TOLET



இப்படித்தான் தமிழ் சினிமாவில் எப்போதாவது நல்லது நடக்கும். இந்தத் தடவை ஒளிப்பதிவாளர் - இயக்குநர் செழியன் முன்னெடுத்திருக்கிறார். நாம் பெருமிதம் கொள்வதற்கான படமிது.
எளிய மனிதர்களின் பிரியர்களையும், சந்தோஷங்களையும் இருப்பிடம் என்கிற ஒரு விஷயம் எப்படி குதறிப்போடுகிறது என்பதை செய்நேர்த்தியில் சொன்ன விதத்தில் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநராக தடம் பதிக்கிறார் செழியன். நாம் இவ்வளவு அருகாமையில் நெருங்கிப் பார்க்காத எளிய மக்களின் இருண்ட பக்கங்களை ‘இதோ இதோ’ என திறந்து காட்டுகிறார். முழுக்க முழுக்க அறிமுகங்கள், புதுமுகங்கள்.. அதுவும் படத்தின் நம்பகத்தன்மைக்கான நங்கூரம்.

சினிமாவில் இருந்துகொண்டே அடுத்தகட்ட நகர்த்தலுக்கான கனவிலும், துடிப்பிலும் இருக்கிறார் கதைநாயகன் சந்தோஷ். சகல வசதிக் குறைவையும் சகித்துக்கொண்டு, வெளிச்சத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் மனைவி ஷீலா.

கூடவே இருவரின் அன்பின் சேமிப்பாக இருக்கும் குழந்தை தருண். திடும்மென வீட்டின் சொந்தக்காரர்கள் காலி செய்யச் சொல்கிறார்கள். பிறகான நகர்வுகள், பிரச்னைகள், வாடகைக்கான இடம் கோரிப் பெறுவதில் இருக்கிற அரசியல், சாதி, பொருளாதாரம் இதையெல்லாம் இவர்கள் இருவரின் வாழ்வின் ஊடாக ஏற்றிச் சொல்கிறார் இயக்குநர்.
 
மிக மிக எளிமையான ட்ரீட்மென்ட். மாறிவரும் சமூகத்தின் முகம் சொல்லும் இந்தப்படம், நமக்குப் பாடம்.வீட்டின் குறைந்த தேவைகளைத் தரமுடியாத அவஸ்தையிலும், அதை இறுகிய முகத்தில் இருத்திக்கொண்டு உலவும் சினிமாக்காரனாகவே இருக்கிறார் புதுமுகம் சந்தோஷ் நம்பிராஜன்.

ஒரு கட்டத்தில் மனைவி கேட்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் தரமுடியாமல் குமுறி கேவல்களில் வெளிப்படுவது அழகு. இவ்வளவு பிரச்னை பொழுதுகளில் ஆங்காங்கே வெளிப்படுகின்ற தாம்பத்ய சிணுங்கல்கள், மனைவியின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் சுயபரிதாபம் கொள்பவராக சந்தோஷ்... அறிமுகம் என நம்ப முடியவில்லை.

ஷீலா, கோபத்தையும் கொந்தளிப்பையும் அன்பையும், பிரியத்தையும் படம் முழுக்க இரண்டு பெரிய கண்களில் பேசுகிறார். கணவனை அதட்டிப் பேசி விட்டாலும், கஷ்டம் உணர்ந்து அவனைக் கையில் ஏந்தி ஆசுவாசப்படுத்தும் நேர்த்தி... ஆஹா! வீட்டு ஓனராக கடுகடு பேச்சும், சுடு பார்வையுமாக ஆதிரா கடுப்பேற்றுவதில் கச்சிதம். கொஞ்ச நேரமே வந்தாலும் அருள்எழிலன் சொல்லிவிட முடிகிற வார்த்தைகளும், கேலியும் அவ்வளவு நிஜம்.
அந்தச் சிறுவன் தருண்... சொல்லித் தெரிகிற வயசு கூட இல்லை. ஆனாலும், அடடே!

ஒரு சின்ன வீட்டில் இருந்துகொண்டு நிஜம் காட்டியதில், ஒரு வாழ்வை படம் பிடித்ததில் செழியனின் கேமரா அபாரமாக உழைத்திருக்கிறது. ஒரு வீட்டின், வெளியின் அழகான ஒலி அமைப்பை தபஸ்நாயக் சித்திரப்படுத்துகிறார். மனதுக்கு நெருக்கி, வரிசைப்படுத்தி காட்சிப்படுத்திய அழகில் ஸ்ரீகர் பிரசாத் நெருக்க உணர்வு தருகிறார்.புதிதாக, நேர்மையாக, ஏமாற்றம் தராமல், பொய் சொல்லாமல் ஒரு படம். அதுவே ‘டுலெட்’.             
   
குங்குமம் விமர்சனக் குழு