கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்-17
நாம் கட்டளையிட்டால் பெருமாள் அடிபணிவார்!
பிரம்மன் நிம்மதியாக யாகம் செய்துகொண்டிருந்தார். அவருக்கென்ன கவலை... அவரைக் காக்கத்தான் பரந்தாமன் இருக்கிறாரே!சரஸ்வதி தேவி செய்த சூழ்ச்சியிலிருந்து இருமுறை பிரம்மனை காத்த அந்த இறைவன் இனிமேலும் கைவிடுவாரா என்ன?நான்முகன் தனது நான்கு நாவினாலும் சொல்லும் வேத மந்திர ஒலி அந்த யாகசாலையில் எங்கும் வியாபித்து ஒருவிதமான தெய்வீக சூழலை ஏற்படுத்தி இருந்தது.
 அப்போது ‘ஓ...’ என்று கூச்சலிட்டுக் கொண்டு பல காபாலிக அரக்கர்கள் பலவிதமான ஆயுதங்களைக் கையில் ஏந்திக் கொண்டு வேள்வியை அழிக்க வந்துகொண்டிருந்தார்கள். அதை தனது கடைவிழியால் கண்ட நான்முகனுக்கு, ‘‘நாராயண நாமம் உனக்கு துணை நிற்கும்...’’ என்ற அசரீரி வாக்கு நினைவிற்கு வந்தது.
 உடன் தனது எட்டுக் கரங்களையும் குவித்தார். கண்களை மூடி மாதவனை தியானித்து ‘‘நாராயணா அபயம்...’’ என்று ஓலமிட்டார். ஓலமிட்டு முடித்து அவர் வாயைக்கூட மூடவில்லை.... அங்கு தேனையும் பாலையும் கலந்தது போல, மனித உருவும் சிங்க உருவும் கலந்த ஓர் ஏழில்மிகு வடிவம் தாங்கி வந்து விட்டார் திருமால்!
அபயம் என்ற பிரம்மனுக்கு தனது இருவிழிகளால் ‘இல்லை பயம்’ என்றார். பிறகு ஒரே பாய்ச்சலாக அசுரர்கள் மீது குதித்து பாய்ந்தார். அவர்கள் அனைவரையும் ஓட ஓட விரட்டிய பின் மாறாத சிரிப்போடு பிரம்மன் அருகில் வந்து நின்றார் மாதவன்.
‘‘பிரம்மனே! ஹிரண்யகசிபு என்ற அரக்கனை அழித்த பின் நான் இருக்க அமைதியான ஓர் இடம் தேவைப்பட்டது. அதை தேடிக்கொண்டே இங்கு வந்து சேர்ந்தேன். இந்த கச்சியம்பதி என் கண்ணிற்கும் கருத்திற்கும் இனிமையாக இருக்கவே இங்கேயே தங்கி விட்டேன்.
ஆதலால் காஞ்சியின் இப்பகுதி வேளிருக்கை (விரும்பி இருந்த இடம்) என்று அழைக்கப்பட்டது. இங்கு நான் இன்பமாக இருக்கும் வேளையிலே நீ இட்ட ஓலம் எனக்குக் கேட்டது. உடன் ஓடோடி வந்து விட்டேன்...’’ என்று அந்த நரசிங்கன் தன் விருத்தாந்தத்தை சொல்லி முடித்தார். ‘‘வேதம் என்னும் குகையில் வாழும் ஹே மாதவ சிங்கமே! இந்த எளியேன் குரல் கேட்டு வந்தனையோ...’’ என்று நெக்குருகினார் நான்முகன்.
‘‘நான்முகனே! நான் நிலையாக இங்கு குடி கொண்டு பக்தர்களுக்கு அருளை வாரி வாரி வழங்க உள்ளேன். உனது அசுர எதிரிகளை நான் வேரறுத்தது போல என் அடியவர்களின் எதிரிகளையும் வேரறுப்பேன் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்! முக்திக்கு தடையாக இருக்கும் ஆணவம், கர்மம், மாயை முதலிய எதிரிகளையும் அழித்து என் பக்தர்களுக்கு முக்திக்கு வித்தாக இருந்து வழி காட்டுவேன். ஆகவே எனக்கு ‘முகுந்த நாயகன்’ என்ற திருநாமம் ஏற்படும்.
