இந்தியில் தோல்வியடையும் இந்தி மாணவர்கள்!



இந்திய அரசு புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுத் திட்டத்தில் மும்மொழிக் கொள்கையை வகுத்து, இந்தியா முழுதும் இந்தியை கட்டாய பாடமாக்க ஒரு வரைவு கொண்டு வந்திருந்த செய்திதான் போன வார சென்சேஷன். தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் உடனடியாக இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. இங்கு, ஆளுங்கட்சி முதல் எதிர்க்கட்சிகள் வரை உடனடியாக கண்டன அறிக்கைகள் விட்டன.

ஃபேஸ்புக், டிவிட்டர் என சமூக ஊடகங்களில் காரசார விவாதங்கள் அனல் பறந்தன. இவ்வளவு களேபரங்களுக்கு இடையில் சத்தமில்லாமல் ஒரு செய்தி கடந்துபோனது. இந்தி பேசும் மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 20% மாணவர்கள் இந்திப் பாடத்தில் தோற்றிருக்கிறார்கள் என்ற செய்திதான் அது.

சுமார் ஐந்தே முக்கால் லட்சம் மாணவர்கள் பங்கேற்ற உத்தரப் பிரதேச அரசின் பொதுத் தேர்வில் சுமார் ஐந்து லட்சம் பேர் ஆங்கில மொழிப் பாடத்திலும் கணிதத்திலும் தோல்வியடைந்திருக்கிறார்கள். இந்தக் கல்வியாண்டில் இருபத்தொன்பதரை லட்சம் மாணவர்கள் இந்திப் பாடத்தில் தேர்வு எழுதினார்கள். இதில், இருபத்து மூன்றே முக்கால் லட்சம் பேர் மட்டுமே தேறியிருக்கிறார்கள். தாய்மொழியிலேயே இருபது சதவீதம் பேர் தோல்வியடைந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘‘இந்தக் காரணத்தால்தான் மாணவர்கள் தாய் மொழித் தேர்வில் தோல்வியடைகிறார்கள் என்று குறிப்பிட்டு எந்தக் காரணத்தையும் சொல்ல முடியாது. பொதுவாக, மாணவர்களுக்கான இடையீடு என்பது சமீப காலங்களில் அதிகரித்திருக்கிறது. அதனால்தான் தோல்வியடைகிறார்கள்...’’ என்கிறார் உ.பி பாடத்திட்ட போர்டின் செயலர் நினா வத்சவா.

இந்தியில் மட்டும் அல்ல, அறிவியல், சமூகவியல் போன்ற பாடங்களில்கூட கணிசமானவர்கள் தோல்வியடைந்திருக்கிறார்கள். ஆனால், இந்தி பேசும் மாநிலம் ஒன்றிலேயே அதன் மாணவர்கள் தாய்மொழியில் தோல்வியடைந்திருக்கிறார்கள் என்ற செய்தி அபத்தமாக உள்ளது.

முதலில் உங்கள் குழந்தைகளுக்கு இந்தியை சரியாகச் சொல்லிக்கொடுத்துவிட்டு பிறகு அதை மற்ற மாநிலங்களுக்குப் பரப்புங்கள் என்று எதிர்க்கட்சிகள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் தமிழ்நாட்டிலும் தமிழில் தோல்வியடையும் விகிதம் கணிசமாகவே உள்ளது. இப்படி நம் குழந்தைகள் தாய் மொழியிலேயே தோல்வியடையும் அளவுக்குப் பலவீனமாக இருக்கும்போது இன்னொரு அந்நிய மொழியை அவர்களிடம் திணிப்பது என்பது கல்விச் சூழலை மிக மோசமானதாக்கி எளிய குழந்தைகளை கல்வியை விட்டு அகற்றிவிடும் என்கிறார்கள் கல்வியியலாளர்கள். இதுவும் கவனிக்க வேண்டிய பாயிண்ட்தான்.      
     
என்.யுவதி