் கணுக்கால், பாதம், கால்கள் பளிச்னு தெரியும். முடிந்தவரை நல்ல காலணிகள் போட்டுக்கணும்.

நகைகள் அவங்கவங்க சாய்ஸ். எப்படியும் போட்டுக்கலாம். காட்டன் வெரைட்டியா இருந்தா ஆக்ஸிடைஸ்ட் நகைகள்; சிஃப்பான், ஜியார்ஜெட் கலந்த வேலைப்பாடுகள் கொண்ட பேன்ட் சேலைன்னா குந்தன், பீட், சில்க் திரட் நகைகள்...இப்படி அணிஞ்சா கிராண்ட் லுக் கிடைக்கும்.

என் மெட்டீரியலே கிராண்டாதான் இருக்குனா... நகைகளே வேண்டாம்! காதில் மட்டும் ஸ்டட் போட்டுகிட்டு டிரஸ்ஸை ஹைலைட் செய்யலாம்...’’ என்னும் பிரியா, அடுத்து பலாஸோ சேலை குறித்து விளக்கினார்.

 ‘‘தோத்தி சேலைகள் எப்படி டிரெண்ட் ஆனதோ அதேதான். புடவை கட்டணும். அதையே கொஞ்சம் மாடர்னா வித்யாசமா கட்டணும் என்கிற எண்ணம்தான் இந்த பலாஸோ சேலை அணியறதுக்கான அடிப்படை!உயரமான காத்ரீனா மாதிரி உடல் கொண்ட பெண்கள் பலாஸோ பேன்ட்டை நீளமா, கொஞ்சம் பாதங்களை மறைக்கும் அளவுக்கு அணியலாம்.

எனக்கு மைனஸே என் உயரம்தான் என்றாலும் இந்த நீண்ட பேன்ட் கொஞ்சம் உயரத்தை குறைவாதான் காட்டும் என்பதை மறக்காதீங்க!புடவை பல்லுவ அப்படியே இடைப்பகுதி மேல நிறுத்தினா வளைவு நெளிவுகள் தெரியும். பார்க்கவும் அருமையா இருக்கும்.

போட் நெக் அல்லது சைனிஸ் காலர் நெக் பிளவுஸ் கூட மேட்ச் செய்தா ரொம்ப ஒல்லியா இருக்கும் பெண்கள் கூட பப்ளியா தெரிவாங்க.பப்ளி பெண்கள் புடவையையும் பலாஸோவையும் ஒரே டிசைன் கலர்ல போட்டுக்கலாம். உயரம் குறைவா இருந்தா ஆங்கிள் பலாஸோ புடவை போட்டா உயரமாவும், கால்களை கவர் செய்தா இன்னும் உயரம் குறைவா தெரிவதையும் தடுக்கலாம்.

இதுலயே இன்னொரு வெரைட்டியும் இருக்கு. இடுப்பு, தொடைப்பகுதி வரை இறுக்கமான பேன்ட்டும் கீழே அப்படியே பலாஸோ ஸ்டைலும் இருக்கும் இந்த வெரைட்டிக்கு ஃபியூஷன் பலாஸோன்னு பேரு.முகலாய பெண்கள் பாணி பாட்டம் வேர் இது. அது கூட இணைஞ்ச புடவைகளும் வருது. பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி  அப்படியான உடைதான் சமீபத்துல அணிஞ்சிருந்தாங்க.

இந்த பலாஸோ & பேன்ட் புடவைகள் காட்டன்ல ஆரம்பிச்சு எல்லா மெட்டீரியல்களிலும் ஆன்லைன்லயே கிடைக்குது. ரூ.1500ல ஆரம்பிச்சு அதிகபட்சமா ரூ.10 ஆயிரம் வரை விற்பனைக்கு இருக்கு.  என்ன... இந்த உடை இப்பதான் டிரெண்டுக்கு வந்திருக்கு. அதனால எங்கே நீங்க போட்டுக்கிட்டு போனாலும் ஊரே உங்களைத்தான் பார்க்கும். இது என்ன மாடல்னு விசாரிக்கும்.

அதுக்கெல்லாம் நான் சங்கடப்பட மாட்டேன்னு சொன்னா... இந்த பேன்ட் & பலாஸோ புடவைகளை வாங்கிக் கட்டுங்க. உங்களை ஃபேஷன் விரும்பியா கெத்தா காட்டும்!’’ என கண்சிமிட்டுகிறார் பிரியா ரேகன்.

ஷாலினி நியூட்டன்