ஊதுவத்தி சோப் முதல் எண்ணெய் வரை எல்லாமே ஆர்கானிக்!‘‘ஆரோக்கியமா நாம வாழ என்ன வழினு யோசிச்சோம். அப்ப கிடைச்ச ஐடியாதான் இந்தக் கடை...’’ சிரித்தபடி சொல்கிறார் பிரேம் ஆண்டனி.

‘‘நானும் என் பார்ட்னர் பிரதீப் குமாரும் பத்தாவது முதல் நண்பர்கள். வளர வளர எங்க ரெண்டு பேருக்குமே விவசாயம் பக்கம் கவனம் குவிஞ்சது. பூச்சிக்கொல்லி, கெமிக்கல் இல்லாத ஆர்கானிக் பொருட்கள் சார்ந்து நிறையப் படிச்சோம்; தேடினோம். ஆள் பலம் இல்லாததால எங்க இரண்டு பேராலும் இறங்கி வேலை செய்ய முடியலை. தவிர விவசாயத்துல எங்களுக்கு அனுபவமும் இல்ல. ஆனா, ஈவன்ட் மானேஜ்மெண்ட்ல எங்க ரெண்டு பேருக்குமே எக்ஸ்பீரியன்ஸ் இருந்தது.

இதை வைச்சு ஆர்கானிக் விவசாயிகள், உற்பத்தியாளர்களை எல்லாம் ஒண்ணு சேர்த்து ஒரு ரீடெயில் ஷாப்பை ஏன் ஆரம்பிக்கக் கூடாதுனு எங்களுக்குள்ளயே கேள்வி கேட்டுகிட்டோம். கடையை ஆரம்பிச்சுட்டோம்...’’ என சென்னை மயிலாப்பூரில் இயங்கி வரும் தன் ‘ஈகோ இந்தியன்’ கடையின் வரலாற்றை விவரிக்கிறார்.

‘‘இது ஸீரோ வேஸ்ட் ஆர்கானிக் ஷாப். எங்க டார்கெட் மறுசுழற்சி. பொதுவா மத்த பலசரக்குக் கடைகள்ல கிடைக்கிற எல்லா பொருட்களுமே - அரிசி, எண்ணெய்ல தொடங்கி - இங்கயும் கிடைக்கும்.ஆனா, எல்லாமே ஆர்கானிக் சான்றிதழ் வாங்கியவை! சில விவசாயிகள் சான்றிதழ் வாங்காம ஆர்கானிக் பொருட்களை உற்பத்தி செய்யறாங்க. அப்படிப்பட்டவங்களோட நிலத்துக்கு நாங்களே நேர்ல போய் அது உண்மையானு பார்த்துட்டு அவங்ககிட்ட பொருட்களை வாங்கறோம்.

எங்களுக்கு சப்ளை பண்ற எல்லா டீலர்ஸோட சான்றிதழையும் நகல் எடுத்து அதை ஃபைலில் கடைக்கு முன் வைச்சிருக்கோம். யார் வேண்டுமானாலும் அந்த ஃபைலை புரட்டிப் பார்க்கலாம்!’’ என பிரேம் முடிக்க, தங்களிடம் வாங்கும் பொருட்களை பையில் போட்டுத்தான் தருகிறோம் என ஆரம்பித்தார் பிரதீப்.

‘‘பாலிதீன் கவர்ஸோ, பிளாஸ்டிக்கையோ நாங்க பயன்படுத்தறதில்ல. வாடிக்கையாளர்களே துணிப்பை கொண்டு வந்தா 5% சலுகை உண்டு. ஹோம் மேட் ஆர்கானிக் சோப்புல கூட பிளாஸ்டிக் கவர் இருக்காது. பட்டர் பேப்பர்தான். ஊதுபத்தி, மர ஸ்ட்ரா... இப்படி எல்லாமே பட்டர் பேப்பர்ஸ்தான்.

மறுசுழற்சி செய்துகொள்ளக்கூடிய நேப்கின், விதைகள் சேர்த்து உருவாக்கப்பட்ட பென்சில், மெழுகு இல்லா டம்ளர்ககள்... இப்படி அன்றாடம் நான் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் ஆர்கானிக்தான்.

கடைல இருக்கும் பாட்டில்கள் வெளிநாட்டிலிருந்து பெறப்பட்டவை. புவி ஈர்ப்புக்கு எதிரான கன்டெயினரை தில்லில இருந்து வாங்கினோம். ஆன்லைன் வழியாகவும் நாங்க சேல்ஸ் பண்றதால பல நாடுகளில் இருந்தும் எங்களுக்கு ஆர்டர்ஸ் வருது!’’ உற்சாகமாகச் சொல்கிறார் பிரதீப்.           

ஷாலினி நியூட்டன்

ஆ.வின்சென்ட் பால்