சிறப்பு ஒலிம்பிக்கில் சாதித்த சென்னை பையன்!



கோகுல் நிவாஸ்… ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் இந்தியாவிற்காக தங்கம் ெவன்று திரும்பியிருக்கும் சென்னை பையன். தங்கம் மட்டுமல்ல. ஒரு வெள்ளியும் அவர் கணக்கில் உண்டு.இரண்டு பதக்கங்களுடன் படு உற்சாகமாக போஸ் கொடுக்கும் கோகுல் ஆட்டிசம் குறைபாடுள்ளவர் என்பதை நம்பமுடியவில்லை.

கடந்த மார்ச் மாத இறுதியில் அபுதாபியில் நடந்த சிறப்பு ஒலிம்பிக் போட்டியில்தான் இந்தச் சாதனை. ஆனால், தேர்தல் சூறாவளியில் அது பலரின் கவனத்தை ஈர்க்காமலேயே போய்விட்டது.கோட்டூபுரத்தில் இருக்கும் கோகுலின் வீட்டிற்குள் நுழைந்தால், ஒரு ஷோகேஸில் அடுக்கப்பட்டிருக்கும் கோப்பைகளும், பதக்கங்களுமே நம்மை வரவேற்கின்றன.

‘‘அவன் ரன்னிங்கும், ஸ்விம்மிங்கும் ரொம்ப நல்லா பண்ணுவான். அதுல வாங்கினதுதான் இதெல்லாம்…’’ எனப் பெருமையாகக் குறிப்பிடுகிறார் கோகுலின் அம்மா லதா.‘‘மொத்தம் எவ்வளவு கண்ணு இருக்கும்...’’ என லதா கேட்க, ‘‘தங்கம் ஐம்பது ப்ளஸ் இருக்கும். வெள்ளி முப்பது ப்ளஸ்னு நினைக்கிறேன். பத்து வெண்கலம்...’’ எனப் பதக்க எண்ணிக்கையை துல்லியமாக பட்டியலிடுகிறார் கோகுல்.  

‘‘இவன் பிறந்து ரெண்டு வயசு வரை பேசவே இல்லை. நாங்களும் காதுதான் கேட்கலைனு நினைச்சோம். சில டாக்டர்ஸ்கிட்ட காட்டினப்ப, ‘பையங்க மெதுவாதான் பேசுவாங்க’ன்னு சொன்னாங்க. நாங்களும் நம்பிக்கையா இருந்தோம். அப்புறம், ஆட்டிசம் பத்தி ஒரு டாக்டர் எழுதின கட்டுரையைப் படிச்சேன். அது, இவனையே பார்த்திட்டு எழுதின மாதிரி இருந்துச்சு. அதனால, எழுதின டாக்டர்கிட்டயே போனோம். அவங்கதான் முதல்ல ஸ்பீச் ெதரபி போகச் சொன்னாங்க.

பிறகு, இவனுக்கு ஆட்டிசம்னு கன்ஃபார்ம் பண்ணினாங்க. என் கணவர்தான் ரொம்ப உடைஞ்சு போனார். ஆனா, என்னைப் பொறுத்தவரை என் மகன் நார்மலா இருக்கான்னுதான் நம்புறேன்...’’ என்கிறவரைத் தொடர்ந்தார் தந்தை சுப்ரமணியன்.‘‘இவனுக்கு ஸ்பீச் தெரபி கொடுத்த சில நாட்கள்லயே அம்மா, அப்பானு சொல்ல ஆரம்பிச்சிட்டான். தொடர்ந்து மூணு வருஷங்கள் ஸ்பீச் ெதரபி கொடுத்தோம். ஆனா, ஹைபர் ஆக்ட்டிவிட்டி குறையல.

