மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை Hack செய்ய முடியுமா?



உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பதில் நமக்கு பெருமைதான். அதிலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் தேர்தலை மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை வைத்து நடத்துவது மெச்சத்தகுந்த செயல்தான்.உலகின் பணக்கார நாடுகளான இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் கூட இன்னும் வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்தும்போது, மின்னணு வாக்கு எந்திரத்தில் தேர்தலை நடத்தும் இந்திய தேர்தல் ஆணையம் சிறந்ததுதான்.

ஆனால், இந்தப்  பெருமிதத்தின் மீது குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார் சையத் சாஹுஜா என்ற சைபர் பாதுகாப்பு நிபுணர்.  அண்மையில் லண்டனில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், 2014 பொதுத் தேர்தல் முதல் பல தேர்தல்களில் பல கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ‘ஹேக்’ செய்து தங்கள் கட்சிக்கு சாதகமாக ஓட்டுக்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொண்டனர் எனக் கூறியுள்ளார்.
இதை இந்திய தேர்தல் ஆணையம் மறுத்ததுடன், அவர் மீது வழக்கும் பதிந்துள்ளது.

இப்போது அனைவரின் மத்தியிலும் எழும் கேள்வி, மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை ‘ஹேக்’ செய்ய முடியுமா?
இதற்கான விடையைத்  தெரிந்துகொள்ள முதலில் நாம் அந்த எந்திரங்கள் எப்படி வேலை செய்கின்றன என்பதை அறியவேண்டும்.மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இரண்டு பகுதிகளாகப் பிரிந்திருக்கும். ஒன்று, நாம் ஓட்டுப் போடும் எந்திரப் பகுதி. இன்னொன்று, எந்திரத்தை இயக்கும் மின்னணு ப்ராஸசர்கள் மற்றும் ஓட்டுக் கணக்குகளை சேமிக்கும் ‘கண்ட்ரோல் யூனிட்’ என்னும் பகுதி.

இவை இரண்டும் சுமார் 5 மீட்டர் வயர் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். கண்ட்ரோல் யூனிட் பகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருக்கும். மிக முக்கியமாக இந்த எந்திரம் முழுக்க முழுக்க ‘அடாக்’ (Adhoc) எந்திரம். அதாவது ஸ்மார்ட்ஃபோன், லேப்டாப், இணையம் என வேறு எந்திரங்கள், இணைப்புகள் இல்லாமல் தனித்திருக்கும் எந்திரம்.

சரி,சையத் முன்வைக்கும் பிரச்னை என்ன?
மின்னணு எந்திரத்தில் ஒரு சிறு ப்ளூடூத் கருவியை இணைத்துவிட்டு ரேடியோ அலைக்கற்றைகள் உதவியுடன் அதை தொலைவில் இருந்து தொடர்பு  கொண்டு எந்திரத்தின் மெமரியில் தங்களுக்கு ஆதரவான ஓட்டு எண்ணிக்கையை அதிகப்படுத்துவது. இந்த முறையில்தான் மின்னணு வாக்கு எந்திரத்தில் தில்லு முல்லுகள் நடந்தன என்கிறார் சையத்.

இப்படி மின்னணு எந்திரத்தை ஹேக் செய்ய முடியுமா?
இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அறிமுகமான காலம் தொட்டே அதன் மீது கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன. அப்படி ஒரு முறை ஜெயலலிதா குற்றம் சொன்ன போது, எழுத்தாளர் சுஜாதா அதை மறுத்தார்.ஏனெனில் மின்னணு வாக்கு எந்திர உருவாக்கத்தின் திட்ட மேலாளராக சுஜாதா பணி புரிந்திருக்கிறார். தன் ஸ்டைலில் ‘‘மின்னணு வாக்கு எந்திர மைக்ரோ ப்ராஸசர்களுக்கு கணினி மொழிதான் தெரியும். அதற்கு இந்தக் கட்சி அந்தக் கட்சி என்ற பேதம் கிடையாது. யார் சார்பாகவும் செயல்படாது!” என விளக்கினார்.

உண்மைதான். மைக்ரோ ப்ராஸசர்களுக்கு கட்சி பேதம் கிடையாது. ஒவ்வொரு கட்சியையும் குறிக்க ஒரு எண் கொடுக்கப்பட்டிருக்கும்.
உதாரணமாக 01 காங்கிரஸ்; 02 பாஜக; 03 திமுக. இப்போது எந்திரத்தில் ஒவ்வொரு பட்டனும் ஓர் எண்ணைக் குறிக்கும். ஓட்டு போடுபவர் 01 பட்டனை அழுத்தினால், ப்ராஸசரில் 01 எண்ணுக்கு நிகரான கூட்டுத்தொகை ஒன்று கூடும்.

