பகவான்-39
உருகுவே நாட்கள்!
உருகுவே.உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கும்போது மட்டும்தான் இந்த நாட்டின் பெயரே எல்லோருக்கும் நினைவுக்கு வரும். தென்அமெரிக்காவில் பிரேஸில், அர்ஜெண்டினாவுக்கு அருகில் இருக்கும் சிறிய நாடு.
மக்கள் தொகையில் பாதிப் பேருக்குத்தான் கடவுள் நம்பிக்கையே உண்டு. மீதிப் பேர் ரோமன் கத்தோலிக்கர்கள். ஸ்பானிஷ்தான் உருகுவேயின் மொழி.
அந்த காலக்கட்டத்தில் ஓஷோவை வரவேற்றது உருகுவே மட்டும்தான். ஓஷோ, தங்கள் நாட்டுக்கு வந்து நிரந்தரமாகத் தங்குவதன் மூலமாக, உலக அளவில் உருகுவேக்கு மரியாதை கிடைக்கும் என்று அந்நாட்டின் ஜனாதிபதி நினைத்தார். மேலும் ஐரோப்பியத் தொடர்புகள் மூலமாக பெருமளவு அந்நியச் செலாவணியையும் ஈட்டமுடியும் என்று நம்பினார்.
உலகமெங்கும் ஓஷோவை ஆன்மீகவாதிகள் சில நிபந்தனைகளோடு ஏற்றுக்கொண்டார்கள். இந்தியாவில் தொடங்கி அமெரிக்கா வரை அவரை எதிரியாகக் கருதியவர்கள் அரசியல்வாதிகள் மட்டும்தான்.
பின்னாளில் அமெரிக்காவின் நிர்ப்பந்தத்துக்காக ஐரோப்பிய நாடுகளிலும் அரசியல், பகவானை எதிர்த்தது. ஆனால் -இந்த நிலைக்கு நேர்மாறாக உருகுவேயின் அரசியல்வாதிகள் அவரை வரவேற்றார்கள்.அயர்லாந்து அரசு சுமுகமாகப் பேசி ஓஷோவை வழி அனுப்பி வைத்தது. 1989, மார்ச் 19ம் தேதி அயர்லாந்தில் இருந்து ஸ்பெயினுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர். ஸ்பெயினில் இருந்து கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் ஸ்பெயின் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் இருந்த சன்னியாசிகள், ஓஷோவை வரவேற்கும் மனநிலையிலேயே இருந்தார்கள். எங்கும் பகவானை விரட்டிக் கொண்டிருந்த பாழாய்ப்போன அரசியலே அங்கும் அவருக்கு எதிராக இருந்தது.
இதற்கிடையே ஓஷோவை தங்கள் நாட்டுக்கு தயவுசெய்து வந்துவிட வேண்டாம் என்று சிறுநாடான ஆண்டிகுவா கேட்டுக் கொண்டது. இத்தாலியில் அவரது விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஜெர்மனி, தன்னுடைய இரும்புக் கதவுகளை இறுக சாத்திக் கொண்டது.இலக்கற்ற வான்வழிப் பயணத்தின் வழியில் எரிபொருள் நிரப்பிக்கொள்ள மட்டும் சிலநாடுகள் அனுமதித்தன. இதற்கும் கூட அங்கிருந்த அரசு அதிகாரிகளுக்கு பெரும் தொகை கையூட்டாகக் கொடுக்க வேண்டியிருந்தது.
கரீபியன் நாடுகளுக்குச் செல்லும் வழியில் கனடாவில் எரிபொருள் நிரப்ப பகவானின் ஜெட் விமானம், காண்டர் என்கிற விமானநிலையத்தில் தரையிறங்க அனுமதி கேட்டது. பதறிப்போன கனடா அரசாங்கம், “இந்தப் பக்கமே வந்து விடாதீர்கள்...” என்று கதறியது.
இருப்பினும் எரிபொருள் தீர்ந்துகொண்டிருந்த நிலையில் வேறெந்த வழியுமில்லாமல் விமானத்தை வேண்டாவெறுப்பாகத் தரையிறங்க அனுமதித்தது கனடா அரசு. எனினும், ஓஷோ விமானத்தில் இருந்துகூட கீழே இறங்கக்கூடாது என்று கடுமையாக நிபந்தனை விதித்தனர்.பகவானின் கால் பட்டாலே தங்கள் மண் தீட்டுப்பட்டுவிடும் என்று கனடா அஞ்சுவது மாதிரி தோன்றியது.