எனது ஈடில்லா கருணை இவ்விதமாக பூவுலகிற்குக் கிடைக்க பிரம்மனான நீதான் முக்கியக் காரணம் என்று பூலோக வாசிகள் உன்னைப் புகழ்வார்கள்... ஆசிகள்!’’ என்ற அமுத மொழிகளை பிரம்மனுக்கு பகர்ந்தபடியே கல்லாக சமைந்தார் அந்த பரம்பொருள்.
‘‘பரம்பொருளே! பரந்தாமா! முக்திக்கு வித்தாகும் உனக்கு முக்தி தரும் நாயகன் என்று பொருள் படும் முகுந்த நாயகன் என்ற பெயர் மிகவும் பொருந்தும்...’’ என்றபடி திருவேளுக்கை நரசிம்மனைப் புகழ்ந்து தன்னை மறந்து போனார் பிரம்மன்...நாகராஜன் கதை சொல்லி முடிக்கவும் கார் ஒரு சிறு கோயிலின் வாசலில் நிற்கவும் சரியாக இருந்தது. அந்தக் கோயிலைக் கண்டவுடனே நாகராஜனும் ஆனந்தவல்லியும் கன்னத்தில் போட்டுக் கொண்டனர்.
அதைப் பார்த்து கண்ணனும் தன் கன்னத்தில் போட்டுக் கொண்டான். ‘‘தாத்தா இப்ப நீங்க சொன்ன நரசிம்மரைத்தான் நாம பார்க்கப் போறோமா..?’’ கண்ணன் ஆவலுடன் கேட்டான். ‘‘ஆமாம்டா கண்ணா...’’ ஆனந்தவல்லி அவன் கன்னத்தை வழித்து திருஷ்டி கழித்தாள். மூவரும் கோயிலுக்குள் நுழைந்தார்கள். சந்நிதியின் முன் நின்று மூவரும் நெக்குருகி சேவித்தார்கள்.
‘‘கண்ணா... இந்தப் பெருமாள் பிருகு முனிவருக்காக காட்சி கொடுத்தவர்...’’ நெகிழ்ச்சியுடன் சொன்னாள் ஆனந்தவல்லி. ‘‘என்ன சொல்றீங்க பாட்டி... நம்ம நாட்டுல சின்னக் கோயிலுக்குக் கூட இவ்வளவு மகத்துவமா..?’’ கண்ணன் பிரமிப்புடன் நரசிம்மரின் அழகில் சொக்கினான்.
மூவரும் தரிசனத்தை முடித்துவிட்டு காரில் ஏறினர்.‘‘‘சொன்னவண்ணம் செய்த பெருமாள்’ கோயிலுக்கு போப்பா...’’ டிரைவரிடம் சொல்லிவிட்டு கண்ணனை நோக்கி நாகராஜன் திரும்பினார். ‘‘அது என்ன ‘சொன்னவண்ணம் செய்த பெருமாள்’னுதானே கேட்கப் போறே..?’’ வெட்கத்துடன் கண்ணன் தலையசைத்தான்.நாகராஜன் கதைக்குள் சென்றார்...நரசிம்மரின் திவ்ய ரூபத்தைக் கண்ட சந்தோசத்தில் பிரம்மன் திளைத்திருந்த சமயம். வசிஷ்ட மகரிஷி அவரருகில் வந்தார்.
‘‘அய்யனே! இன்னும் யாகம் முடிந்தபாடில்லையே... கலைமகள் இன்னும் என்னென்ன இடைஞ்சல்கள் தரப் போகிறாளோ..? நினைத்தாலே கவலையாக இருக்கிறது...’’ என்றபடி கலைவாணியின் கோபத்தை பிரம்மனுக்கு நினைவுபடுத்தினார் வசிஷ்டர். ‘‘இதுவரையில் என் முயற்சியினாலா நான் அவளது சூழ்ச்சியில் இருந்து தப்பினேன்? மாதவனின் தனிப் பெரும் கருணையால் அல்லவா வாணி தந்த இடையூறுகள் எல்லாம் பொடிப் பொடியானது! அவரே இனிமேலும் துணை இருப்பார். ‘ஏகோ நாராயணோ ஆசித் ந பிரம்ம ந ஈசான:’ என்று வேதங்கள் சொல்கிறது.
