கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்-14



கண்ணொளி தரும் கந்தன்

திருச்செந்தூர் திருக்கோயில் இன்று போல் அன்றும் அருளை வாரிவழங்கிக் கொண்டிருந்தது. கோயிலில் ஒரே கூட்டம். அப்போது ஓர் அரண்மனைக் காவலாளி ‘‘மாமன்னர் ஜகவீர பாண்டியன் வருகிறார், பராக், பராக்...’’ என்று அறிவித்தான். உடனே கூட்டம் இரண்டாகப் பிளந்து மன்னனுக்கு வழி விட்டது. ஆஜானுபாகுவாக வீரக் களை சொட்ட அந்த ஜக வீர பாண்டிய மன்னன் கோயிலுக்குள் நுழைந்தார். நேராக சன்னிதானத்திற்குச் சென்றார். கையிரண்டையும் தலைமேல் குவித்து வணங்கினார்.

பக்தியின் பெருக்கில் ‘‘செந்தில் ஆண்டவா!’’ என்று உருகினார். பட்டர் ஆரத்தி தட்டை எடுத்துக்கொண்டு வந்தார். மன்னனுக்கு பிரசாதம் வழங்கிக்கொண்டே, ‘‘அரசே! காசிபர் என்ற அந்தணர், பிறவியிலேயே குருடர். அவர் பார்வை பெறுவதற்கு இங்கு வந்து செந்தி
லாண்டவனைப் பூஜித்து விரதமிருந்தார். கந்தன் கருணையால் காசிபருக்கு இப்போது வலது கண் நன்றாகத் தெரிகிறது. இடது கண் பார்வையை உங்களால்தான் தரமுடியும்! கொஞ்சம் அவருக்கு கருணை செய்யுங்களேன்...’’ என்றார்.

‘‘என்னால் என்ன செய்ய முடியும்? விளையாடுகிறீர்களா..?’’

‘‘இல்லை மன்னா! நேற்று அவர் கனவில் முருகன் தோன்றி நீங்கள் அவரது இடது கண்ணை த்தொட்டால் போதும் பார்வை வந்துவிடும் என்று சொல்லியிருக்கிறார். ஆகவே சற்று தயவு செய்யுங்களேன்...’’‘‘ஒன்றுக்கும் உதவாத இந்தக்கட்டை... கந்தன் அடியவர்களுக்கு பார்வை தரப்போகிறது! இது நான் செய்த பாக்கியம். இருந்தாலும் இந்தக் கட்டைக்கு பார்வை தரும் அளவிற்கு சக்தி உள்ளதா என்று தெரியவில்லை. ஆகவே, இன்று இரவு முழுதும் இதோ இந்த முருகன் முன்பே தியானத்தில் அமரப் போகிறேன். முருகனின் நாம ஜபம் இந்தக் கைக்கு சக்தியைக் கொடுக்கும்...’’ என்று சொல்லி
விட்டு உடனே பத்மாசனம் போட்டு தியானத்தில் ஆழ்ந்து விட்டார்.  

கொஞ்சம் கூட ஆடாமல் அசையாமல் ரிஷி முனிவர்கள் போல் பல மணிநேரம் தியானம் செய்தார். வாயோ ‘முருகா முருகா’ என்று ஓயாமல் உச்சரித்துக் கொண்டிருந்தது. மறுநாள் பொழுது விடியும் வரை அவர் தியானம் நீடித்தது. தவத்தைக் கலைத்து எழுந்த வுடன் கையில் முருகனின் விபூதியை எடுத்துக் கொண்டார். தனக்கு எதிரில் இருந்த காசிபரின் நெற்றியில் அதை இட்டு அவரது இடது கண்ணை தன் கைகளால் வருடிவிட்டார். உடனே காசிபருக்கு இடது கண்ணிலும் பார்வை வந்துவிட்டது!