ஒருவழியாக தென்னமெரிக்காவின் பிரேசிலில் ஒரு கடல் துறைமுகத்துக்கு விமானம் வந்து சேர்ந்தபோது பகவானின் உடல்நிலை, இடைவிடாத பயணங்களின் காரணமாக மோசமாகி இருந்தது.அமெரிக்காவின் மீது இரசாயனப் போர் தொடுத்தவர் என்று அவதூறுக்கு உள்ளான ஓஷோ, தங்கள் நாட்டுக்கு வந்து சேர்ந்திருக்கிறார் என்பதால் பிரேசில் பதற்றத்துக்கு ஆளானது. கெடுபிடி அதிகரித்தது.
பிரேசில் அதிகாரிகள் நேரடியாக விமானத்துக்கு வந்து எல்லோரையும் பரிசோதித்தார்கள். வெவ்வேறு நாடுகளுக்குப் போய்விட்டு வந்தவர்கள் என்பதால், அவர்கள் மூலமாக ஏதாவது தொற்றுநோய் தங்கள் நாட்டுக்குள் வந்துவிடுமோ என்று அவர்கள் அச்சப்பட்டனர். பகவானுக்குத் தேவையான முதலுதவி சிகிச்சைகள் அங்கே வழங்கப்பட்டன.
மூச்சுத்திணறல் இருந்ததால் அவருக்கு ஆக்சிஜன் மாஸ்க் வழங்கினார்கள். அங்கிருந்த அதிகாரிகளிடம் ஓஷோ சிரித்துப் பேசினார். “பயந்து விடாதீர்கள். நான் உங்கள் நாட்டில் தங்க வரவில்லை. உடனடியாக உருகுவேக்குத் தான் செல்கிறேன். நியாயமாக அவர்கள்தான் பயப்பட வேண்டும்!” என்றார்.
உருகுவேயில் பெரிய வரவேற்பு எதையும் ஓஷோவும், அவரது குழுவினரும் எதிர்பார்க்கவில்லை.ஆனால் -உருகுவே அரசு ஜமாய்த்து விட்டது. அந்நாட்டின் தலைநகரான மாண்டிவீடியோவில் சிறப்பான, கவுரவமான வரவேற்பு கிடைத்தது. இத்தகைய மரியாதையெல்லாம் கிடைத்து மாமாங்கமாகி விட்டதால் ஓஷோவும், அவரது சீடர்களும் உற்சாகமடைந்தனர்.
அங்கு கடற்கரையோரமாக வீற்றிருந்த அழகான ஒரு பங்களாவை ஓஷோவுக்கு ஒதுக்கித் தந்தார்கள்.பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஓஷோ தன்னுடைய வழக்கப்படி இயங்க ஆரம்பித்தார். தியானம், உரையெல்லாம் வழக்கம்போல நடந்தது.பகவானைப் பார்க்க தினமும் ஐம்பதிலிருந்து நூறு பேராவது வரத் தொடங்கினார்கள். அவர்களுக்காக மீண்டும் உரையாற்றத் தொடங்கினார்.அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியாவிலிருந்தெல்லாம் பகவானைப் பார்க்க பக்தர்கள் குவியத் தொடங்கினார்கள்.
உருகுவே அரசாங்கம் எதிர்பார்த்ததைப் போன்றே அந்நாட்டின் பெயர் செய்தித்தாள்களில் அடிபட்டது. அப்போது உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் மெக்ஸிகோவில் தொடங்கும் நேரம். எப்போதுமே கால்பந்தால் மட்டுமே அடையாளம் காணப்படும் உருகுவேயின் பெயர், ஓஷோ அங்கே தங்கியிருந்த காரணத்தாலும் தலைப்புச் செய்திகளில் இடம்பெற ஆரம்பித்தது.
ஓஷோ மிகவும் விரும்பக்கூடிய ரோல்ஸ்ராய்ஸ் காரை வழங்கக்கூடிய நிதிவசதி ஏழை நாடான உருகுவேக்கு இல்லை. ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டையாக ஒரு நீலநிற வோல்க்ஸ்வேகன் காரை அவரின் பயன்பாட்டுக்குக் கொடுத்தார்கள். ரஜனீஷ்புரத்தில் செய்ததைப் போலவே, அந்த காரில் செல்ஃப் டிரைவிங்காக நகர் உலா வரத் தொடங்கினார் பகவான்.ஓரிரு மாத காலம் நன்றாகத் தான் போனது.