அதாவது பிரளய காலத்தில் நானும் ஈசனும் கூட அழிந்து விடுவோமாம். ஆனால், அந்த மாலவனுக்கு அழிவென்பதே கிடையாதாம்! அழியக் கூடிய என் சக்தியை நம்பி என்ன பயன் முனிவரே... ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளை அல்லவா நம்ப வேண்டும்? அந்தப் பரம்பொருளான நாராயணனை இதுவரையிலும் நம்பினேன். அவரே என்னைக் காத்தார்... இனிமேலும் காப்பார்!
கலைவாணிக்கு நல்ல புத்தியைக் கொடுப்பார். இந்த உலகத்தையே நல்ல கதிக்கு சேர்ப்பார்...’’ என்று பிரம்மா ஆணித்தரமாக சொன்னார். அவர் சொன்னதனைத்தும் பூரண சத்தியம் என்பதால் வசிஷ்டரால் மறுக்க முடியவில்லை. அவரும் ஹரியையே சரண் புகுந்து யாக வேலைகளைப் பார்க்கத் தொடங்கினார். அப்போது எங்கோ ஒரு பெரிய ஆறு வேகமாக ஓடுவது போன்ற ஓர் இரைச்சல் காதைப் பிளந்தது.
பிரம்மன் இரைச்சல் தாங்காமல் தனது செவிகளை மூடிக் கொண்டார். அந்த சமயத்தில் அரக்கப் பரக்க சில முனிவர்கள் யாக சாலைக்குள் ஓடிவந்தனர். ‘‘முனிவர்களே எதைக் கண்டு அஞ்சி இப்படி ஓடி வந்திருக்கிறீர்கள்..?’’ பிரம்மன் வினவினார்.மூச்சு வாங்கியபடியே அந்த முனிவர்கள், ‘‘நான்முகா! உனது மனைவி கலைவாணி, உன் யாகத்தை கெடுக்கச் செய்த முயற்சி எல்லாம் வீண் போகவே, தானே ஒரு நதியாக மாறி சீறி வருகிறாள்... எதற்குத் தெரியுமா..? உன் யாகத்தை அழிக்க!’’ என்றார்கள்.
இதைக் கேட்ட பிரம்மன், ‘‘மாலவன் இருக்க பயமேன்!’’ என்று நிதானமாகச் சொன்னார்.இப்படி நான்முகன் சொன்னதுதான் தாமதம்... அந்தப் பெரிய இரைச்சல் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது. திடீரென்று சப்தம் நின்று போகவே அனைவருக்கும் என்ன நடந்தது என்று அறிய ஆவல் எழுந்தது. அறிவதற்காக நதியாக மாறி பிரளய வேகத்தோடு வந்த சரஸ்வதியை நோக்கிச் சென்றார்கள்.
அங்கே அவர்கள் கண்ட காட்சி அவர்களை வாயடைத்துப்போகச் செய்தது!தனது எட்டுக் கரங்களையும் முடிமேல் குவித்து ‘‘மாதவா உன் கருணையே கருணை...’’ என்று அகமகிழ்ந்தார் பிரம்மன்.அதற்கு காரணமும் இருக்கத்தான் செய்தது. வேகவதி ஆறாக மாறி சரஸ்வதி வேகமாக பிரம்மனின் யாகத்தை அழிக்க வந்தபோது திருமால் அந்த வேகவதி ஆற்றின் குறுக்கே அணையைப் போல படுத்துக் கொண்டார்! திருமாலின் அலங்கார சிங்கார தரிசனத்தைக் கண்டதும் கலைமகளின் கோபமெல்லாம் பறந்தோடியது. தன் மேலிரு கைகளைக் குவித்திருந்தாள் அவள். கீழ் இரு கைகளாலும் வீணையை மீட்டியபடி பாடிக்கொண்டிருந்தாள்.