‘‘ஆ! இடது கண்ணிலும் பார்வை வந்துவிட்டது. தங்களின் மகிமையே மகிமை...’’ என்று காசிபர் மன்னனின் கால்களில் விழுந்தார்.
கூடியிருந்தவர்கள் அனைவரும் ‘‘ஜகவீர பாண்டியர் வாழ்க...’’ என்று கோஷமிட்டனர். மன்னன் ஓடிச்சென்று தன் குழந்தையைக் கையில் எடுத்துக்கொண்டார்.

‘‘வீரபாண்டியா! இவர்கள் அனைவரும் என்னை தெய்வமாக வணங்குகின்றனர். ஆனால், உண்மையில் நான் ஒன்றும் செய்யவில்லை. எல்லாம் இந்த முருகன்தான்!’’ என்று சொல்லிக்கொண்டே குழந்தைக்கு சன்னதியில் இருக்கும் செந்தில் ஆண்டவரைக் காண்பித்தார்.
அந்தக் குழந்தையும் பெரிதாக ஏதோ புரிந்தது போல் தலையை ஆட்டியது.

‘‘யாரு சித்தப்பா அந்தக் குழந்தை?’’ இடையில் வெட்டினாள் சுவாதி‘‘அது வேற யாரும் இல்லை... சாட்சாத் வீரபாண்டிய கட்ட
பொம்மன்தான்! அவரோட அப்பா மாதிரியே அவரும் பெரிய முருக பக்தர். இவர் வாழ்க்கைல முருகன் செய்த அற்புதங்கள் எக்கச்சக்கம்...’’ மெய்மறந்தபடி சொன்னார் நாகராஜன்.‘‘அது எல்லாத்தையும் சொல்லுங்க தாத்தா....’’ அருகில் இருந்த கண்ணன் பரபரத்தான்.
தாத்தா என அவனால் அன்புடன் அழைக்கப்பட்ட நாகராஜன் சொல்லத் தொடங்கினார்...

செந்திலாண்டவனை கண்ணாரக் கண்டு வாயார போற்றிப் புகழ்ந்த சந்தோஷத்தில் கட்டபொம்மனும் அவரது மனைவியும் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் ஒரே நேரத்தில் ஒரே கனவு வந்தது!கனவில் செந்தூர் முருகன் கவலையோடு காட்சி தந்தார்.
‘‘சுவாமி, தங்கள் மதி வதனம் வாடி இருப்பது ஏனோ?’’ பதற்றத்துடன் கட்டபொம்மன் கேட்டார்.

‘‘ஒன்றுமில்லை வீரபாண்டியா! இன்று என் சன்னதிக்கு வரும்போது உன் மனைவி ஒரு பதக்கம் அணிந்திருந்தாள் அல்லவா? அதைப் பார்த்ததும் வள்ளி நாச்சியார் அது போலவே தனக்கும் ஒன்று வேண்டும் என்று கேட்கிறாள்! நானோ ஆண்டி. என்னை நம்பி யார் இவ்வளவு உயர்ந்த பொருளைத் தருவார்கள்? ஆகவே என் ஆருயிர் பக்தனான உன்னிடத்தில் கேட்கிறேன். எனக்கு அதைத் தருவாயா?’’

‘‘சுவாமி! தேவாதி தேவர்களும் தங்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறார்கள். அத்துடன் செல்வத்துக்கு அதிபதியான திருமகள், தங்கள் மாமியார்! அப்படியிருக்க இந்த ஏழையிடம் தாங்கள் யாசிப்பது என்னை நற்கதிக்கு சேர்ப்பதற்கே! இதோ இப்போதே உங்களுக்கு அதைத் தருகிறேன்...’’
கனவு கலைந்தது. கட்டபொம்மன் திடுக்கிட்டு எழுந்தார்.

அவருக்கு முன்பே அவரது மனைவி எழுந்திருந்தாள். ‘‘என்ன... செந்திலாண்டவர் என் பதக்கத்தைக் கேட்டாரா? இதோ இப்போதே கொண்டு போய்க் கொடுங்கள்...’’ என்று சொல்லி தன் கழுத்தில் இருந்த பதக்கத்தைக் கழற்றி அந்த மாதரசி கட்டபொம்மனிடம் தந்தார்.
‘‘உன் கனவிலும் வந்து கேட்டாரா அந்த தயாபரன்?’’
‘‘ம்ம்...’’

