காஞ்சனா 2க்கும் இதுக்கும் சம்பந்தமில்லை!காஞ்சனா 3 சீக்ரெட்ஸ்

எப்படியிருக்கும் ‘காஞ்சனா 3’? லாரன்ஸ் அதில் எப்படியிருப்பார்..?

எக்கச்சக்க சஸ்பென்ஸில் காத்திருக்கிறது கோலிவுட். கலைந்திருக்கும் தலைமுடி, கொஞ்ச நாள் தாடி என எதிர்பார்த்துப் போனால் செம ஃப்ரஷ் ராகவா லாரன்ஸ். ‘காஞ்சனா 2’ சூப்பர் ஹிட்! சன் பிக்சர்ஸ் வழங்கும் ‘காஞ்சனா 3’ ஆட்டத்திற்கு ரெடி. உற்சாகத்தோடு ஆல்டைம் ஸ்மார்ட் நம்மிடம் பேசினார்.

‘‘கிடைச்ச அங்கீகாரத்தைத் தக்க வைக்கணும்னு ஆசை. சளைக்காமல் உழைச்சிட்டு இருக்கோம். ‘காஞ்சனா’வை சும்மா ஜாலியாக பண்ணினேன். எல்லாத்தையும் தூக்கித்தள்ளி வச்சிட்டு மக்கள் அங்கீகரித்த படம் அது.

பேய்க்கதைன்னா அலறித் துடிக்காம, வாய்விட்டு சிரிக்க வைக்க முடியும்னு சொன்ன படம். அதற்குப்பிறகுதான் நம்ம பாதையில் பங்காளிகள் நடக்க ஆரம்பிச்சிருக்காங்க. இப்போ கொஞ்ச நாளா என் உடம்புக்குள்ளே உட்கார்ந்து இருக்கிறது ‘காஞ்சனா 3’தான்...’’ எனத் தீர்மானமாகப் பேசும் லாரன்ஸின் டிராக் ரெக்கார்டுகள் வியப்பூட்டுபவை. மேலே, உயரே, உச்சியிலே என எகிறுகிறது ஸ்டேட்டஸ்.

‘காஞ்சனா 3’க்கான எதிர்பார்ப்பு எக்கச்சக்கம்... உணர்கிறீர்களா?

ஆமா! இதைப் பேய்ப்படம்னு ஒரு வரியில் சொல்லிட முடியாது. அப்படிப்பார்த்தால் ரொம்பப் புதுசா கதறடிக்கிற மாதிரி ஆக்‌ஷன் கூட இருக்கு. சிரிப்பு, பயம், த்ரில், திகில், ரொமான்ஸ், நடனம், இசைன்னு இப்படி ஒரு கலவை இருக்க முடியுமான்னு உங்களுக்கே ஆச்சர்யம் தாங்க முடியாது.

‘காஞ்சனா 2’க்கும் இதுக்கும் சம்பந்தமில்லை. யாரும் இதை ‘காஞ்சனா 2’ மாதிரியே இருக்குன்னு சொல்லிடக்கூடாதுன்னு தெளிவாக இருக்கேன்.
‘காஞ்சனா’வை வடிவமைக்கிற விதம் ஆச்சர்யமா இருக்கு...

‘முனி’யையும் சேர்த்து நாலு காஞ்சனா வந்திருக்குன்னு கணக்கு வைக்கிறேன். இப்படி இந்தியாவில் இதுவரைக்கும் யாரும்  பண்ணினதில்லை. எனக்கு இதை ‘10’ வரைக்கும் கொண்டுபோகணும்னு ஆசை. இந்த மாதிரி ஹாலிவுட்ல ‘Fast and Furious’ எட்டு வரைக்கும் வந்திருக்கு.

கதையும், காமெடியும் இருந்தால்கூட போதாது. இன்னும் அடுத்த லெவல் போகணும்னு நினைப்பு வந்தது. வெறும் மேக்கிங் மட்டும் போதாது. உணர்வுபூர்வமான விஷயங்களும் இதில் இருக்கு. இனம் புரியாத வலி இருக்கும். ‘காஞ்சனா’வில் சரத்குமாரை திருநங்கையா எதிர்பார்த்தீங்களா? அப்படி ஒரு வலி, மெசேஜ் இதிலும் இருக்கு.

