ரத்த மகுடம்-56பிரமாண்டமான சரித்திரத் தொடர்

கரிகாலனுடன் காட்டுக்குடிசையில் தங்கிய சிவகாமிக்கு ஒவ்வொரு நாளும் பிரமை, பக்தி, அச்சம் ஆகிய மூன்றையும் விளைவிக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வந்ததால், நேரம் போவது தெரியாமலும் நாழிகைக்கு நாழிகை பலதரப்பட்ட உணர்ச்சிகளுக்கு இலக்காகியும் அவள் காலத்தைக் கழித்தாள்.

அவளுக்கு நினைவு திரும்பியிருந்தது. காயங்களும் ஆறியிருந்தன. உடலில் அம்புகள் பாய்ந்த இடங்கள் வடுக்களாகத் தொடங்கியிருந்தன. இதுவும் விரைவில் மறைந்துவிடும் என மருத்துவச்சி உத்தரவாதம் அளித்திருந்தாள்.சிவகாமியால் எழுந்து நடக்க முடிந்தது. கரிகாலனைப் பிடித்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

எல்லா காலங்களிலும் அவன் அருகில்தான் இருந்தான். நடக்கும்போது உடன் நடந்தான். தடுமாறியபோது அவன் கரங்கள் தாங்கின. தனிமையைப் போக்கும் விதத்தில் அவளுடன் பேசினான். சிரித்தான்.ஆனாலும் அவன் கண்களில் காதலோ தாபமோ வெளிப்படவில்லை. பார்வையால் எப்பொழுதும் தன் உடலை ஊடுருவும் அவன் நயனங்கள் எவ்வித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் இருந்தன. இறுக்கமாக என்றும் சொல்லலாம். அவன் கருவிழிகளை ஏறிட்ட பொழுதெல்லாம் அவளால் அந்த இறுக்கத்தை உணர முடிந்தது.

ஒருவேளை அது தன் பிரமையாக இருக்கலாம் என்ற கணிப்புகூட மறுமுறை நேருக்கு நேர் பார்க்க முற்பட்டபோது பொய்த்தது. அவள் கருவிழிகளால் அவன் நயனங்களுக்குள் ஊடுருவவே முடியவில்லை.போலவே அவன் கரங்களும். அவளைத் தொடவே செய்தான். மூலிகைக் குளிகைகளை அவனே அவளுக்குப் புகட்டினான். கஷாயத்தை குடுவையில் ஏந்தி அவனே பருகக் கொடுத்தான். எல்லா தருணங்களிலும் அவன் கரங்கள் அவளைத் தொட்டன; தாங்கின; பிடித்தன.

ஆனால், அக்கரங்களில் உயிரில்லை! இடுப்பைப் பிடித்த கணங்களில் மேலேறவோ கீழ் இறங்கவோ அவை முற்படவேயில்லை. பிடித்த இடத்தில் பிடித்தபடியே நின்றன.இந்த மாற்றம் சிவகாமிக்குள் எண்ணற்ற வினாக்களை எழுப்பின. எதையும் வாய்விட்டு கேட்க முடியவில்லை.
என்னவென்றுதான் அவளும் கேட்பாள்..? ஏன் உன் கைகள் கொங்கைகள் நோக்கியோ பின்புறத்தை நோக்கியோ நகரவில்லை என்றா... உன் பார்வை ஏன் சலனமற்று இருக்கிறது என்றா...?

எல்லா வினாக்களுக்கும் விடையாக, ‘அப்படி ஒன்றுமில்லையே... சிகிச்சையில் இருப்பதால் என்னை நானே கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறேன்...’ என சொல்லிவிட்டால் தன்னால் தன் முகத்தை எங்கு வைத்துக் கொள்ள முடியும்..?

ஏனெனில் அவளது உடல்நலத்தைக் குறித்து அவளைவிட அவன் அதிகம் அக்கறைப்பட்டான். மருத்துவச்சி குடிசைக்குள் வரும்பொழுதெல்லாம் விசாரித்தான். லேசாக அவள் உடலில் வீசிய அனலை மறக்காமல் தெரியப்படுத்தி அதற்கென ஏதேனும் மூலிகை இருக்கிறதா என விசாரித்தான்.
ஆனால், அந்த சூட்டுக்கான காரணமே அவன் அருகாமைதான் என்பதை மட்டும் அவன் புரிந்துகொள்ளவும் இல்லை; புரிந்து கொள்ள முயற்சிக்கவும் இல்லை. அல்லது புரிந்தும் புரியாதது போல் இருக்கிறானா..? தெரியவில்லை.