‘‘அவர் நம்மீது வைத்துள்ள அன்பையே இது காட்டுகிறது!’’
‘‘ஆமாம். உடனே சென்று இதை அவர் பாதத்தில் சேர்ப்போம்...’’ என்றாள் மகாராணி.
‘‘நமக்கு வேண்டிய பொருளை வேண்டப்பட்டவங்ககிட்டதான் கேட்போம். முருகன் இப்படி ஒரு திருவிளையாடல் பண்ணி
கட்டபொம்மன் தனக்கு எவ்ளோ வேண்டியவர்னு காமிச்சிருக்கார்...’’ தழுதழுத்தார் நாகராஜன்.
‘‘உண்மைதான் சித்தப்பா... மேல சொல்லுங்க...’’ கண்ணனைப் போலவே சுவாதியும் ஆர்வமானாள்.

கி.பி. 1798. கட்டபொம்மன் வெள்ளையனுக்கு அடிபணியாததால் பாஞ்சாலங்குறிச்சியை போர் மேகம் சூழ்ந்து. போர் ஆலோசனையில் கட்டபொம்மன் தன்னை மறந்திருந்தார்.அவரது மனைவியும் அவரை தொந்தரவு செய்யவில்லை. ஒரு வழியாக போர் ஆலோசனை முடிந்து அவர் வெளியில் வந்தார்.
உடனே அந்த அம்மையார் கட்டபொம்மனிடம் ஓடி வந்தார். ‘‘மன்னவா! இன்று திருச்செந்தூரில் ஒன்பதாம் நாள் திருவிழா. கந்தன் சப்பரத்தில் பவனி வரும் அழகைக் காணச் செல்லவில்லையா?’’

‘‘மறந்தே விட்டேன்! இதோ... இப்போதே புறப்படுகிறேன். குறைந்தபட்சம் மூலவரையாவது தரிசித்துவிட்டு வருகிறேன்...’’ சொல்லிவிட்டு புரவியில் ஏறினார்.அவர் திருச்செந்தூருக்கு வருவதற்குள் இரவு பதினோரு மணி ஆகிவிட்டது. ஊர் அடங்கி இருக்கும் என்று எண்ணியிருந்தார். ஆனால், சப்பரம் வலம் வரும் மாடவீதியில் கூட்டம் அப்படியே இருந்தது.

‘‘இன்னும் சுவாமி புறப்பாடு ஆகவில்லையா?’’ கூட்டத்தைப் பார்த்து கட்டபொம்மன் கேட்டார்.‘‘மன்னா! சப்பரத்தைத் தூக்கியவுடன் அது உடைந்து விட்டது. அதைப் பொருத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் ஊர்வலம் இன்னும் நடக்கவில்லை...’’ கூட்டத்தில் இருந்த ஒருவர் பதிலளித்தார்.  
‘‘அடாடா... என்னால் என்ன முடியுமோ அதை உடனே செய்கிறேன்...’’ என்றபடி புரவியை விட்டு இறங்கி ஆலயத்தின் பக்கம் சென்றார் கட்டபொம்மன்.

அப்படி அவர் செல்லவும் செந்தில்நாதன் புஷ்ப சப்பரத்தில் அழகாக பவனி வரவும் சரியாக இருந்தது! தான், செந்தில்நாதனை தரிசிக்க வேண்டும் என்பதற்காகவே அவர் இப்படி நாடகமாடியிருக்கிறார் என்பதை அறிந்து பூரித்தார் கட்டபொம்மன்.ஆனால், தொடர்ச்சியாக இப்படி முருகன் பலவாறு அருள் செய்ததால் லேசாக கட்டபொம்மனுக்கு தலைக்கனம் கூடியது. செந்தூரில் புதிதாக ஒரு மண்டபம் கட்டினார். மாசி மாத திருவிழாவின் போது கந்தன், தான் கட்டிய மண்டபத்திற்கு எழுந்தருள வேண்டும் என்ற புது சம்பிரதாயத்தை கோயிலில் திணித்தார்.