‘காஞ்சனா’வை அத்தனை பேரும் ரசிக்க வைச்சிட்டீங்க...‘காஞ்சனா’வோட பெரிய ரசிகர்கள் குழந்தைகள். ஏர்போர்ட், விழா, அப்படி இப்படின்னு எங்கே போனாலும் குழந்தைகள் கையைப் பிடிச்சுக்கிட்டு கேட்கிற கேள்வி ‘காஞ்சனா எங்கே?’னுதான். நம்ம எல்லோர்கிட்டேயும் எப்பவும் ஒரு குழந்தை மனசு இருக்கு. சாமியைக்கூட ஒருசிலருக்கு பிடிக்காமல் போகும். ஆனால், பேயின் மீதான பயம் யாருக்கும் இல்லைன்னு சொல்லிட முடியாது.

கோவை சரளா இருக்கணும். தேவதர்ஷிணி வேணும். மன் இருப்பார். ஆனால், சீன் புதுசா இருக்கணும். போன தடவை ‘காஞ்சனா 2’ 100 கோடி கலெக்ட் ஆச்சு. இந்தத் தடவை அடுத்த கட்டம் போகணும். எனக்கு டைம் முக்கியம் இல்லை. ஒவ்வொண்ணும் பெஸ்ட்டா வரணும். பெரிய படம், பெரிய கேன்வாஸ், வேலைகள்னு மேன்பவர் நிறைய ஆன படம்.  

வேதிகா, நிக்கி தம்போடி, ஓவியான்னு மூணு ஹீரோயின்கள்...

வேதிகா என்கிட்டே சின்னப்பொண்ணா நடிச்சதுதான். எப்பவும் டான்ஸில் பின்னும். சீன், பாட்டுன்னு ஆயிரம் கேள்வி இப்பக் கேட்குது. இந்தப் பொண்ணு நல்லா விபரமா வந்திருச்சேன்னு ஆச்சர்யமா இருக்கு. சமயங்களில் ஷூட்டிங் அவசரத்தில் கோபம் வந்தாலும், அப்புறம் ரசிப்பேன்.

நிக்கியை நான் அறிமுகப்படுத்துறேன். முதல் படத்திலேயே காமெடியில் நல்லா செய்திருக்கு. ஓவியா ‘90 ml’ படத்துல அத்தனை அலப்பறை கொடுத்திருக்கு. இங்கே அமைதியா வந்து நடிச்சிட்டு போய்விட்டது.  

இந்த மூணு பேரும் கொண்டாட்டம், கிளாமர், கதை டுவிஸ்ட்டுக்குத் தேவைப்படறாங்க. எல்லாத்துக்கும் மேலே படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ வழங்குறாங்க. நான் ஒரு படத்தை பிரமோட் பண்றதுக்கும், ‘சன் பிக்சர்ஸ்’ பண்றதுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருக்கு. எனக்கு அவர்களே கூடுதல் பலம்.ஆதரவற்ற குழந்தைகள் இல்லம், திருநங்கைகளுக்கு ஹோம்னு எப்படி தொடர்ந்து செய்ய மனசு வருது...

கண்டது, கேட்டது, அனுபவத்தில் உணர்ந்ததுதான் என்னை உருவாக்கியிருக்கு. வாழ்க்கை உங்களை எந்த எல்லைக்கும் கொண்டு போகலாம். ஆனால், அத்தனை பேரும் அலையுறது அன்புக்காகத்தான். அன்பைக் கொன்றால் அதுதான் அழிக்க முடியாத அநீதி.

சின்ன வயதில் கஷ்டத்தில் இருக்கும்போது ‘பணக்காரங்க இவ்வளவு கோடியை எங்கே வைச்சிருப்பாங்க, இவ்வளவு பணம் எதுக்கு...’னு பேசிப்போம். அதே கோடி என்கிட்டே வரும்போது நானும் எங்கே வைக்கிறதுன்னு கேள்வி வருமில்லையா, அதுதான் கேரளாவுக்கு, தமிழ்நாட்டிற்குன்னு கோடிகளைத் தூக்கிக்கொடுத்தேன்.

இந்தக் கடவுள்தான் எத்தனை மனுஷங்க, மொழிகள்னு படைச்சு வைச்சு, ஒருத்தருக்கு இருக்கிற ரேகையை அடுத்தவங்களுக்கு இல்லாமல் கூட பாத்துக்கிறாரு. அத்தனை மதமும் சொல்றது அன்புதானே... அப்புறம் நமக்கு கொஞ்சமா வைச்சுக்கிட்டு, மீதியைக் கொடுக்கிறதில் என்ன பிரச்னை! எங்க அம்மாவில் ஆரம்பிச்சு, மனைவி வரைக்கும் நான் இப்படிச் செய்ய பச்சைக்கொடி காட்டுறதுதான் இதில் அழகு.

நா.கதிர்வேலன்