நியூஸ் வியூஸ்-இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!திரும்பவும் கிளம்பியிருக்கிறது இந்தி பூச்சாண்டி.இது ஏறத்தாழ எண்பது ஆண்டுகால பஞ்சாயத்து.இந்தியாவில் இந்தி பேசாத மாநிலங்களின் கல்வி பாடத்திட்டங்களில் இந்தியை கட்டாயமாக்கும் முதல் முயற்சி 1937ல் இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது சென்னை மாகாணத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசும், பிரதமராக (மாநிலங்களுக்குத்தான் முதல்வர், மாகாணங்களுக்கு பிரதமர்) இருந்த ராஜாஜியும் முரட்டுத்தனமாக இந்தியை தமிழர் உள்ளிட்ட இந்தி தவிர்த்த வேறு மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் திணிக்க முற்பட்டனர்.

முதல் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போர் தொடங்கியது. கிட்டத்தட்ட மூன்றாண்டு காலம் நடந்த இந்த எதிர்ப்புப் போரில் ஆயிரத்துக்கும் மேலானோர் கைதானார்கள். இருவர் மரணமுற்றார்கள். அதையடுத்து பிரிட்டன் அரசின் ஆளுநர், கட்டாய இந்தி என்கிற நிலையை விலக்கினார்.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு தற்காலிகமாக இந்தி, நாட்டின் அலுவல் மொழியாக விளங்கியது. பதினைந்து ஆண்டுகள் கழிந்த நிலையில் இந்தி மட்டுமே அலுவல் மொழி என்கிற நிலையை நிரந்தரமாக்க இந்திய அரசு, 1965ல் வலுக்கட்டாயமாக முயற்சித்தது.

இந்தி பேசாத மாநிலங்கள் இம்முயற்சிக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தன. குறிப்பாக தமிழகம், போர்க்கோலம் பூண்டது. அரசு அலுவல் மொழியாக இந்தி மட்டுமே இருக்குமென்றால், இந்தி பேசாத மாநிலங்களில் அனை வரும் இந்தி கற்றுக் கொள்வது கட்டாயமாகும்.தமிழகத்தில் மாணவர்கள் தலைமையேற்று இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராடினார்கள்.

இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பாதவரை இந்தி திணிக்கப்பட மாட்டாது என்கிற நேருவின் உறுதிமொழிக்கு எதிரானது இது என்று மிகக்கடுமையாக ஆட்சேபணை தெரிவித்து, வகுப்பறைகளை விட்டு தெருவுக்கு வந்து போராடினார்கள்.

வன்முறை வெடித்தது. ஐம்பதுக்கும் மேற்பட்டோர் போராட்டங்களில் மொழிக்காக உயிர் துறந்தார்கள். தமிழர்களைப் பொறுத்தவரை இந்தித் திணிப்புக்கு எதிராகத் தீக்குளித்தும் தங்களை மாய்த்துக்கொண்டும் எதிர்ப்புகளை பதிவு செய்தார்கள். இந்திய அரசு, இந்தளவு தீவிரமான எதிர்ப்பை வேறெந்த மாநிலத்திலும் எதிர்கொண்டதில்லை. அதையடுத்து ஆங்கிலமும் அரசுப்பணிகளில் இணைமொழியாக இருக்கும் என்கிற வாக்குறுதியைப் பெற்றபிறகே எதிர்ப்புப் போரை கைவிட்டார்கள்.

எனினும், அவ்வப்போது தகுந்த இடைவெளிகளில் இந்தியைக் காட்டி தமிழ்நாட்டுக்கு பூச்சாண்டி காட்ட மத்திய அரசு தவறுவதே இல்லை.1986ல் தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் திறந்து, அதன் மூலமாக இந்தியைத் திணிக்க முயற்சி மேற்கொண்டார்கள். சட்ட நகல் எரிப்புப் போராட்டமெல்லாம் நடந்து, அப்போதும் மிகப்பெரிய எதிர்ப்பை இந்திய அரசு எதிர்கொண்டது.

இவை தவிர்த்து அவ்வப்போது நெடுஞ்சாலை மைல் கற்களில் இந்தி என்பதைப்போல சில்லறை சில்லறையாகவும் இந்தித் திணிப்பை மேற்கொள்ள மத்திய அரசு முயற்சித்து, ஒவ்வொரு முறையும் கடும் எதிர்ப்பை தமிழ்நாட்டில் சந்தித்து வருகிறது.ஒவ்வொரு முறையும் அவர்கள் இந்தியைத் திணிக்க முற்படுவார்கள். தமிழகம், ‘அங்கே என்ன சத்தம்?’ என்று கேட்டு போர்க்கோலம் பூணும். ஏதேனும் சால்ஜாப்பு சொல்லி, ‘சும்மா பேசிக்கிட்டிருந்தேனுங்க’ என்று மத்திய அரசு ‘யூ-டர்ன்’ அடிப்பதும் இந்த எண்பது ஆண்டுகால வாடிக்கையாக இருக்கிறது.

இப்போதும் புதிய கல்விக்கொள்கை என்று கஸ்தூரிரங்கன் குழுவின் பரிந்துரையை காரணம் காட்டி வரைவுத் திட்டம் மூலமாக இந்தியைத் திணிக்கும் முயற்சியில் இறங்கி, எதிர்ப்பின் காரணமாகப் பின்வாங்கியிருக்கிறார்கள்.ஆனால் -தமிழகத்திலேயே சில குறிப்பிட்ட பிரிவினர், ஒவ்வொரு முறையும் இந்தித் திணிக்கப்படும்போது மத்திய அரசுக்கு ஆதரவாக இந்தியை வரவேற்பார்கள். இந்தித் திணிப்பை எதிர்ப்பவர்களை கேலியும், கிண்டலுமாக எதிர்கொள்வார்கள்.

