face app எச்சரிக்கை!



‘வயதானபின் நம் முகம் எப்படி இருக்கும்?’

இதுதான் சென்ற வாரம் சுமார் 15 கோடி மக்களை சுண்டி இழுத்த கேள்வி. நரைத்து சுருக்கம் விழுந்த நம் முகம் எப்படி இருக்கும், கால ஓட்டத்தில் முன்னே சென்று பார்த்துவிடலாம் என அனைவரும் அந்த செயலியை (app) தரவிறக்கினார்கள். தங்கள் புகைப்படங்களை அப்லோட் செய்தார்கள். தங்கள் வயதான புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார்கள். கேலி செய்தார்கள். மகிழ்ந்தார்கள்.

ரஷியாவைச் சேர்ந்த வைர்லெஸ் லேப்ஸ் எனும் நிறுவனத்தின் ‘ஃபேஸ் ஆப்’ (Face App) எனும் செயலிதான் பலரை நரை கூடி கிழப்பருவம் எய்தச் செய்தது.இந்த செயலி இதுவரை சுமார் 10 கோடி முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் சுமார் 15 கோடி புகைப்படங்கள் (முகங்கள்) பதிவேற்றப்பட்டுள்ளன. இமேஜ் ப்ராஸஸிங் (Image processing), பேட்டர்ன் ரெகக்னிஷன் (Pattern recognition), இன்னும் சிக்கலான பல தொழில்நுட்பங்களும், அல்காரிதங்களும் பயன்படுத்தி இந்த செயலியில் உள்ளிடப்படும் இளம் வயது புகைப்படம் வயோதிக புகைப்படமாக மாற்றப்பட்டது.

சிக்கல் இங்குதான் ஆரம்பிக்கிறது.சைபர் உலகில் தமிழ் சினிமாவைப் போல் மகிழ்ச்சியான க்ளைமேக்ஸ் வருவதில்லை. மாறாக விக்கிரமாதித்தியன் வேதாளம் கதை போல் பிரச்சனை தொடங்குகிறது.

தகவல் பாதுகாப்பு:
ஃபேஸ் ஆப் செயலியின் முதல் சிக்கல், நீங்கள் அந்த செயலிக்கு உள்ளிட்ட உங்கள் புகைப்படம்தான். உங்களின் இளம் வயது புகைப்படமும், முதிர்ந்த வயது புகைப்படமும் இப்போது அந்நிறுவனத்தின் கையில்! அந்த செயலியில் நீங்கள் படிக்காமல் ‘I Accept’ என்று ஏற்றுக்கொண்ட ஒப்பந்தத்தின்படி உங்கள் புகைப்படங்களை என்ன தேவைக்கு வேண்டுமானாலும் அந்நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
அந்த ஒப்பந்தத்தில், மிகத் தெளிவாக, உங்கள் புகைப்டங்களை நேரடியாகவோ, மாற்றங்கள் செய்தோ, வெட்டி - ஒட்டியோ, அச்சாகவோ, மின் பதிப்பாகவோ இந்நிறுவனம் பயன்படுத்திக்கொள்ளும் என குறிப்பிட்டுள்ளது!என் படத்தை வைத்து என்ன செய்ய முடியும் என நீங்கள் கேட்கலாம்?

என்ன வேண்டுமானாலும் செய்யலாம்! அந்த செயலியை இன்ஸ்டால் செய்யும்போது உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் புகைப்படங்கள், காண்டேக்ட், இடம், கேமிரா என பலவற்றுக்கும் நீங்கள் அனுமதி கொடுத்திருக்கிறீர்கள்!

நீங்கள் பதிவேற்றிய படம் மட்டுமல்ல, உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்த படங்களையும் ஒருவேளை செயலி எடுத்துக் கொண்டிருக்கலாம். உங்களின் புகைப்படம் என்பது பல தகவல்களைக் கொண்டிருக்கும். முக அமைப்பு, நாடு, ஊர், நிறம்.... மேலும் அவர்கள் மிக எளிதாக உங்கள் கலாசாரம், உணவு, தட்பவெப்ப நிலை... என பல தகவல்களை ஒன்றிணைத்து பல ஆய்வுகளுக்கு பயன்படுத்த முடியும்.

இதன் மூலம் இணைய விளம்பர நிறுவனங்களுக்கு உங்கள் படத்தை விற்க முடியும். அந்தப் படத்தை உங்கள் அனுமதியில்லாமல் யார் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும்!ஆன்லைன் ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் நம் புகைப்படம் வந்தால் சமாளித்துவிடலாம். ஆணுறை விளம்பரத்தில் வந்தால் என்ன செய்வது?

Face app + Facebook:

நீங்கள் உங்களின் புகைப்படங்களை பிரைஸ் ஆப் செயலியில் உள்ளிட்டு அதில் வெளிவந்த வயதான புகைப்படத்தை நிச்சயம் ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருப்பீர்கள்.இந்த செயலியும் ஃபேஸ்புக்கும் சேரும் புள்ளி மிகவும் ஆபத்தான புள்ளி.  ஏற்கனவே இந்த செயலியின் மூலம் உங்களைப் பற்றிய பல தகவல்களைக் கொடுத்து விட்டீர்கள் இப்போது சரியாக facebook profile உடன் அதை பகிரும்போது மேலும் பல தகவல்களை நீங்கள் அந்நிறுவனத்திற்கு கொடுக்கிறீர்கள்.

