நேற்று அஞ்சலி... இன்று ஸ்லிம்மாஞ்சலி!



டே அண்ட் நைட் ஜிம்மில் தவம் கிடந்து இழைத்து இழைத்து ஸ்ட்ரக்சரை செதுக்கியதில் அம்சமாக இருக்கிறார் அஞ்சலி!உடனே இங்கு பக்கத்தில் புன்னகைக்கும்  அவரை உற்றுப் பார்த்து ‘செக்’ பண்ண வேண்டாம்.
நம்புங்க பாஸ். அட்டகாசமான ‘3டி’ டெக்னாலஜியில் வெளியான ‘லிசா’ கொடுத்த  ஹேப்பியில் கொஞ்சம் பூரித்திருக்கலாம். அடுத்து இன்னும் குஷியாக விஜய்சேதுபதியுடன் ‘சிந்துபாத்’, சசிகுமாருடன் ‘நாடோடிகள் 2’ தவிர தெலுங்கிலும் படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் அஞ்சலி.

‘‘ஹேப்பியா இருக்கேன். முதல்முறையா ஹீரோயினை மையமா கொண்ட சப்ஜெக்ட்ல நடிச்சிருக்கேன். ‘லிசா’ கதையைக் கேட்டதும் உடனே பிடிச்சுப் போச்சு. அதுவும் படம்  ‘3டி’ டெக்னாலஜில ரெடியாகும்னு சொன்னதும் இன்னும் சந்தோஷமாகிடுச்சு. பொதுவாவே எனக்கு த்ரில்லர், ஹாரர் படங்கள் ரொம்பப் பிடிக்கும். டைம் கிடைக்கும் போதெல்லாம் த்ரில்லர் படங்கள் பார்த்திடுவேன்.

அடுத்து நடிக்கும் ‘நாடோடிகள் 2’, ‘சிந்துபாத்’ ரெண்டும் ஹாரர் இல்ல. அந்த ரெண்டு படங்களோட படப்பிடிப்புக்கு இடையேதான் ‘லிசா’வோட ஷூட் நடந்துச்சு. அந்த படங்களுக்காகவே கொஞ்சம் நான் ஸ்லிம் ஆகியிருந்தேன். அந்த உடல்வாகுவே ‘லிசா’வுக்கும் கை கொடுத்துச்சு.  அதோட படப்பிடிப்புல நடந்த மறக்கமுடியாத ஒரு விஷயம் இது. கொடைக்கானல்ல நடந்த ஷூட்ல படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு பக்கத்துலேயே  பழைய பாழடைஞ்ச வீடு ஒண்ணு இருந்தது.

அந்த வீட்ல நிஜமாகவே பேய் ஒண்ணு இருக்குனு டைரக்டர்கிட்ட யாரோ சொல்லியிருக்காங்க. ஸோ, ஷூட்டை அவர் வேற ஒரு லொகேஷனுக்கு மாத்திடுவார்னு  நினைச்சிட்டோம். ஆனா, நாங்க பயந்தது மாதிரி எதுவும் நடக்கல. எங்க டைரக்டர்தான் ஆர்வமானார். அவரும் அவருடைய ஃப்ரெண்ட்ஸும் ‘இன்னிக்கு அந்த பேயை மீட் பண்ணப் போறோம்’னு சொல்லிட்டு ராத்திரில அந்த பேய்  வீட்லயே தங்கினாங்க. அந்த வீட்ல மின்சார வசதியும் கிடையாது. நாங்க கொஞ்சம் மிரண்டு போய் இருந்தோம். ஆனா, மறுநாள் காலைல தெம்பா ‘அங்க எந்த பேயும்  இல்ல’னு சொல்லி சிரிச்சாங்க...’’ புன்னகைக்கிறார் ஸ்லிம்மாஞ்சலி!

‘கற்றது தமிழ்’ வந்து 12 வருஷங்களாச்சு..?

ஆமா. முதல் படத்தை மறக்க முடியுமா என்ன! சின்ன வயசில பாட்டி வீட்ல வளர்ந்தேன். நாலு வயசு வரைக்கும் வீட்ல எனக்கு காது குத்தல! பையனாட்டம் பாப் ஹேர்ஸ்டைல் வச்சிருந்தேன். ஸ்கூல் போகும்போது மினி ஷார்ட்ஸ், டெனிம்னு அசத்தலான காஸ்ட்யூம்ல போவேன்.
அப்ப கிட்டத்தட்ட பையன் மாதிரியே இருப்பேன்.