ஆனால், சிஷ்ருஷையில் மட்டும் ஒரு குறையும் வைக்கவில்லை! பைத்தியக்காரன்...தன்னை மீறி சிவகாமி பெருமூச்சு விட்டாள். கரிகாலன் அருகில் இருந்தும் அவன் தொலைவில் இருப்பதைப் போன்ற உணர்வு அவளை விட்டு நீங்கவேயில்லை. கணத்துக்கு கணம் இந்த எண்ணம் அதிகரிக்கவே செய்தது.

போலவே மருத்துவச்சியும் அவனும் கண்களால் பேசிக் கொள்வதையும் அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. அப்படி என்ன பரிமாறிக் கொள்கிறார்கள்..? நிச்சயமாக தன் உடல்நலம் சார்ந்து அல்ல. ஏனெனில் அதை பரஸ்பரம் இருவரும் பகிரங்கமாக வாய்விட்டே உரையாடுகிறார்கள். அதுவும் அவள் முன்பாகவே.

எனவே, வேறு ஏதோ ஒன்றை, தான் அறியக் கூடாது என்பதற்காகவே சமிக்ஞையில் பேசிக்கொள்கிறார்கள். அது என்னவாக இருக்கும்..? அதற்கும், அருகில் இருந்தும் அவன் விலகி இருப்பதுபோல் தனக்குத் தோன்றுவதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா..?

சிவகாமியால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ஆனால், எல்லாமே தப்புத்தப்பாக இருப்பதாக அவளுள் மலர்ந்த தீர்மானம், வேர்விட்டு வளர்ந்தது.
போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் தருவாயில், பல்லவ இளவரசரான இராஜசிம்மனை அழைத்து வரக் கிளம்பிய தாங்கள் இருவரும் இப்படி காட்டிலிருக்கும் குடிசையில் எதுவும் செய்யாமல் பொழுதைக் கழிப்பது தவறெனத் தோன்றியது.

‘‘கிளம்பலாமே...’’ என ஒருமுறை அவளாகக் கேட்டபோது, ‘‘இன்னும் உனக்கு சிகிச்சை முடியவில்லை...’’ என கரிகாலன் தடுத்து
விட்டான். இதற்கு மேல் என்ன சிகிச்சை தேவை என்பது சத்தியமாக அவளுக்குப் புரியவில்லை. இங்கு உண்ணும் குளிகைகளையும் கஷாயத்தையும் மற்ற இடங்களிலும் உண்ணலாமே...

வழக்கம்போல் இதுவும் வினாக்களாக பதிலின்றி காற்றில் பரந்தன.அவள் தங்கியிருந்த குடிசை காட்டில் இருந்தாலும் அடிக்கடி அங்கு வந்து போய்க் கொண்டிருந்த மக்களுக்கு குறைவேயில்லாதிருந்தது. மட்டுமின்றி, வந்தவர்கள் அதிக நேரம் தங்கவுமில்லை என்பதையும் சிவகாமி கவனித்தாள்.
தவிர, வந்தவர்களிடம் மருத்துவச்சி அதிகம் பேசாததையும், கண்ணசைவிலும் ஜாடையிலுமே உரையாட வேண்டியதை உணர்த்தியதையும் கண்டாள்.

போலவே வந்தவர்களை, தான் தங்கியிருந்த குடிசைப் பக்கம் நெருங்கவிடாமல் மருத்துவச்சி பார்த்துக் கொண்டதையும் மனதுக்குள் குறித்துக் கொண்டாள். அதுபோன்ற சமயங்களில் கரிகாலன் சட்டென குடிசையில் இருந்து மறைவதும், ஆட்கள் அகன்றதும் தோன்றுவதுமாக இருந்ததையும் மனதில் பதித்துக் கொண்டாள். அதற்கான காரணமும் அவளுக்குத் தெரிந்தே இருந்ததால் கரிகாலன் மறைந்து தோன்றுவது அவளுக்கு வியப்பளிக்கவில்லை. சந்தேகத்தையும்.