பொதுவாக மாசி திருவிழாவின்போது வடமலையப்ப நாயக்கரின் மண்டபத்தில் மட்டுமே முருகன் தங்குவது வழக்கம். மன்னனே ஆணையிட்ட பின் என்ன செய்ய முடியும்? அனைவரும் கட்டபொம்மன் ஆணைக்கு கட்டுப்பட்டனர்.கட்டபொம்மன் எதிர்பார்த்த திருவிழா வந்தது. அழகான சப்பரம் ஏறி முருகன் வடமலையப்ப நாயக்கரின் மண்டபத்திற்குச் சென்றார். அங்கு அவருக்கு விமர்சையாக பூஜைகள் நடந்தன.

அங்கிருந்து அவரை கட்டபொம்மனின் மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல சப்பரத்தை எடுத்ததுதான் தாமதம்... மழை வெளுத்து வாங்கியது!
பல மணிநேரம் விடாமல் மழை பெய்தது. கொட்டும் மழையில் முருகனை கட்டபொம்மனின் மண்டபத்திற்கு எடுத்துச்செல்ல முடியாத நிலை. தான் கட்டிய மண்டபத்தில் முருகனுக்காகக் காத்திருந்து காத்திருந்து கட்டபொம்மன் களைத்து விட்டார்.

அப்போது அவரது மனைவி பேச ஆரம்பித்தாள். ‘‘சுவாமி! அந்நியர்கள் கடலில் விட் டெறிந்த செந்தில் முருகன் சிலையைக் கண்டெடுத்தவர் வடமலையப்ப நாயக்கர். அதற்கு அவருக்கு மரியாதை செய்யும் விதமாகவே அவரது மண்டபத்தில் விழாக் காலங்களில் முருகன் தங்குகிறார்.
அந்த சம்பிரதாயத்தை மாற்றுவது அவரது பக்தியை அவமதிப்பதற்கு சமம். ஆகவே, கருணையே வடிவாகிய செந்தில்நாதன் மழையைப் பெய்ய வைத்து, நடக்கவிருந்த விபரீதத்தை தடுத்திருக்கிறார். நீங்கள் செய்யவிருந்த பெரும் பாவத்திலிருந்து உங்களைக் காத்திருக்கிறார்! அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது...’’

இதை கேட்ட கட்டபொம்மனுக்கு சுளீர் என்று இருந்தது. உடனே ‘‘அப்பனே முருகா! நீ அந்த மண்டபத்திலேயே இரு... அதுவே சாலச் சிறந்தது...’’ என்று உரக்க வேண்டினார். அவ்வளவுதான். உடனே கொட்டும் மழை நின்றது! கட்டபொம்மன் ஓடிச் சென்று முருகனை வடமலையப்ப நாயக்கர் மண்டபத்தில் சேவித்தார். கந்தன் கருணையை எண்ணி எண்ணி வந்தனங்கள் செய்தார்.

‘‘மை காட்...’’ சுவாதி அதிசயப்பட்டாள். ‘‘கட்டபொம்மன் சுதந்திரப் போராட்ட வீரர்னுதான் இதுவரை தெரியும். இப்பதான் அவர் மிகச்சிறந்த முருக பக்தர்னும், அவரை வைச்சு செந்தில் ஆண்டவர் நிறைய திருவிளையாடல்கள் புரிந்திருக்கார்னும் கேள்விப்படறேன்... தேங்க்ஸ் சித்தப்பா...’’‘‘இதுக்கெல்லாமா நன்றி சொல்வாங்க... நடந்ததைத்தானே சொன்னேன்...’’ என்றார் நாகராஜன்.

‘‘தாத்தா, ஒரு சந்தேகம்...’’ கண்ணன் இடையில் புகுந்தான். ‘‘கட்டபொம்மன் முடிவு ரொம்ப மோசமா இருந்ததே... அப்ப ஏன் முருகன் அவருக்கு உதவலை..?’’நாகராஜன் அர்த்தத்தோடு புன்னகைத்தார்!

(கஷ்டங்கள் தீரும்)

- ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்