கடாரம் கொண்டான்



வேகமும், பரபரப்பும் புதிருமாக விரையும் விக்ரமே ‘கடாரம் கொண்டான்’.மலேசியாவில் சாலையில் பைக்கில் விரையும் விக்ரம் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்படுகிறார். அவரை போலீசார் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்க்க, அவரைக் கொல்ல சதி நடக்கிறது. போலீசாரும் அவர் பின்னணியைக் கண்டறிந்து தங்கள் பிடியை இறுக்குகிறார்கள்.

இதற்கிடையில் விக்ரமைப் பார்த்துக் கொள்ளும் டாக்டர் அபிஹசனின் மனைவியைக் கடத்தி வைத்து, விக்ரமை வெளியே கொண்டு வரத் துடிக்கிறார்கள். வில்லனான போலீஸ் அதிகாரியும் விக்ரமை கொல்லத் துரத்துகிறார். விக்ரம் யார்? ஏன் அவரைக் குறி வைத்து துரத்துகிறார்கள்? தன்னையும் மீட்டுக்கொண்டு மனைவியையும் அபி காப்பாற்றினாரா... என்பதே படத்தின் இறுதிக் கணங்கள்.

தில் ஹீரோ, கல் நெஞ்சு வில்லன்கள் என மிரட்டும் கதையை ‘ஹைவே ஸ்க்ரீன்ப்ளே’யில் ஓடவிட்டிருக்கிறார்கள். தொடக்கத்தில் கேமரா நெருங்கி வரும் திகில் நிமிடங்களில் ஆரம்பித்து, உடனே படத்தைத் துவக்கி வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா. தனது தோற்றத்திற்கு ஏற்ற ஆக்‌ஷன் கதையில், அதிகம் பேசாமல், சட்சட்டென முடிவெடுத்துக் காரியம் சாதிக்கும் நேர்த்தியில் விக்ரம் படு ஸ்மார்ட். ஸ்டைல், மாஸ் இரண்டும் சேர்ந்து தெறித்து, கொஞ்சமும் பிசிறே இல்லாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார்.

அறிமுகமாகியிருக்கும் அபிஹசனுக்கு நல்வரவு. அக்‌ஷரா ஹாசன் கணவரோடு இருக்கும் இடங்களிலும், கர்ப்பிணியாக தவிக்கும் இடங்களிலும் நேர்த்தி. மலேசிய பெண் அதிகாரியாக வரும் லேனா, செர்ரி கம்பீரத்தில் நினைக்க வைக்கிறார்கள்.

னிவாஸ் குப்தாவின் கேமரா ஓட்டமும் நடையுமாக, மகா வேகத்தில் பயணிக்கிறது. ஜிப்ரானின் பின்னணி இசை பக்கா. போலீஸ் தலைமையகத்திற்கு விக்ரமும், அபியும் சாவகாசமாக கோட்டை மாட்டிக் கொண்டு வருவது காதில் பூ. விக்ரமின் கேரக்டர் கடைசி வரைக்கும் வரையறுக்கப்படாமல் சிரமப்படுவது ஏனோ?விரைந்து பறக்கும் த்ரில்லரில் உட்கார வைக்கிறார் ‘கடாரம் கொண்டான்’.

குங்குமம் விமர்சனக் குழு