தமிழனுக்கு இந்தியென்ன வேப்பங்காயா? இந்தியை தமிழன் வெறுக்கிறானா?அப்படியெல்லாம் எதுவுமில்லை.இந்தி என்கிற மொழி மீது தமிழ்நாட்டில் யாருக்குமே வெறுப்பு என்பது இல்லவே இல்லை. அப்படி இருந்திருந்தால் தமிழகத்தில் நெடுங்காலமாக இந்திப்படங்களை ரசிகர்கள் ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? தூர்தர்ஷன் வாயிலாக திணிக்கப்பட்ட இந்தியைக்கூட பொழுதுபோக்காகத்தானே தமிழர்கள் எடுத்துக் கொண்டார்கள்?

ஒரு மொழி மீது விரோதம் கொள்ளுமளவுக்கு தமிழனுக்கு மூளை பிசகிவிடவில்லை. “எந்த மொழி கற்றால் நீ பிழைக்க முடியுமோ, அந்த மொழியைக் கற்றுக்கொள்” என்றுதான் முதற்கட்ட இந்தித் திணிப்பு எதிர்ப்பு போருக்கு தலைமை தாங்கிய தந்தை பெரியாரேகூட சொல்லியிருக்கிறார்.பிரச்சினை, திணிப்புதான்.

ஒரு புதிய மொழியைக் கற்றுக் கொள்வது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பமாக இருக்க வேண்டும். ஒவ்வொருவருடைய சிந்தனையும் தம் தாய்மொழியில்தான் அமைகிறது.  தாய்மொழியில் கல்வி கற்பது என்பது அடிப்படைப் புரிதல்களுக்கு அவசியம். மேலும், நம் பிழைப்புக்கு ஆங்கிலம் தேவைப்படுவதால் அதையும் ஒரு பாடமாக கற்றுக் கொள்கிறோம். உலகம் முழுக்க பணி செய்து சம்பாதிக்கவோ, மேற்படிப்புகள் படிக்கவோ உலகமொழியான ஆங்கிலம் தேவைப்படுகிறது.

அப்படிப்பட்ட ஆங்கிலத்தையே நம்மில் பலரும் பத்தாம் வகுப்பு தேர்வில் தட்டுத் தடுமாறி பார்டரில் பாஸ் செய்துதானே வந்திருக்கிறோம்?

இந்த லட்சணத்தில் மூன்றாம் மொழியாக இந்தியை கட்டாயமாகத் திணித்தால் பள்ளியிலிருந்து கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக்குறையும். குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு மூன்றாவது மொழி தேவையில்லாத சுமையாக அழுத்தி, அவர்களது கல்விக்கனவுகளை முளையிலேயே பிடுங்கி எறிந்துவிடும் என்கிற அச்சம்தான் ஒவ்வொரு முறையும் இந்தித் திணிப்பு நடக்கும்போது தமிழனை போராடத் தூண்டுகிறது.


இந்த இரண்டு மொழிகளைத் தவிர்த்து வேறு மொழி ஒன்றை யாரேனும் கற்க விரும்பினால், அதற்கு தமிழகத்தில் எப்போதும் தடை இருந்ததே இல்லை. இப்போதும்கூட தனியார் பள்ளிகளில் இந்தி, பிரெஞ்சு, சமஸ்கிருதம் உள்ளிட்ட வேறு மொழிகள் கற்பிக்கப்படும்போது அதற்கு எதிராகவெல்லாம் தமிழர்கள் போராட்டம் நடத்துகிறார்களா என்ன?

டெல்லி, மும்பை உள்ளிட்ட வடமாநிலங்களில் பணி செய்யச் செல்பவர்களுக்கு இந்தி பேசவும், எழுதவும் தெரியவேண்டியது அவசியம்தான். அம்மாதிரி இங்கிருந்து செல்லும் ஆயிரக்கணக்கானோர் மிகக்குறுகிய காலத்திலேயே சரளமாகப் பேசுகிறார்கள். எழுதவும் கற்றுக் கொள்கிறார்கள். இந்தி மட்டுமல்ல; சீனாவுக்குப் போய் பணி செய்யக்கூடியவர்கள் மாண்டரின் கற்றுக்கொள்வதும், வளைகுடா நாடுகளில் இருப்பவர்கள் அரபி பேசுவதும் இயல்பாகவேதான் நடந்துகொண்டிருக்கிறது.

மாமல்லபுரம் போய் பார்த்தால் கடலை / மோர் விற்பனை செய்பவர்கள் கூட சுற்றுலாப்பயணிகளிடம் பேசிப்பேசி இந்தி, ஆங்கிலத்தில் விளாசுவதைக் காணலாம்.எந்தவொரு மொழியோ, கலாச்சாரமோ எவர்மீதும் வலிந்து திணிக்கப்படக்கூடாது. அது பாசிஸம். இந்தித் திணிப்பை நாம் எதிர்ப்பதும் நியாயமான பாசிஸ எதிர்ப்புதானே தவிர, வெறும் அரசியல் மாய்மாலம் அல்ல.                

யுவகிருஷ்ணா