Face to Face வாசகர்கள் கேள்விகள் குஷ்பூ# பதில்கள்#



உங்களுக்கு கோயில் கட்டினார்களே... அதை நேரில் பார்த்திருக்கிறீர்களா?

பா.ஜ.க.வில் அழைத்தால் சேருவீர்களா?
- த.சத்தியநாராயணன்,
அயன்புரம்.
மாட்டேன்!

மகளே... தைரியம்தான் உங்கள் அடையாளம் என்றால் எந்த நிகழ்வைச் சொல்வீர்கள்?
- பி.சாந்தா, மதுரை - 14.

ஒரு நிகழ்வை மறக்கவே முடியாது சாந்தாம்மா. 1986 செப்டம்பர் 13. எங்க அப்பா எங்க எல்லாரையும் அனாதையா விட்டுட்டு பாம்பேக்கு போயிட்டார். அப்ப நான் குடும்பத்துல கடைக்குட்டி. அந்த சோதனையான தருணத்திலும் நான் மனம் கலங்கலை. என் குடும்பத்தையே கட்டிக்காக்குற பொறுப்பான ஒரு குடும்பத் தலைவியா என்னை நானே மாத்திக்கிட்டேன்.

அன்னில இருந்து இன்னிக்கு வரை அந்த தைரியம்தான் நடைபோட வைக்குது.

செல்லப்பிராணிகள் வளர்ப்பதுண்டா?
- அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

ஓயெஸ். எங்க வீட்ல எல்லாருமே pet lovers. நாலு நாய்ங்க வளர்க்கறோம். நாலு பேருமே எங்க செல்லக்குட்டீஸ்.
இன்னொரு நாய் வாங்கலாம்னு விரும்பினா என் வீட்டுக்காரர் தடை போடுறார். ‘இன்னொரு நாயை கூட்டிட்டு வரணும்னா... நீ வெளியே போயிடுங்கறார்’.

சுந்தருக்கும் பெட்ஸ் பிடிக்கும்தான். ஆனா, அவர் அதை ரொம்ப கொஞ்ச மாட்டார். கடைக்குட்டி நாய், அவர் மேல ரொம்ப செல்லம் கொஞ்சும். அவர் எங்கே போனாலும் ஃபாலோ பண்ணும்.  என் பொண்ணுக்கு பூனைக்குட்டிகள் ரொம்பப் பிடிக்கும். அவ, ஆசை ஆசையா ரெண்டு பூனைக்குட்டிகள் வளர்த்திருக்கா!

நீங்க சிக்கனப் பேர்வழியா? தாராள செலவாளியா?
- சுபாஷினி, திருச்சி - 3.

தேவை இருக்கற இடத்துல சிக்கனம் பண்ணுவோம். வாழ்க்கையையும் நல்லபடியா வாழுவோம். இந்த விஷயத்துலேயும் எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் ஒரே அலைவரிசை.

‘நாம நிறைய சம்பாதிச்சு அதை என்ன செய்யப்போறோம்... மத்தவங்களுக்கும் கொடுத்து உதவுவோம்’னு அவரும் சொல்லுவார். குடும்பத்தினர், தூரத்து சொந்தங்கள், நண்பர்கள் யாருக்காவது மருத்துவ, கல்வி உதவி தேவைனா ஓடிப்போய் உதவுவோம்.
அந்த வகையில் எங்க ரெண்டு பேருக்குமே தாராளமனசுதான்.

மணியம்மையாக நடிக்க ஹோம் ஒர்க் செய்தீர்களா?
- அ.யாழினி பர்வதம், சென்னை - 78.

என் கேரியரில் மறக்க முடியாத படம், ‘பெரியார்’. மணியம்மையாக ஹோம் ஒர்க் பண்றதே சிரமமா இருந்தது. அவங்க கதாபாத்திரத்தை நான் பண்ணக்கூடாதுனு சிலபேர்கிட்ட இருந்து எதிர்ப்பு கிளம்புச்சு.

ஆனா, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களும், சத்யராஜ் சாரும், இயக்குநர் ஞானராஜசேகரன் சாரும் எனக்கு தைரியம் சொன்னாங்க. அந்த கதாபாத்திரத்தை நான்தான் பண்ணணும் என்பதிலும் தெளிவா இருந்தாங்க. கதாபாத்திரத்துக்கான ஹோம் ஒர்க் வேலையை ஆரம்பிக்கிறப்பதான் ஒரு விஷயம் உணர்ந்தோம். மணியம்மை அவர்களின் புகைப்பட ஆதாரங்கள் தவிர அவங்களைப்பத்தின வேற எந்த ஆதாரங்களும் எங்களுக்கு கிடைக்கல.

அவங்க எப்படி பேசுவாங்க... அவங்க நடை எப்படி இருக்கும்... இப்படி எந்த வீடியோ ரெஃபரன்ஸும் எங்களுக்கு கிடைக்கலை.
அதனால ரொம்ப சிரமப்பட்டோம். கி.வீரமணி சாரும் டாக்டர் கலைஞர் அவர்களும் சொன்ன தகவல்கள் எங்க எல்லாருக்குமே ரொம்ப உதவியா இருந்தது. மணியம்மை அவர்கள் தந்தை பெரியாருக்கு பின்னாடி எப்படி நிற்பாங்க... எப்படி பேசுவாங்க... இப்படி நிறைய தகவல்களை டாக்டர் கலைஞர்தான் சொன்னார்.இதனாலதான் அந்த கதாபாத்திரத்தை என்னால சிறப்பா பண்ண முடிஞ்சதுனு நினைக்கறேன்.