உருகுவே நாட்டிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட முடியுமென்ற நம்பிக்கை பகவான் குழுவினருக்கு ஏற்பட்டது.இங்கே நிலங்கள் வாங்கி, புதிய ரஜனீஷ்புரத்தை உருவாக்கிவிடலாம் என்றுகூட நினைத்தனர்.ஆனால் -விதி அவர்களைக் கண்டு சிரித்தது.ஓஷோ எங்குமே ஒரு சுற்றுலாப் பயணியாகக் கூட சில நாட்கள் தங்கிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தது.
உருகுவே நாட்டில் அவர் நிம்மதியாக இருக்கிறார் என்று அங்கிருந்த அமெரிக்கத் தூதரக அதிகாரிகள், வாஷிங்டனுக்கு ரிப்போர்ட் அனுப்பி இருந்தார்கள்.அதன் அடிப்படையில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் உருகுவேக்கு உடனடியாகப் பறந்து வந்தார்கள்.
அரசியல்ரீதியாக உருகுவே குடியரசுத் தலைவரை மிரட்டத் தொடங்கினர். அப்போது ஜூலியோ மரியா என்பவர்தான் ஜனாதிபதி. ஓஷோவின் மீதும் பெரும் மதிப்புக் கொண்டவர்.
ஒருநாள் மாலை அவர் பகவானைச் சந்திக்க வந்தார்.“நான் உங்களது நிறைய நூல்களை வாசித்திருக்கிறேன். புதிய சமுதாயம் என்கிற உங்களுடைய கொள்கை என்னை மிகவும் ஈர்த்திருக்கிறது...” என்று கொஞ்சம் தயக்கமான குரலில் பேச ஆரம்பித்தார்.
“நீங்கள் என்னுடைய நலம் விரும்பி என்பதை அறிவேன். எந்த விஷயமாக இருந்தாலும் தயக்கமின்றி பேசலாம்…” என்று அனுமதித்தார் பகவான். “நாங்கள் மிகவும் ஏழை நாடு என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். நீங்கள் இங்கு வந்து தங்குவதின் மூலமாக எங்கள் நாட்டின் பெயர் புகழடையும், நிறைய முதலீட்டாளர்களை ஈர்க்குமென்று நினைத்தோம். ஆனால்.”“ஆனால்?”
“அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் எனக்கு முப்பத்தியாறு மணி நேரம் கெடு விதித்திருக்கிறார்...”உருகுவே கையாலாகாத நிலையில் இருப்பது ஓஷோவுக்குப் புரிந்தது.“என்னை வெளியேற்றச் சொல்லி மிரட்டுகிறார்களா?” ஓஷோ கேட்டார்.“ஆமாம். இல்லாவிட்டால் அவர்களிடம் நாங்கள் பெற்றிருக்கும் பல மில்லியன் டாலர் தொகையை உடனே திருப்பிச் செலுத்தச் சொல்கிறார்கள்...”“நீங்கள் என்ன முடிவெடுத்திருக்கிறீர்கள்?”
“உங்களை வெளியேறச் சொல்ல எனக்கு மனமில்லை. அதே நேரம் கடன் என்கிற அடிமைப் பத்திரத்துக்கு நான் கையெழுத்துப் போட்டிருக்கிறேன்...” ஜூலியோவின் கண்கள் லேசாகக் கசிந்தன.தன்னுடைய நாட்டின் மீதும், மக்களின் மீதும் அவர் கொண்டிருந்த அளவற்ற நேசம் பகவானுக்குப் புரிந்தது.
“உங்களுக்கு நான் எந்த தர்மசங்கடத்தையும் கொடுக்க மாட்டேன்...” என்று குடியரசுத் தலைவருக்கு வாக்கு கொடுத்தார்.கைகூப்பி நன்றி சொன்ன அவர், “உங்களை நாடுகடத்தி அவமானப்படுத்தச் சொல்லி எனக்கு உத்தரவு. என் உயிரே போனாலும் அதை செய்ய மாட்டேன்...” என்றார்.
எந்த ஆர்ப்பாட்டமுமின்றி, யாருக்கும் சொல்லாமல் அன்று மாலையே பகவானும், அவரது குழுவினரும் விமானநிலையத்துக்குச் சென்றார்கள்.ஆனால் -அதற்கு முன்பாகவே அங்கு அமெரிக்க அதிகாரிகள் இவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
(தரிசனம் தருவார்)
யுவகிருஷ்ணா
ஓவியம்: அரஸ்
|