தேர்தல் முடிவு அறிவிக்கும்போது ஒவ்வொரு எண்ணின் கூட்டுத்தொகையையும் வைத்துதான் வெற்றியைத் தீர்மானிப்பார்கள்.
கட்சிக்காரர்கள் முன்னிலையில் அதிகாரிகள் டெமோ காட்டி அவர்களது ஒப்புதலைப் பெற்ற பிறகே அந்த எந்திரத்தைப் பயன்படுத்துவார்கள்.
இப்போது சையத் கூறும் முறைக்கு வருவோம். அதாவது எந்திரத்தில் ப்ளூடூத் கருவியை இணைப்பது.

ஒரு குறிப்பிட்டளவில் இது சாத்தியம்தான். ஆனால் ஒட்டு மொத்த கருவிகளிலும் ஒரே நேரத்தில் செய்தால் இந்தியாவுக்கே இது தெரிந்துவிடும். குறிப்பிட்ட இடங்களில், அதாவது பாதுகாப்புக் குறைவான இடங்களில் இதைச் செய்து விட முடியும்.பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த முறையை வெளியிட்டு விளக்கிய சையத், இதை நடைமுறைப்படுத்திக் காட்டவில்லை. இப்போதைக்கு இந்த முறை வாய்ச் சொல்லாக மட்டுமே இருக்கிறது.

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இந்த மின்னணு எந்திரங்கள் பாதுகாப்பாக தயாரிக்கப்படுகின்றன. எந்திரத்தில் கோளாறோ, சந்தேகமோ இருந்தால் மாற்று எந்திரம் வரும் வரை தேர்தல் நடத்தப்படுவதில்லை. சில நேரம் ஒருசில இடங்களில் நடந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டு மறுதேர்தல் நடந்திருக்கிறது.

இந்த நிமிடம் வரை ஆதாரபூர்வமாக நடைமுறையில் மின்னணு எந்திரங்களை ஹேக் செய்யும் முறை காட்டப்படவும் இல்லை, பிடிபடவும் இல்லை.
என்றாலும் சர்ச்சைகள் தொடர்ந்து வெடிக்கக் காரணம்் அரசியல் கட்சிகளுக்கு இருக்கும் சில சந்தேகங்கள்தான்.உதாரணமாக, ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் நடந்தபோது ஒரு மணி நேரத்துக்கு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் மின்சாரத் தடை நிலவியது. அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை. இது சந்தேகம் நம்பர் ஒன்று.

அடுத்தது, தங்கள் கட்சிக்கு ஆதரவான ஓட்டுகளைக் கொண்ட எந்திரங்களை ஆளுங்கட்சி வெளியே தயாரித்து மாற்றி வைத்துவிட்டால்..?
இவ்விரு சந்தேகங்களும் நடைமுறை சாத்தியம் கொண்டவைதான். ஆனால் இதை தடுக்கத்தான் அதிகாரிகள் முதல் எதிர்க் கட்சிக்காரர்கள் வரை எந்திரங்கள் இருக்கும் அறையைக் கண்காணிக்கிறார்கள். ஏதேனும் சம்பவங்கள் நடந்தால் தேர்தல் அதிகாரிகளிடம் உடனுக்குடன் தெரியப்படுத்தி விடுகிறார்கள்.

சரி, தேர்தல் ஆணையம் என்ன செய்யவேண்டும்?

முதலில் சந்தேகங்கள் கேட்கப்படும்போதெல்லாம் அதற்கான விளக்கங்களை முகம் சுளிக்காமல் அளிக்க வேண்டும். விமர்சிப்பவர்கள் மீது வழக்குத் தொடுப்பதை நிறுத்த வேண்டும். இறுதியாக ஒன்று.எந்த எந்திரமும் ஹேக் செய்ய முடியாததல்ல! எவ்வளவு பாதுகாப்புடன் தயாரித்தாலும் அந்த எந்திரத்தை ஹேக் செய்ய முடியும்! இதைத் தடுத்து பாதுகாப்பதுதான் சவால்.

வங்கிகள் முதல் பல நிறுவனங்கள் இந்த சவாலை தினமும் எதிர்கொள்கின்றன. தேர்தல் ஆணையமும் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். தங்கள் அமைப்பையும், எந்திரத்தையும் மேம்படுத்த இந்த விமர்சனங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த எந்திரங்கள் நம் நாட்டின் தயாரிப்பு. நம் நாட்டின் பெருமை. ஒருபோதும் இதை விஷமிகளுக்கு பலிகொடுக்கக் கூடாது.                           

வினோத் ஆறுமுகம்