உங்களுக்கு கோயில் கட்டினார்களே... அதை நேரில் பார்த்திருக்கிறீர்களா?
- அந்தோணிபாபு, திருநெல்வேலி.

உண்மையை சொல்லணும்னா அப்ப அதுக்கான சூழல் அமையல. எனக்கு கோயில் கட்டியிருந்த டைம்ல நான் பிசியா இருந்தேன். என் வீட்டுக்கே கூட போக முடியாமல் டே அண்ட் நைட் ஷூட்ல ஓடிட்டிருந்தேன். ‘கோயில் கட்டியிருக்காங்க’னு ஒரு சந்தோஷத்துக்கு எப்படி ரியாக்ட் பண்ணணும்னு கூட சிந்திக்க முடியாம பறந்துட்டிருந்தேன்.

இன்னொரு விஷயம், கோயில் கட்டியிருக்கற விஷயம் என் மைண்ட்ல சிங்க் ஆகுறதுக்குள்ள அது பழைய விஷயமாகியிருந்தது!
ரொம்ப இடைவெளிக்குப் பிறகு அந்தக் கோயிலுக்கு போகலாம்னா... பழைய நியூஸுக்கு திடீர்னு ரியாக்ட் பண்ணி என்ன பண்ணப்
போறோம்னு யோசனை. அப்படியே விட்டாச்சு!

பெருசுகள் முதல் சிறுசுகள் வரை உங்கள் மீது ஈர்ப்புடன் இருக்க என்ன காரணம்?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

ஒரு டன் ஐஸ் கட்டியா இனிக்குது சார் உங்க கேள்வி. என்னோட இயக்குநர்கள், நான் நடித்த கதாபாத்திரங்கள்... இதெல்லாம் ஒரு காரணம்னாலும் அதையெல்லாம் தாண்டி இன்னொரு விஷயம்... எங்க அம்மா கொடுத்த அவங்களோட கால்வாசி அழகு!
அவ்ளோதான்.

பெண்களுக்கு மீ டூ (me too) வரமா? சாபமா?
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

அந்தப்பக்கம் நான் போனதில்லை. ஏன்னா, சில நேரங்கள்ல சில விஷயங்களை தவறா நாம பயன்படுத்தறோம்.
நானும் ஒரு புரொடக்‌ஷன் கம்பெனி வச்சிருக்கேன். அங்கிருந்து அப்படி யாரும் பேசியிருக்காங்களானும் தெரியாது. என்னைப் பொறுத்தவரை யாராவது உங்ககிட்ட தவறா நடந்துக்கிட்டால், அப்பவே அந்த செகண்டே உங்க ரியாக்‌ஷனை காண்பிச்சிடணும். அதுதான் சரியானதும் கூட!
ஆனா, அந்த விஷயத்தை அப்ப சும்மா விட்டுட்டு இருபது வருஷம் கழிச்சு அதைப்பத்தி பேசுறதுல எனக்கு உடன்பாடு இல்லை.

நான் சினிமாவில்தான் வளர்ந்திருக்கேன். இந்த மாதிரி விஷயத்தை சந்திச்சதில்ல. அப்படி ஒரு விஷயம் உண்மையில் இருக்கா... இல்லையாங்கறதும்கூட தெரியாது. ஆனா, உண்மையாகவே சில பேர் me too பிரச்னையால பாதிக்கப்பட்டிருப்பாங்க. அதனாலதான் அவங்க தங்களோட வலியை, பாதிப்பை தைரியமா பேசுறாங்க. அதையும் நாம புரிஞ்சுக்கணும். எப்பவுமே ஒரு நாணயத்துக்கு ரெண்டு பக்கம் இருக்கறது மாதிரி, நாம ஒரு பக்கத்தை மட்டும் பார்க்கக் கூடாது. அதன் இன்னொரு பக்கத்தையும் ஆராயணும்.

மேடம் வீட்டில் மதுரையா? சிதம்பரமா?
- ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்.

பெங்களூருவில் இருந்து இப்படி ஒரு கேள்வியா! ஆக்சுவலி சமமாகத்தான் இருக்கு! அவரோட ஆட்சினு சொல்லிக்கற அளவுக்கு அவருக்கு சுதந்திரம் கொடுத்து வச்சிருக்கேன். ஆனா, ஒவ்வொரு வீட்லேயும் உண்மை என்னாங்கற ரகசியம் நமக்கு மட்டும்தானே
தெரியும் பாலாஜி!

உங்க வாழ்க்கைப் பாதையில் இவ்வளவு முன்னேற்றம் தமிழகத்தில் அடைவோம் என நினைத்தீர்களா?
- ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்.

சத்தியமா இல்லை சார். நான் தமிழ்நாட்டுக்கு வருவேன்னே நினைச்சுக்கூடப் பார்த்ததில்ல. அப்புறம் எப்படி இவ்ளோ வெற்றி இருக்கும்னு நினைச்சிருக்க முடியும்! என்னோட குடும்ப சூழ்நிலையாலதான் தென்னிந்தியா வந்தேன். அப்படியே தமிழ்நாட்டுல செட்டில் ஆனேன். இவ்ளோ பெரிய வெற்றி எனக்கே ஆச்சரியமா இருக்கு!

(கேள்விகள் தொடரும்)

ஆ.வின்சென்ட் பால்