நீச்சல் கத்துக் கொடுக்கச் சொன்னாங்க. முதல்ல, சம்மர் கேம்ப் மட்டும் போக வச்சோம். அப்ப இவனுக்கு ஆறு வயசு இருக்கும். லதாதான் மெரினா பீச்ல உள்ள நீச்சல்குளத்துக்கு அழைச்சிட்டு போவாங்க...’’ என்கிறவரைத் தொடர்ந்தார் லதா.‘‘ஆரம்பத்துல இந்தமாதிரியான குழந்தைகளுக்கான கற்றல் மையத்துல படிச்சான். அவங்க, ‘நல்லா படிக்கிறான். நார்மல் ஸ்கூல்ல சேர்த்துவிடுங்க’னு சொன்னாங்க. மூணாம் வகுப்புல இருந்து அஞ்சாவது வரை நார்மல் ஸ்கூல்ல படிச்சான்.

ஆறாம் வகுப்பு வந்தப்ப இந்தமாதிரியான குழந்தைகள இங்க சேர்த்துக்கமாட்டோம்னு சொல்லிட்டாங்க. மறுபடியும் கற்றல் மையத்துக்கு வந்தோம். நீச்சல் வேண்டாம்னு முடிவெடுத்து டியூசன் சென்டர்ல சேர்த்தோம். இதுக்கிடையில ரன்னிங்ல சில பதக்கங்கள் வாங்கினான். ஆனாலும், இவன் ஹைபர் ஆக்ட்டிவிட்டி குறையல.

சரினு மறுபடியும் நீச்சல் பக்கம் திருப்பினோம். அங்க, தமிழக அளவுல நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில மூணு கோல்டு அடிச்சான். சாம்பியன்ஷிப்பும் கிடைச்சது! பிறகு, ‘நான்தான் நீச்சல் கத்துக்கிட்டனே… அப்புறம் எதுக்கு’னு சொன்னான். இந்த விருதுகளைக் காட்டி போக வச்ேசாம்.

2016ல் ஸ்பெஷல் ஒலிம்பிக்ல கலந்துக்க தமிழக அளவு போட்டி சென்னையில நடத்தினாங்க. அப்ப இவன் ரெண்டு கோல்டு அடிச்சான். அதுல செலக்ட்டாகி மும்பைல நடந்த தேசிய அளவு போட்டிக்குப் போனான். அங்கேயும் ஒரு தங்கமும், ஒரு வெள்ளியும் வாங்கினான். பிறகு, சிறப்பு ஒலிம்பிக் போட்டிக்குப் பயிற்சி கொடுத்தாங்க.

மும்பை, கோவா, அரியானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தில்லினு ஆறு இடங்கள்ல கேம்ப் நடந்துச்சு.  எல்லாத்திலும் கோச் கூட தனியா போய் பயிற்சி எடுத்தான். அங்க சிறப்பு ஒலிம்பிக்கிற்குத் தேர்வானான். 1500 மீட்டர் நீச்சல் போட்டி. 25 மீட்டர் குளத்தை அறுபது முறை ஃப்ரீஸ்டைல் பிரிவுல அடிச்சு தங்கம் வாங்கினான். இதுல ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரேசில்னு பத்து நாடுகள் கலந்துக்கிட்டாங்க.

மறுநாள் 800 மீட்டர் போட்டி. ஆனா, முந்தைய நாள் சோர்வால வேகமாக பண்ண முடியாம ரெண்டாவதாக வந்து வெள்ளி வாங்கினான். நாங்க எல்லோரும் போய் அவனை உற்சாகப்படுத்தினோம். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு...’’ என நெகிழ்கிறார் அவர்.
அடுத்த இலக்கு என்ன? - கோகுலிடமே கேட்ேடாம்.

‘‘இனி ஒலிம்பிக் போக முடியாது. ஒருத்தருக்கு ஒருதடவைதான் சான்ஸ் கொடுப்பாங்களாம். அதனால, இனி நேஷனல் லெவல்ல போகணும். அப்புறம், நீச்சல்குளம் இருக்குற ஒரு அபார்ட்ெமண்ட் வாங்குணும்ங்கிறது என் லட்சியம்!’’ கண்களைச் சிமிட்டி நம்பிக்கையுடன் சொல்கிறார் கோகுல்.ஆல் தி பெஸ்ட்!              

பேராச்சி கண்ணன்

ஆ.வின்சென்ட் பால்