ஊட்டி முதல் டார்ஜிலிங் வரை... சொர்க்கம் அல்ல...நரகம்!
சீரழியும் இந்திய மலைவாசஸ்தலங்கள்
கோடை காலம் வந்தாலே சில்லென்று ஊட்டிக்கும் கொடைக்கானலுக்கும் போய் வரலாம் என்றுதான் மனம் நினைக்கும். சமவெளிகளில் வருடா வருடம் வாட்டும் வெயிலின் தாக்கம் அப்படி. ஆனால், இந்த மலைவாசஸ்தலங்களின் நிலைமை ஒன்றும் இன்று சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பதுதான் எதார்த்தம்.

ஒரு காலத்தில் டூரிஸத்தின் மூலம் தங்களுக்கு வருமானம் இருக்கும், முன்னேற்றம் இருக்கும் என்பதால் வெளியூர்களிலிருந்து வருபவர்களை இருகரம் குவித்து வரவேற்றுக் கொண்டிருந்த இந்த ஊர்க்காரர்கள், ‘அச்சோ... இங்க வந்துடாதீங்க...’ என்று அலறும் நிலைக்கு இன்று வந்துவிட்டார்கள்.
ஊட்டி, கொடைக்கானல் போன்ற பெரிய சுற்றுலாத்தலங்கள் மட்டுமல்ல. ஏற்காடு, வால்பாறை போன்ற சிறிய சுற்றுலாத்தலங்களிலும் இதுதான் நிலை.
சரியாகச் சொன்னால், இந்தியா முழுக்க உள்ள சிம்லா, டார்ஜிலிங், கூர்க், குலு, மணாலி உட்பட எல்லா மலைவாசஸ்தலங்களுமே நெரிசலால் தவிக்கின்றன. கோடை காலங்களில் குவியும் சுற்றுலாப் பயணிகளின் நெரிசல், கட்டுக்கடங்காத டிராஃபிக், போதிய பார்க்கிங் வசதிகள் இல்லாததால் கடும் வாகன நெரிசல், இரைச்சல், காற்று மாசு, சுற்றுலாப்பயணிகள் ஆங்காங்கே எறிந்துவிட்டுச் செல்லும் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசு, அதிகரிக்கும் மக்கள் தொகை மற்றும் சூழலியல் மாற்றங்களால் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாடு... என்று மலைவாசஸ்தலங்களில் நிலவும் பிரச்னைகளின் பட்டியல் அனுமார் வால் போல் நீண்டுகொண்டே செல்கிறது.
 மலைவாசஸ்தலங்களில் தினசரி வாழ்வு என்பது கடினமானது. என்றாவது ஒருநாளோ இரண்டு நாட்களோ சுற்றுலா என்ற பெயரில் அங்குள்ள மரச் செறிவையும் பனி படர்ந்த சுழலையும் ஏரிகளையும் ரசித்துவிட்டு வருவது என்பது வேறு. அதில் இருக்கும் சுகமும், சுவாரஸ்யமும் அங்கு வசித்தால் பஞ்சாகப் பறந்து போகும்.
 ஆனால், அங்கேயே வருடம் முழுக்க வசிப்பது என்பது கொடுமையானது.அதனால்தான் மலை நகரங்களிலிருந்து சமவெளிக்குச் சென்று செட்டிலாவதற்கு வாய்ப்பு கிடைத்தால் பலரும் யோசிக்காமல் இறங்கி வந்துவிடுகிறார்கள். சமவெளி வாழ்வைப் போல் சுலபமானது அல்ல மலை நகரங்களின் வாழ்வு. ஏற்ற, இறக்கமான புவியமைப்பு... விவசாயம், தொழில் என இரண்டுக்குமே பெரிதாகக் கை கொடுக்காது. அதனால்தான் பெரும்பாலான மலை நகரங்கள் டூரிஸத்தையே நம்பியிருக்கின்றன.
ஆனால், கடந்த ஐம்பது ஆண்டுகளாக சுற்றுலா என்ற பெயரில் நாம் செய்து வைத்திருக்கும் சீரழிவுகள் இந்திய மலை நகரங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களின் அன்றாட வாழ்வையே கேள்விக்குறியாக்கி வைத்திருக்கின்றன.உதாரணமாக மலைகளின் அரசி எனப்படும் ஊட்டியையே எடுத்துக்கொள்வோம். ஊட்டிக்கு ஆண்டு தோறும் கோடை காலங்களில் மூன்று லட்சம் பேர் சுற்றுலாவுக்கு என்று செல்கிறார்கள். உலகம் முழுதும் இருந்து பல்வேறு தேசத்தவர்கள், பல்வேறு மாநிலத்தவர்கள் இங்கு வந்தாலும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தே அதிகமானவர்கள் ஊட்டிக்கு வருகிறார்கள்.
உதகமண்டலத்தில் அனைவருக்கும் தெரிந்த பதினெட்டு முக்கியமான சுற்றுலாத்தலங்களைத் தவிர நூற்றுக்கணக்கான இடங்கள் உள்ளன. குறிப்பாக, குன்னூர் சிம்ஸ் பார்க், ஊட்டி தாவரவியல் பூங்கா, தலைகுந்தா, சூட்டிங் மட்டம், கால்ப் லிங்ஸ் ஆகிய இடங்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் அள்ளும். மே மாதத்தில் சுற்றுலாவாசிகளால் ஊட்டியே ஸ்தம்பிக்கும்.
நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் சோலைகள், அணைகள், நீரோடைகள் என எங்கு பார்த்தாலும் பசுமையாகக் காட்சியளித்து வந்த நிலையில், இப்போது அதிகரிக்கும் சுற்றுலா வருமானத்தை நம்பி தேயிலைத் தோட்டம் மற்றும் மலை காய்கறி தோட்டங்களை அழித்து கட்டடங்களைக் கட்டிவருகிறார்கள்.
இதனால் சுற்றுச் சூழல் கடுமையாகப் பாதிக்கபடுகிறது. இது ஒருபுறம் என்றால் இப்போது சுற்றுலா என்ற பெயரில் பல்வேறு பகுதிகளிலும் வனங்களுக்குள் செல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல், சாலையோரங்களில் உள்ள வனங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து உணவு உட்கொள்கின்றனர்.
இவர்கள், உணவு உட்கொண்ட பின் பிளாஸ்டிக் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் பல்வேறு பொருட்கள், பாட்டில்கள் என அனைத்தையும் ஆங்காங்கே போட்டுவிட்டுச் செல்கின்றனர். சிலர் பல வகையான கண்ணாடி மதுபாட்டில்களையும் வனங்களில் வீசிச் செல்கின்றனர்.
இதனால், மிகவும் அழகான அவலாஞ்சி, எமரால்டு அணையின் கரையோரங்கள்; தலைகுந்தா, கால்ப்லிங்ஸ் சாலை; காமராஜ்சாகர் அணை; சூட்டிங்மட்டம், பைக்காரா போன்ற பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள், மதுபாட்டில்கள் என மக்காத குப்பைகள் காட்சி யளிக்கின்றன.
மேலும், நாள்தோறும் ஊட்டிக்கு வரும் பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால், மாசு அதிகரித்து சுற்றுச்சூழலும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. வெளியூர் வாகனங்கள் தவிர, ஊட்டியிலும் அதிகளவு அரசு, மினி பஸ்கள், ஆட்டோ, ஜீப், டாக்சி என ஏராளமான வாகனங்கள் இயங்குகின்றன.
நீலகிரி மாவட்டத்தில், சுற்றுப்புறச் சூழலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், சமீபகாலமாக வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையின் மாசு அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கு புகை மாசு பரிசோதனை செய்து சான்று வழங்க, அரசு அங்கீகாரத்துடன் குன்னூர், ஊட்டியில் தனியார் சார்பில் புகை பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், ஊட்டியில் உள்ள புகை பரிசோதனை மையம் குறுகலான இடத்தில் அமைந் துள்ளதால் சிறிய வாகனங்களைத் தவிர, பெரிய வாகனங்களால் அங்கு சென்று புகை மாசுபாடு பரிசோதனை செய்துகொள்ள முடியாத நிலை உள்ளது. இதனால், பல வாகனங்கள் புகையைக் கக்கியபடியே இயங்குகின்றன. சுற்றுச் சூழல் பாதிப்பு இப்படி என்றால் சமீபமாக ஊட்டியில் தண்ணீர் பற்றாக்குறையும் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை மற்றும் வடகிழக்குப் பருவமழை பொய்த்துவிட்டதால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளிலும் தண்ணீர் மட்டம் குறைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஊட்டியிலேயே குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாம்.
ஊட்டி பகுதிக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பார்சன்ஸ் வேலி, மார்லி மந்து, டைகர்ஹில் உள்ளிட்ட அணைகள் உள்ளன. அனைத்து அணைகளிலும் குறைவாகவே நீர் இருப்பதாலேயே இந்த தண்ணீர் தட்டுப்பாடு என்கிறார்கள்.
ஊட்டியின் இயற்கையான நில அமைப்பினால் தண்ணீர் குழாய்கள் அமைப்பதில் சிக்கல் உள்ளது. இந்தப் பகுதிகளுக்கு லாரி மூலமாகவே குடிநீர் கொண்டு செல்லப்பட்டது. ஆனால், தண்ணீர் வியாபாரிகளின் லாப வெறியால் கணக்கின்றி தண்ணீர் உறிஞ்சப்படுகிறது என்ற புகார் வரவே நீதிமன்றம் ஊட்டியில் தண்ணீர் லாரி விநியோகத்துக்கு தடைவிதித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் மட்டும் அல்ல, ஊட்டியில் வசிக்கும் மக்களேகூட இன்று தண்ணீர்ப் பஞ்சத்தில் தவிக்கும் நிலை வந்துள்ளது.ஊட்டி மட்டும் அல்ல, கொடைக்கானலும் கிட்டத் தட்ட இதே நிலையில்தான் உள்ளது. உலகிலேயே சுந்தரவனக் காடுகள் நிறைந்த பகுதிகள் இவை. இந்த சோலைக் காடுகள்தான் மேகங்களை அறுவடை செய்து மழையாகப் பிடித்து அதை முழுமையாக மண்ணில் கசியவிடாமல் ஓடைகளாகப் பெருக்கி, நதிகளாய்ச் சேர்த்து சமவெளிக்கு அனுப்பும் வேலையைச் செய்கின்றன.
நாம் சுற்றுலா என்றும் வணிகம் என்றும் நம் நலன்களுக்காக இந்த மலைப் பகுதிகளை அழித்து வருகிறோம். டூரிஸம் என்பது நல்ல விஷயம்தான். ஆனால், நம் செய்கை எந்த ஒன்றையும் அழிப்பதாக மட்டும் இருக்கக் கூடாது என்கிறார்கள் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள். நம் மலை நகரங்களை இனியாவது பாதுகாக்க முயல்வோம்.
இளங்கோ கிருஷ்ணன்
|