மேரேஜா... எனக்கா...சொல்லவேயில்ல! டாப்ஸி தடாலடி



பாலிவுட்டில் டாப் கியரில் பறக்கிறார் டாப்ஸி. மும்பையில் புது வீடு கட்டியிருக்கிறார். தென்னிந்திய படங்களைவிட இந்தியில்தான் அவரது கவனம் படபடக்கிறது. ‘‘இப்ப இந்தில மனசுக்கு  திருப்தியான நல்ல படங்கள் பண்றேன்.
‘பிங்க்’ வெளியான டைம்ல பாலிவுட்டில் நான் தெரியாத முகம். அமிதாப்பச்சன் மட்டுமே அந்தப் படத்தின் ஒரே மார்க்கெட் வேல்யூ உள்ளவர். ஆனா, அது வெளியாகி முதல் 3 நாளிலேயே டாக் ஆஃப் தி டவுனா மாறுச்சு. என் நடிப்பும் பேசப்பட்டுச்சு. எனக்கும் பாலிவுட் ஸ்டைல் செட் ஆச்சு. கொஞ்சமும் நான் எதிர்பார்க்காத விஷயம் அது.

சினிமாத் துறைல பல வருஷங்களா இருக்கேன். ‘பிங்க்’ படத்துக்கு அப்புறம்தான் என் லைஃப் மாறிச்சு. ஏன்னா சினிமா பின்னணி இல்லைனா எந்நேரமும் அன்செக்யூர்டா உணர்வீங்க. எப்பவும் ஒரு பயம் உள்ளூற இருந்துகிட்டே இருக்கும். ஒரு படம் ஃப்ளாப் ஆனாலும் போதும்... ஒருத்தரும் நம்மைத் தேடி வரமாட்டாங்க.நமக்கான நேரம், காலம் அமையணும். நம்ம திறமையைக் காட்ட ஸ்பேஸ் கிடைக்கணும். சின்னதா அது கிடைச்சுட்டா கூட போதும்... கால் ஊன்றிடலாம். இதுக்கு அப்புறம் யாராலயும் நம்மை பின்னுக்குத் தள்ள முடியாது.

இதை எல்லாம் ‘பிங்க்’ சக்சஸ் ஆனதும் புரிஞ்சுக்கிட்டேன். நான் வட இந்தியாவைச் சேர்ந்தவளாவே இருந்தாலும் தென்னிந்தியப் படங்களில் நடிச்சுட்டு வந்ததால எனக்கு நல்ல வரவேற்பு கிடைக்குது. இந்தில ‘தில் ஜூங்லி’, ‘சூர்மா’, ‘மன்மர்ஸியான்’ தவிர ஒருசில தென்னிந்திய மொழிப் படங்களும் பண்ணினேன்.

அத்தனையும் செம ரீச். சுஜாய்கோஷ், அபினவ் சின்ஹா, அனுராக் காஷ்யப்னு திறமையான இயக்குநர்கள் படங்கள்ல நடிச்சது என் பாக்யம். வாய்ப்புக்காக சினிமால நான் போராடின காலங்கள் எல்லாம் முடிவுக்கு வந்துடுச்சு. இப்ப என்னைத் தேடி நல்ல கேரக்டர்ஸ் நிறையவே வருது. நானும் ஒரு கை பார்க்க ரெடியா இருக்கேன். சந்தோஷமா இருக்கு...’’ நிதானமாகவும் அதேநேரம் மகிழ்ச்சியாகவும் பேசுகிறார் டாப்ஸி.

எப்படி போகுது உங்களோட ‘வெட்டிங் ஃபாக்டரி’?சூப்பரா! ‘வெட்டிங் ஃபாக்டரி’ நல்லா போறதுக்கு என் தங்கை ஷாகுனுக்குதான் நன்றி சொல்லணும். இப்ப நிறைய படங்கள் பண்றதால அந்த ஈவன்ட் மேனேஜ்மென்ட் ஒர்க்குக்கு நேரம் ஒதுக்க முடியல. ஒருநாள் ஜெய்ப்பூர்ல ஷூட்னா... அடுத்தநாள் பஞ்சாப்ல. இப்படி ஓடிக்கிட்டே இருக்கேன்.

இந்த நிலைல என் பிசினஸுக்கு ஷாகுன்தான் உதவுறா. இப்ப வெப்சைட் மூலம் நிறைய ஆர்டர்கள் வந்துட்டிருக்கு. அதில் கவனமா செலக்ட் பண்ணி, பக்காவா ஒர்க் பண்றா. ஆக்ட்டிங்ல அவளுக்கு ஆர்வம் இல்ல. என்னை மாதிரி தைரியசாலியும் இல்ல. கூச்ச சுபாவம் அதிகம். இந்த ஈவன்ட் மேனேஜ்மென்ட் அவ குணத்துக்கு ஏற்ற ஜாப்.

டாப்ஸிக்கு மேரேஜ்னு பாலிவுட்ல ஒரே பேச்சா இருக்கே..?
மீடியாவுக்கு எப்பவுமே பிரேக்கிங் நியூஸ் தேவைப்படும். அந்த போட்ல இப்படிப்பட்ட வதந்திகளும் வரத்தான் செய்யும். சோஷியல் மீடியால கூட நிறைய பேர் எனக்கு கல்யாண வாழ்த்து சொல்லி கடுப்பை கிளப்பியிருந்தாங்க!ஆக்சுவலா கல்யாணத்துக்கு நான் இன்னும் தயாராகல. இதுதான் உண்மை. இப்பதான் சவாலான கேரக்டர்ஸ் தேடி வருது. சினிமால நான் சாதிக்க வேண்டியதும் என்னை நிரூபிக்க வேண்டியதும் நிறையவே இருக்கு.

இதெல்லாம் நடந்தபிறகுதான் என்னால கல்யாணத்தைப் பத்தியே யோசிக்க முடியும். குழந்தைகளை என்னால நல்லா வளர்க்கமுடியும்னு எப்ப தோணுதோ, அப்ப கல்யாணம் பண்ணிக்கறதுதான் பொருத்தமா இருக்கும்னு நினைக்கறேன். இப்ப மும்பைல புது வீடு வாங்கியிருக்கேன். அதோட இன்டீரியர் ஒர்க் போயிட்டிருக்கு. ஷூட் இல்லாத நேரங்கள்ல ஸ்குவாஷ் விளையாட்டுல கவனம் செலுத்தறேன்.

பாலிவுட்னாலே பார்ட்டி களைகட்டுமே..?

நான் பார்ட்டி பறவை இல்ல. பார்ட்டிக்கு போறதும், நைட் கண்முழிக்கறதும் எனக்குப் பிடிக்காது. ராத்திரி 11 மணிக்கே தூங்கப் போயிடுவேன். மறுநாள் காலையில் ஏழு மணிக்கெல்லாம் கண்விழிச்சிடுவேன். இப்படியொரு கட்டுப்பாடான லைஃப் ஸ்டைல்ல வாழ்ந்துகிட்டு இருக்கேன். 

மக்கள் என் திறமையை நம்பறாங்க. சில வேலைகளை ஒப்படைக்கிறாங்க. அவங்களுக்கு நான் நேர்மையா இருக்கணும். சினிமா பின்புலம் இல்லாம நடிப்புல சாதிக்க நினைக்கிற பெண்களுக்கு ரோல் மாடலா இருப்பதுதான் இப்போதைக்கு என் லட்சியம்!               

மை.பாரதிராஜா