ஐஏஎஸ் தேர்வில் டாப் ரேங்க் எடுத்த இளம் தாய்!



சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்துக்கு எதுவுமே தடை இல்லை. இதை வரலாற்றில் பலரும் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக தன்னை அடையாளம் காட்டியிருக்கிறார் ஒரு தன்னம்பிக்கை பெண்மணி.

அரியானாவின் சோனாபட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனு குமாரி. 31 வயது இளம் தாய். நான்கு வயது மகனை வைத்துக்கொண்டு இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் (ஐ.ஏ.எஸ் எக்ஸாம்) தேசிய அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்! தில்லி இந்துக் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற அனு, நாக்பூரில் உள்ள ஐ.எம்.டி (IMT)யில் எம்பிஏ படித்தார்.

படிப்பு முடிந்த கையோடு ஒரு தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் பணியில் அமர்ந்தார். அந்த வேலையை அனு மிகத் திறம்படச் செய்துகொண்டிருந்தார். ஆனால் ஏனோ அதில் திருப்தி இல்லை.

என்ன செய்யலாம் என்று யோசித்தபோது சேவைத்துறையில் தனக்கு உள்ள சிறுவயது ஆர்வம் நினைவுக்கு வந்தது. நாம் ஏன் முறையாகப் படித்து மக்கள் பணியாற்ற முடியாது என்று நினைத்தார். வேலைக்குச் சென்றபடியே யூபிஎஸ்சி க்ரூப் ஒன் தேர்வை எழுதலாம் என்று திட்டமிட்டார். ஏற்கெனவே அலுவலகப் பணிச்சுமை கழுத்தை நெரிக்க இந்த ஐ.ஏ.எஸ் லட்சியமும் சேர்ந்துகொள்ள கால் துவள ஓடினார் அனு.

இந்தத் தருணத்தில்தான் ஒரு தொழிலதிபரோடு திருமணமும் ஏற்பாடானது. திருமணமான கையோடு ஒரு குட்டிப் பையனும் வந்துவிட்டான். ஆனால், அனுவின் ஐ.ஏ.எஸ் கனவு மட்டும் கரையவில்லை. ஒருபக்கம் கணவன், குழந்தை என்று குடும்பச் சுமை, மறுபக்கம் அலுவலகச் சுமை என்று இரட்டை பாரங்களோடு ஐ.ஏ.எஸ் நோக்கி ஓடினார்.

2016ம் ஆண்டிலேயே ஒருமுறை தேர்வு எழுதினார். நன்கு தயாரிப்போடு போயிருந்தும் வெறும் ஒரு மதிப்பெண்ணில் அந்தத் தேர்வில் தோல்வியைத் தழுவினார். இந்தத் தோல்வி அனுவை யோசிக்க வைத்தது. இப்படி காலில் இரும்புக் குண்டை கட்டிக்கொண்டு ஓடுவது என்பது முடியாத காரியம். எனவே, சுமையைக் குறைப்போம் என்று துணிந்து முடிவெடுத்தார். தனது காப்பீட்டு அலுவலக வேலையை 2017ம் ஆண்டில் துறந்தார்.

பொறுப்புள்ள குடும்பத் தலைவியாக கணவனையும் குழந்தையையும் கவனித்துக்கொண்டு நேரத்தை உருவாக்கிப் படித்தார். இரவெல்லாம் உறங்காமல் படிப்பது; கிடைக்கும் கொஞ்ச நேர இடைவெளியில் உறங்கிக்கொள்வது என்று அசுர உழைப்பு.

விளைவு -யூபிஎஸ்சி தேர்வில் பெரும் வெற்றியடைந்தார். அதுவும் தேசிய அளவில் இரண்டாவது என்ற மகத்தான வெற்றி.‘‘எளிய மக்களுக்காகப் பணியாற்றவே எப்போதும் விரும்புகிறேன். பெண்கள், குழந்தைகள் நலனுக்காகவும் வறியவர்களுக்காகவும் பாடுபடுவேன்!’’ என்று கம்பீரமாகச் சொல்கிறார்.  

லயா