சாதியும் மதமும் அற்றவர்!



இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் இந்த தமிழ்ப் பெண்

‘வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் இரட்டைமலை சீனிவாசன் பேட்டை கதவு எண் 25 முகவரியில் வசித்து வருபவர் ம.ஆ.சிநேகா. இவர் சாதி மற்றும் மதம் அற்றவர் என சான்றளிக்கப்படுகிறது!’ - இந்தியாவில் முதல்முறையாக இப்படியொரு புதுமையான சான்றிதழை வட்டாட்சியரிடமிருந்து பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் சிநேகா.
இதுவரை சாதிச் சான்றிதழ் கிடைக்க வேண்டி போராட்டம் நடத்தியிருப்பதைப் பார்த்திருக்கிறோம். வேறு பிரிவுக்குள் தங்கள் சாதியை இணைக்க வேண்டும் என்பதற்காக நடந்த போராட்டங்கள் பற்றியும் படித்திருக்கிறோம்.ஆனால், சாதியும், மதமும் அற்றவர் என்ற சான்றிதழ் பெற போராடியவர் இவர் மட்டும்தான்!

‘‘ஸ்கூல்ல இருந்து கல்லூரி வரை எல்லா இடங்களிலும் என்கிட்ட கேட்கப்பட்ட முதல் கேள்வியே ‘நீ என்ன சாதி? சான்றிதழ் இருக்கா?’ என்பதுதான். நானும் என் குடும்பமும் சாதி, மத அடையாளங்கள் தேவையில்லைனு உறுதியா நம்பறவங்க. அதனாலதான் சாதி, மதம் அற்றவர்னு ஒரு சான்றிதழ் வாங்கப் போராடி வெற்றி பெற்றேன்...’’ என்று ஆரம்பித்த சிநேகா, திருப்பத்தூரில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார்.

‘‘அப்பா ஆனந்தகிருஷ்ணனும், அம்மா மணிமொழியும் வழக்கறிஞர்கள். சாதி மறுப்புத் திருமணம் செஞ்சவங்க. நான் வீட்டுக்கு மூத்த பொண்ணு. மும்தாஜ் சூரியா, ஜெனிபர்னு ரெண்டு தங்கைங்க. அவங்களும் வழக்கறிஞர்கள்தான்.முதல் வகுப்புல என்னைச் சேர்க்கும்போது பள்ளிக்கூடத்துல என்ன சாதினு கேட்டாங்க. எனக்கு சாதி இல்ைலனு அப்பாவும் அம்மாவும் சொன்னாங்க. சரி, மதத்தையாவது சொல்லுங்கனு கேட்கும்போது எங்களுக்கு மதமும் இல்லைனு உறுதியா நின்னாங்க. அங்கிருந்து என் பிரசாரம் தொடங்குச்சு.

நானும் இந்தக் கொள்கையில உறுதியா இருந்தேன். பள்ளி முதல் கல்லூரி வரை எங்கயும் சாதியையோ, மதத்தையோ குறிப்பிட்டதில்ல. சாதிச் சான்றிதழும் வாங்கினதில்ல. தங்கைகளும் அப்படியே வளர்ந்தாங்க. அவங்களுக்கும் சாதிச் சான்றிதழ் பெறல. என் குழந்தைங்களையும் அப்படி வளர்க்கவே ஆசைப்படுறேன். வளர்த்திட்டும் வர்றேன்...’’ என்கிற சிநேகாவுக்கு ஆதிரை நஸ்‌ரீன், ஆதிலா ஐரீன், ஆரிபா ஜெசி என மூன்று பெண் குழந்தைகள். கணவர் பார்த்திபராஜா திருப்பத்தூரிலுள்ள தூய நெஞ்ச கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர்.

‘‘என் இணையர் பார்த்திபராஜா காரைக்குடி பக்கத்தைச் சேர்ந்தவர். ‘மாற்று நாடக இயக்கம்’ என்கிற குழுவை கல்லூரியில் தொடங்கி நடத்திட்டு வர்றார். அப்படி அறிமுகமானவரை காதல் மணம் புரிஞ்சேன். அவரும் எங்கள் குடும்பத்தைப் போல சாதி, மத நம்பிக்கையற்றவர். எங்கள் இணை ஏற்பு விழாவும் எந்த மத சடங்குகளும் இல்லாமதான் நடந்தது.