கிளாஸ் டீச்சர்ஸ் கூட என்னைப் பார்த்து, ‘இந்தப் பையன் ஏன் கேர்ள்ஸ் சைடுல உட்கார்ந்திருக்கான்’னு கலாய்ப்பாங்க. அப்புறம், காதுல கம்மல் போட்டதுக்கப்புறம்தான் என்னை பொண்ணாகவே மதிச்சாங்க!அப்பவே என் கிளாஸ்ல உள்ளவங்ககிட்ட ‘ஹீரோயின் ஆகப் போறேன்’னு சொல்லியிருக்கேன். அதுக்காகவே ஸ்கூல்ல நடக்கற அத்தனை கல்ச்சுரல்ஸிலும் முதல் ஆளா பெயர் கொடுப்பேன். கலந்துக்குவேன்.

டீன் ஏஜ்ல மாடலிங் பண்ண ஆரம்பிச்சேன். டான்ஸ் ப்ராக்டீஸ் செஞ்சு என்னை தயார்படுத்திக்கிட்டேன். அந்த டைம்ல சென்னை வந்துட்டேன். ஆனா, சினிமாவுல வாய்ப்பு எப்படி தேடணும்? ஆக்ட்டிங் முயற்சிக்கு எப்படி ட்ரை பண்ணணும்..? எதுவும் அப்ப தெரியாது.ஆனா, நான் அதிர்ஷ்டக்காரி. நாங்க இருந்த தெருவுலதான் டைரக்டர் ராம் சார் ஆபீஸ் இருந்தது.

அந்த வழியா நான் நடந்து போறப்ப ராம் சார் என்னை பார்த்திருக்கார். உடனே அவரோட மேனேஜரை அனுப்பி ‘நடிக்க விருப்பம் இருந்தா ஆடிஷன்ல கலந்துக்குங்க’னு சொல்லிட்டு போனார். இப்ப மாதிரிதான் அப்பவும் கலகலனு பேசுவேன். ஆனா, தமிழ் தெரியாததால சைலன்ட்டா இருப்பேன். ‘கற்றது தமிழ்’ டப்பிங் வரைக்குமே எனக்கு தமிழ் பேச வராது. ராம் சார்தான் பொறுமையா தமிழ் சொல்லிக் கொடுத்தார்.  

என் குணம் தனி. நான் கொஞ்சம் ஷார்ட் டெம்பர். சில நேரங்கள்ல படக்குனு கோபம் வந்துடும். ஆனா, நான் கோபப்பட்டா  வீட்ல அதை கண்டுக்க மாட்டாங்க! எவ்ளோ கோபமா பேசினாலும் அடுத்த அஞ்சு நிமிஷத்துல அதையெல்லாம் மறந்து நார்மலாகிடுவேன். யாரையாவது காச்மூச்னு கத்தணும்னு தோணினா, அழுதுகிட்டே கத்துவேன்!  

‘நாடோடிகள் 2’ல நாலு பக்க டயலாக்கை உடனே பேசி அசத்திட்டீங்களாமே?

யெஸ்... யெஸ்! யூனிட்ல ஸ்பை வைச்சிருக்கீங்க போல! ‘நாடோடிகள் 2’ படத்தோட இடைவேளைக்குப் பிறகு வர்ற ஒரு சீனுக்காக இயக்குநர் சமுத்திரக்கனி சார், நாலு பக்க டயலாக் பேப்பரைக் கொடுத்து பேசச் சொன்னார். ‘நாலு பக்கமா? நானா?’னு ஷாக் ஆனேன். ‘உங்களால முடியும். நீங்க பேசிடுவீங்க’ன்னார். அந்த நம்பிக்கை போதாதா? உடனே டயலாக் பேப்பரை வாங்கி மடமடன்னு  படிச்சுப் பார்த்தேன்.

அப்பவே அதைப் பேசி, ஓகே பண்ணினேன். யூனிட்ல அத்தனை பேருக்குமே ஆச்சரியம். இன்னொரு விஷயம்-சின்ன வயசில இருந்தே எனக்கு மெமரி பவர் அதிகம். ஏதாவது ஒரு விஷயத்தைக் கேட்டாலோ அல்லது எங்கேயாவது ஒரு விஷயத்தைப் பார்த்தாலோ அதை அப்படியே கிராஸ்ப் பண்ணிடுற பவர் எனக்கிருக்கு!

ஒருத்தர்கிட்ட பேசினதை அடுத்து அவரை சந்திக்கிறப்ப வார்த்தை மாறாம சொல்லுவேன்! இடைல வருஷங்களோ மாதங்களோ கடந்திருக்கலாம். ஆனாலும் கரெக்ட்டா நினைவுல வைச்சிருப்பேன். என் ப்ளஸ்ஸும் மைனஸும் இதுதான்!

மை.பாரதிராஜா