‘‘மாதவா! பிறவிக் கடலுக்கு அணையாக இருக்கும் நீ இன்று என் சினம் தணிக்க அணையாகக் கிடந்தனையோ...’’ என்று பலவாறு அவர் புகழைப் பாடிக் கொண்டிருந்தாள் நாமகள். பிரம்மனைக் கண்டதும் பரமன் ‘‘நான்முகனே! இனி இந்த வேகவதி ஆற்றின் குறுக்கே கிடந்தபடியே இருக்கப் போகிறேன்! பத்துடை அடியவர்களுக்கு எளியவனாக என்றும் இங்கேயே நான் கோயில் கொள்ளப் போகிறேன். சினம் தணிந்த கலைமகளை அழைத்துச் சென்று யாகத்தை தொடர்வாயாக!’’ என்றபடியே கல்லாக சமைந்தார் மாயவன்...
‘சொன்னவண்ணம் செய்த பெருமாள்’ கோயில் பிராகாரத்தில் இருந்தபடி இந்தக் கதையைக் கேட்ட கண்ணனுக்கு கண்கள் பனித்தன. ‘‘தாத்தா... அப்படிப்பட்ட பெருமாளையா இப்ப நாம இந்தக் கோயில்ல வணங்கினோம்..?’’
‘‘ஆமாம்டா கண்ணா. இந்தப் பெருமாளின் கருணையே கருணை. திருமழிசை ஆழ்வாைரயும் அவரோட சீடர் கனிகண்ணனையும் இந்த ஊர் ராஜா அநியாயமா நாடு கடத்தினார். அப்ப ஆழ்வார் இங்க வந்து ‘பக்தன் இல்லாத ஊர்ல சாமிக்கு என்ன வேலை? பெருமாளே உன்னோட பாம்புப் படுக்கைய சுருட்டிகிட்டு என் பின்னாடி வா’னு கட்டளையிட்டார்! பெருமாளும் ஒண்ணுமே பேசாம பாயை சுருட்டிகிட்டு அவர் பின்னாடியே போய்ட்டார்!
அப்புறம் ஆழ்வாரையும் பெருமாளையும் திரும்பி கூட்டிட்டு வர ராஜா பட்ட பாடு இருக்கே... அப்பப்பா ஆச்சரியமான சம்பவம்...’’ நெகிழ்ந்தார் நாகராஜன். ‘‘புரிஞ்சுதா கண்ணா... ஆழ்வார் சொல் கேட்டு அவர் பின்னாடியே போனதால இந்த பெருமாளுக்கு ‘சொன்னவண்ணம் செய்த பெருமாள்’னு திருநாமம் வந்தது. இவர் நீ சொன்னதையும் செய்வார்! ஆனா, அதுக்கு உனக்கு ஆழ்வார்கிட்ட இருந்த அளவுக்கு பக்தி இருக்கணும்!’’ ஆனந்தவல்லி புன்னகைத்தாள். ‘‘புரியுது பாட்டி...’’ கண்ணன் தழுதழுத்தான்.‘‘வா கண்ணா... வரதர் வருவதைப் பார்க்கலாம்!’’ கண்கள் மின்ன நாகராஜன் அழைத்தார்!
(கஷ்டங்கள் தீரும்)
சத்ரு பயம் போக்கும் வெளுக்கை நரசிம்மர் கோயில்
அஷ்டபுஜம் கோயிலில் இருந்து 1 கிமீ தொலைவில் உள்ளது. நேரம்: காலை 7 மணி முதல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் 7:30 வரை
சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயில்
வரதர் கோயிலில் இருந்து 1 கிமீ தொலைவில் உள்ளது. நேரம்: காலை 7 மணி முதல் 10 மணி வரை மாலை 5 மணி முதல் 8:30 மணி வரை
- ஜி.மகேஷ்
ஓவியம்: ஸ்யாம்
|