வேளை தவறாமல் அவளுக்கு சட்டியில் உணவுகள் வந்தன. மருத்துவச்சியே அவளுக்கும் கரிகாலனுக்கும் எடுத்து வந்தாள்.
இனம்புரியாத உணர்வுகளின் பிடியில் சிவகாமி சிக்கி இருந்ததால் அன்றைய தினம் அவளால் சரிவர உணவை உட்கொள்ள முடியவில்லை.
‘‘ஏன்... உணவு பிடிக்கவில்லையா..?’’ நிதானமாகக் கேட்டாள் மருத்துவச்சி.

‘‘இல்லை... பிடிக்கவில்லை...’’ சட்டென சிவகாமி பதில் அளித்தாள்.‘‘உடம்பு சரியில்லையா..?’’ உண்பதை நிறுத்திவிட்டு அவள்
நெற்றியிலும் கழுத்திலும் கரிகாலன் தன் கரங்களை வைத்தான்.‘‘இல்லை... சுரமில்லை...’’ சிவகாமி முணுமுணுத்தாள்.
‘‘அச்சமும் ஒருவகை சுரம்தான்...’’ மருத்துவச்சி நகைத்தாள். ‘‘பயப்படாமல் சாப்பிடு!’’‘‘எனக்கென்ன பயம்...’’ முணுமுணுத்தபடி சிவகாமி சிரமத்துடன் சாப்பிட்டாள்.

எதிர்பார்த்தது போலவே கரிகாலனும் மருத்துவச்சியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.மூண்ட கோபத்தை சிரமப்பட்டு சிவகாமி அடக்கினாள். ‘‘இன்னும் எத்தனை நாட்கள் இங்கு தங்க வேண்டியிருக்கும்..?’’இப்படியொரு கேள்வியை எதிர்பார்த்ததுபோல் மருத்துவச்சி உடனே பதிலளித்தாள். ‘‘அதிகபட்சம் இரண்டே நாட்கள்...’’அதைக் கேட்டு கரிகாலன் புன்னகைத்தான்!மறுநாள் கருக்கலில் மருத்துவச்சி அவளை எழுப்பினாள்.

அரவம் கேட்டு கரிகாலன் குடிசைக்குள் வந்தான்.
‘‘வெளியே இரு...’’ மருத்துவச்சி அதட்டினாள்.
மறுபேச்சில்லாமல் கரிகாலன் அகன்றான்.
‘‘பின்பக்கம் குடுவையில் நீர் இருக்கிறது. வாயைக் கொப்பளித்து
விட்டு வா...’’

மருத்துவச்சியின் கட்டளையை ஏற்று சிவகாமி குடிசைக்கு பின்பக்கம் வந்தாள். பொழுது விடிவதற்கு இன்னும் நேரம் இருந்தது. குடுவையை எடுத்து வாயைக் கொப்பளித்தாள். கசந்தது. மூலிகை நீராக இருக்க வேண்டும்.
குடிசைக்குள் சிவகாமி நுழைந்தாள்.
‘‘ஆடைகளைக் களைந்துவிட்டு படு...’’
‘‘பச்சிலைகள் பூச வேண்டுமா..?’’
‘‘ஆம்...’’

சொன்னபடி களைந்துவிட்டு பூரணமாகப் படுத்தாள்.
இருகரம் கூப்பி பிரார்த்தனை செய்துவிட்டு தொன்னையில் இருந்த பச்சிலையை எடுத்து சிவகாமியின் உடல் முழுக்க மருத்துவச்சி பூசினாள்.
‘‘நான் சொல்லும் வரை எழுந்திருக்காதே...’’ என்றபடி குடிசையைவிட்டு மருத்துவச்சி அகன்றாள்.
வெளியில் கரிகாலனும் அவளும் பேசுவது தெளிவில்லாமல் கேட்டது.

ஒரு நாழிகைக்குப் பின் மருத்துவச்சி மீண்டும் குடிசைக்குள் வந்தாள்.
சிவகாமியின் உடலில் பூசப்பட்ட பச்சிலைகள் காய்ந்திருந்தன.
பருத்தியினால் ஆன மெல்லிய கச்சையை எடுத்து அவள் மார்பில் கட்டிவிட்டு இன்னொரு மெல்லிய பருத்தி ஆடையை எடுத்து அவள் இடுப்பைச் சுற்றி முடிச்சிட்டாள்.