உங்களின் முக அமைப்பை மாற்றிக் கொள்ளும் ’பிளாஸ்டிக் சர்ஜரி’ விளம்பரங்கள்; உங்கள் நிறத்தை பொலிவாக்கும் விளம்பரங்கள்; உங்களுக்கு முகப்பரு அதிகம் இருந்தால் அது தொடர்பான க்ரீம்களைப் பற்றிய விளம்பரங்கள்... என ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவை விளம்பரங்களைக் குவிக்கலாம். பொத்தாம் பொதுவாக விளம்பரங்களை செய்வதைவிட மைக்ரோ டார்கெட் என்னும் முறையில் குறிப்பிட்ட நபருக்கு என்ன வேண்டுமோ அதை விளம்பரமாகக் காட்டி அவர்களை அந்தப் பொருளை வாங்க வைத்துவிடுவது சுலபமாகிவிடும்.

ஃபேஸ்புக் தகவல்கள் என்பது வெறும் நட்பு பட்டியல் மட்டுமல்ல; உங்களின் நடத்தைப் பட்டியலும் கூட!ஃபேஸ்புக்கில் பகிர்வதை வைத்து உங்களுடைய மன நிலையையும் உங்களுடைய நடத்தையையும் எளிதாக பகுப்பாய்வு செய்துவிட முடியும். இதை ‘Behavioural analysis’ என்கிறார்கள்.

உங்கள் மனநிலையையும் நடத்தையையும் துல்லியமாக ஆராய்வதின் மூலம் உங்களுக்கு எந்த மாதிரியான அழகு சாதனங்கள் வேண்டும் அல்லது எந்த மாதிரியான சர்ஜரிகள் வேண்டும் என்பதை துல்லியமாகக் காட்டி மயக்கி விட முடியும்.

Mass Surveillance:

புகைப்படங்கள் செயற்கை அறிவுத்திறன் மற்றும் மெஷின் லேர்னிங் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, மிகத் துல்லியமாக மனிதர்களின் முகங்களைப் பகுப்பாய்வு செய்து, குறிப்பிட்ட நபரை விரைவாகக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த முடியும்.  செயற்கை அறிவுத்திறன் கொண்ட மென்பொருட்கள் மிகத் துல்லியமாகச் செயல்பட அவற்றுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பல வகையான தகவல்கள் தேவை. நீங்கள் எவ்வளவு தகவல்களை உள்ளிடுகிறீர்களோ அந்த அளவுக்கு அது சிறப்பாகச் செயல்படும்.

சில மாதங்களுக்கு முன்பு ஃபேஸ்புக் நிறுவனம் 10Year Challange என்னும் அரசின் உதவியுடன் பல கோடிப் பேரின் சமீபத்திய புகைப்
படம் மற்றும் 10 ஆண்டுகளுக்கு முன்பான அவர்களின் புகைப்படங்களை பகிரச் செய்தது.  இதன் மூலம் அவர்களின் செயற்கை அறிவுத்திறன் கொண்ட முகங்களை கண்டுபிடிக்கும் மென்பொருளை மேம்படுத்திக் கொண்டது. அதே போன்றதொரு செய்கைக்காக இந்த நிறுவனமும் முயற்சிக்கலாம்.

துல்லியமான முகங்களைக் கண்டுபிடிக்கும் மென்பொருட்கள் இன்று பல நாடுகளில் அரசுகளுக்கு தேவையாக இருக்கிறது. இதன்மூலம் அவர்களால் மக்களை கண்காணிக்கவும்; தங்களுக்கு எதிராகச் செயல்படும் மக்களை அல்லது கூட்டங்களில் இருக்கும் நபர்களைக் கண்டுபிடித்து அவர்களின் தனிப்பட்ட தகவல்களையும் முகவரியையும் தெரிந்து கொள்ளவும் முடியும்.

இன்று உலகம் முழுவதும் இருக்கும் அரசுகள் இந்த தொழில்நுட்பத்திற்காக பல கோடிகளைக் கொடுத்து மென்பொருட்களை வாங்கத் தயாராக இருக்கின்றன. இதனால் இந்த மென்பொருட்களுக்கு பெரும் சந்தையும் உருவாகிவிட்டது!கூகுள் நிறுவனம் முதல் பல நிறுவனங்கள் இந்த சந்தையைக் கைப்பற்ற போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.

அவர்களின் மென்பொருட்களை பயிற்சி கொடுத்து தயார் செய்ய தேவையான தகவல்களை நம்மிடம் இருந்து இலவசமாகப் பெறுகிறார்கள்! இந்த நொடி வரை நமக்கிருக்கும் ஒரே ஆறுதல் நம் புகைப்படங்களை இந்நிறுவனங்கள் இன்னும் தவறான வழியில் பயன்படுத்தவில்லை என்பதே. இதையே பயன்படுத்தப்படுவது இன்னும் வெளிப்படவில்லை என்றும் சொல்லலாம்.  சரி... உடனடியாக நாம் என்ன செய்ய வேண்டும்..?
‘நீக்குங்கள்!’

வினோத் ஆறுமுகம்