வன தேவதை!தனது சம்பளத்தில் 497 கழிவறைகளை மலைவாழ் மக்களுக்கு கட்டிக் கொடுத்திருக்கிறார் இந்த வன அதிகாரி!

கேரளாவின் எர்ணாகுளத்தில் வாழ்ந்து வரும் பி.ஜி.சுதா, குட்டம்புழா காடுகளில் வன இலாகா அதிகாரியாகப் பணியாற்றிவருகிறார். பழங்குடி மக்கள் வசிக்கும் இந்த மலைக் கிராமங்களில் இவர்களுக்கு என 597 கழிப்பறைகளை தன் சொந்த முயற்சியால் கட்டித் தந்துள்ளார்!

இந்தியா முழுதும் சுகாதாரமான கழிப்பறைகள் அமைத்துத் தருவதுதான் நமது அரசுகளின் பெரும் சவாலாக இருக்கிறது. சமவெளிகளில் வசிக்கும் மக்களுக்கு இது சார்ந்த விழிப்புணர்வு ஓரளவு ஏற்பட்டிருந்தாலும் மலைப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடிகளுக்கு இந்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.

விழிப்புணர்வு இருந்தாலுமே கூட வறுமைக்கு மிக அருகில் வாடும் இந்தப் பழங்குடி மக்களுக்கு சுகாதாரமான கழிப்பறைகள் என்பதே பெரும் கனவுதான். மறுபுறம் அரசின் திட்டங்களும் இவர்களை எல்லாம் முறையாக எட்டுவதே இல்லை.

இப்படியான சூழலில்தான் களமிறங்கி தன் சொந்த கைக்காசில் பழங்குடி மக்களுக்கான கழிப்பறைகளை கட்டித் தரத் தொடங்கினார் சுதா.விரைவில் சுதாவின் செயல்பாடு அரசின் காதுகளுக்கு எட்ட, ஒரு கட்டத்தில் அரசே இந்தத் திட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு உதவ முன்வந்தது. இப்படித்தான் கிட்டத்தட்ட ஐநூறு கழிப்பறைகளை உருவாக்கி இருக்கிறார் சுதா.

இவரின் இந்தச் செயல்பாட்டுக்காக மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கேரள அரசின் திறந்த வெளிக் கழிப்பறை இல்லா பிரசாரக் குழுவின் சார்பாக விருது கொடுத்து கவுரவிக்கப்பட்டிருக்கிறார்.‘‘இந்தப் பழங்குடி காலனிகளுக்கு அன்றாட வாழ்வே மிகச் சிரமம். மற்ற இடங்களை ஒப்பிடும்போது இங்கு எந்த வசதியும் இல்லை. இந்தப் பகுதிக்கு வர வேண்டும் என்றால்கூட தார்ச்சாலையிலிருந்து காட்டு வழியில் மூன்று மணி நேரம் நடந்துதான் வர வேண்டும்.

இங்குள்ளவர்கள் காலங்காலமாக திறந்த வெளியையே கழிப்பறையாகப் பயன்படுத்தி வருகிறார்கள். மக்கள் தங்கள் வசிப்பிடங்களை சுகாதாரமாக வைத்துக்கொள்ளாவிடில் இந்த வனப் பகுதியில் நோய்த் தொற்று ஏற்படுவதும் எளிதாக நிகழும் என்பதால் இதை மாற்ற வேண்டும் என்று நினைத்தேன்.ஆனால், அது அவ்வளவு எளிய வேலையாக இருக்கவில்லை. அடிப்படையில் சாலை வசதிகூட இல்லாத இந்த காலனிக்கு கட்டுமானப் பொருட்களைக் கொண்டுவந்து சேர்ப்பது என்பதே மிகப் பெரிய சவால்.

மலைப் பகுதி என்றாலும் சாலை வசதி உள்ள கிராமங்கள் உண்டு. இவர்களோ வனங்களில் நுழையவே சிரமமான இடத்தில் வசித்து வந்தார்கள்.
எனவே, கழிப்பறை கட்டுவதைவிட அதற்கான கட்டுமானப் பொருட்களை சுமந்து செல்வதே பெரிய பிரச்னையாக இருந்தது. சுமார் பதினைந்து அல்லது இருபது கிலோ மீட்டர் சுத்தித்தான் இந்தப் பகுதிக்கு கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்ல வேண்டியதாக இருந்தது.
இதனாலேயே சிலர் கழிப்பறை கட்டுவதற்கு ஆர்வம் இருந்தாலும் செயலில் இறங்காமல் இருந்தார்கள்.

நாங்கள் கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்ல என்னென்ன வழிகள் உண்டோ அத்தனையையும் முயன்றோம். ஒரு முறை குறுக்கு வழியில் சுமந்து சென்றோம். ஒருமுறை முப்பது கிலோ மீட்டர் வண்டியில் சுமந்து சென்றோம். படகில் ஏற்றிக் கொண்டு தண்ணீரைக் கடந்து சென்றோம். சில சமயங்களில் பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்ததுகூட உண்டு.

ஆனால், அதற்கெல்லாம் அசராமல்தான் எடுத்துக்கொண்ட வேலையை முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். இதோ இன்று இங்குள்ள எளிய மக்களுக்கு ஆரோக்கியமான, சுகாதாரமான கழிப்பறைகள் கிடைத்துவிட்டன.

இதுதான் நான் எதிர்பார்த்தது. மக்கள் மிகவும் மகழ்ச்சியாக இருக்கிறார்கள்...’’ பூரிப்பாகச் சொல்கிறார் சுதா. பணி செய்யும் இடத்தில் வழங்கப்பட்ட வேலையை மட்டும் செக்கு மாடு போல் செய்துகொண்டிருக்காமல், அந்தப் பகுதியின் மக்களுக்கு என்ன தேவை என்று கவனித்து அதற்கான சேவையையும் செய்து தரும் சுதா போன்ற அதிகாரிகள்தான் நம் நாட்டுக்கு இன்று தேவை. இவர்களைப் போன்றவர்களால்தான் இந்த நாடு நிஜமாகவே ஒளிர்கிறது!