‘‘கரிகாலா...’’
மருத்துவச்சி குரல் கொடுத்ததும் அதற்காகவே காத்திருந்தது போல் அவன் குடிசைக்குள் நுழைந்தான்.
‘‘ஜாக்கிரதையாக இவளை அழைத்துச் செல்...’’ அவனைப் பார்த்து சொல்லிவிட்டு சிவகாமியின் பக்கம் திரும்பினாள். ‘‘போம்மா... போய் நீராடிவிட்டு வா...’’

தலையசைத்துவிட்டு கரிகாலனுடன் புறப்பட்டாள்.
நீராடத்தானே செல்கிறோம்... எதற்காக கரிகாலன் உடன் வருகிறான் என்ற கேள்வி எழுந்த அதேநேரம், தன் மனம் கவர்ந்தவன் முன்னால் எப்படி, தான் நீராடுவது என்ற வெட்கமும் அவளைப் பிடுங்கி எடுத்தது.
மவுனமாகவே நடந்தாள். கரிகாலனும் பேச்சு ஏதும் கொடுக்கவில்லை.

கருக்கல் விலகத் தொடங்கியிருந்தது. உதயத்துக்கான ரேகைகளை வானம் படரவிட்டது.
வனத்தை ஊடுருவியபடி நடந்தார்கள். கால் நாழிகை பயணத்துக்குப் பின் அருவியின் ஓசை அவள் செவியை வருடியது.
ஆச்சர்யத்துடன் கரிகாலனை ஏறிட்டாள்.

கண்களைச் சிமிட்டியபடி புன்னகைத்தான்.
ஆனால், அந்த சிமிட்டலிலும் புன்னகையிலும் உயிர் இல்லை!
இருவரும் நடக்க நடக்க அருவியின் ஓசை அதிகரித்தது.

புற்களை மிதித்தபடி புதரை விலக்கியதும் அருவி அவர்களை வரவேற்றது.
‘‘வா...’’ என்றபடி சிவகாமியை அழைத்துக் கொண்டு நீர் விழும் இடத்தை நோக்கி கரிகாலன் நடந்தான்.
வழியெல்லாம் அருகில் நெருங்கியபடி நடந்தவன், இப்பொழுது அவளுக்குப் பின்னால் சென்றான். அவள் கரங்களை பின்னால் இருந்து பற்றியபடி மேலிருந்து விழும் நீரின் முன் அவளை நிறுத்தினான்.

நீர்த்திவலைகள் அவள் மேனியில் விழ விழ பூசப்பட்ட பச்சிலைகள் விலகின.நீரில் அவள் முகம் தெரிந்தது!இதுநாள் வரை அவள் நடமாடிய முகம் அல்ல அது!‘‘யார் நீ..?’’ அழுத்தத்துடன் கரிகாலனின் குரல் அவளுக்குப் பின்னால் இருந்து ஒலித்தது!

(தொடரும்)

வலி தீர்க்கும் எண்ணெய்!

தலைவலி, கைகால் வலி, மூட்டுவலி, இடுப்பு வலி, முதுகு வலி, கழுத்துப் பிடிப்பு என எல்லாவிதமான வலிகளுக்கும் ஒரு நல்ல தீர்வு வந்துவிட்டது. ஜிங்கா பெய்ன் கேர் ஆயில்!நவீன ரோல் ஆன் வடிவில் வந்திருக்கும் இதன் விலை ரூ. 40/- (நாற்பது ரூபாய்) மட்டுமே. ஜிங்கா நிறுவனத்தின் ஜிங்கா டயாமேட்டிக்கும் இப்போது சந்தையில் கலக்கி வருகிறது. சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களுக்கான பிரத்யேகத் தயாரிப்பு. இனி சுகரின் ரிமோட் கண்டரோல் நம் கையில்!

இவ்விரண்டு ஜிங்கா தயாரிப்புகளும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உங்கள் அருகில் உள்ள மருந்துக் கடைகளிலும் பிற கடைகளிலும் கிடைக்கும்.
அப்போலோ மருந்தகம் மற்றும் மெட்பிளஸ் நிறுவன மருந்தகங்களிலும் கிடைக்கும்.

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்