இப்பவும் நாங்க சாதி, மதம் சார்ந்த பண்டிகைகளையோ, சடங்குகளையோ கொண்டாடுறதில்ல...’’ என்றவரிடம், ‘எந்த இடத்தில் இந்தச் சான்றிதழைப் பெறவேண்டும் எனத் தோன்றியது..?’ என்று கேட்டோம்.‘‘சாதிச் சான்றிதழ் கேட்கும் இடங்கள்ல எல்லாம் நாங்க அந்நியர்களா தெரிஞ்சோம். இதனால, சாதிய அமைப்புக்கு அடையாளமா சாதிச் சான்றிதழ் இருப்பதுபோல், சாதி, மதம் அற்றவர்னு ஒரு சான்றிதழ் வாங்கினா என்னனு தோணுச்சு.

உடனே விண்ணப்பிச்சேன். ஆரம்பத்துல, ‘என்ன சாதினு சொல்லவே எங்களுக்கு உரிமை உண்டு. சாதி, மதம் இல்லைனு சொல்ல எங்களுக்கு அதிகாரம் இல்ல’னு பலமுறை அரசு தரப்புல திருப்பி அனுப்பினாங்க. முதல்ல, தாசில்தார்கிட்ட கடிதங்களா கொடுத்திட்டே இருந்தேன். பின்னர், 2017ம் வருஷம்தான் சாதிச் சான்றிதழ் விண்ணப்பிக்கிற படிவத்தில் கொடுத்தேன்.

கிட்டத்தட்ட பத்து வருஷ போராட்டத்துக்குப் பிறகு இப்ப எனக்கு இந்தச் சான்றிதழ் கிடைச்சிருக்கு. சாதி, மதம் அற்றவர்னு அரசு சான்றிதழ் பெற்ற முதல் இந்தியர் என்பதில் ரொம்பவே பெருமைப்படுறேன்...’’ என்கிற சிநேகா, ‘இதனால் என்ன பயன்’ என்கிற அடிப்படையில் சான்றிதழ் வாங்கவில்லை என்கிறார்.‘‘இதுவரை எல்லா இடத்திலும் என்னை பொதுப் பிரிவுனு நினைச்சு கடந்து போயிட்டே இருந்தாங்க. சாதி, சமயம் அற்ற வாழ்க்கைக்கு ஓர் அங்கீகாரம் வேணும்னு நினைச்சேன்.

அதேநேரம், இந்தச் சான்றிதழ் மூலம் பல பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்னு தோணுச்சு. நினைச்சதைப் போலவே இது ஒரு விவாதமா இப்ப மாறியிருக்கு.அரசியலமைப்பின் அடிப்படை சட்டம் நீங்க எந்த மதத்தையும் பின்பற்றலாம், எந்த மதத்தையும் பரப்பலாம்னு சொல்லுது. அதேமாதிரி அதற்கு சமமா எந்த மதமும் இல்லைனு சொல்லலாம்னும் புரிஞ்சிக்கணும்.

மதம் இருக்குனு சொல்ல உரிமை இருப்பது போல மதம் இல்ைலனு சொல்லவும் உரிமை இருக்கு இல்லையா? இந்தியா மதச்சார்பற்ற நாடுனு அரசியலமைப்பின் முகவுரையில் சொல்லப்பட்டிருக்கு. அப்ப ஒவ்வொரு இந்தியனும் மதச்சார்பற்றுதானே இருக்கணும். இந்தியரான எனக்கு மட்டும் எதுக்கு மதம், சாதி..?’’ என்று கேட்கும் சிநேகா, தான், இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர் இல்லை என்கிறார்.

‘‘இரண்டாயிரம் வருடங்களா சாதிய ஒடுக்குமுறையால் வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு அவசியம். அதேநேரம், ஒடுக்கும் இந்த வர்ணத்தையும், ஆதிக்க சாதி மனப்பான்மையையும் துறந்து மனிதனா, தமிழனா, ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைக்காக உழைப்பதே என் லட்சியம்...’’ உறுதியாகச் சொல்கிறார் சிநேகா.                             

பேராச்சி கண்ணன் கணேசன்